“முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்”
“மேலும், சகல தேசங்களிலும் முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்.”—மாற்கு 13:10, NW.
கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டும் எல்லாரிலும் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே நற்செய்தியைப் பிரசங்கிக்கும் காரியத்தை அதிக முக்கியமாகக் கருதுகின்றனர். கடவுளுடைய நோக்கங்களைக் குறித்து தங்களுடைய அயலகத்தாரிடம் பேசுவதற்காக அவர்களை ஒழுங்காக சந்திப்பது தங்களுடைய கடமை என்று ஒவ்வொரு அங்கத்தினரும் உணரும் ஒரே தொகுதி இவர்களே. இதற்குக் காரணம் என்ன? காரணம், ஒரு கிறிஸ்தவனாக தான் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு சாட்சியும் உணருகிறான். (1 பேதுரு 2:21) இது எதை உட்படுத்துகிறது?
2. அநேகருடைய மனதில் இயேசு கிறிஸ்து வெறுமனே நல்லவற்றைச் செய்த ஒரு மனிதனாகவே இருந்தார். வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார், பசியாயிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார், தேவையிலிருந்தவர்களுக்கு அன்பையும் தயவையும் காண்பித்தார். ஆனால் இயேசு அவற்றைவிட அதிகத்தைச் செய்தார். முதலாவதாக அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் வைராக்கியமான பிரசங்கியாக இருந்தார். யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற்று ஒரு சில மாதங்களுக்குப் பின், அவர் “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று வெளியரங்கமாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். மாற்குவின் பதிவு பின்வருமாறு கூறுகிறது: “இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.”—மாற்கு 1:14, 15.
3. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு யோவான், ஆகியவர்களை இயேசு அழைத்து, தம்மைப் பின்பற்றச் சொன்னார். நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.” கலிலேயாவில் மக்கள் கூட்டம் அவரை தங்க வைக்க முயன்றபோது அவர் பின்வருமாறு சொன்னார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” பின்பு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கிக்கச் சென்றார்.—மத்தேயு 4:18-23; லூக்கா 4:43, 44.
4. இயேசு மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பி வந்து “பட்டணங்கள் தோறும், கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்.” (லூக்கா 8:1) தம்முடைய பிரசங்க வேலையை அறுவடைக்கு ஒப்பிட்டுப் பேசினார். அவர் சொன்னதாவது: “அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 9:35-38) கூடிவந்திருந்த கூட்டம் அவருக்கு ஓய்வெடுக்க நேரம் கொடுக்காத சமயத்திலும் “அவர்களை அவர் [தயவாய், NW] ஏற்றுக்கொண்டு தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.”—லூக்கா 9:11.
5. இயேசு வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினதும், சமயத்தில் பசியாயிருந்தவர்களைப் போஷித்ததும் உண்மைதான். ஆனால் மற்ற எல்லா காரியங்களைவிட அவர் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களும் அப்படியே செய்ய வேண்டுமென்று விரும்பினார். தம்முடைய அப்போஸ்தலர்களைப் பயிற்றுவித்து இரண்டிரண்டு பேராக பிரசங்கிக்க அனுப்பும்போது அவர் சொன்னார்: “போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.” (மத்தேயு 10:7) “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும் பிணியாளிகளை சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்,” என்று லூக்கா குறிப்பிடுகிறான். ‘பிணியாளிகளை சொஸ்தமாக்கி தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லும்படி’ இயேசு தம்முடைய 70 சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார்.—லூக்கா 10:9.
6. பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு, இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம், பிரசங்க வேலையைத் தொடரும்படியும், அதை விஸ்தரிக்கும்படியும் கட்டளை கொடுத்தார். அவர்களிடம் அவர் சொன்னதாவது: “நீங்கள் போய் சகல ஜாதியாரையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) மேலும் அவர் கூறியது: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) இப்படியாக இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கே முதல் கவனத்தைச் செலுத்தினார்கள்.
