யெகோவாவின் ஈவாகிய பரிசுத்த ஆவி
“பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”—லூக்கா 11:13.
1, 2. (எ) பரிசுத்த ஆவியைக் குறித்து இயேசு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்? அது ஏன் உண்மையில் ஆறுதலளிப்பதாக இருக்கிறது? (பி) பரிசுத்த ஆவி என்பது என்ன?
பொ.ச. 32-ன் இலையுதிர்காலத்தின் போது இயேசு யூதேயாவில் நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், அவர் தம்முடைய சீஷர்களிடம் யெகோவாவின் தாராள குணத்தைப் பற்றி பேசினார். அவர், சக்திவாய்ந்த ஒரு சில உதாரணங்களைப் பயன்படுத்தி, பின்னர் இவ்விதமாகச் சொல்லி அதிசயமான ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”—லூக்கா 11:13.
2 அந்த வார்த்தைகள் எத்தனை ஆறுதலளிப்பதாய் இருக்கின்றன! இந்த உலகின் கடைசி நாட்களின் துன்பங்களை நாம் சகித்துக் கொண்டிருக்கையில், சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் விரோதத்தை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கையில், நம்முடைய வீழ்ந்துபோன சொந்த மனச்சாய்வுகளுடன் போராடிக்கொண்டிருக்கையில், கடவுள் நம்மை அவருடைய ஆவியின் மூலமாக பலப்படுத்துவார் என்பதை அறிவது உண்மையிலேயே இருதயத்துக்கு அனலூட்டுவதாய் இருக்கிறது. நிச்சயமாகவே, அவருடைய உதவியின்றி உண்மையுடன் சகித்திருப்பது கூடாத காரியமாகும். கடவுளுடைய சொந்த கிரியை நடப்பிக்கும் சக்தியாக இருக்கும் இந்த ஆவியின் வல்லமையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அது உங்களுக்கு எவ்வளவாக உதவக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? அதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?
பரிசுத்த ஆவியின் வல்லமை
3, 4. பரிசுத்த ஆவியின் வல்லமையை விளக்குங்கள்.
3 முதலாவது பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பற்றிச் சிந்தித்துப்பாருங்கள். 1954-ம் ஆண்டை பின்னோக்கிப் பாருங்கள். அப்போது ஒரு ஹைட்ரஜன் குண்டு, தென் பசிபிக்கில் பிக்கினி அடோலின் மீது வெடித்தது. குண்டு வெடித்த ஒரு நொடி பொழுதுக்குப் பிற்பாடு, அந்த அழகிய தீவை மிகப் பெரிய நெருப்பு பந்து வளைத்துக் கொள்ள, 15 மில்லியன் டன் TNT வெடிப்புக்குச் சமமான ஓர் ஆற்றல்கொண்ட வெடிப்பினால் அது நொறுங்கியது. அந்த அழிக்கும் சக்தி அனைத்தும் எங்கிருந்து வந்தது? வெடிகுண்டின் மையப் பகுதியை உண்டுபண்ணிய யுரேனியம் மற்றும் ஹைட்ரஜனின் ஒரு சிறிய பின்னத்தை சக்தியாக மாற்றியதன் விளைவாக வந்தது. ஆனால் விஞ்ஞானிகளால் பிக்கினியில் சாதிக்க முடிந்ததற்கு எதிர்மாறானதைச் செய்யமுடியுமானால் அப்போது என்ன? வெடிக்கத்தக்க அந்தச் சக்தி அனைத்தையும் அவர்கள் கைப்பற்றி ஒரு சில பவுண்டுகள் யுரேனியமாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றமுடிவதாக வைத்துக் கொள்வோம். அது என்னே ஒரு சாதனையாக இருக்கும்! என்றபோதிலும், யெகோவா அதைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்தார், ஆனால் மிகப் பரந்த மிகப் பெரிய அளவில் அவர் “ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கும்” போது செய்தார்.—ஆதியாகமம் 1:1.
