மே
வியாழன், மே 1
கொடிய பஞ்சம் வரப்போகிறது.—அப். 11:28.
முதல் நூற்றாண்டில், “உலகம் முழுவதும்” ஒரு கொடிய பஞ்சம் வந்தது. கிறிஸ்தவர்களும் அந்தப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டார்கள். குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறோமோ என்று குடும்பத் தலைவர்கள் ரொம்பக் கவலைப்பட்டிருப்பார்கள். இன்னும் நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டு வைத்திருந்த இளைஞர்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘பஞ்சம் முடியட்டும், அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவர்கள் நினைத்திருப்பார்களா? நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களால் முடிந்தளவுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்தார்கள். அவர்களிடம் இருந்த பொருள்களை யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷமாகக் கொடுத்து உதவினார்கள். (அப். 11:29, 30) நிவாரண உதவிகள் பெற்றவர்கள் யெகோவா தங்களுக்கு உதவி செய்ததை கண்ணாரப் பார்த்தார்கள். (மத். 6:31-33) அதுமட்டுமல்ல, அவர்களுக்கு உதவி செய்த சகோதர சகோதரிகளோடு அவர்கள் இன்னும் நெருக்கமாகியிருப்பார்கள். நன்கொடைகளைக் கொடுத்தவர்களும் சரி, மற்ற விதங்களில் நிவாரண வேலை செய்தவர்களும் சரி, கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்திருப்பார்கள்.—அப். 20:35. w23.04 16 ¶12-13
வெள்ளி, மே 2
அவரிடம் கேட்டுக்கொண்ட காரியங்கள் நமக்குக் கிடைக்கும் என்பதையும் அறிந்திருக்கிறோம்.—1 யோ. 5:15.
சிலசமயம், யெகோவா தன் மக்களின் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதற்காகத் தன்னை வணங்காதவர்களையும் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, எருசலேமுக்குப் போய் அதைத் திரும்பக் கட்டுவதற்குத் தன்னை அனுப்பும்படி நெகேமியா கேட்டபோது, அதற்கு அனுமதி கொடுக்க அர்தசஷ்டா ராஜாவை யெகோவா தூண்டினார். (நெ. 2:3-6) இன்றும், யெகோவா தன்னை வணங்காதவர்களைப் பயன்படுத்திக்கூட நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். நம் ஜெபங்களுக்கு எப்போதுமே அற்புதமான விதத்தில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு என்ன தேவையோ அது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அதனால், உங்கள் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார் என்று நேரமெடுத்து யோசித்துப் பார்க்க வேண்டும். (சங். 66:19, 20) ஜெபம் செய்வதன் மூலமாக மட்டுமல்ல, அந்த ஜெபத்துக்கு எப்படிப்பட்ட பதில் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும் நம் விசுவாசத்தைக் காட்டலாம்.—எபி. 11:6. w23.05 11 ¶13; 12 ¶15-16
சனி, மே 3
என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.—சங். 40:8.
யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது, அவரைத்தான் வணங்குவோம்... அவருடைய விருப்பத்தைத்தான் செய்வோம்... என்று அவருக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறோம். அந்த உறுதிமொழியை நாம் காப்பாற்ற வேண்டும். அது ஒரு பாரம் கிடையாது. சொல்லப்போனால், நாம் யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். (வெளி. 4:11) யெகோவா நமக்குள் ஆன்மீகத் தேவையை வைத்திருக்கிறார். அதோடு, தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார். அதனால், அவரிடம் நம்மால் நெருங்கிப்போக முடியும், யெகோவாவின் விருப்பத்தைச் செய்து அவருடைய மகன் காட்டும் வழியில் நடந்தால், நமக்கு “புத்துணர்ச்சி கிடைக்கும்.” (மத். 11:28-30) அதற்கு யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பைத் தொடர்ந்து அதிகமாக்குங்கள். இதுவரை யெகோவா உங்களுக்கு என்னென்ன நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார், எதிர்காலத்தில் என்னென்ன ஆசீர்வாதங்களைத் தரப்போகிறார் என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். அப்போது, அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும். அவருக்குக் கீழ்ப்படிவதும் உங்களுக்கு சுலபமாக இருக்கும். (1 யோ. 5:3) இயேசு யெகோவாவின் விருப்பத்தை முழுமையாகச் செய்து முடித்தார். ஏனென்றால், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். அதோடு, தனக்குக் கிடைக்கப்போகும் பலனை எப்போதும் தன் கண்முன் வைத்திருந்தார். (எபி. 5:7; 12:2) இயேசுவைப் போலவே நீங்களும் யெகோவாவிடம் பலம் கேட்டு ஜெபம் செய்யுங்கள். அதோடு, முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கையை எப்போதும் உங்கள் கண்முன் வையுங்கள். w23.08 27-28 ¶4-5
ஞாயிறு, மே 4
கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார் என்று தெரியாமல், அவருடைய மகா கருணையையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அலட்சியம் செய்கிறீர்களா?—ரோ. 2:4.
எரிச்சல்படாமல் ஏதோவொரு விஷயத்துக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறவர்களைப் பார்க்கும்போது அவர்கள்மேல் நமக்கு மரியாதை வரும். அதேபோல், நாம் தவறு செய்யும்போது மற்றவர்கள் நம்மிடம் பொறுமையாக நடந்துகொண்டால் நமக்கு சந்தோஷமாக இருக்கும். நமக்கு பைபிள் படிப்பு நடத்தியவர் காட்டிய பொறுமைக்காகவும் நாம் நன்றியோடு இருக்கிறோம். பைபிள் விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் அவர்கள் எவ்வளவு பொறுமையாக நமக்கு உதவி செய்திருக்கிறார்கள். யெகோவா நம்மிடம் பொறுமையாக நடந்துகொள்வதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். மற்றவர்கள் பொறுமையாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருந்தாலும், நாம் பொறுமையாக இருப்பது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, நாம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் பொறுமை காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். அதுவும், நாம் எங்கேயாவது அவசரமாகப் போய்க்கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்! யாராவது நம்மை எரிச்சல்படுத்தினாலும் நமக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடலாம். சிலசமயம், புதிய உலகத்துக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுகூட நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும் நாம் இன்னும் அதிகப் பொறுமையோடு இருக்க வேண்டும். w23.08 20 ¶1-2
திங்கள், மே 5
கிதியோன் 300 பேரை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.—நியா. 7:8.
