அதிகாரம் 6
இயேசு கிறிஸ்து—கடவுளால் அனுப்பப்பட்டாரா?
இன்று ஏறக்குறைய எல்லோரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றனர். சரித்திரத்தில் அவருடைய செல்வாக்கு வேறு எந்த மனிதனுடையதைப் பார்க்கிலும் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. நிச்சயமாகவே, உலகத்தின் பெரும் பாகங்களில் பயன்படுத்தப்படுகிற பஞ்சாங்கம்தானேயும் அவர் பிறந்ததாக எண்ணப்படுகிற அந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது! தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா சொல்லுகிற பிரகாரம்: “அந்த ஆண்டுக்கு முன்பான தேதிகள் B.C. [தமிழில் கி.மு.], அல்லது கிறிஸ்துவுக்கு முன் என வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்த ஆண்டுக்குப் பின்னான தேதிகள் A.D. அல்லது அன்னோ டொமினி (நம்முடைய கர்த்தரின் ஆண்டில்) என வரிசைப்படுத்தப்படுகின்றன [தமிழில் கி.பி. அல்லது கிறிஸ்துவுக்குப் பின்].”
2 ஆகவே இயேசு ஒரு கற்பனை ஆள் அல்ல, அவர் பூமியில் ஒரு மனிதனாக உண்மையில் வாழ்ந்தார். “பூர்வ காலங்களில் கிறிஸ்தவத்தின் எதிரிகளுங்கூட இயேசு [உண்மையில் வாழ்ந்ததை] ஒருபோதும் சந்தேகிக்கவில்லை,” என்று தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. ஆகவே இயேசு யார்? அவர் உண்மையில் கடவுளால் அனுப்பப்பட்டாரா? அவர் ஏன் இவ்வளவு நன்றாய் அறியப்பட்டிருக்கிறார்?
அதற்கு முன்பாகவே அவர் வாழ்ந்திருந்தார்
3 வேறு எந்த மனிதனைப் போன்று இராமல், இயேசு ஒரு கன்னியிலிருந்து பிறந்தார். அவளுடைய பெயர் மரியாள். அவளுடைய பிள்ளையைக் குறித்து ஒரு தூதன் பின்வருமாறு சொன்னான்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்.” (லூக்கா 1:28-33; மத்தேயு 1:20-25) ஆனால் ஓர் ஆணோடு ஒருபோதும் பாலுறவுகள் கொண்டிராத ஒரு பெண் எப்படி ஒரு பிள்ளையைப் பெற முடியும்? இது கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மூலமாகும். யெகோவா தம்முடைய வல்லமையுள்ள ஆவிக் குமாரனுடைய அந்த உயிரைப் பரலோகத்திலிருந்து இந்தக் கன்னி மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். இது ஓர் அற்புதமாயிருந்தது! பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படியான இந்த அதிசய திறமையுடன் அந்த முதல் பெண்ணை உண்டாக்கினவர், நிச்சயமாகவே, ஒரு பெண் மனிதத் தகப்பன் இல்லாமலே ஒரு பிள்ளையைப் பிறப்பிக்கும்படி செய்விக்கக்கூடும். பைபிள் விளக்குகிறது: “காலம் நிறைவேறினபோதோ கடவுள் தமது குமாரனை ஸ்திரீயினிடம் பிறந்தவராக . . . அனுப்பினார்,”—கலாத்தியர் 4:4, தி.மொ.
4 ஆகவே இயேசு பூமியில் ஒரு மனிதனாக பிறப்பதற்கு முன்பாக, அவர் பரலோகத்தில் வல்லமையுள்ள ஓர் ஆவி ஆளாக இருந்தார். கடவுளுக்கு இருக்கிறதைப்போலவே, மனிதர் காணமுடியாத ஓர் ஆவி உடலை அவர், உடையவராக இருந்தார். (யோவான் 4:24) பரலோகத்தில் தாம் கொண்டிருந்த அந்த உயர் நிலையைப்பற்றி இயேசு தாமே அடிக்கடி பேசினார். ஒரு தடவை அவர் பின்வருமாறு ஜெபித்தார்: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.” (யோவான் 17:5) மேலும் தமக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களிடமும் அவர் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள், நான் மேலேயிருந்து வந்தவர்; நீங்கள் இந்த உலகத்துக்குரியவர்கள், நான் இந்த உலகத்துக்குரியவரல்ல.” “மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?” “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.”—யோவான் 8:23, தி.மொ.; 6:62; 8:58; 3:13; 6:51.