4 யெகோவா மிகப் பெரிய அளவில் மகா வல்லமையைக் கையிருப்பில் வைத்திருக்கிறார். (ஏசாயா 40:26) சிருஷ்டிப்பில், பிரபஞ்சத்தை உண்டுபண்ணும் எல்லா சடப்பொருட்களையும் அவர் உருவாக்கும் போது இந்த வல்லமையில் கொஞ்சத்தை அவர் பயன்படுத்தினார். சிருஷ்டிப்பின் இந்த வேலையில் அவர் என்னத்தைப் பயன்படுத்தினார்? பரிசுத்த ஆவி. நாம் வாசிக்கிறோம்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.” (சங்கீதம் 33:6) சிருஷ்டிப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவு வாசிப்பதாவது: “தேவனுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி [பரிசுத்த ஆவி] ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தது.” (ஆதியாகமம் 1:2, NW) பரிசுத்த ஆவி என்னே ஒரு வல்லமையுள்ள சக்தியாக இருக்கிறது!
அற்புதமான கிரியைகள்
5. பரிசுத்த ஆவி என்ன உன்னதமான வழிகளில் கிரியை செய்கிறது?
5 பரிசுத்த ஆவி, இன்னும் மிக உன்னதமான வழிகளில் கிரியை செய்து கொண்டிருக்கிறது. யெகோவாவின் பரம அமைப்பை அது வழிநடத்தி இயக்குகிறது. (எசேக்கியேல் 1:20, 21) ஹைட்ரஜன் குண்டினால் விடுவிக்கப்படும் சக்தியைப் போல, அது யெகோவாவின் சத்துருக்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற அழிவுப்பூர்வமாக பயன்படுத்தப்படலாம். ஆனால் அது நம்மை அதிசயிக்க வைக்கும் மற்ற வழிகளிலும்கூட கிரியை செய்திருக்கிறது.—ஏசாயா 11:15; 30:27, 28; 40:7, 8; 2 தெசலோனிக்கேயர் 2:8.
6. பரிசுத்த ஆவி எவ்விதமாக மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் எகிப்தோடு அவர்களுடைய செயல்தொடர்புகளில் உதவி செய்தது?
6 உதாரணமாக, சுமார் பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேல் புத்திரருக்கு விடுதலை அளிக்கக் கோரி எகிப்தினுடைய பார்வோன் முன்னால் நிற்பதற்கு யெகோவா மோசேயை அனுப்பினார். அதற்கு முந்திய 40 வருடங்களாக, மோசே மீதியான் தேசத்தில் ஒரு மேய்ப்பனாக இருந்து வந்திருக்கிறான். ஆகவே பார்வோன் ஏன் ஒரு மேய்ப்பனுக்கு செவிகொடுக்க வேண்டும்? ஏனென்றால் மோசே ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் நாமத்தில் வந்தார். இதை நிரூபிக்க, யெகோவா அற்புதங்களைச் செய்ய அவனுக்கு வல்லமையளித்தார். இவை அத்தனை மனதில் பதியதக்கதாக இருந்த காரணத்தால் எகிப்திய ஆசாரியர்களும்கூட “இது தேவனுடைய விரல்”a என்று ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்பட்டார்கள். (யாத்திராகமம் 8:19) யெகோவா எகிப்தின் மீது பத்து வாதைகளைக் கொண்டு வந்தார், கடைசி வாதை கடவுளுடைய மக்கள் எகிப்தைவிட்டு புறப்படுவதற்கு அனுமதி வழங்க பார்வோனை நிர்பந்தப்படுத்தியது. பார்வோன், பிடிவாதமாக தன்னுடைய சேனைகளோடு அவர்களைப் பின்தொடர்ந்த போது, செங்கடலினூடாக அற்புதமாக ஒரு வழி திறக்கப்பட, இஸ்ரவேலர் தப்பினர். எகிப்திய சேனை அவர்களுக்குப் பின்னால் வந்து கடலில் அமிழ்ந்து போனது.—ஏசாயா 63:11-14; ஆகாய் 2:4, 5.
