33 யோய்தா
ராஜாவைக் காப்பாற்றினார்
யோய்தா எருசலேம் ஆலயத்தில் தலைமைக் குருவாகச் சேவை செய்துவந்தார். அவர் வயதானவராக இருந்தபோதும், தன்னுடைய பொறுப்புகளைச் ரொம்ப சுறுசுறுப்பாகவும் பக்திவைராக்கியத்தோடும் செய்தார். அக்கிரமம் நிறைந்த ஒரு காலத்திலும், யெகோவாவைச் சரியான விதத்தில் வணங்க மக்களுக்கு உதவினார்.
எருசலேமில் அக்கிரமம் பெருகியதற்கு ஒரு முக்கியக் காரணம் அத்தாலியாள்தான். அவள் இஸ்ரவேலை ஆட்சி செய்த ஆகாப் ராஜாவுக்கும் யேசபேல் ராணிக்கும் பிறந்த மகள். யெகோவா அவர்களுடைய வம்சத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கப்போவதாகச் சொல்லும் அளவுக்கு அவர்கள் ரொம்ப மோசமான விஷயங்களைச் செய்துவந்தார்கள். அத்தாலியாள், யூதாவின் ராஜாவைக் கல்யாணம் செய்தாள். ஆனாலும், அவளுக்கு யெகோவாவின் வணக்கம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளுடைய கணவர் இறந்த பிறகு அவளுடைய மகன் அகசியா ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆனால், யெகோவா தண்டித்ததால் அவர் செத்துப்போனார். அதன் பிறகு, அத்தாலியாள் தன்னைத்தானே ராணியாக்கிக்கொண்டாள். யெகோவா ஆண்களை மட்டும்தான் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்... அதுவும் தாவீதின் வம்சத்தில் வந்தவர்களை மட்டும்தான் தேர்ந்தெடுத்தார்... என்றெல்லாம் தெரிந்திருந்தும் அப்படிச் செய்தாள். தன்னுடைய பதவிக்குப் போட்டியாக இருந்த எல்லாரையும் தீர்த்துக்கட்ட நினைத்தாள். அதனால், சிம்மாசனத்துக்கு வாரிசுகளாக இருந்த தன்னுடைய சொந்த பேரன்களையே கொன்றுபோடச் சொல்லி கட்டளை போட்டாள்.
கொலைவெறிபிடித்த ஒரு ராணியிடமிருந்து ஒரு பிஞ்சுக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தலைமைக் குருவும் அவருடைய மனைவியும் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்
யோய்தா தைரியமான ஒரு இளம் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். அவள் பெயர் யோசேபாள். அவள் யோசேபியாத் என்றும் அழைக்கப்பட்டாள். அவள் யூதாவின் ராஜாக்களில் ஒருவருடைய மகள். தாவீதின் வம்சம் அழிந்துபோவதை அவளாலும் அவளுடைய கணவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவர்தான் என்றென்றும் ஆட்சி செய்வார் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். (2 சா. 7:12, 13) அதனால், அந்த வம்சத்தில் வந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற யோசேபாள் முடிவு செய்தாள். ஒருவயதுகூட ஆகாத அந்தக் குழந்தையை அரண்மனையிலிருந்து தைரியமாகத் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்தக் குழந்தையையும் அதைக் கவனித்துக்கொண்ட பெண்ணையும் தலைமைக் குருவாக இருந்த தன் கணவர் யோய்தாவிடம் கூட்டிக்கொண்டு போனாள். பிறகு, அவளும் யோய்தாவும் ஆலயத்தில் ஒரு தனி அறையில் யார் கண்ணுக்கும் படாமல் குழந்தையை ஒளித்து வைத்தார்கள்.
அந்தக் குழந்தை, அதாவது யோவாஸ், ஆறு வருஷங்களுக்கு யோய்தாவின் பாதுகாப்பில் யெகோவாவின் ஆலயத்துக்குள் ரகசியமாக வளர்ந்தான். அந்தச் சமயத்தில் யோய்தாவும் யோசேபாளும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் ஒவ்வொரு நாளையும் ஓட்டியிருப்பார்கள். ஏனென்றால், குழந்தையை ஒளித்து வைத்த விஷயம் அத்தாலியாளுக்குத் தெரியவந்திருந்தால் அவர்கள் எல்லாரையும் கண்டிப்பாகக் கொன்றுபோட்டிருப்பாள். கடைசியில், யோய்தா ரொம்பத் தைரியமான இன்னொரு முடிவை எடுத்தார். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த படைத் தலைவர்களில் ஐந்து பேரைக் கூப்பிட்டு, அவ்வளவு காலம் மூடிமறைத்த பெரிய ரகசியத்தைச் சொன்னார். அதாவது, தாவீதின் வம்சத்தில் வந்த ஒரு உண்மையான வாரிசு இன்னும் உயிரோடு இருந்ததைச் சொன்னார்! பிறகு, ஆலயத்திலும் அதற்குப் பக்கத்திலும் 500 வீரர்களை நிறுத்தச் சொல்லி அந்தத் தலைவர்களிடம் சொன்னார். அந்த வீரர்கள் ஆலயத்திலிருந்த கேடயங்களையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு இளம் யோவாசைச் சுற்றி நின்றார்கள். பிறகு, யோய்தா யோவாசை ராஜாவாக அபிஷேகம் செய்தார். மக்கள் எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். மக்களின் சத்தத்தைக் கேட்டு அத்தாலியாள் ஓடிவந்தாள்.