5 பூமிக்கு வருவதற்கு முன்பாக இயேசு கடவுளுடைய வார்த்தை என்றழைக்கப்பட்டார். இந்த உத்தியோகப் பெயரானது அவர் பரலோகத்தில் கடவுளுக்குப் பதிலாகப் பேசுபவராய்ச் சேவை செய்தார் என்று காட்டுகிறது. மேலும் அவர் கடவுளுடைய “முதற்பேறானவர்” என்றும் அதோடு கூட அவருடைய “ஒரே பேறான” குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். (யோவான் 1:14; 3:16; எபிரெயர் 1:6) இது அவர், கடவுளுடைய மற்ற ஆவிக் குமாரர் எல்லோருக்கும் முந்தி படைக்கப்பட்டார் என்றும், கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டவர் அவர் ஒருவரே என்றும் அர்த்தமாகிறது. மற்ற எல்லாவற்றையும் படைப்பதில் இந்த “முதற்பேறான” குமாரன் யெகோவாவுடன் பங்குகொண்டார் என்று பைபிள் விளக்குகிறது. (கொலோசெயர் 1:15, 16) இவ்வாறாக, “நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக,” என்று கடவுள் சொன்னபோது, இந்தக் குமாரனிடம்தானே அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆம், பின்னால் பூமிக்கு வந்தவரும் பெண்ணிலிருந்து பிறந்தவருமான இவர்தாமே எல்லாவற்றையும் படைப்பதில் பங்குகொண்டிருந்தவர்! அவர் ஏற்கெனவே, அறியப்படாத எண்ணிக்கையான ஆண்டுகளாகத் தம்முடைய தகப்பனுடன் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார்!—ஆதியாகமம் 1:26; நீதிமொழிகள் 8:22, 30; யோவான் 1:3.
பூமியில் அவருடைய வாழ்க்கை
6 மரியாள் யோசேப்புக்கு மணம் செய்து கொடுக்கப்படும்படி வாக்கு செய்யப்பட்டிருந்தாள். ஆனால் அவள் கருவுற்றிருந்ததை அவன் அறிந்த போது அவள் மற்றொரு ஆணுடன் பாலுறவில் ஈடுபட்டிருந்ததாக எண்ணி, தான் அவளை மணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சிந்தனை செய்தான். என்றபோதிலும், அந்தப் பிள்ளை, தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாய்க் கருவுறச் செய்யப்பட்டதென்று யெகோவா அவனுக்குச் சொன்னபோது, யோசேப்பு மரியாளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டான். (மத்தேயு 1:18-20, 24, 25). பின்னால் அவர்கள், பெத்லகேம் நகரத்துக்குப் போயிருக்கையில், இயேசு அங்கே பிறந்தார். (லூக்கா 2:1-7; மீகா 5:2) இயேசு இன்னும் குழந்தையாக இருக்கையில், அரசனாகிய ஏரோது அவரைக் கொல்ல முயன்றான். ஆனால் யெகோவா யோசேப்பை எச்சரித்தார், ஆகவே அவன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனான். அரசனாகிய ஏரோது செத்தபின்பு, யோசேப்பும் மரியாளும் இயேசுவுடன் கலிலேயாவிலுள்ள நாசரேத் நகரத்துக்குத் திரும்பி வந்தார்கள். அங்கே அவர் வளர்ந்தார்.—மத்தேயு 2:13-15, 19-23.
7 இயேசு 12 வயதாக இருந்தபோது அவர், பஸ்கா என்று அழைக்கப்பட்ட ஒரு விசேஷித்தப் பண்டிகையை ஆசரிப்பதற்குத் தம்முடைய குடும்பத்தோடு எருசலேமுக்குப் பயணம் சென்றார். அங்கே இருக்கையில் அவர் ஆலயத்தில் போதகர்களுக்குச் செவி கொடுத்துக் கொண்டும் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டும் மூன்று நாட்கள் செலவிட்டார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் அவருக்கு அவ்வளவு அதிகம் தெரிந்திருந்ததைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:41-52) இயேசு நாசரேத்தில் வளர்ந்து வருகையில், ஒரு தச்சனாக இருக்கக் கற்றுக்கொண்டார். தச்சனாக இருந்த அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பால் இந்தத் தச்சுவேலை செய்வதற்கு அவர் பயிற்றுவிக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை.—மாற்கு 6:3; மத்தேயு 13:55.
8 30 வயதில் இயேசுவின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர், முழுக்காட்டுபவனாகிய யோவானிடம் சென்று தன்னை அவன் முழுக்காட்டும்படி, அதாவது, யோர்தான் நதியின் தண்ணீர்களுக்குள் முழுமையாய் அமிழ்த்தி எடுக்கும்படி கேட்டார். பைபிள் பின்வருமாறு அறிவிக்கிறது: “முழுக்காட்டப்பட்ட பின்பு இயேசு உடனடியாகத் தண்ணீரிலிருந்து மேல் வந்தார்; இதோ! வானங்கள் திறக்கப்பட்டன; கடவுளுடைய ஆவி ஒரு புறாவைப்போல் இறங்கி தம்மேல் வருவதை அவர் கண்டார். இதோ! மேலும், வானங்களிலிருந்து ஒரு குரல் வந்தது. அது சொன்னதாவது: ‘இவர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரிக்கிறேன்.’” (மத்தேயு 3:16, 17, NW) இயேசு கடவுளால் அனுப்பப்பட்டிருந்தார் என்பதில் யோவானுடைய மனதில் எவ்வித சந்தேகமும் இருந்திருக்க முடியாது.