கிதியோனின் படையில் இருந்த கிட்டத்தட்ட எல்லாரையுமே வீட்டுக்கு அனுப்பச் சொல்லி யெகோவா சொன்னார். ஒருவேளை கிதியோன், ‘இந்த மாற்றம் அவசியம்தானா? இது ஒத்துவருமா?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா சொன்னது போலவே கிதியோன் செய்தார். இன்று யெகோவாவின் அமைப்பு ஒரு விஷயத்தை மாற்றிச் செய்யச் சொன்னால் மூப்பர்கள் அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் கிதியோனைப் போலவே நடந்துகொள்கிறார்கள். (எபி. 13:17) கிதியோன் தன் உயிரையே பணயம் வைத்து ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. (நியா. 9:17) அவருக்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அதைச் செய்து முடித்தார். யெகோவா தன் ஜனங்களைப் பாதுகாக்கக் கண்டிப்பாக உதவுவார் என்று கிதியோன் நம்பினார். ஏனென்றால், அப்படி உதவுவதாக யெகோவா அவருக்கு உறுதி அளித்திருந்தார். நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருக்கும் மூப்பர்கள் கிதியோனைப் போலவே தைரியமாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்படலாம், விசாரிக்கப்படலாம், வேலையை இழக்கலாம் அல்லது தாக்கப்படலாம் என்று தெரிந்திருந்தும், கூட்டங்களையும் ஊழியத்தையும் தைரியமாக முன்நின்று வழிநடத்துகிறார்கள். மிகுந்த உபத்திரவத்தின்போது கிடைக்கிற அறிவுரையின்படி செய்வது ஒருவேளை ஆபத்தாக இருக்கலாம். ஆனாலும், அதற்கெல்லாம் கீழ்ப்படிய வேண்டுமென்றால் மூப்பர்களுக்குத் தைரியம் தேவைப்படும். w23.06 5-6 ¶12-13
செவ்வாய், மே 6
என்னை மதிக்கிறவர்களை நான் மதிப்பேன்.—1 சா. 2:30.
தலைமைக் குரு யோய்தா செய்த நல்ல விஷயங்களைப் பற்றியெல்லாம் யெகோவா பைபிளில் பதிவு செய்தார். (ரோ. 15:4), யோய்தா ‘இஸ்ரவேல் மக்களுக்கும் உண்மைக் கடவுளுக்கும் அவருடைய ஆலயத்துக்கும் நிறைய நல்லது செய்திருந்ததால், “தாவீதின் நகரத்தில்,” ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படும்’ பெரிய கவுரவத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (2 நா. 24:15, 16) யோய்தாவைப் பற்றிய பதிவு, கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ள நம் எல்லாருக்குமே உதவி செய்யும். கிறிஸ்தவக் கண்காணிகள் எப்படி யோய்தாவைப் போலவே நடந்துகொள்ளலாம்? விழிப்பாக இருந்து, கடவுளுடைய மந்தையைப் பாதுகாப்பதன் மூலம்தான். (அப். 20:28) வயதானவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போதும், அவருக்கு உண்மையாக இருக்கும்போதும், யெகோவா அவர்களை தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துவார் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். இளைஞர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா எப்படி யோய்தாவை நடத்தினார் என்பதைக் கவனித்து, யெகோவாவைப் போலவே அவர்களும் வயதானவர்களை மதிப்பு மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தலாம். அதுவும், ரொம்பக் காலமாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறவர்களுக்கு அவர்கள் நிறைய மரியாதை காட்டலாம். (நீதி. 16:31) நம்மை ‘வழிநடத்துகிறவர்களுக்கு’ கீழ்ப்படிவதன் மூலமாக நம்முடைய முழு ஆதரவையும் அவர்களுக்குக் காட்டலாம்.—எபி. 13:17. w23.06 17 ¶14-15
புதன், மே 7
நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன. —நீதி. 10:21.
கூட்டங்களில் எவ்வளவு பதில்கள் சொல்லப்போகிறீர்கள் என்பதை விவேகமாக முடிவு செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் அடிக்கடி கையைத் தூக்கிக்கொண்டே இருந்தால், புதிதாகக் கை தூக்குகிறவர்களைக் கேட்பதற்குப் பதிலாக உங்களையே கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென்று நடத்துகிறவரை நீங்கள் கட்டாயப்படுத்துவதுபோல் ஆகிவிடும். அதோடு, நாமே பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் மற்றவர்களுக்குக் கை தூக்கவே தோன்றாது. (பிர. 3:7) நிறைய பேர் கை தூக்கும்போது, நாம் நினைத்த அளவுக்கு நிறைய பதில்களை நம்மால் சொல்ல முடியாமல் போகலாம். சிலசமயம், ஒரேவொரு பதில் சொல்லக்கூட வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடலாம். அப்போது நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனாலும் நாம் கோபித்துக்கொள்ளக் கூடாது. (பிர. 7:9) மற்றவர்கள் சொல்லும் பதிலையும் கவனமாகக் கேளுங்கள். கூட்டம் முடிந்த பிறகு அவர்களைப் பாராட்டுங்கள். நீங்கள் சொல்லும் பதிலைக் கேட்பது மற்றவர்களுக்கு எந்தளவு உற்சாகமாக இருக்குமோ அதேபோல் நீங்கள் அவர்களைப் பாராட்டுவதும் அவர்களுக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும். w23.04 23-24 ¶14-16
வியாழன், மே 8
கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன். —சங். 57:7.