நம்முடைய காலத்தில் பிரசங்கிக்கப்பட வேண்டிய அந்த ராஜ்யம்
7. “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் சம்பவிக்க வேண்டிய காரியங்களைக் குறித்த தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு பின்வருமாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3, 14) அல்லது மாற்கு 13:10-ல் [NW] குறிப்பிடப்பட்டபடி: “மேலும் சகல தேசங்களிலும் முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்படும்.”—வெளிப்படுத்துதல் 14:6, 7.
8. “கடைசி நாட்களில், “ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி, இயேசு பூமியிலிருந்தபோது உட்படுத்தியதைவிட, அதிகத்தை உட்படுத்துகிறது. மேசியாவாகவும் ராஜாவாகவும் தாம் மக்கள் மத்தியிலிருந்தார் என்ற உண்மைக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புகிறவராக ராஜ்யம் சமீபமாயிருந்தது என்று இயேசு பிரசங்கித்தார். (2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 4:17; லூக்கா 17:21) பூர்வ கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த நற்செய்தி இயேசுவின் உயிர்த்தெழுதல், மற்றும் பரத்துக்கேறினது ஆகிய காரியங்களை உட்படுத்தியது, மற்றும் வரவிருக்கும் ராஜ்யத்தின் மீது விசுவாசம் வைப்பதற்கு சாந்த குணமுள்ள மக்களை உற்சாகப்படுத்தியது. (அப்போஸ்தலர் 2:22-24, 32; 3:19-21; 17:2, 3; 26:23; 28:23, 31) நாம் இப்போது “இந்த ஒழுங்குமுறையின் முடிவை எட்டியிருப்பதால் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி, அந்த ராஜ்யம் பரலோகங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்ற விசேஷ செய்தியை உட்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 11:15-18; 12:10.
யார் நற்செய்தியை அறிவிப்பார்கள்?
9. யார் இன்று பிரசங்க வேலையில் பங்குகொள்ள வேண்டும்? அது எல்லோருடைய கடமையும் இல்லை என்பதாக கிறிஸ்தவ மண்டலம் எண்ணுகிறது. நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று இயேசு சொன்னபோது, அந்த வேலையை யார் செய்வார்கள் என்று இயேசு குறிப்பாக சொல்லவில்லை என்பது உண்மைதான். இப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்ய, தம்முடைய வார்த்தையில் விசுவாசம் வைத்து அதைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பவர்களையல்லவா யெகோவா உபயோகிப்பார்? நோவாவின் நாட்களில் வரவிருந்த அழிவைக் குறித்து அந்தத் துன்மார்க்க உலகத்தை எச்சரிக்க யெகோவா தீர்மானித்தபோது, “தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த” ஒரு மனிதனை பயன்படுத்தினார். (ஆதியாகமம் 6:9, 13, 14; 2 பேதுரு 2:5) இஸ்ரவேலருக்கு தீர்க்கதரிசன செய்திகளைக் கொடுக்க விரும்பிய யெகோவா தேவன், ‘தம்முடைய தீர்க்கதரிகளாகிய ஊழியக்காரரை’ அனுப்பினார். (எரேமியா 7:25, ஆமோஸ் 3:7, 8) தன்னை ஒப்புக்கொடுத்த இஸ்ரவேல் தேசம் அவருடைய சாட்சிகளாலான தேசமாயிருந்தது. (யாத்திராகமம் 19:5, 6; ஏசாயா 43:10-12) ஆம், யெகோவா தமக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களைத் தமது சாட்சிகளாக பயன்படுத்துகிறார்.
10. மத்தேயு 28:19, 20-ல் கொடுக்கப்பட்டிருக்கும் சீஷராக்கும் கட்டளை அப்போஸ்தலருக்கு மட்டுமே பொருந்துகிறது என்றும், அதனால் கிறிஸ்தவர்களுக்குப் பொதுவாக பொருந்தாது என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” இயேசுவைப் பின்பற்றினவர்கள், இயேசு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளுவதற்காக அந்தப் புதிய சீஷர்களுக்குப் போதிக்க வேண்டியவர்களாயிருந்தனர். அவர் கட்டளையிட்ட காரியங்களில் ஒன்று ‘போய் சீஷராக்குங்கள்’ என்பதாகும். நிச்சயமாகவே புதிய சீஷர்கள் எல்லோருமே இந்தக் குறிப்பிட்ட கட்டளையையும் கைக்கொள்ள போதிக்கப்பட வேண்டும்.
11. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு கடவுளுடைய சொந்தமான ஜனம்’ என்று அழைக்கப்பட்டது. (1 பேதுரு 2:9) அதன் அங்கத்தினர்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்கு வைராக்கியத்துடன் சாட்சி கொடுத்தனர். (அப்போஸ்தலர் 8:4, 12) “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என்றும் “யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்,” என்றும் ரோமிலுள்ள “பரிசுத்தவான்க”ளுக்கு அதாவது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்பட்டது. (ரோமர் 1:7; 10:9, 10, 13) இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கை ஒருவருடைய முழுக்காட்டுதலின் சமயத்தில் செய்யப்பட்டதாயிருந்தாலும், இது யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பகிரங்கமாகப் பிரசங்கிப்பதையும் உட்படுத்துகிறது.
12. அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயு கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக் கடவோம்.“ (எபிரெயர் 10:23) இந்த வெளியரங்கமான அறிக்கை சபை கூட்டங்களுக்கு மட்டும் பொருந்துவதாயில்லை. (சங்கீதம் 40:9, 10) சபைக்கு வெளியே, தேசங்களுக்குப் பிரசங்கிப்பதற்கான தீர்க்கதரிசன கட்டளையை சங்கீதம் 96:2, 3, 10-ல் நாம் தெளிவாகக் காண்கிறோம்: “நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் [தேசங்களுக்குள், NW] அவருடைய மகிமையையும் சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். யெகோவா ராஜரீகம் பண்ணுகிறார் . . . என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.” ஆம், மத்தேயு 28:19, 20 மற்றும் அப்போஸ்தலர் 1:8-ல் தேசங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்தவர்களுக்குக் கட்டளை கொடுத்தார்.
13. வெளியரங்கமாகப் பிரசங்கித்தல், அபிஷேகம் பண்ணப்பட்ட எபிரெயு கிறிஸ்தவர்களுக்குப் பவுல் கூறிய வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது: “அவருடைய நாமத்தை [வெளியரங்கமாய், NW] துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) வெளிப்படுத்தின விசேஷத்தில் சகல சேதங்களிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்பட்ட “திரள் கூட்டம்,” உரத்த சத்தமாய், “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று ஆர்ப்பரிப்பதைப் பார்க்கிறோம். (வெளிப்படுத்துதல் 7:9, 10) எனவே, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில், நற்செய்தியைப் பிரசங்கித்தல் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளால், அதாவது கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரரில் மீதியானோராலும் “திரள் கூட்டத்தை” உண்டுபண்ணும் செம்மறியாடு போன்ற அவர்களுடைய தோழர்களாலும் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் இந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும்?
“பகிரங்கமாகவும் வீடுவீடாகவும்”
14. இயேசு மக்களிடம் நேரடியாக பிரசங்கித்தார். உதாரணமாக அவர் தேவாலயங்களில் பிரசங்கித்ததாக வாசிக்கிறோம். ஏன்? ஏனென்றால் மக்கள் அங்கு ஓய்வு நாட்களில் கூடிவந்து வேத வசனங்கள் வாசிக்கப்படுவதையும் கலந்தாலோசிக்கப்படுவதையும் கேட்டார்கள். (மத்தேயு 4:23; லூக்கா 4:15-21) மேலும் இயேசு வழியருகே, கடற்கரையில், மலைச்சரிவில், நகரத்துக்குப் புறம்பேயிருந்த ஒரு கிணற்றருகில் மற்றும் வீடுகளில் பிரசங்கித்தார். எங்கெல்லாம் ஆட்கள் இருந்தனரோ அங்கெல்லாம் அவர் பிரசங்கித்தார்.—மத்தேயு 5:1, 2; மாற்கு 1:29-34; 2:1-4, 13; 3:19; 4:1, 2; லூக்கா 5:1-3; 9:57-60; யோவான் 4:4-26.