9 தம்முடைய பரிசுத்த ஆவியை இயேசுவின் மேல் ஊற்றுவதன் மூலம், யெகோவா அவரைத் தம்முடைய வரப்போகிற ராஜ்யத்தின் அரசராக இருக்கும்படி அபிஷேகம் செய்தார் அல்லது நியமித்தார். இந்த ஆவியால் இவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்டிருக்க, இயேசு அந்த “மேசியா,” அல்லது “கிறிஸ்து” ஆனார். இந்தச் சொற்கள் எபிரெயுவிலும் கிரேக்க மொழியிலும் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று அர்த்தங் கொள்ளுகின்றன. ஆகையால், அவர் உண்மையில், இயேசு கிறிஸ்து, அல்லது அபிஷேகஞ் செய்யப்பட்டவராகிய இயேசு ஆனார். ஆகவே அவருடைய அப்போஸ்தலனாகிய பேதுரு அவரைக் குறித்து, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்,” என்று பேசினான். (அப்போஸ்தலர் 10:38) மேலும், தம்முடைய தண்ணீர் முழுக்காட்டுதலினால் இயேசு, தாம் எந்த வேலையைச் செய்யும்படி கடவுள் தம்மை பூமிக்கு அனுப்பியிருந்தாரோ அந்த வேலையை நிறைவேற்றுவதற்குத் தம்மைக் கடவுளுக்கு அளிப்பவராக இருந்தார். அந்த முக்கியமான வேலை என்ன?
அவர் ஏன் பூமிக்கு வந்தார்
10 தாம் ஏன் பூமிக்கு வந்தார் என்பதை விளக்குபவராய், இயேசு அந்த ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடம் பின்வருமாறு கூறினார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே [இந்த நோக்கத்திற்காகவே] இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) ஆனால் எந்தக் குறிப்பிட்ட சத்தியங்களைத் தெரியப்படுத்தும்படி இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டார்? முதலாவதாக, தம்முடைய பரலோகத் தகப்பனைப் பற்றிய சத்தியங்களைத் தெரிவிக்க தம்முடைய தகப்பனின் பெயர் “பரிசுத்தப்படுத்த”ப்படும்படி, அல்லது பரிசுத்தமாக மதிக்கப்படும்படி ஜெபிப்பதற்கு அவர் தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:9) மேலும் அவர்: “நீர் எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்,” என்று ஜெபித்தார். (யோவான் 17:6) மேலும் அவர்: “நான் . . . கடவுளின் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்,” என்றும் சொன்னார்.—லூக்கா 4:43, தி.மொ.
11 தம்முடைய தகப்பனின் பெயரையும் ராஜ்யத்தையும் தெரியப்படுத்தும் இந்த வேலை இயேசுவுக்கு எவ்வளவு முக்கியமானதாயிருந்தது? அவர் தம்முடைய சீஷரிடம் பின்வருமாறு கூறினார்: “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என் போஜனம்.” (யோவான் 4:34, தி.மொ.) கடவுளுடைய வேலை உணவைப் போல் அவ்வளவு முக்கியமானதாயிருப்பதாக இயேசு ஏன் கருதினார்? ஏனென்றால், மனிதவர்க்கத்துக்கான தம்முடைய அதிசயமான நோக்கங்களைக் கடவுள் இந்த ராஜ்யத்தின் மூலமாக நிறைவேற்றப் போவதன் காரணமாகவேயாகும். இந்த ராஜ்யமே எல்லா பொல்லாப்பையும் அழித்து யெகோவாவுடைய பெயரின் பேரில் கொண்டுவரப் பட்டிருக்கிற நிந்தையை முற்றிலுமாய் நீக்கிப் போடும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆகவே, இயேசு, கடவுளுடைய பெயரையும் ராஜ்யத்தையும் தெரியப்படுத்துவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. (மத்தேயு 4:17; லூக்கா 8:1; யோவான் 17:26; எபிரெயர் 2:12) சத்தியம் பலரால் விரும்பப்பட்டதோ இல்லையோ, அவர் எப்பொழுதும் சத்தியத்தையே பேசினார். இவ்வாறு, நாம் கடவுளுக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிறோமென்றால் பின்பற்றவேண்டிய ஒரு முன்மாதிரியை நமக்கு வைத்தார்.—1 பேதுரு 2:21.
12 என்றபோதிலும், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் நாம் நித்திய ஜீவன் அடைவதை சாத்தியமாக்குவதற்கு, இயேசு தம்முடைய உயிராகிய இரத்தத்தை மரணத்தில் ஊற்ற வேண்டியதாக இருந்தது. இயேசுவின் இரண்டு அப்போஸ்தலர்கள் சொன்னதுபோல்: “நாம் அவர் இரத்தத்தினாலே இப்பொழுது நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டிருக்கிறோம்.” “அவருடைய [கடவுளுடைய] குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (ரோமர் 5:9, தி.மொ.; 1 யோவான் 1:7) ஆகவே இயேசு பூமிக்கு வந்ததன் ஒரு முக்கியமான காரணம் நமக்காக மரிப்பதாகும். அவர் சொன்னதாவது: “மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) கிறிஸ்து தம்முடைய உயிரை “மீட்கும் பொருளாகக்” கொடுத்தார் என்பதன் அர்த்தமென்ன? அவருடைய உயிராகிய இரத்தம் மரணத்தில் ஊற்றப்படுவது ஏன் நம்முடைய இரட்சிப்புக்குத் தேவையாயிருந்தது?