7. (எ) பரிசுத்த ஆவி அற்புதங்களை நடப்பித்ததற்கு ஒரு சில காரணங்கள் யாவை? (பி) பரிசுத்த ஆவியினால் செய்யப்படும் அற்புதங்கள் இனிமேலும் நிகழாவிட்டாலும் பைபிளில் அவைகளைப் பற்றிய பதிவு ஏன் ஆறுதலளிப்பதாக இருக்கிறது?
7 ஆம், யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக, இஸ்ரவேலின் சம்பந்தமாக மோசேயின் காலத்திலும் மற்ற சமயங்களிலும்கூட வல்லமைவாய்ந்த அற்புதங்களை நடப்பித்திருக்கிறார். அந்த அற்புதங்களின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்ற உதவி செய்து, அவருடைய பெயரை பிரஸ்தாபப்படுத்தி, அவருடைய வல்லமையைக் காண்பித்தன. சில சமயங்களில் மோசேயின் விஷயத்தில் இருந்தது போல, ஒரு தனிநபர் யெகோவாவின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பதை முடிவாக நிரூபித்தது. (யாத்திராகமம் 4:1-9; 9:14-16) என்றபோதிலும், சரித்திரம் முழுவதிலுமாக பரிசுத்த ஆவியினால் செய்யப்பட்ட அற்புதங்கள் அடிக்கடி நிகழாதவையாகவே இருந்திருக்கின்றன.b பைபிள் காலங்களில் வாழ்ந்து வந்த பெரும்பாலான ஆட்கள் ஓர் அற்புதத்தை ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள். இன்று அவை இனிமேலும் சம்பவிப்பதில்லை. இருப்பினும், சமாளிக்க முடியாதது போல தோன்றக்கூடிய பிரச்னைகளோடு நாம் இன்று போராடிக்கொண்டிருக்கையில், நாம் யெகோவாவிடம் விசுவாசத்தில் கேட்டால், பார்வோனுக்கு முன்பாக மோசேக்கு பக்கபலமாக இருந்ததும், செங்கடலினூடாக இஸ்ரவேலருக்கு ஒரு வழியை திறந்ததுமான அதே ஆவியை அவர் நமக்குக் கொடுப்பார் என்பதை அறிவது ஆறுதலளிப்பதாக இல்லையா?—மத்தேயு 17:20.
ஏவப்பட்ட எழுத்துக்கள்
8. பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதில் பரிசுத்த ஆவியின் பங்கு என்னவாக இருந்தது?
8 எகிப்திலிருந்து விடுதலைப் பெற்று வந்த பிறகு, மோசே இஸ்ரவேலரைச் சீனாய் மலைக்கு வழிநடத்திச் சென்றார். அங்கே யெகோவா அவர்களோடு ஓர் உடன்படிக்கைப் பண்ணி அவருடைய நியாயப்பிரமாணத்தை அவர்களுக்குக் கொடுத்தார். மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட அந்த நியாயப்பிரமாணத்தின் மையப் பகுதி பத்துக் கற்பனைகளாக இருந்தன. இவைகளின் மூல எழுத்துக்கள் கற்பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்தன. எவ்விதமாக? பரிசுத்த ஆவியின் மூலமாக. பைபிள் சொல்கிறது: “சீனாய் மலையில் அவர் [யெகோவா] மோசேயோடே பேசி முடிந்த பின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.”—யாத்திராகமம் 31:18; 34:1.
9, 10. எபிரெய வேதாகமம் எழுதப்படுகையில் பரிசுத்த ஆவி எவ்விதமாக செயல்பட்டது? இயேசுவின் சீஷர்கள் பயன்படுத்திய சொற்றொடர்களிலிருந்து இது எவ்வாறு வெளிப்படையாகத் தெரிகிறது?