15. இயேசு தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிப்பதற்காக அனுப்பியபோது, அவர் அவர்களை நேரடியாக மக்களிடம் அனுப்பினார். இது மத்தேயு 10:1-15, 40-42-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய அறிவுரைகளில் காணப்படுகிறது. வசனம் 11-ல் அவர் கூறினார்: “எந்தப் பட்டணத்திலாவது, கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவனைக் கண்டுபிடித்து நீங்கள் புறப்படுமளவும் அவ்விடத்தில் தங்கியிருங்கள்.” [NW] தி ஜெருசலேம் பைபிள் இந்த வசனத்தை இப்படியாகக் கொடுக்கிறது: “நம்பத்தகுந்தவன் யார் என்று விசாரியுங்கள,” அதாவது பேர் பெற்றவனும், அதனால் செய்திக்குப் பாத்திரமானவனும் யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் கிராமத்தில் பிரபலமான ஒருவரை அல்லது விஷயமறிந்த ஒருவரை சீஷர்கள் அணுகி கேட்க வேண்டும் என்பது போல் இருக்கிறது. (வேமெளத் மற்றும் ஆத்தரைஸ்டு மொழிபெயர்ப்பையும் பாருங்கள்.) வசனம் 11-ன் பேரில் சில பைபிள் விரிவுரையாளர்கள் இந்த விளக்கத்தைதான் அளிக்கின்றனர்.
16. என்றபோதிலும் கிறிஸ்தவண்டலத்தின் பெரும்பாலன இறைமையியல் வல்லுநர்கள் வீட்டுக்கு வீடு போவதில்லை, மற்றும் அநேக பைபிள் விரிவுரையாளர்கள், வேத வசனங்களைத் தங்களுடைய சொந்த அனுபவ சூழ்நிலைக்கேற்ப விளக்கமளிக்க முற்படுகிறார்கள். இயேசுவின் அறிவுறைகளை சரியான நோக்கு நிலையில் பார்த்தால், அவருடைய சீஷர்கள் தனிப்பட்ட ஆட்களை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அல்லது பகிரங்கமாக பிரசங்கிப்பதில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ராஜ்ய செய்தியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுவதாயிருக்கிறது. (மத்தேயு 10:7) அவர்கள் பாத்திரவான்களா இல்லையா என்பதை அவர்களுடைய பிரதிபலிப்பு காண்பிக்கும்.—மத்தேயு 10:12-15.
17. இது மத்தேயு 10:14-லுள்ள இயேசுவின் வார்த்தையில் தெளிவாகத் தெரிகிறது: “எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளை கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள்.” இயேசு இந்த இடத்தில், அழைப்பின்றி ஆட்களை சந்தித்து அவர்களிடம் பிரசங்கிப்பதைக் குறித்து தம்முடைய சீஷர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். செய்திக்கு நல்ல விதத்தில் பிரதிபலித்த ஒருவருடன் தங்குவதற்கான அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வார்கள். (மத்தேயு 10:11) ஆனால் முக்கியமான காரியம் பிரசங்க வேலை. லூக்கா 9:6-ல் பின்வருமாறு கூறப்படுகிறது: “அவர்கள் புறப்பட்டுப் போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.” (லூக்கா 10:8, 9-ஐ பாருங்கள்.) சீஷர்களைத் தீர்க்கதரிசிகளாகக் கருதி தங்களுடைய வீட்டில் ஏற்றுக்கொண்ட பாத்திரவான்கள், ஒருவேளை “ஒரு கலசம் தண்ணீர்” அல்லது தங்குவதற்கு இடம் கொடுப்பவர்களாயிருந்தவர்கள் அதற்கான தங்களுடைய பலனை இழக்க மாட்டார்கள். அவர்கள் ராஜ்ய செய்தியைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.—மத்தேயு 10:40-42.
18. கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, அப்போஸ்தலரைக் குறித்து நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் [வீடு வீடாகவும், NW] இடைவிடாமல் உபதேசம் பண்ணி இயேசுவை கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:42; ஆங்கில ஒத்துவாக்கிய பைபிளின் அடி குறிப்பைப் பாருங்கள்.) “வீடு வீடாக” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பதம் கேட்’ ஆய்’கான். இங்கு கேட்டா என்பது பகிர்ந்துகொள்ளும் கருத்தில் வருகிறது. எனவே, சீஷர்களின் பிரசங்க வேலை வீடு வீடாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்று சொல்லப்படலாம். இது அவை முன்னேற்பாடு செய்யப்பட்ட வெறும் ஒரு சமூக நல சந்திப்புகள் அல்ல. கேட்டா என்ற வார்த்தை இதே கருத்தில் பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும்” என்ற லூக்கா 8:1-ன் கூற்றில் காணப்படுகிறது.
19. இதே கூற்று பவுலால் அப்போஸ்தலர் 20:20-ல் கேட்’ஆய்-கோஸ் என்று பன்மையில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு அவன் கூறியதாவது: “பகிரங்கமாகவும் வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பிப்பதில் . . . நான் மறைத்து வைக்கவில்லை.” “வீடு வீடாக” என்ற கூற்று “உங்களுடைய வீடுகளில்” என்று சில மொழிபெயர்ப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே பவுல் இங்கு விசுவாசிகளின் வீடுகளுக்குச் சென்று ஒரு மேய்ப்பரின் சந்திப்பைக் குறிப்பிடுவதாக சில பைபிள் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவன் அவிசுவாசிகளிடம் ஊழியம் செய்வதைக் குறித்து பேசுகிறான் என்று பவுலின் அடுத்த வார்த்தைகள் காட்டுகின்றன, ஏனென்றால் அவன் சொல்லுகிறான்: “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் நாம் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.”—அப்போஸ்தலர் 20:21.
20. எனவே மக்களைச் சென்றெட்டுவதற்கான இந்த முறை “ராஜ்யத்தின் நற்செய்தி” “பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்பட” வேண்டிய நம்முடைய காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். (மத்தேயு 24:14) கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி யெகோவாவின் சாட்சிகளால் 65 வருடங்களுக்கு மேலாக வைராக்கியத்துடன் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது 210 நாடுகளில் எப்பேர்ப்பட்ட மகத்தான சாட்சி கொடுக்கும் வேலை நிறைவேற்றப்பட்டு வருகிறது! இன்றுள்ள அநேகர் இந்தச் செய்தியைக் “கேளாமல்” இருந்தும், சிலர் எரிச்சலடைந்தும் இந்தப் பலன் கிடைத்திருக்கிறது. (மத்தேயு 13:15) மக்கள் செவி கொடாத இடங்களிலும் அல்லது எதிர்ப்பவர்கள் இருக்கும் இடங்களிலுங்கூட யெகோவாவின் சாட்சிகள் ஏன் தொடர்ந்து பிரசங்கித்து வருகின்றனர்? இந்தக் கேள்வி அடுத்து வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும். (w88 1/1)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்
◻ இயேசுவின் ஊழியத்தில் மேம்பட்டு விளங்கும் தன்மை என்ன என்று வேதவசனங்கள் காண்பிக்கின்றன?
◻ ஊழியத்தில் அப்போஸ்தலருக்கு என்ன வழிநடத்துதல் கொடுக்கப்பட்டது?
◻ நம்முடைய காலத்தில் என்ன வேலை செய்யப்பட வேண்டும்? ஏன்?
◻ நம்முடைய நாளில் நற்செய்தியைப் பிரசங்கிக்க யெகோவா யாரை உபயோகிப்பார்?
◻ பிரசங்க வேலை எங்கு எப்பொழுது நிறைவேற்றப்பட வேண்டும்?
[கேள்விகள்]
1. கிறிஸ்தவ மண்டலத்தின் எல்லா மதங்களுடனும் ஒப்பிடும்போது யெகோவாவின் சாட்சிகளை எந்த ஒரு காரியம் வித்தியாசப்படுத்துகிறது? ஏன்?
2. இயேசு கிறிஸ்துவை அநேகர் எப்படி நோக்குகின்றனர்? ஆனால் பூமியில் அவருடைய அடிப்படை வேலை என்னவாக இருந்தது?