அவர் தம்முடைய உயிரை மீட்கும் பொருளாகக் கொடுத்தார்
13 “மீட்கும் பொருள்” என்ற பதம் ஓர் ஆள் கடத்திச் செல்லப்படும் காரியத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆளைக் கடத்திச் செல்பவன் ஓர் ஆளைக் கைப்பற்றி வைத்திருக்கையில், மீட்கும் பொருளாக ஒரு குறிப்பிட்ட பணத் தொகையைச் செலுத்தினால் தான் அந்த ஆளை விடுவித்துக் கொடுப்பதாக அவன் சொல்லக்கூடும். ஆகவே மீட்கும் பொருளானது, சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஆளுக்கு விடுதலையைக் கொண்டு வருகிற ஒன்றாகும். ஆகவே இது அவன் தன் உயிரை இழக்காதபடி அவனுக்காகச் செலுத்தப்படுகிற ஒன்றாகும். பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருந்ததிலிருந்து மனிதவர்க்கம் விடுதலை பெறுவதற்காக இயேசுவின் பரிபூரண மனித உயிர் கொடுக்கப்பட்டது. (1 பேதுரு 1:18, 19; எபேசியர் 1:7) இப்படிப்பட்ட ஒரு விடுதலை ஏன் தேவைப்பட்டது?
14 நம்மெல்லோருடைய முற்பிதாவாகிய ஆதாம் கடவுளுக்கு விரோதமாகக் கலகஞ் செய்திருந்ததன் காரணமாகவேயாகும். “நியாயப்பிரமாணத்தை [சட்டத்தை] மீறுகிறதே பாவம்,” என்று பைபிள் விளக்குவதனால், அவனுடைய சட்ட மீறுதலான செயல் அவனை ஒரு பாவியாக ஆக்கினது. (1 யோவான் 3:4; 5:17) அவன் கடவுளுடைய பரிசாகிய நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தகுதியற்றவனானான். (ரோமர் 6:23) பரதீஸான பூமியில் பரிபூரண மனித வாழ்க்கையைத் தனக்கு இழந்தான். மேலும், தான் பிறப்பிக்கப் போகிற பிள்ளைகள் எல்லோருக்குங்கூட இந்த அதிசயமான எதிர்பார்ப்பை அவன் இழந்தான். ‘ஆனால் பாவஞ்செய்தவன் ஆதாமாக இருக்க, ஏன், அவனுடைய பிள்ளைகள் எல்லோருமே மரிக்க வேண்டும்?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம்.
15 இது ஏனென்றால், ஆதாம் பாவியானபோது, இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதரும் உட்பட, தன்னுடைய பிள்ளைகளுக்குப் பாவத்தையும் மரணத்தையும் கடத்தினான். (யோபு 14:4; ரோமர் 5:12) “எல்லாரும் பாவஞ் செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது. (ரோமர் 3:23; 1 இராஜாக்கள் 8:46) தேவபக்தியுள்ளவனாயிருந்த தாவீதுங்கூட: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்,” என்று சொன்னான். (சங்கீதம் 51:5) ஆகையால், ஆதாமிலிருந்து சுதந்தரித்த அந்தப் பாவத்தினிமித்தமாக மக்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியானால், இயேசு தம்முடைய உயிரைப் பலி செலுத்தினது எப்படிப் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருக்கும் எல்லா மக்களையும் விடுதலையாக்கக் கூடியதாயிருந்தது?
16 இஸ்ரவேல் ஜனத்துக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டத்திலுள்ள ஒரு சட்டப்பூர்வ நியமம் இதில் உட்பட்டிருக்கிறது. அது, ‘உயிருக்கு உயிர் கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறுகிறது. (யாத்திராகமம் 21:23, NW; உபாகமம் 19:21) தன்னுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக அந்தப் பரிபூரண மனிதனாகிய ஆதாம் பரதீஸான பூமியில் பரிபூரண உயிரைத் தனக்கும் தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்கும் இழந்தான். ஆதாம் இழந்ததைத் திரும்ப வாங்குவதற்கு இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த பரிபூரண உயிரைக் கொடுத்தார். ஆம், இயேசு “எல்லாரையும் மீட்கும் [ஈடு] பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்தார்.” (1 தீமோத்தேயு 2:5, 6) ஆதாமைப் போலவே, இயேசுவும் ஒரு பரிபூரண மனிதனாக இருந்ததன் காரணமாக, “கடைசி ஆதாம்” என்று அழைக்கப்படுகிறார். (1 கொரிந்தியர் 15:45, தி.மொ.) இயேசுவைத் தவிர வேறு எந்த மனிதனும் இந்த மீட்கும் பொருளைக் கொடுத்திருக்க முடியாது. இது ஏனென்றால் கடவுளுடைய பரிபூரண மனித குமாரனாக இருந்த ஆதாமுக்குச் சரிசமமானவராய் இருந்த ஒரே மனிதன் இயேசுதாமேயல்லாமல் வேறு எவருமில்லை.—சங்கீதம் 49:7; லூக்கா 1:32; 3:38.
