1 நாளாகமம்
10 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள்; பலர் கில்போவா மலையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+ 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள்; பின்பு, அவருடைய மகன்களான யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும்+ கொன்றுபோட்டார்கள். 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள்; கடைசியில் வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் காயமடைந்தார்.+ 4 அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+ 5 சவுல் இறந்துவிட்டதைப் பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான். 6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவரோடு இருந்த அவருடைய வீட்டார் எல்லாரும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+ 7 இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள், பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.
8 கொல்லப்பட்டவர்களின் பொருள்களை எடுத்துக்கொள்ள அடுத்த நாள் பெலிஸ்தியர்கள் வந்தபோது, சவுலும் அவருடைய மகன்களும் கில்போவா மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 9 அப்போது சவுலிடமிருந்த எல்லாவற்றையும் உருவிக்கொண்டார்கள், அவருடைய தலையை வெட்டினார்கள், அவருடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; பின்பு, தங்கள் கோயில்களிலும்+ மக்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை அறிவிப்பதற்காக பெலிஸ்தியர்களின் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். 10 அதன்பின், அவருடைய ஆயுதங்களைத் தங்களுடைய கோயிலில் வைத்தார்கள்; அவருடைய தலையை தாகோனின் கோயிலில்+ தொங்கவிட்டார்கள்.
11 பெலிஸ்தியர்கள் சவுலுக்கு இப்படிச் செய்ததை கீலேயாத்திலுள்ள யாபேஸ்+ ஊர் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள்.+ 12 உடனே அங்கிருந்த வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போய், சவுலின் உடலையும் அவருடைய மகன்களின் உடல்களையும் எடுத்துக்கொண்டு யாபேசுக்கு வந்தார்கள்; பின்பு, அவர்களுடைய எலும்புகளை அங்கிருந்த பெரிய மரத்தடியில் புதைத்துவிட்டு,+ ஏழு நாட்களுக்கு விரதமிருந்தார்கள்.
13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+ 14 யெகோவாவிடம் விசாரிப்பதற்குப் பதிலாக, ஆவிகளோடு பேசுகிறவளிடம் விசாரித்தார்;+ அதனால், கடவுள் அவரைச் சாகடித்து அவருடைய அரச பதவியை ஈசாயின் மகன் தாவீதிடம் கொடுத்தார்.+