9 பத்துக் கற்பனைகளோடு கூட, யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக, உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை வழிநடத்துவதற்காக நூற்றுக்கணக்கான சட்டங்களையும் நியமங்களையும் இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். இன்னும் அதிகம் வரவிருந்தன. மோசேயின் நாளுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, லேவியர்கள், யெகோவாவிடம் யாவரும் கேட்க செய்த ஒரு ஜெபத்தில் இவ்விதமாக உறுதிபடுத்தினார்கள்: “நீர் அநேக வருஷமாக அவர்கள் மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்து கொண்டீர்.” (நெகேமியா 9:5, 30) இந்தத் தீர்க்கதரிசிகள் ஆவியால் ஏவப்பட்டு உரைத்த அநேக தீர்க்கதரிசனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலுமாக, பரிசுத்த ஆவி உண்மையுள்ள மனிதர்களை பரிசுத்த வரலாறுகளையும் இருதயப்பூர்வமான துதிப்பாடல்களையும் எழுதும்படி உந்துவித்தது.
10 பவுல் பின்வருமாறு சொன்னபோது இந்த எல்லா எழுத்துக்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16; 2 சாமுவேல் 23:2; 2 பேதுரு 1:20, 21) ஆம், இந்த வேதவசனங்களை மேற்கோள் காண்பிக்கையில், இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்கள், அடிக்கடி “பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன்சொன்ன,” “பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் உரைத்த,” மற்றும் “பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே,” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தினர். (அப்போஸ்தலர் 1:16; 4:26; 28:25, 26; எபிரெயர் 3:7) பரிசுத்த வேதாகமம் எழுதப்படுகையில் அதன் மீது செல்வாக்கு செலுத்தின அதே பரிசுத்த ஆவி நம்மை இன்று வழிநடத்துவதற்காகவும் தேற்றுவதற்காகவும் அவைகளைப் பாதுகாத்து வைத்தது என்னே ஓர் ஆசீர்வாதம்!—1 பேதுரு 1:25.
பரிசுத்த ஆவியின் மீது நம்பிக்கை
11. பரிசுத்த ஸ்தலம் கட்டப்படுவதன் சம்பந்தமாக ஆவியின் என்ன கிரியை காணப்பட்டது?
11 இஸ்ரவேலர் சீனாய் மலை அடிவாரத்தில் கூடாரம் அமைத்து தங்கிய போது, யெகோவா மெய் வணக்கத்துக்கு ஒரு மையமாக பரிசுத்த ஸ்தலத்தை உண்டுபண்ணும்படியாக அவர்களுக்குக் கட்டளையிட்டார். இதை அவர்கள் எவ்விதமாக செய்து முடிக்க முடியும்? “மோசே இஸ்ரவேல் புத்திரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் [யெகோவா, NW] யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்து, அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும் . . . அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.” (யாத்திராகமம் 35:30, 31, 33) பெசலெயேல் இயற்கையாக பெற்றிருந்த திறமைகளைப் பரிசுத்த ஆவி பலப்படுத்தியதால் அந்தக் குறிப்பிடத்தக்க கட்டிடம் எழுப்பப்படுவதை அவனால் வெற்றிகரமாக கண்காணிக்க முடிந்தது.
12. மோசேயின் காலத்துக்குப் பின், ஆவி எவ்விதமாக தனிப்பட்ட ஆட்களை அசாதாரணமான வழிகளில் பலப்படுத்தியது?
12 பின்னால் ஒரு சமயம், இஸ்ரவேலரை பெலிஸ்தியரிடமிருந்து விடுவிக்கும்படி யெகோவாவின் ஆவி சிம்சோனின் மீது வந்திறங்கி, அவனுக்கு மீமானிட பலத்தைக் கொடுத்தது. (நியாயாதிபதிகள் 14:5-7, 9; 15:14-16; 16:28-30) இதற்கும் பின்னால், சாலொமோன் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் அரசனாக விசேஷித்த ஞானம் அருளப்பட்டான். (2 நாளாகமம் 1:12, 13) அவனுடைய ஆட்சியின் கீழ் இஸ்ரவேல் முன்னொருபோதும் இராதவகையில் சித்தி பெற்றது, அதனுடைய மகிழ்ச்சிகரமான நிலைமை பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் கீழ், கடவுளுடைய மக்கள் அனுபவித்து மகிழப் போகும் ஆசீர்வாதங்களுக்கு ஒரு மாதிரியாக ஆனது.—1 இராஜாக்கள் 4:20, 25, 29-34; ஏசாயா 2:3, 4; 11:1, 2; மத்தேயு 12:42.