ஒரு மரத்தின் வேர் எந்தளவுக்கு ஆழமாக மண்ணுக்குள் போகிறதோ அந்தளவுக்கு அந்த மரம் உறுதியானதாக இருக்கும். அதே மாதிரி, யெகோவாமேல் நமக்கு இருக்கிற விசுவாசம் ஆழமாக வேரூன்றி இருந்ததென்றால், நாம் உறுதியானவர்களாக இருப்போம். மரம் வளர வளர, அதன் வேர் ஆழமாகவும் பக்கவாட்டிலும் பரந்து விரிந்து போகும். அதே மாதிரி, கடவுளுடைய வார்த்தையை படித்து ஆழமாக யோசிக்கும்போது நம் விசுவாசம் பலமாகும். அதோடு, கடவுளுடைய வழிகள்தான் சிறந்தது என்ற நம் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். (கொலோ. 2:6, 7) முன்னாடி காலத்தில், யெகோவா அவருடைய மக்களைப் பாதுகாத்தார், வழிநடத்தினார், அறிவுரைகளையும் கொடுத்தார். இதெல்லாம் எப்படி அவர்களுக்குப் பிரயோஜனமாக இருந்தது என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, தரிசனத்தில் பார்த்த ஆலயத்தை ஒரு தேவதூதர் எவ்வளவு துல்லியமாக அளவு எடுத்தார் என்பதை எசேக்கியேல் உன்னிப்பாக கவனித்தார். அது எசேக்கியேலைப் பலப்படுத்தியது. தூய வணக்கத்தில் யெகோவா வைத்திருக்கிற நெறிமுறைகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று அதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். (எசே. 40:1-4; 43:10-12) அதனால், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற ஆழமான விஷயங்களைப் படித்து நன்றாக யோசித்துப் பார்ப்பது நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். அப்போது நம்முடைய உள்ளத்தை உறுதியாக்க முடியும்; யெகோவாமேல் நம்பிக்கை வைக்க முடியும்.—சங். 112:7. w23.07 18 ¶15-16
வெள்ளி, மே 9
‘யோசிக்கும் திறனை பாதுகாத்துக்கொள்.’—நீதி. 3:21.
உங்கள் குடும்பத்திலும் சபையிலும் முதிர்ச்சியுள்ள ஆண்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களுடைய உதாரணத்தை நீங்கள் பின்பற்றலாம். (எபி. 13:7) எல்லாவற்றையும்விட இயேசு கிறிஸ்து உங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. (1 பே. 2:21) நிறைய இளம் ஆண்களுடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்கள் எல்லாரும் கடவுள்மேல் அன்பு வைத்திருந்தார்கள். கடவுளுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நல்லபடியாக செய்தார்கள். இவர்கள் எல்லாருடைய உதாரணத்தையும் ஆழமாக படித்துப்பாருங்கள். (எபி. 12:1, 2) பிறகு, அவர்களை மாதிரியே எப்படி நடந்துகொள்ளலாம் என்று யோசியுங்கள். யோசிக்கும் திறன் இருக்கும் ஒருவர் அவசரப்பட்டு எதையும் செய்துவிட மாட்டார். இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் அதைத் தொடர்ந்து காட்டவும் கடினமாக முயற்சி எடுங்கள். முதலில், பைபிள் நியமங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். அந்த நியமங்கள் உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசியுங்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி தீர்மானங்கள் எடுக்க இந்த நியமங்களைப் பயன்படுத்துங்கள். (சங். 119:9) முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு இதுதான் முக்கிய படி.—நீதி. 2:11, 12; எபி. 5:14. w23.12 24-25 ¶4-5
சனி, மே 10
உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.—1 பே. 3:15.
நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் எப்படி சாந்தமாக பதில் சொல்லலாம் என்று பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். (யாக். 3:13) சில பெற்றோர்கள் தங்களுடைய குடும்ப வழிபாட்டில், ஸ்கூலில் எந்த மாதிரி கேள்விகளை கேட்பார்கள் என்று யோசித்து பார்த்து அதைப் பற்றி கலந்துபேசுகிறார்கள்; பிறகு, சாந்தமாக எப்படி பதில் சொல்வது என்று நடித்து பார்க்கிறார்கள். அப்போது நாம் ஏன் ஒரு விஷயத்தை நம்புகிறோம் என்று நமக்கு நாமே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்; நம்ப வைக்கும் விதத்தில் மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க முடியும். jw.org வெப்சைட்டில் “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்” தொடரில் டீனேஜ் பிள்ளைகளுக்கு சில ஒர்க் ஷீட்டுகள் இருக்கின்றன. இளம் பிள்ளைகள் தங்களுடைய நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்வதற்காகவே இதைத் தயாரித்திருக்கிறார்கள். இதை வைத்து அவர்களால் சொந்த வார்த்தைகளில் பதில்களை தயாரிக்கவும் முடியும். w23.09 17 ¶10; 18 ¶15-16
ஞாயிறு, மே 11
நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.—கலா. 6:9.
நீங்கள் எப்போதாவது ஒரு குறிக்கோளை வைத்துவிட்டு அதை அடைய முடியாமல் திண்டாடியிருக்கிறீர்களா? நிறைய பேர் அப்படித் திண்டாடியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இன்னும் நன்றாக ஜெபம் பண்ண வேண்டும், அடிக்கடி ஜெபம் பண்ண வேண்டும் என்று ஃபிலிப் ஆசைப்பட்டார். அதற்காக நேரம் ஒதுக்குவது அவருக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. எரிக்கா, வெளி ஊழியக் கூட்டத்துக்கு நேரத்தோடு போய்ச் சேர வேண்டுமென்று குறிக்கோள் வைத்தார். கிட்டத்தட்ட ஒவ்வொரு கூட்டத்துக்கும் லேட்டாகத்தான் போய்ச் சேர்ந்தார். நீங்கள் ஏற்கெனவே வைத்த ஒரு குறிக்கோளை இன்னும் அடையாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், தோற்றுப்போய்விட்டதாக நினைத்து சோர்ந்துபோகாதீர்கள். உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைய ஆசைப்படுவதே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள், உங்களால் முடிந்த சிறந்ததை அவருக்குக் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார். உங்களால் கொடுக்க முடியாததை அவர் கண்டிப்பாக எதிர்பார்க்க மாட்டார். (சங். 103:14; மீ. 6:8) அதனால், உங்கள் சூழ்நிலையில் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை குறிக்கோளாக வையுங்கள். w23.05 26 ¶1-2
திங்கள், மே 12
கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?—ரோ. 8:31.