17 இயேசு 33 1/2 வயதில் மரித்தார். ஆனால் அவருடைய மரணத்திற்குப் பின் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார். நாற்பது நாட்களுக்குப் பின்பு அவர் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றார். (அப்போஸ்தலர் 1:3, 9-11) அங்கே, மறுபடியும் ஓர் ஆவி ஆளாக, அவர், மீட்பின் கிரயமாகிய தம்முடைய பலியின் விலைமதிப்பை ஏந்திக்கொண்டு “நமக்காகத் தேவனுடைய சமூகத்தில்” தோன்றினார். (எபிரெயர் 9:12, 24) அந்தச் சமயத்தில் இந்த மீட்பின் கிரயம் பரலோகத்தில் கடவுளுக்குச் செலுத்தப்பட்டது. இப்பொழுது மீட்பு அல்லது விடுதலை மனிதவர்க்கத்துக்குக் கிடைக்கக் கூடியதாயிற்று. ஆனால் அதன் நன்மைகள் எப்பொழுது அனுபவிக்கப்படும்?
18 இப்பொழுதேயுங்கூட மீட்பின் கிரயமாகிய இயேசுவின் பலி நமக்கு நன்மை பயக்கக்கூடும். எப்படி? அதில் விசுவாசம் காட்டுவதன்மூலம் நாம் கடவுளுக்கு முன்பாக ஒரு சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்து மகிழ்ந்து அவருடைய அன்புள்ள கனிவான கவனிப்பின் கீழ் வரலாம். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 13-15) கடவுளைப் பற்றி நாம் கற்றறிவதற்கு முன்பாக நம்மில் பலர் பயங்கர பாவங்களைச் செய்திருக்கக் கூடும். மேலும் இப்பொழுதேயுங்கூட நாம் தவறுகளைச் செய்கிறோம். சில சமயங்களில் வெகு வினைமையானவற்றைச் செய்து விடுகிறோம். ஆனால், கடவுள் நமக்குச் செவிகொடுப்பார் என்ற திட நம்பிக்கையுடன், இந்த மீட்கும் கிரயத்தின் ஆதாரத்தின்பேரில் கடவுளிடமிருந்து மன்னிப்பை நாம் தயங்காமல் நாடித் தேடலாம். (1 யோவான் 2:1, 2; 1 கொரிந்தியர் 6:9-11) மேலும், வரப்போகிற நாட்களில், இந்த மீட்பின் கிரயம், கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் அவர் கொடுக்கும் நித்திய ஜீவனாகிய பரிசைப் பெற்றுக் கொள்வதற்கான அந்த வழியையும் நமக்குத் திறந்து வைக்கும். (2 பேதுரு 3:13) அந்தச் சமயம் மீட்பின் கிரயத்தில் விசுவாசங் காட்டும் எல்லோரும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து முற்றிலுமாய் விடுவிக்கப்படுவார்கள். பரிபூரணத்தில் என்றும் உயிர் வாழ்வதை அவர்கள் எதிர்பார்க்கலாம்!
19 இந்த மீட்பின் கிரயத்தைப் பற்றி கற்றறிந்ததில் நீங்கள் எப்படிப்பட்ட உணர்ச்சியடைகிறீர்கள்? யெகோவா தேவன் உங்களுக்காக அவ்வளவு அதிகமாய்க் கவலைப்படுவதன் காரணமாக உங்கள் நிமித்தம் தம்முடைய அருமையான குமாரனை அவர் கொடுத்தார் என்பதை அறிவது யெகோவா தேவனிடமாக உங்கள் இருதயம் அனல் கொள்ளும்படி செய்கிறதல்லவா? (யோவான் 3:16; 1 யோவான் 4:9, 10) கிறிஸ்துவின் அன்பைப் பற்றியுங்கூட சிந்தித்துப் பாருங்கள். நமக்காக மரிக்கும்படி அவர் மனமுவந்து பூமிக்கு வந்தார். நாம் இதற்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டாமா? அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னபோது, நம்முடைய நன்றியறிதலை நாம் எப்படிக் காட்டவேண்டுமென்பதை விளக்கினான்: “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) கடவுளையும் அவருடைய பரலோகக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் சேவிப்பதற்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நன்றியறிதலைக் காட்டுவீர்களா?
இயேசு ஏன் அற்புதங்களை நடப்பித்தார்
20 இயேசு தாம் நடப்பித்த அற்புதங்களால் நன்றாய் அறியப்பட்டிருக்கிறார். இக்கட்டில் இருந்த மக்கள் பேரில் ஆழ்ந்த இரக்க உணர்ச்சியுடையவராக அவர் இருந்து, அவர்களுக்கு உதவி செய்யும்படியாக, கடவுளால் கொடுக்கப்பட்ட தம்முடைய வல்லமைகளைப் பயன்படுத்த ஆவலுள்ளவராக இருந்தார். உதாரணமாக, பயங்கர நோயாகிய குஷ்டரோகமுள்ள ஒருவன் அவரிடம் வந்து: “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்று சொன்னான். இயேசு “மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.” நோயுற்ற அந்த மனிதன் சுகமானான்!—மாற்கு 1:40-42.