13. பெசலெயேல், சிம்சோன் மற்றும் சாலொமோனை ஆவி பலப்படுத்தியதைப் பற்றிய பதிவு இன்று நம்மை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
13 யெகோவா அதே ஆவியை நமக்குக் கிடைக்கச் செய்வது என்னே ஓர் ஆசீர்வாதம்! ஒரு வேலையை நிறைவேற்றுவதற்கு நாம் தகுதியற்றவராக உணருகையில் அல்லது பிரசங்க வேலையில் ஈடுபடுகையில், யெகோவா பெசலெயேலுக்குக் கொடுத்த அதே ஆவியை நமக்குக் கொடுக்குமாறு நாம் அவரிடம் கேட்கலாம். நாம் நோயுற்றிருக்கையில் அல்லது துன்புறுத்தலை சகித்துக் கொள்கையில், சிம்சோனுக்கு அசாதாரணமான பெலத்தைக் கொடுத்த அதே ஆவி நம்மை பலப்படுத்தும்—நிச்சயமாகவே அற்புதமாக இல்லாவிட்டாலும். நாம் கடினமான பிரச்னைகளை எதிர்படுகையில் அல்லது முக்கியமான தீர்மானங்களைச் செய்ய வேண்டியிருக்கையில், சாலொமோனுக்கு அசாதாரணமான ஞானத்தைக் கொடுத்த யெகோவாவிடம் ஞானமாக செயல்பட நமக்கு உதவுமாறு கேட்கலாம். அப்பொழுது பவுலைப் போல நாம் சொல்வோம்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) மேலும் யாக்கோபின் வாக்குறுதி நமக்குப் பொருந்துவதாக இருக்கும்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.”—யாக்கோபு 1:5.
14. பூர்வ காலங்களிலும் இன்றும் பரிசுத்த ஆவி யாரை தாங்கி வந்திருக்கிறது?
14 தேசத்தை நியாயம் விசாரிக்கும் வேலையிலும்கூட யெகோவாவின் ஆவி மோசேயின் மேல் இருந்தது. மோசேக்கு உதவி செய்ய மற்றவர்கள் நியமிக்கப்பட்ட போது யெகோவா சொன்னார்: “நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடே கூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன் மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன்.” (எண்ணாகமம் 11:17) இவ்விதமாக அந்த மனிதர்கள், தங்களுடைய சொந்த பெலத்தில் செயல்பட வேண்டியதாயிருக்கவில்லை. பரிசுத்த ஆவி அவர்களுக்கு உதவிசெய்தது. பிற்பட்ட சந்தர்ப்பங்களில் யெகோவாவின் ஆவி மற்ற தனிநபர்களின் மீது இருந்ததைப் பற்றி நாம் வாசிக்கிறோம். (நியாயாதிபதிகள் 3:10, 11; 11:29) சாமுவேல் தாவீதை இஸ்ரவேலின் எதிர்கால அரசனாக அபிஷேகம் செய்த போது, பதிவு சொல்கிறது: “தைலக்கொம்மை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் இறங்கியிருந்தார்.” (1 சாமுவேல் 16:13) இன்று குடும்பத்தில், சபையில் அல்லது அமைப்பில் முக்கியமான உத்தரவாதங்களை உடையவர்களுக்கு, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் இன்னும் அவருடைய ஊழியர்களை கடவுளுடைய ஆவி தாங்குகிறது என்பதை அறிந்து கொள்வது ஆறுதலளிப்பதாக இருக்கிறது.