தைரியமாக இருப்பவர்களுக்குப் பயமே வராது என்று சொல்ல முடியாது. பயமாக இருந்தாலும், அவர்கள் சரியானதைச் செய்வார்கள். தானியேலுக்கு சின்ன வயதாக இருந்தாலும், அவர் ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார். கடவுளுடைய தீர்க்கதரிசிகள் எழுதிய விஷயங்களை அவர் ஆழமாகப் படித்தார், எரேமியா எழுதிய தீர்க்கதரிசனங்களைக்கூட படித்தார். அதனால்தான், பல வருஷங்களாக பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்குச் சீக்கிரத்தில் விடுதலை கிடைக்கப்போகிறது என்ற விஷயத்தை அவர் பிற்பாடு புரிந்துகொண்டார். (தானி. 9:2) பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப் பார்த்தது, யெகோவாமேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையைப் பலப்படுத்தியது. கடவுள்மேல் பலமான நம்பிக்கை வைப்பவர்களால் அசாதாரணமான தைரியத்தைக் காட்ட முடியும்! (ரோமர் 8:32, 37-39-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) எல்லாவற்றையும்விட முக்கியமாக, தானியேல் அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (தானி. 6:10) தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டார், தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் உதவி கேட்டார். (தானி. 9:4, 5, 19) தானியேலும் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனுஷன்தான். அதனால், பிறக்கும்போதே அவர் தைரியத்தோடு பிறக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும்... அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமும்... அவர்மேல் நம்பிக்கை வைப்பதன் மூலமும்... அந்தக் குணத்தை அவர் வளர்த்துக்கொண்டார். w23.08 3 ¶4; 4 ¶7
செவ்வாய், மே 13
உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள். —மத். 5:16.
அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. கீழ்ப்படியாதவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வோம். (ரோ. 13:1, 4) அதோடு, யெகோவாவின் சாட்சிகளை அதிகாரிகள் நல்ல விதமாகப் பார்ப்பார்கள். நிறைய வருஷங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் ராஜ்ய மன்றத்துக்குள் நுழைந்தார்கள். வரி கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் செய்கிற யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று பார்க்க வந்தார்கள். ஆனால், அந்த ராணுவ வீரர்களின் அதிகாரி, “யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பாக வரி கட்டுவார்கள், அதனால் நாம் இங்கிருந்து போய்விடலாம்” என்று சொன்னார். ஒவ்வொரு தடவை நாம் சட்டத்துக்குக் கீழ்ப்படியும்போதும், யெகோவாவின் மக்களுக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றுகிறோம். இந்த நல்ல பெயர், என்றைக்காவது ஒருநாள் இன்னொரு யெகோவாவின் சாட்சியைப் பாதுகாக்கும். w23.10 9 ¶13
புதன், மே 14
நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது அவசியம்.—எபி. 10:36.
முடிவு வருவதற்கு ரொம்ப தாமதமாவதுபோல் நமக்கு ஒருவேளை தோன்றலாம். யெகோவா அதைப் புரிந்துகொள்கிறார். சொல்லப்போனால், அவர் ஆபகூக் தீர்க்கதரிசியிடம், “நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும். அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது. ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு. தரிசனம் நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” என்று சொன்னார். (ஆப. 2:3) ஆபகூக் தீர்க்கதரிசிக்காக மட்டும்தான் யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? அல்லது, நமக்காகவும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாரா? பவுல் இந்த வார்த்தைகளை, புதிய உலகத்துக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்திக் காட்டினார். (எபி. 10: 37) யெகோவா நம்மை விடுவிக்கப்போகும் நாள் தாமதிப்பதுபோல் தெரிந்தாலும், அது “நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” w23.04 30 ¶16
வியாழன், மே 15
அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.—எண். 14:2.
தெளிவான ஆதாரங்கள் இருந்தும் மோசேயைப் பயன்படுத்திதான் யெகோவா தங்களுக்கு வழிகாட்டுகிறார் என்பதை நிறைய இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (எண். 14:10, 11) இதனால் அந்தத் தலைமுறையை சேர்ந்த யாராலும் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக முடியவில்லை. (எண். 14:30) ஆனாலும், சில இஸ்ரவேலர்கள் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். உதாரணத்துக்கு, “காலேப் . . . முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான்” என்று யெகோவா சொன்னார். (எண். 14:24) அதனால், கானான் தேசத்தில் அவர் கேட்ட பகுதியை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (யோசு. 14:12-14) இஸ்ரவேலர்களுடைய அடுத்த தலைமுறையும் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். மோசேக்கு அடுத்து யோசுவா தலைவராக ஆனபோது அவருக்கு அவர்கள் “வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.” (யோசு. 4:14) அதனால், யெகோவா அவர்களை கானான் தேசத்தில் குடிவைத்தார்.—யோசு. 21:43, 44. w24.02 21 ¶6-7
வெள்ளி, மே 16
கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும்.—1 யோ. 4:21.
நாடித் துடிப்பை வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை ஒரு டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி, மற்றவர்கள்மேல் நமக்கு இருக்கிற அன்பை வைத்து கடவுள்மேல் நமக்கு அன்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைவாக இருந்தால், கடவுள்மேல் நமக்கு இருக்கும் அன்பும் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைந்திருந்தால், அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு அது ஒரு அறிகுறி. இதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன், தான் பார்க்காத கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது.” (1 யோ. 4:20) ‘ஒருவருக்கொருவர் அன்பு காட்டினால்தான்’ யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கும்.—1 யோ. 4:7-9, 11. w23.11 8 ¶3; 9 ¶5-6
சனி, மே 17
உன் அப்பாவும் அம்மாவும் பூரித்துப்போவார்கள்.—நீதி. 23:25.