21 பின்வரும் மற்றொரு பைபிள் காட்சியைக் கவனித்து, அங்கு விவரிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு கொண்டிருந்த கனிவான உணர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்: “அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக் கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”—மத்தேயு 15:30, 31.
22 துன்பப்பட்டுக் கொண்டிருந்த இந்த ஆட்களைப் பற்றி, இயேசு உண்மையில் கவலைப்பட்டு அவர்களுக்கு உதவி செய்ய அவர் உண்மையில் சித்தமுள்ளவராக அல்லது ஆவலுள்ளவராக இருந்தார் என்பது அவர் தம்முடைய சீஷர்களிடம் அடுத்தபடியாகச் சொன்னவற்றிலிருந்து காணப்படக்கூடியதாயிருக்கிறது. அவர் சொன்னதாவது: “ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே.” ஆகவே இயேசு, வெறும் ஏழு அப்பங்களையும் ஒருசில மீன்களையும் கொண்டு “ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, புருஷர் நாலாயிரம் பேராயிருந்த” அவர்களுக்கு அற்புதமாய் உணவளித்தார்.—மத்தேயு 15:32-38.
23 மற்றொரு சந்தர்ப்பத்தில் நாயீன் ஊரிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஒரு சவ அடக்க ஊர்வலம் எதிரே வருவதை இயேசு பார்த்தார். பைபிள் அதைப் பின்வருமாறு விவரிக்கிறது: “மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; . . . கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகினார்.” அவளுடைய துக்கத்தை அவர் ஆழ்ந்து உணர்ந்தார். ஆகவே, அந்தப் பிணத்தை நோக்கிப் பேசுபவராய், இயேசு: “வாலிபனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்,” என்று கட்டளையிட்டார்! அதிசயங்களுக்கு மேலான அதிசயமாக “மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” அந்தத் தாய் எப்படிப்பட்ட உணர்ச்சியடைந்திருப்பாள் என்பதை எண்ணிப் பாருங்கள்! நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இந்தக் குறிப்பிடத்தக்கச் சம்பவத்தைப் பற்றிய செய்தி விரிவாய் வெகுதூரம் பரவினது. இயேசு இவ்வளவு நன்றாய் அறியப்பட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.—லூக்கா 7:11-17.
24 என்றபோதிலும், இயேசு நடப்பித்த அந்த அற்புதங்கள் வெறும் தற்காலிக பயனையுடையனவாகவே இருந்தன. அவர் சுகப்படுத்தின மக்கள் மறுபடியுமாக உடல் சம்பந்த பிரச்னைகளுக்கு ஆளானார்கள். அவர் உயிர்த்தெழுப்பினவர்கள் மறுபடியுமாக மரித்தார்கள். ஆனால் இயேசுவின் அற்புதங்கள் அவர் கடவுளால் அனுப்பப்பட்டார் என்றும்; அவர் உண்மையில் கடவுளுடைய குமாரன் என்றும் நிரூபித்தன. மேலும் மனிதருக்கு ஏற்படும் பிரச்னைகள் எல்லாம் கடவுளுடைய வல்லமையால் தீர்க்கப்படக்கூடும் என்றும் அவை நிரூபித்தன. ஆம், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பூமியில் என்ன நடக்கும் என்பதை ஒரு சிறிய அளவில் அவை வெளிப்படுத்திக் காட்டின. அக்காலத்தில் பசியுள்ளவர்கள் உணவளிக்கப்படுவார்கள், நோயுற்றவர்கள் சுகப்படுத்தப்படுவார்கள், மரித்தோருங்கூட உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! நோயோ, மரணமோ, வேறு எந்தத் தொந்தரவுகளோ இனி ஒருபோதும் துயரத்தை உண்டுபண்ணமாட்டா. ஆ, அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாயிருக்கும்!—வெளிப்படுத்துதல் 21:3, 4; மத்தேயு 11:4, 5.
கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர்
25 கடவுளுடைய குமாரனின் வாழ்க்கைக்கு மூன்று பாகங்கள் இருக்கின்றன. முதலாவதாக, தாம் ஒரு மனிதனாவதற்கு முன்பாக பரலோகத்தில் தம்முடைய தகப்பனோடு அவர் செலவிட்ட அறியப்படாத எண்ணிக்கையான ஆண்டுகள் இருக்கின்றன. அடுத்தபடியாக, பூமியில் அவருடைய பிறப்புக்குப் பின் அவர் செலவிட்ட அந்த 33 1/2 ஆண்டுகள். இப்பொழுது திரும்பப் பரலோகத்தில் ஓர் ஆவி ஆளாக அவருடைய வாழ்க்கை. தாம் உயிர்த்தெழுப்பப்பட்டது முதற்கொண்டு பரலோகத்தில் அவர் என்ன பதவியை உடையவராக இருந்திருக்கிறார்?