அவள் ஆலயப் பிரகாரத்துக்குள் வேக வேகமாக வந்தாள். அங்கே என்ன நடக்கிறதென்று உடனடியாகப் புரிந்துகொண்டாள். தன் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள கடைசியாக ஒரு முயற்சி எடுத்தாள். “சதி! சதி!” என்று கூச்சல் போட்டாள். உண்மையில் சதி செய்துகொண்டிருந்தது அவள்தான். மக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்த்து அவள் அப்படிக் கூச்சல் போட்டிருக்கலாம். ஆனால், அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. யோய்தா தைரியமாக நடந்துகொண்டார். அந்தப் பொல்லாத ராணியை ஆலயத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போகும்படி படைத் தலைவர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்களும் அவளை இழுத்துக்கொண்டு போய்க் கொன்றுபோட்டார்கள். ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பிறந்த பிள்ளைகளில் கடைசியாகக் கொல்லப்பட்டது அத்தாலியாளாக இருந்திருக்கலாம்.—2 ரா. 9:8.
அத்தாலியாளுக்கு முடிவுகட்டியதோடு தன் வேலை முடிந்ததாக யோய்தா நினைக்கவில்லை. யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதாக மக்களும் இளம் ராஜாவும் ஒப்பந்தம் செய்ய அவர் உதவி செய்தார். பிறகு, பாகாலின் கோயிலை இடித்துப்போடும்படியும் அதன் பூசாரியைக் கொலை செய்யும்படியும் மக்களுக்குக் கட்டளை கொடுத்தார். அதன்பின், உண்மையுள்ள நல்ல ராஜாவாக வளர யோவாசுக்கு அவர் பயிற்சி கொடுத்தார். யோய்தா உயிரோடு இருந்தவரை யோவாஸ் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். யோய்தா 130 வயதில் இறந்துபோனார். எருசலேமில் ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார். இது ஒரு பெரிய கௌரவமாக இருந்தது. ஏனென்றால், தலைமைக் குரு பொதுவாக ராஜாக்களோடு அடக்கம் செய்யப்படவில்லை.
யோய்தா இறந்த பிறகு யோவாஸ் யெகோவாவைவிட்டு விலகிப்போனது வருத்தமான விஷயம். அவர் யூதாவிலிருந்த கெட்ட அதிகாரிகளுடைய பேச்சைக் கேட்டு, பொய் வணக்கத்தை ஆதரித்தார். யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அவருக்குப் புத்தி சொல்லியும் அவர் அதைக் காதில் வாங்கவே இல்லை. அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவர்தான் யோய்தாவின் மகன் சகரியா. “ஏன் யெகோவாவின் கட்டளைகளை மீறி நடக்கிறீர்கள்?” என்று மக்களிடம் சகரியா கேட்டார். யோவாஸ் கோபத்தில் கொதித்துப்போய் சகரியாவைக் கொன்றுபோடும்படி கட்டளை போட்டார். ஆனாலும், சகரியா தன் அப்பாவைப் போலவே கடைசிவரை தைரியத்தைக் காட்டினார். அதனால்தான், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சகரியாவை நீதிமான் என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் காட்டும் தைரியத்தை யெகோவாவைப் போலவே இயேசுவும் ஒருபோதும் மறப்பதில்லை!
பைபிளில் பாருங்கள்:
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
யோய்தா எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டினார்?
ஆராய்ந்து பாருங்கள்
1. அத்தாலியாளைக் கொல்ல யோய்தாவுக்கு உதவிய ‘சிறப்பு மெய்க்காவல்படை வீரர்கள்’ யாராக இருந்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்? (2 ரா. 11:4, 19, அடிக்குறிப்பு; it “சிறப்பு மெய்க்காவல்படை வீரர்கள்”-wcgr)
2. யோய்தா ஏன் யோவாசின்மேல் “திருச்சட்ட சுருளை” வைத்தார்? (2 ரா. 11:12; w91 2/1 பக். 31 பாரா. 5-6-wcgr) படம் A
படம் A
3. யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி யோவாஸ் ஏன் கட்டளை போட்டார்? (2 நா. 24:4-7, 11-14; it “யோவாஸ்” எண் 1 பாரா 5-wcgr)
4. சகரியா யோய்தாவின் மகன். அப்படியிருக்கும்போது, இயேசு ஏன் அவரை ‘பரகியாவின் மகன்’ என்று சொன்னார்? (“பரகியாவின் மகனும்” என்ற மத். 23:35-க்கான ஆராய்ச்சிக் குறிப்பு, nwtsty)
பாடங்களை யோசியுங்கள்
யோவாசை மறைத்து வைத்தபோது யோய்தாவுக்கு அநேகமாக 100 வயதுக்குமேல் இருந்திருக்கும். யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் வயதானவர்களுக்கு அவருடைய உதாரணம் எப்படி உற்சாகம் தரும்? (சங். 92:12, 14) படம் B
படம் B
யோய்தாவின் பேச்சைக் கேட்டு நடந்தபோது யோவாஸ் சரியான முடிவுகளை எடுத்தார். இளைஞர்கள் இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
யோய்தாவைப் போல நீங்கள் எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டலாம்?
இன்னும் பெரிய விஷயங்களை யோசியுங்கள்
இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்தப் பதிவு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
யோய்தா உயிரோடு வரும்போது அவரிடம் நான் என்ன கேட்பேன்?
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் யோவாசிடமிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்” (w09 10/1 பக். 22-23)
நன்கொடைகள் விஷயத்தில் நம் அமைப்பு எப்படி யோய்தாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்கும் நன்கொடைகள்” (w05 11/1 பக். 26-27)