யோவாஸ் சின்ன வயதாக இருந்தபோதே அவருடைய அப்பா இறந்துபோய்விட்டார். அதனால் தலைமைக் குரு யோய்தாதான் அவரை வளர்த்தார். யெகோவாவைப் பற்றி அவருக்கு சொல்லிக்கொடுத்தார். யோய்தா பேச்சைக் கேட்டு நடந்ததால், யோவாஸ் நல்ல முடிவுகளை எடுத்தார். மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று யோவாஸ் முடிவெடுத்தார். யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கிற வேலை செய்வதற்குக்கூட ஏற்பாடு செய்தார். (2 நா. 24:1, 2, 4, 13, 14) யெகோவாவை நேசிப்பதற்கும் அவர் சொல்லி தருகிற மாதிரி வாழ்வதற்கும் உங்கள் அப்பா அம்மாவோ, வேறு யாரோ உங்களுக்கு சொல்லி தருகிறார்கள் என்றால் உங்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். (நீதி. 2:1, 10-12) பைபிளில் இருந்து உங்கள் அப்பா அம்மா சொல்லி தருவதை நீங்கள் கேட்டு, அதேமாதிரி செய்யும்போது உங்கள் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். கடவுளுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவரோடு உங்களுக்கு இருக்கும் நட்பு இன்னும் பலமாகும்.—நீதி. 22:6; 23:15, 24. w23.09 8-9 ¶3-5
ஞாயிறு, மே 18
நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.—எரே. 29:12.
நம்முடைய ஜெபங்களைக் கவனித்துக் கேட்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். தன்னை உண்மையாக வணங்குகிறவர்கள் செய்யும் ஜெபங்களை அவர் கேட்காமல் இருக்கவே மாட்டார். (சங். 10:17; 37:28) அதற்காக, நாம் கேட்பதையெல்லாம் யெகோவா இப்போதே கொடுத்துவிடுவார் என்றும் அர்த்தம் கிடையாது. நாம் ஆசைப்படுகிற சில விஷயங்கள் நடப்பதற்காக, புதிய உலகம் வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம். நாம் கேட்கிற விஷயங்கள் தன்னுடைய விருப்பத்தோடு எப்படி ஒத்துப்போகிறது என்பதை யெகோவா பார்க்கிறார். (ஏசா. 55:8, 9) இந்தப் பூமியில் சந்தோஷமான ஒற்றுமையான மக்கள் வாழ வேண்டும் என்பதும், அவர்கள் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதும் யெகோவாவின் விருப்பம். ஆனால், மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொண்டால், சந்தோஷமாக இருப்பார்கள் என்று சாத்தான் சொல்கிறான். (ஆதி. 3:1-5) அவன் சொல்வது பொய் என்பதை நிரூபிப்பதற்காக, மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்ய யெகோவா கொஞ்ச காலம் விட்டிருக்கிறார். ஆனால், மனித ஆட்சி ஏகப்பட்ட பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. (பிர. 8:9) அதனால்தான், சில பிரச்சினைகளை யெகோவா இப்போதே சரி செய்வது கிடையாது. w23.11 21 ¶4-5
திங்கள், மே 19
நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக நியமித்திருக்கிறேன்.—ரோ. 4:17.
ஆபிரகாம் மூலமாக ‘நிறைய தேசங்கள்’ ஆசீர்வதிக்கப்படும் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார். ஆனால், ஆபிரகாமுக்கு 100 வயதும் சாராளுக்கு 90 வயதும் ஆன பிறகுகூட அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இது உண்மையிலேயே ஆபிரகாமுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந்திருக்கும். இருந்தாலும், கடவுள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார். அதாவது, தான் நிறைய தேசங்களுக்கு தகப்பனாக ஆவார் என்பதில் “விசுவாசம் வைத்தார்.” (ரோ. 4:18, 19) சீக்கிரத்தில் அவருடைய நம்பிக்கை நிஜமானது. ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருந்த மகன் பிறந்தான். அவன்தான் ஈசாக்கு! (ரோ. 4:20-22) ஆபிரகாம் மாதிரியே நாமும் அவருடைய பார்வையில் நீதிமானாக ஆக முடியும், அவருடைய நண்பராகவும் ஆக முடியும். அதைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “‘அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்’ என்ற வார்த்தைகள் [ஆபிரகாமுக்காக] மட்டும் எழுதப்படவில்லை, நமக்காகவும் எழுதப்பட்டன. நம் எஜமானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பிய கடவுள்மேல் நாம் விசுவாசம் வைப்பதால், நாமும் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.” (ரோ. 4:23, 24) ஆபிரகாம் மாதிரி நாமும் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு, அதை செயலில் காட்ட வேண்டும்; யெகோவா கொடுத்திருக்கிற நம்பிக்கை நிஜமாகும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். w23.12 7 ¶16-17
செவ்வாய், மே 20
நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.—சங். 31:7.