26 தெளிவாகவே, இயேசு, ஓர் அரசராகப் போகிறவராயிருந்தார். தேவதூதனுங்கூட மரியாளிடம், “அவர் . . . என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது,” என்று அறிவித்தான். (லூக்கா 1:33) தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது அவர் எல்லா சமயத்திலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசினார். தம்மைப் பின்பற்றினவர்களுக்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக,” என்று ஜெபிக்கும்படியாக கற்பித்தார். மேலும் அவர், “முதலாவதாக ராஜ்யத்தைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருங்கள்,” என்றும் அவர்களை ஊக்கப்படுத்தினார். (மத்தேயு 6:10, 33, NW) பூமியில் தம்முடைய உண்மைத்தவறாமையின் மூலம் இயேசு தம்மைக் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இருப்பதற்குத் தகுதியுள்ளவராய் நிரூபித்தார். அவர் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றவுடனேயே அரசராக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டாரா?
27 இல்லை, அவர் ஆட்சி செய்யத் தொடங்கவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் சங்கீதம் 110:1-ஐக் குறிப்பிட்டுப் பின்வருமாறு விளக்குகிறான்: “இந்த மனிதர் [இயேசு] பாவங்களுக்காக ஒரே பலியை என்றென்றைக்குமாகச் செலுத்தி கடவுளுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார், அது முதற்கொண்டு தம்முடைய சத்துருக்கள் தம்முடைய பாதத்திற்கு மணையாக வைக்கப்பட வேண்டிய வரையில் காத்துக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 10:12, 13, NW) இயேசு யெகோவாவின் பின்வரும் கட்டளைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்: “நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்.” (சங்கீதம் 110:2) இந்தச் சமயம் வந்தபோது, அவர் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் நீக்கிப் பரலோகங்களைச் சுத்திகரிக்கத் தொடங்கினார். பரலோகத்தில் நடந்த அந்தப் போரின் விளைவு பின்வரும் இவ்வார்த்தைகளில் கூறப்பட்டிருக்கிறது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ் சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப் போனான்.” (வெளிப்படுத்துதல் 12:10) இந்தப் புத்தகத்தின் தொடக்க அதிகாரம் ஒன்றில் கண்டபடி, இந்தப் பரலோகப் போர் ஏற்கெனவே நடந்தாயிற்று மேலும், இப்பொழுதுதானேயும் இயேசு கிறிஸ்து தம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்து கொண்டிருக்கிறாரென்று உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
28 வெகு சீக்கிரத்தில் கிறிஸ்துவும் அவருடைய பரலோகத் தூதர்களும், தற்போதைய உலகப் பிரகாரமான அரசாங்கங்கள் யாவற்றையும் இந்தப் பூமியிலிருந்து நீக்கிப் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 17:14) “புறஜாதிகளைச் சங்கரிக்கும்படி அவர் [நீண்ட] கூர்மையான பட்டயத்தை” உடையவராக இருக்கிறார் என்றும் “இருப்புக் கோலால் அவர்களை மேய்த்து நடத்துவார்,” என்றும் பைபிள் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 19:11-16, NW) வரப்போகிற இந்த அழிவின் போது பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கும்படி, நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். (யோவான் 3:36) நாம் அவருடைய சீஷராகி, நம்முடைய பரலோக அரசராக நம்மை அவருக்குக் கீழ்ப்படுத்தவேண்டும். நீங்கள் இதைச் செய்வீர்களா?
[கேள்விகள்]
1 , 2. (எ) இயேசு கிறிஸ்து மெய்யான ஓர் ஆளாக இருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (பி) இயேசுவைப் பற்றி என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
3. (எ) தேவதூதனுடைய வார்த்தைகளின் பிரகாரம் மரியாள் யாருடைய குமாரனைப் பிறப்பிப்பாள்? (பி) கன்னியாகிய மரியாள் இயேசுவைப் பிறப்பிப்பது எப்படிக் கூடியதாயிருந்தது?
4. (எ) ஒரு பிள்ளையாகத் தாம் பிறப்பதற்கு முன்பாக எந்த வாழ்க்கையை இயேசு அனுபவித்து மகிழ்ந்தார்? (பி) முன்னால் தாம் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார் என்று காட்டுவதற்கு இயேசு என்ன சொன்னார்?
5. (எ) இயேசு ஏன் அந்த “வார்த்தை,” “முதற்பேறானவர்,” “ஒரே பேறானவர்” என்பதாக அழைக்கப்பட்டிருந்தார்? (பி) கடவுளுடன் எந்த வேலையில் இயேசு பங்கு கொண்டிருந்தார்?
6. (எ) இயேசுவின் பிறப்புக்குச் சிறிது காலத்துக்கு முன்னும் பின்னும் என்ன சம்பவங்கள் நடந்தன? (பி) இயேசு எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்?
7. (எ) இயேசு 12 வயதாக இருந்தபோது என்ன நடந்தது? (பி) அவர் வளர்ந்து வருகையில் என்ன வேலை செய்ய கற்றுக் கொண்டார்?