3, 4. (எ) இயேசு எல்லா விதமான வியாதிகளையும் சுகப்படுத்தின போதிலும், அவர் தம்முடைய ஊழியத்தில் எதை வலியுறுத்தினார்? (பி) இயேசு ஏன் அனுப்பப்பட்டார்? (சி) தம்முடைய பிரசங்க வேலையை எதற்கு ஒப்பிட்டார்? என்ன செய்யும்படியாகத் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்?
5. இயேசு தம்முடைய அப்போஸ்தலரையும் மற்றவர்களையும் ஊழியத்துக்கு அனுப்பியபோது அவர்களுக்கு என்ன அறிவுறைகளைக் கொடுத்தார்?
6. பரத்துக்கு ஏறுவதற்கு முன்பு, இயேசு தம்முடைய சீஷர்களிடம் ஊழியம் சம்பந்தமாக என்ன அறிவுறைகளைக் கொடுத்தார்?
7. இந்த ஒழுங்குமுறையின் முடிவின்போது செய்யப்படும் பிரசங்க வேலை குறித்து இயேசு என்ன சொன்னார்?
8. (எ) அப்போஸ்தலரின் காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியில் என்ன உட்பட்டிருந்தது? (பி) நற்செய்தியின் இன்றைய செய்தியில் என்ன அடங்கியிருக்கிறது?
9. (எ) நற்செய்தியைப் பிரசங்கிப்பது எல்லா கிறிஸ்தவர்களின் கடமை அல்ல என்று சிலர் எவ்விதம் வாதாடலாம்? (பி) வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு யெகோவா கடந்த காலங்களில் யாரை பயன்படுத்தினார்? இன்று நமக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது?
10. “சீஷராக்குங்கள்” என்ற கட்டளை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது என்பது மத்தேயு 28:19, 20-ன் வார்த்தைகளிலிருந்து எப்படி தெரிகிறது?
11. (எ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்கு என்ன உத்தரவாதம் இருந்தது? (பி) ஒருவர் இரட்சிப்படைவதற்கு தேவையானது என்ன? இது எதை உட்படுத்துகிறது?
12, 13. (எ) எபிரெயர் 10:23-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “நம்முடைய நம்பிக்கையை [பகிரங்கமாக] அறிக்கையிடுவது” எதை உட்படுத்துகிறது? (பி) சபைக்கு வெளியே பகிரங்கமாக அறிக்கையிடுவதன் அவசியத்தை சங்கீதம் 9:6 எப்படிக் காண்பிக்கிறது?
14. இயேசு எங்கு தம்முடைய பிரசங்கத்தைச் செய்தார்? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் நியமம் என்ன?
15. (எ) தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிக்க அனுப்பியபோது இயேசு என்ன அறிவுரை கொடுத்தார்? (பி) சில பைபிள் பிரிவுரையாளர்கள் இதை எப்படி விளக்கினார்கள்?
16. மத்தேயு 10:11-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை சரியான நோக்குநிலையில் கவனிக்கும்போது, அப்போஸ்தலர்கள் பாத்திரவான்களை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று காட்டுகிறது?
17. இயேசுவின் சீஷர்கள் பாத்திரமுள்ள ஆட்களை சிபாரிசின் பேரில் அல்லது முன்னேற்பாட்டின் பேரில் சந்திப்பவர்களாக இல்லை என்பதை எது நிரூபிக்கிறது?
18, 19. (எ) அப்போஸ்தலர் 5:42-ன்படி, பூர்வ கிறிஸ்தவர்கள் தங்கள் பிரசங்க வேலையை எப்படிச் செய்தார்கள்? (பி) அப்போஸ்தலர் 20:20-லுள்ள பவுலின் வார்த்தைகள், அவர் அவிசுவாசிகளிடம் செய்யப்படும் ஊழியத்தைக் குறித்து பேசுகிறார், மேய்ப்பரின் சந்திப்பு வேலை குறித்து அல்ல என்பதை எப்படிக் காட்டுகின்றன?
20. (எ) நம்முடைய காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யத்தின் நற்செய்தியை எந்தளவுக்குப் பிரசங்கித்திருக்கின்றனர்? (பி) பிரசங்க வேலையில் தொடருவதை சிலர் எப்படி நோக்கக்கூடும்?