கஷ்டங்கள் வரும்போது நாம் பயந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் நமக்கு வரும் கஷ்டங்களையும் யெகோவா பார்க்கிறார், அதனால் நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் புரிந்துகொள்கிறார். உதாரணத்துக்கு, எகிப்தில் இஸ்ரவேலர்கள் அநியாயமாக நடத்தப்பட்டபோது, அவர்கள் அனுபவித்த கஷ்டத்தை மட்டுமல்ல அவர்களுடைய ‘வலியையும் வேதனையையும்’ யெகோவா புரிந்துகொண்டார். (யாத். 3:7) பயமுறுத்தும் ஒரு சூழ்நிலையில் யெகோவாவின் உதவியை உங்களால் உணர முடியாமல் போகலாம். அவர் கொடுக்கும் உதவியை புரிந்துகொள்ள, அவரிடமே உதவி கேளுங்கள். (2 ரா. 6:15-17) இந்தக் கேள்விகளையும் யோசித்துப் பாருங்கள்: “கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பேச்சோ ஒருவர் சொன்ன பதிலோ என்னை பலப்படுத்தியதா? ஒரு பிரசுரமோ வீடியோவோ பிராட்காஸ்டிங் பாடலோ என்னை பலப்படுத்தியிருக்கிறதா? தூக்கி நிறுத்துவதுபோல் யாராவது என்னிடம் பேசினார்களா? ஆறுதலான பைபிள் வசனங்களை காட்டினார்களா?” சகோதர சகோதரிகள் காட்டும் அன்பையும் பைபிள் தருகிற உற்சாகத்தையும் நாம் லேசாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாமே யெகோவா கொடுக்கும் பெரிய பெரிய பரிசுகள். (ஏசா. 65:13; மாற். 10:29, 30) அவர் நம்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்பதை இவை நிரூபிக்கின்றன. (ஏசா. 49:14-16) அவரை தாராளமாக நம்பலாம் என்பதையும் காட்டுகின்றன. w24.01 4-5 ¶9-10
புதன், மே 21
உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள்.—அப். 4:29.
இயேசு பரலோகத்துக்குப் போவதற்குக் கொஞ்சம் முன்பு, “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும்” தனக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்று தன் சீஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (அப். 1:8; லூக். 24:46-48) கொஞ்ச நாளிலேயே, யூத மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களான பேதுருவையும் யோவானையும் கைது செய்து நியாயசங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். இனி பிரசங்கிக்கக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளை போட்டார்கள், அவர்களை மிரட்டினார்கள். (அப். 4:18, 21) பேதுருவும் யோவானும் அவர்களிடம், “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்று சொன்னார்கள். (அப். 4:19, 20) பேதுருவும் யோவானும் விடுதலையான பிறகு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய உதவி கேட்டு சீஷர்கள் எல்லாரும் ஜெபம் செய்தார்கள். அதற்கு யெகோவா பதில் கொடுத்தார்.—அப். 4:31. w23.05 5 ¶11-12
வியாழன், மே 22
இவர் என் அன்பு மகன்.—மத். 17:5.
இந்த பிரபஞ்சத்திலேயே ரொம்ப காலம் ஒன்றாக இருந்தவர்கள் யெகோவாவும் அவருடைய மகன் இயேசுவும்தான். அந்த கோடிக்கணக்கான வருஷங்களில் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான பந்தம் உருவானது. ஒருவர்மேல் ஒருவர் கொள்ளை பாசம் வைத்திருந்தார்கள். யெகோவாவுக்கு இயேசுமேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை இன்றைய தினவசனத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம். ஒருவேளை அதில், “நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று மட்டும் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் இயேசுமேல் தனக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்வதற்காக “இவர் என் அன்பு மகன்” என்றும் சொன்னார். இயேசுவை நினைத்தும் அவர் செய்யப்போவதை நினைத்தும் யெகோவா பெருமைப்பட்டார். (எபே. 1:7) யெகோவாவுடைய அன்பை அவர் தன் இதயத்தின் ஆழத்தில் உணர்ந்தார். அதனால்தான் தன்னுடைய அப்பா தன்னை நேசிக்கிறார் என்பதை மறுபடியும் மறுபடியும் உறுதியாக சொன்னார்.—யோவா. 3:35; 10:17; 17:24. w24.01 28 ¶8
வெள்ளி, மே 23
நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது.—நீதி. 22:1.
உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களைப் பற்றி ரொம்ப மோசமான ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் சொல்கிறார். ஆனால், அவர் சொல்வதை சிலர் நம்பிவிடுகிறார்கள். அதை மற்றவர்களுக்கும் பரப்பிவிடுகிறார்கள். அப்போது உங்கள் மனசு சுக்குநூறாக உடைந்துவிடும், இல்லையா? யெகோவாவுடைய பெயருக்குக் களங்கம் வந்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணம் உதவுகிறது. தேவதூதர்களில் ஒருவன் ஏவாளிடம் அவரைப் பற்றி பொய் சொன்னான். அதை அவளும் நம்பினாள். அந்த பொய்யினால் ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்தார்கள். இதனால் பாவமும் மரணமும் மனிதர்களுக்கு வந்தது. (ஆதி. 3:1-6; ரோ. 5:12) இன்று நம்மை சுற்றியிருக்கும் மரணம், போர், வேதனை போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் சாத்தான் பரப்பிய பொய்தான் காரணம். இந்தப் பொய்யையும் அதனால் வந்த விளைவுகளையும் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்! அவருடைய மனசு கண்டிப்பாக வலிக்கும்!! ஆனாலும், யெகோவா வேதனையிலும் வெறுப்பிலும் மூழ்கிவிடவில்லை. சொல்லப்போனால், அவர் ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கிறார்.—1 தீ. 1:11. w24.02 8 ¶1-2
சனி, மே 24
நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்? —ஆதி. 39:9.