15. பரிசுத்த ஆவி என்ன விதத்தில் யெகோவாவின் அமைப்பை பலப்படுத்தியது? (எ) ஆகாய் மற்றும் சகரியாவின் நாளில்? (பி) இன்று?
15 மோசேயின் நாளுக்கு ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இஸ்ரவேல் புத்திரரில் உண்மையுள்ளவர்கள் ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்குரிய வேலை நியமனத்தோடு பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தனர். (எஸ்றா 1:1-4; எரேமியா 25:12; 29:14) ஆனால் கடினமான இடையூறுகள் எழும்பின, அவர்கள் அநேக வருடங்கள் பின்வாங்கும்படி செய்யப்பட்டார்கள். கடைசியாக, தங்களுடைய சொந்த பெலத்தின் மேல் சார்ந்திராதபடிக்கு யூதர்களை ஊக்குவிக்க யெகோவா தீர்க்கதரிசிகளாகிய ஆகாயையும் சகரியாவையும் எழும்பப்பண்ணினார். ஆனால் வேலை எவ்வாறு செய்து முடிக்கப்படும்? “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.” (சகரியா 4:6) கடவுளுடைய ஆவியின் உதவியோடு ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. இன்று அதேவிதமாகவே கடவுளுடைய மக்கள் அதிகத்தை சாதித்திருக்கிறார்கள். நற்செய்தியின் பிரசங்கிப்பு பூமி முழுவதிலும் விஸ்தரித்திருக்கிறது. இலட்சக்கணக்கான தனி ஆட்கள் சத்தியத்திலும் நீதியிலும் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். மாநாடுகள் ஒழுங்கு செய்யப்படுகிறது. ராஜ்ய மன்றங்களும் கிளைக்காரியாலயங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும் பகுதி கடுமையான துன்புறுத்தல் இருந்தபோதிலும் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள், அவர்கள் செய்து முடித்திருக்கும் ஒவ்வொரு காரியமும் மனித பலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ அல்ல, ஆனால் கடவுளுடைய ஆவியினாலேயே என்பதை அறிந்தவர்களாய் உற்சாகமிழந்துவிடாதிருக்கின்றனர்.
முதல் நூற்றாண்டில் கடவுளுடைய ஆவி
16. கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் இருந்த யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய ஆவியின் கிரியையோடு என்ன அனுபவத்தைக் கொண்டிருந்தனர்?
16 நாம் ஏற்கெனவே பார்த்த வண்ணமாகவே, கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் இருந்த கடவுளுடைய ஊழியர்கள் கடவுளுடைய ஆவியின் வல்லமையை நன்றாக உணர்ந்தவர்களாயிருந்தனர். அவர்கள் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றவும் கடவுளுடைய சித்தத்தைச் செய்து முடிக்கவும் தங்களுக்கு உதவி செய்ய அதை நம்பியிருந்தார்கள். நியாயப்பிரமாணமும் மற்ற பரிசுத்த எழுத்துக்களும் யெகோவாவின் ஆவியினுடைய செல்வாக்கின் கீழ், ஏவப்பட்டு எழுதப்பட்டன என்றும் இவ்விதமாக அவை கடவுளுடைய வார்த்தையாக இருந்ததையும்கூட அவர்கள் அறிந்திருந்தனர். (சங்கீதம் 119:105) ஆனால் கிறிஸ்தவ சகாப்தத்தைப் பற்றியதென்ன?
17, 18. கிறிஸ்தவ சகாப்தத்தில், ஆவியின் அற்புதமான வெளிக்காட்டல்களில் சில யாவை? இவை என்ன நோக்கத்தை சேவித்தன?