8. இயேசு 30 வயதாக இருந்தபோது என்ன நடந்தது?
9. (எ) உண்மையில், இயேசு எப்பொழுது கிறிஸ்து ஆனார், ஏன் அப்பொழுது? (பி) தம்முடைய முழுக்காட்டுதலின் மூலம் இயேசு என்ன செய்வதற்குத் தம்மை அளித்துக் கொண்டிருந்தார்?
10. என்ன சத்தியங்களைச் சொல்வதற்கு இயேசு பூமிக்கு வந்தார்?
11. (எ) இயேசு ஏன் தம்முடைய வேலையை அவ்வளவு முக்கியமானதாகக் கருதினார்? (பி) எதைச் செய்வதிலிருந்து இயேசு ஒருபோதும் பின்வாங்கவில்லை? ஆகவே நாம் என்ன செய்யவேண்டும்?
12. வேறு எந்த முக்கிய காரணத்துக்காவும் இயேசு பூமிக்கு வந்தார்?
13. (எ) “மீட்கும் பொருள்” என்றாலென்ன? (பி) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும்படி இயேசு செலுத்தின அந்த மீட்பின் கிரயம் என்ன?
14. இயேசு அளித்த அந்த மீட்பின் கிரயம் ஏன் தேவைப்பட்டது?
15. ஆதாம் தானே பாவஞ் செய்திருக்க அவனுடைய பிள்ளைகள் ஏன் துன்பப்படவும் சாகவும் வேண்டியதாயிற்று?
16. (எ) மீட்பின் கிரயத்தை ஏற்பாடு செய்ததில், கடவுள் எப்படி ‘உயிருக்கு உயிர் கொடுக்கப்படவேண்டும்’ என்ற தம்முடைய சட்டத்துக்கு மதிப்பு காட்டினார்? (பி) இயேசு ஏன் இந்த மீட்பின் கிரயத்தைச் செலுத்தக்கூடிய ஒரே மனிதனாக இருந்தார்?
17. இந்த மீட்பின் கிரயம் எப்பொழுது கடவுளுக்குச் செலுத்தப்பட்டது?
18. (எ) இந்த மீட்பின் கிரயத்திலிருந்து இப்பொழுதேயுங்கூட நாம் எப்படி நன்மையடையலாம்? (பி) இந்த மீட்பின் கிரயம் எதிர்காலத்தில் எதை நமக்குக் கூடியதாக்குகிறது?
19. (எ) இந்த மீட்பின் கிரய ஏற்பாடு உங்கள் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது? (பி) இந்த மீட்கும் பொருளுக்காக நம்முடைய நன்றியறிதலை நாம் எப்படிக் காட்ட வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்?
20. இயேசு அந்தக் குஷ்டரோகியை சுகப்படுத்தினதிலிருந்து நாம் அவரைப் பற்றி என்ன தெரிந்து கொள்ளுகிறோம்?
21. அந்தத் திரளான மக்களுக்கு இயேசு எப்படி உதவி செய்தார்?
22. தாம் உதவி செய்த அந்த மக்களைப் பற்றி இயேசு உண்மையில் கரிசனையுள்ளவராக இருந்தார் என்று எது காட்டுகிறது?
23. விதவையின் செத்த மகனை உயிர்த்தெழுப்புவதற்கு இயேசுவைத் தூண்டினது எது?
24. இயேசுவின் அற்புதங்கள் எதிர்காலத்தைக் குறித்து என்ன காட்டின?
25. இயேசுவின் வாழ்க்கை எந்த மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படக்கூடும்?
26. பூமியில் தம்முடைய உண்மைத் தவறாமையின்மூலம், எதற்குத் தகுதியுள்ளவராய் இயேசு தம்மை நிரூபித்தார்?
27. (எ) பரலோகத்துக்குத் தாம் திரும்பிச் சென்ற பின்பு இயேசு என்ன செய்தார்? (பி) கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு எடுத்த முதல் நடவடிக்கை என்ன?
28. (எ) சீக்கிரத்தில் கிறிஸ்து என்ன செய்வார்? (பி) அவருடைய பாதுகாப்பை அனுபவித்து மகிழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 58-ன் படம்]
இயேசு முழுக்காட்டப்பட்டு யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்டவராகும்படி தம்முடைய தச்சு வேலையை விட்டுவிட்டார்
[பக்கம் 63-ன் படம்]
இயேசு அந்தப் பரிபூரண மனிதனாகிய ஆதாமுக்கு ஈடானவராக இருந்தார்
[பக்கம் 64-ன் படங்கள்]
நோயுற்றவர்களுக்கும் பசியுள்ளவர்களுக்கும் உதவி செய்யும்படி இயேசு மனதுருகினார்
[பக்கம் 67-ன் படம்]
மரித்தோரை உயிர்த்தெழுப்புவதன் மூலம், இயேசு, கடவுளுடைய ராஜ்யம் ஆளுகையில் தாம் பெரிய அளவில் என்ன செய்வார் என்பதைக் காட்டினார்