நீங்கள் எப்படி யோசேப்பு மாதிரி உறுதியாக இருக்கலாம்? தப்பு செய்வதற்கான ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போதே முடிவு செய்யுங்கள். யெகோவா வெறுக்கிற விஷயங்களை ‘செய்யவே மாட்டேன்’ என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். அந்த மாதிரி விஷயங்களை மனதில்கூட அசைபோடாதீர்கள். (சங். 97:10; 119:165) இப்படியெல்லாம் செய்தால், தப்பு செய்ய தூண்டும் ஒரு சூழ்நிலையில் பாவம் செய்துவிட மாட்டீர்கள். ‘இதுதான் சத்தியம் என்று எனக்குத் தெரியும்... யெகோவாவைதான் வணங்க வேண்டும் என்றும் தெரியும்... ஆனால் அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க தயக்கமாக இருக்கிறது!’ என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தாவீது ராஜாவைப் போல யெகோவாவிடம் உதவிக்காக கெஞ்சலாம். தாவீது இப்படிக் கெஞ்சினார்: “கடவுளே, என்னை ஆராய்ந்து பார்த்து, என் இதயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைச் சோதித்துப் பார்த்து, என் மனதிலுள்ள கவலைகளைப் புரிந்துகொள்ளுங்கள். எனக்குள் தவறான எண்ணம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். முடிவில்லாத பாதையில் என்னை வழிநடத்துங்கள்.” (சங். 139:23, 24) அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதை நீங்கள் ஒரு குறிக்கோளாக வைத்து அதற்காக உழைத்தால், யெகோவாவை ‘ஊக்கமாகத் தேடுகிறீர்கள்’ என்று அர்த்தம். அப்படித் தேடுகிறவர்களை அவர் கட்டாயம் ஆசீர்வதிப்பார்.—எபி. 11:6. w24.03 6 ¶13-15
ஞாயிறு, மே 25
அவர் தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை. —எபி. 7:27.
மக்களுடைய சார்பாக யெகோவாவுக்கு முன் நிற்கிற பொறுப்பு தலைமைக் குருவுக்கு இருந்தது. வழிபாட்டுக் கூடாரம் நிறுவப்பட்ட சமயத்தில், முதல் தலைமைக் குருவாக ஆரோனை யெகோவா நியமித்தார். ஆனால், இஸ்ரவேலில் இருந்த குருமார்களை பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி சொன்னார்: “குருமார்கள் தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு மரணம் தடையாக இருந்தது; அதனால், அடுத்தடுத்து வேறு பலர் குருமார்களாக நியமிக்கப்பட வேண்டியிருந்தது.” (எபி. 7:23-26) அதுமட்டுமல்ல, குருமார்களும் பாவிகளாக இருந்ததால் தங்களுடைய பாவங்களுக்காகவும் அவர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது. நம் தலைமைக் குரு இயேசுவோ ‘மனிதனால் இல்லாமல் யெகோவாவினால் அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தில் சேவை செய்கிறவராக’ இருக்கிறார். (எபி. 8:1, 2) இயேசுவைப் பற்றி பவுல் சொல்லும்போது, “அவர் என்றென்றும் உயிரோடு இருப்பதால் அவருக்கு அடுத்து வேறு யாரும் குருவாக நியமிக்கப்பட வேண்டியதில்லை” என்றார். அதுமட்டுமல்ல, இயேசு “களங்கமில்லாதவர், பாவிகளைப் போல இல்லாதவர்” என்றும், இஸ்ரவேலில் இருந்த தலைமை குருமார்களைப் போல் அவர் ‘தன்னுடைய பாவங்களுக்காக தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை’ என்றும் சொன்னார். w23.10 26 ¶8-9
திங்கள், மே 26
முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. —வெளி. 21:1.
‘முந்தின வானம்’ என்பது சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற எல்லா அரசாங்கங்களையும் குறிக்கிறது. (மத். 4:8, 9; 1 யோ. 5:19) பெரும்பாலும் பைபிளில், “பூமி” என்ற வார்த்தை மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி. 11:1; சங். 96:1) அப்படியென்றால், ‘முந்தின பூமி’ என்பது இன்று இருக்கும் மோசமான மக்களைக் குறிக்கிறது. இப்போது இருக்கும் ‘வானத்தையும்’ ‘பூமியையும்’ சரிசெய்து அதையே யெகோவா திரும்பவும் பயன்படுத்தப்போவது கிடையாது. அதற்குப் பதிலாக, அவற்றை ஒழித்துக்கட்டிவிட்டு புதிதாக ஒரு ‘வானத்தையும்’ ‘பூமியையும்’ ஏற்படுத்துவார். அதாவது, ஒரு புதிய அரசாங்கத்தையும், நல்ல மக்கள் மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமுதாயத்தையும் ஏற்படுத்தப்போகிறார். ஏசாயா சொல்லியிருப்பதுபோல், இந்த பூமியை ஏதேன் தோட்டத்தைப் போல யெகோவா புதிதாக்குவார். மனிதர்களை பரிபூரணமாக்கப்போகிறார். கால் ஊனமானவர்கள், கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள் எல்லாரையும் குணப்படுத்துவார். இறந்தவர்களையும் திரும்ப உயிரோடு கொண்டுவரப்போகிறார்.—ஏசா. 25:8; 35:1-7. w23.11 4 ¶9-10
செவ்வாய், மே 27
‘நீங்கள் தயாராக இருங்கள்.’—மத். 24:44.
“மிகுந்த உபத்திரவம்” திடீரென்று தொடங்கும். (மத். 24:21) பொதுவாக, பேரழிவுகள் வரப்போவது யாருக்கும் தெரியாது. ஆனால், மிகுந்த உபத்திரவம் வரப்போவது தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருக்கச் சொல்லி கிட்டத்தட்ட 2,000 வருஷத்துக்கு முன்னாடியே இயேசு எச்சரித்தார். நாம் தயாராக இருந்தால் அந்தக் கஷ்டமான காலத்தைத் தாண்டுவது சுலபம். மற்றவர்களுக்கும் கைகொடுத்து உதவ முடியும். (லூக். 21:36) யெகோவாவுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்றால் நமக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படும். நம்முடைய சகோதர, சகோதரிகள் பணம் பொருளை இழந்து நிற்கும்போது, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவதற்கு நமக்குக் கரிசனை தேவைப்படும். (ஆப. 3:17, 18) தேசங்களுடைய கூட்டணி நடத்துகிற தாக்குதலால், ஒருவேளை நம் சகோதர சகோதரிகளுடன் கொஞ்ச காலத்துக்கு ஒன்றாகக் கூடியிருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வோம்? (எசே. 38:10-12) அந்தக் கஷ்டமான சூழ்நிலையைக் கடந்து வருவதற்கு சகோதர, சகோதரிகள்மீது நமக்குப் பலமான அன்பு தேவைப்படும். w23.07 2 ¶2-3
புதன், மே 28
நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—எபே. 5:15, 16.