17 நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டும்கூட, கடவுளுடைய ஆவியின் மகத்தான கிரியைகளைக் கண்கூடாகப் பார்த்தது. அங்கே ஆவியால்-ஏவப்பட்டு தீர்க்கதரிசனஞ் சொல்லுதல் இருந்தது. (1 கொரிந்தியர் 14:1, 3) பரிசுத்த ஆவி இயேசு சொல்லியிருந்த அனைத்துக் காரியங்களையும் சீஷர்களுக்கு நினைப்பூட்டும் என்றும் சத்தியத்தின் கூடுதலான அம்சங்களை அவர்களுக்குக் கற்பிக்கும் என்றும் இயேசு கொடுத்திருந்த வாக்குறுதியின் நிறைவேற்றமாக, அநேக பல புத்தகங்கள் பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் கீழ் எழுதப்பட்டன. (யோவான் 14:26; 15:26, 27; 16:12, 13) எமது அடுத்தக் கட்டுரையில், அதிக முழுமையாக சிந்திக்கப்பட இருக்கும் வண்ணமாக அங்கே அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆம், முதல் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க ஓர் அற்புதத்தோடு ஆரம்பமானது. சுமார் பொ.ச.மு. 2-ம் ஆண்டின் போது, ஒரு விசேஷித்த குழந்தை பிறக்கவிருந்தது. மேலும் ஓர் அடையாளமாக அவருடைய இளம் தாய் ஒரு கன்னியாக இருக்க வேண்டும். அது எவ்விதமாக இருக்க முடியும்? பரிசுத்த ஆவியின் மூலமாக. பதிவு சொல்கிறது: “அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே அவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.”—மத்தேயு 1:18; லூக்கா 1:35, 36.
18 இயேசு வளர்ந்து பெரியவரான போது, அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பிசாசுகளைத் துரத்தினார், வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார், மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார். அவரைப் பின்பற்றியவர்களில் சிலரும்கூட அற்புதங்களையும் வல்லமையான செயல்களையும் நடப்பித்தார்கள். இந்த விசேஷமான திறமைகள் ஆவியினுடைய ஈவுகளாக இருந்தன. அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? முன் செய்யப்பட்ட அற்புதங்கள் செய்த வண்ணமாகவே அவை கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேற உதவி அவருடைய வல்லமையை வெளிப்படுத்தியது. மேலுமாக இயேசு தாம் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று உரிமைப்பாராட்டியதை உண்மையென காட்டியது; பின்னால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையே கடவுளின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்பதை அவை நிரூபித்தன.—மத்தேயு 11:2-6; யோவான் 16:8; அப்போஸ்தலர் 2:22; 1 கொரிந்தியர் 12:4-11; எபிரெயர் 2:4; 1 பேதுரு 2:9.
19 என்றபோதிலும் அப்போஸ்தலனாகிய பவுல், ஆவியின் இப்படிப்பட்ட அற்புதமான வெளிக்காட்டல்கள் சபையின் குழந்தைப்பருவத்திற்குரியது என்றும் அவை ஒழிந்து போகும் என்றும் சொன்னார். ஆகவே இன்று நாம் இப்படிப்பட்ட அற்புதங்கள் பரிசுத்த ஆவியினால் செய்யப்படுவதை நாம் பார்ப்பதில்லை. (1 கொரிந்தியர் 13:8-11) இருப்பினும் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் நடப்பித்த அற்புதங்கள் வரலாற்று சார்ந்த அக்கறையைக் காட்டிலும் அதிகத்தை கொண்டிருக்கின்றன. அவை, புதிய உலகில் இயேசுவினுடைய ஆட்சியின் கீழ் வியாதியும் மரணமும் இருக்காது என்ற கடவுளுடைய வாக்குறுதியில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன.—ஏசாயா 25:6-8; 33:24; 65:20-24.
கடவுளுடைய பரிசுத்த ஆவியிலிருந்து நன்மை பெறுங்கள்
20, 21. பரிசுத்த ஆவியின் ஏற்பாட்டை நாம் எவ்விதமாக அனுகூலப்படுத்திக் கொள்ள முடியும்?
