தயவான ஒரு வார்த்தையின் வல்லமை
‘கவலையினால் ஒடுங்கிய இருதயத்துக்கு, தயவான ஒரு வார்த்தை என்னே புத்துயிரளிக்கும்!’—நீதிமொழிகள் 12:25, Knox.
கிறிஸ்தவர்கள் துன்பத்திலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்டவர்களாக இல்லை. “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” வாழ்ந்துவருவதால் சில சமயங்களில் அவர்கள் கவலையை அனுபவிக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1, NW.
இப்படிப்பட்ட கடுந்துயரத்தை அனுபவிக்கையில், உத்தமமான ஒரு நண்பனிடமிருந்து தயவான வார்த்தைகளைக் கேட்பது என்னே ஆசீர்வாதமாக இருக்கிறது! “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்,” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) உண்மையுள்ள மனிதனாகிய யோபு இத்தகைய ஒரு நண்பனாக அறியப்பட்டிருந்தார். எலிப்பாஸ்கூட அவரைக் குறித்து இவ்விதமாகச் சொன்னான்: “விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.”—யோபு 4:4.
என்றபோதிலும், யோபுவுக்கே ஊக்குவிப்பு தேவைப்பட்டபோது, எலிப்பாஸும் அவனுடைய தோழர்களும் தயவான வார்த்தைகளைச் சொல்லவில்லை. அவருடைய துன்பத்துக்கு யோபை குறைகூறி இரகசியமாக ஏதோவொரு தவற்றை அவர் செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் மறைமுகமாக சொன்னார்கள். (யோபு 4:8) இன்டர்பிரட்டர்ஸ் பைபிள் இவ்வாறு குறிப்பு சொல்கிறது: “யோபுவுக்குத் தேவையாயிருப்பது மனித இதயத்தின் இரக்கமே. அவர் பெற்றுக்கொள்வதோ தொடர்ச்சியாக முற்றிலும் ‘மெய்யான’ மற்றும் முற்றிலும் அழகாக இருக்கும் மதசம்பந்தமாக வழங்கி அலுத்துப்போன சொற்றொடர்களும் நன்னெறி வெற்றுரைகளுமே.” எலிப்பாஸ் மற்றும் அவன் தோழர்களின் பேச்சைக் கேட்டபோது அது யோபுவை அத்தனை குழப்பமடையச் செய்ததால், அவர் பின்வருமாறு கூக்குரலிட கட்டாயப்படுத்தப்பட்டார்: “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?”—யோபு 19:2.
நம்முடைய யோசனையில்லாத தயவற்ற வார்த்தைகளினால் கடவுளுடைய உடன் ஊழியன் ஒருவர் துயரத்தில் கூக்குரலிட நாம் ஒருபோதும் காரணராயிருக்க மாட்டோம். (உபாகமம் 24:15-ஐ ஒப்பிடவும்.) பைபிள் நீதிமொழி ஒன்று எச்சரிக்கிறது: ‘நீங்கள் சொல்வது உயிரைப் பாதுகாக்கக்கூடும் அல்லது அதை அழித்திடக்கூடும்; ஆகவே உங்கள் வார்த்தைகளின் பின்விளைவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’—நீதிமொழிகள் 18:21, TEV.
பேச்சின் வல்லமையை உணர்ந்தவர்களாக, அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமாக. மக்கெதோனியாவில், அவர் ‘அநேக வார்த்தைகளினாலே அங்கிருந்தவர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தார்.’—அப்போஸ்தலர் 20:2.