கணவன் மனைவிகளே, ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியின் உதாரணம் உங்களுக்கு உதவி செய்யும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில் அவர்களுக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்தது. (ரோ. 16:3, 4) அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தார்கள், ஊழியம் செய்தார்கள், மற்றவர்களுக்கு உதவி செய்தார்கள். (அப். 18:2, 3, 24-26) பைபிள் அவர்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் இரண்டு பேரையும் சேர்த்துதான் சொல்கிறது. இன்று கணவன் மனைவிகள் எப்படி அவர்களைப் போல் நடந்துகொள்ளலாம்? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். அதில் சில வேலைகளை நீங்கள் தனியாகச் செய்வதற்குப் பதிலாக ஒன்றாகச் சேர்ந்து செய்ய முடியுமா? உதாரணத்துக்கு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். நீங்களும் அப்படிச் செய்ய அடிக்கடி நேரம் ஒதுக்குகிறீர்களா? ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் மற்ற வேலைகளையும் ஒன்றாகச் சேர்ந்து செய்தார்கள். நீங்களும் உங்கள் துணையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால், வீட்டு வேலைகளை ஒன்றாகச் சேர்ந்து செய்யலாம். (பிர. 4:9) அப்போது ஒரே டீமாக இருப்பதுபோல் உணருவீர்கள், பேசுவதற்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். w23.05 22-23 ¶10-12
வியாழன், மே 29
எனக்குப் பயமாக இருக்கும்போது உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.—சங். 56:3.
நாம் எல்லாருமே ஏதோவொரு சமயத்தில் பயத்தில் உறைந்து போகிறோம். தாவீதும் சிலசமயங்களில் பயந்துபோயிருக்கிறார். ஒருசமயம், சவுல் ராஜா அவரைக் கொல்வதற்காக துரத்திக்கொண்டிருந்தார். அப்போது, உயிர் பிழைப்பதற்காக அவர் பெலிஸ்திய நகரமான காத்துக்குப் போய் ஒளிந்துகொண்டார். “பல்லாயிரம்” பெலிஸ்தியர்களைக் கொன்றுப்போட்ட மாவீரன் தாவீதுதான் என்பதை காத்தின் ராஜா ஆகீஸ் சீக்கிரத்திலேயே கண்டுப்பிடித்துவிடுகிறார். அதனால், தாவீது “ரொம்பவே பயந்துபோனார்.” (1 சா. 21:10-12) காத்தில் இருந்தபோது தனக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி சங்கீதம் 56-ல் தாவீது சொல்கிறார். அந்த சங்கீதத்தைப் படிக்கும்போது தாவீது எந்தளவு பயந்தார் என்பதையும் அந்த பயத்தை எப்படி வென்றார் என்பதையும் பார்க்க முடியும். (சங். 56:1-3, 11) பயமாக இருந்தபோது, தாவீது யெகோவாவை நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. யெகோவாவின் உதவியோடு, அங்கிருந்து தப்பிப்பதற்கு ஒரு பைத்தியக்காரனைப் போல் நடித்தார்! அதற்குப் பிறகு, ஆகீஸ் ராஜா தாவீதை ஒரு எதிரியாக பார்க்கவில்லை. தாவீது அங்கிருந்து போனாலே போதும் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் தாவீதால் தப்பிக்க முடிந்தது.—1 சா. 21:13–22:1. w24.01 2 ¶1-3
வெள்ளி, மே 30
அவரோடு இருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள். அவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்.—வெளி. 17:14.
இன்றைய தினவசனம் உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போகிற கிறிஸ்தவர்களை பற்றி சொல்கிறது. மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில் பரலோகத்துக்குப் போன பிறகு இவர்களுக்குக் கிடைக்கும் முதல் நியமிப்பே போர் செய்வதுதான். கடவுளுடைய எதிரிகளை அந்தக் கடைசி போரில் வெட்டி வீழ்த்துவார்கள். பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலர் இப்போது வயதானவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பரலோகத்துக்குப் போன பிறகு அழிவே இல்லாத ஒரு மகத்தான ஆவி உடல் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் தங்களுடைய தளபதியான இயேசுவோடு சேர்ந்து போர் செய்வார்கள். அர்மகெதோன் போர் முடிந்த பிறகு, மனிதர்கள் பரிபூரணமாக ஆவதற்கு அவரோடு சேர்ந்து உழைப்பார்கள். இவர்கள் சாதாரண மனிதர்களாக பூமியில் செய்ததைவிட, பரலோகத்துக்குப் போன பிறகு பூமியில் இருக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நிறைய உதவி செய்வார்கள். w24.02 6-7 ¶15-16
சனி, மே 31
கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள், அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.—கலா. 5:16.
ஞானஸ்நானத்துக்குப் பிறகு ஏதாவது பெரிய பாவம் செய்து சபைநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? தனக்கு உண்மையாக இருப்பதற்கு யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவி செய்வார். அவருக்கு ‘ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவதற்கும்’ உதவுவார். (கொலோ. 1:10) சரியானதை செய்வதற்குப் பலம் கொடுப்பார். ஏற்கெனவே நிறைய பேருக்கு அதைக் கொடுத்தும் இருக்கிறார். (1 கொ. 10:13) அதனால்தான், நிறைய பேர் அவருக்கு உண்மையாக இருக்கிறார்கள். ரொம்ப கொஞ்சம் பேர்தான் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள். நாம் எல்லாருமே பாவிகளாக இருப்பதால் தவறு செய்ய வேண்டும் என்ற ஆசை வரலாம். (யாக். 1:14) அப்படி ஒரு ஆசை வரும்போது, அதை செய்வதும் செய்யாததும் நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், உலகத்தில் இருப்பவர்களுக்கு வேறு கருத்துகள் இருந்தாலும் கெட்ட ஆசைகளை உங்களால் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த முடியும். w24.03 5 ¶11-12