20 இந்த ஆவி என்னே ஒரு வல்லமைவாய்ந்த சக்தியாக இருக்கிறது! ஆனால் கிறிஸ்தவர்கள் இதை இன்று எவ்விதமாக அனுகூலப்படுத்திக் கொள்ளலாம்? முதலாவது, நாம் அதற்காக கேட்க வேண்டும் என்று இயேசு சொன்னார், ஆகவே, அதை அப்படியே ஏன் செய்யக்கூடாது? அழுத்தமான காலங்களில் மாத்திரமல்ல, ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த மகத்தான ஈவை உங்களுக்கு அருளிச் செய்ய யெகோவாவிடம் ஜெபியுங்கள். மேலுமாக பரிசுத்த ஆவி உங்களிடம் பேசக்கூடியதாக இருக்கும் பொருட்டு, பைபிளை வாசியுங்கள். (எபிரெயர் 3:7 ஒப்பிடவும்.) பரிசுத்த ஆவி உங்களுடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் பொருட்டு நீங்கள் வாசிப்பதை தியானித்து, அதை பொருத்துங்கள். (சங்கீதம் 1:1-3) மேலுமாக கடவுளுடைய ஆவியின் மீது சார்ந்திருக்கும் மற்றவர்களோடு தனிப்பட்ட விதமாகவும், சபைகளிலும், அசெம்பிளிகளிலும் கூட்டுறவுக் கொள்ளுங்கள். “சபைகளில்” தங்கள் கடவுளைத் துதிப்பவர்களைப் பரிசுத்த ஆவி எத்தனை நிறைவாக பலப்படுத்துகிறது!—சங்கீதம் 68:26.
21 யெகோவா தாராள குணமுள்ளவரல்லவா? நாம் வெறுமென அவரை பரிசுத்த ஆவிக்காக கேட்க வேண்டும், அவர் அதை நமக்குத் தருவார் என்று அவர் சொல்லுகிறார். இப்படிப்பட்ட வல்லமையுள்ள ஓர் உதவி நமக்கு கிடைப்பதாக இருக்கையில் நம்முடைய சொந்த ஞானத்தையும் பெலத்தையும் நம்பியிருப்பது என்னே ஒரு முட்டாள்தனம்! என்றபோதிலும் கிறிஸ்தவர்களாக நம்மை பாதிக்கின்ற, கடவுளுடைய ஆவியோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்கள் இருக்கின்றன, இவை அடுத்தக் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும். (w92 2/1)
[அடிக்குறிப்புகள்]
a “தேவனுடைய விரல்” என்ற சொற்றொடர் பொதுவாக பரிசுத்த ஆவியை குறிப்பிடுகிறது.—லூக்கா 11:20 மற்றும் மத்தேயு 12:28 ஒப்பிடவும்.
b பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெரும்பாலான அற்புதங்கள் மோசே மற்றும் யோசுவா, எலியா மற்றும் எலிசா, இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் காலத்தில் நடந்தவை.ம
பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா?
◻பிரபஞ்சத்திலுள்ள எல்லா சடப்பொருட்களையும் யெகோவா எவ்வாறு சிருஷ்டித்தார்?
◻கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் பரிசுத்த ஆவி என்ன சில வழிகளில் கிரியை செய்தது?
◻பூர்வ காலங்களில் பரிசுத்த ஆவி எதை நிறைவேற்றியது என்பதை அறிந்துகொள்வது இன்று நமக்கு எவ்விதமாக ஆறுதலளிக்கிறது?
◻பரிசுத்த ஆவியின் ஏற்பாட்டை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?
19. இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களுடைய அற்புதங்களைப் பற்றிய பைபிள் பதிவினால் நம்முடைய விசுவாசம் எவ்விதமாக பலப்படுத்தப்படுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
சிம்சோனுக்கு மீமானிட பெலத்தைக் கொடுத்த அந்த ஆவி நமக்கு எல்லாக் காரியங்களுக்கும் வல்லமையைக் கொடுக்கக்கூடும்