தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்
“யெகோவாவினுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தாழ்ந்த குரலில் வாசிக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 1:2, NW.
1. (அ) உவாட்ச் டவர் சொஸைட்டியின் உலக தலைமைக் காரியாலய தொழிற்சாலைக் கட்டடத்தின் ஒரு பக்கத்தில் கவனத்தைக் கவரக்கூடிய என்ன வாசகம் காணப்படுகிறது? (ஆ) அந்தப் புத்திமதியைத் தனிப்பட்டவிதமாய் நாம் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது எவ்வாறு பயனடைவோம்?
“கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்.” நியூ யார்க்கிலுள்ள புரூக்லினில், பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் அச்சடிக்கும் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு பக்கத்தில் அந்த வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் காட்சியளிக்கின்றன. அந்த வாசகத்தைக் காணும் உலக ஜனங்களுக்கென்று மட்டும் அந்தப் புத்திமதி கொடுக்கப்பட்டில்லை. யெகோவாவின் சாட்சிகள் தாங்களும்கூட அதை இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக உணருகின்றனர். பைபிளை ஒழுங்காக வாசித்து அதைத் தனிப்பட்ட விதத்தில் பொருத்துபவர்கள், அது அளிக்கும் உபதேசம், கடிந்துகொள்ளுதல், சீர்திருத்தல், நீதியைப் படிப்பிக்குதல் ஆகியவற்றிலிருந்து பயனடைகின்றனர்.—2 தீமோத்தேயு 3:16, 17.
2. பைபிள் வாசிப்பின் முக்கியத்துவத்தை சகோதரர் ரஸல் எவ்வாறு அழுத்திக் காண்பித்தார்?
2 யெகோவாவின் சாட்சிகள் காவற்கோபுரம் உட்பட, தங்கள் பைபிள்படிப்பு உதவி-புத்தகங்களைப் பெரிதும் போற்றுகின்றனர், இவற்றை ஒழுங்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் பைபிளுக்குரிய ஸ்தானத்தை இவற்றில் எதுவுமே எடுத்துக்கொள்வதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்ட் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவர் 1909-ல் காவற்கோபுர பத்திரிகையின் வாசகர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “பைபிளே நம்முடைய அடிப்படை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள், உதவி-புத்தகங்கள் எந்த அளவுக்கு கடவுளால் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை வெறும் ‘உதவிகளே,’ தவிர பைபிளுக்கு மாற்றீடுகள் அல்ல.”
3. (அ) “தேவனுடைய வார்த்தை”யோடு அறிமுகமாகியிருப்பவர்கள்மீது அது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது? (ஆ) பெரோயா பட்டணத்தார் வேதாகமத்தை வாசிப்பதிலும் படிப்பதிலும் எந்தளவுக்கு ஈடுபட்டிருந்தனர்?
3 வேறு எந்த புத்தகமும் கொண்டிராத கருத்தாழத்தையும் வலிமையையும் ஏவப்பட்ட வேதாகமங்கள் கொண்டிருக்கின்றன. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) பெரோயா பட்டணத்து மக்கள் “நற்குணசாலிகளாயிருந்தார்கள்” என்று சீஷனாகிய லூக்கா அவர்களை மனமாரப் பாராட்டினார். அப்போஸ்தலனாகிய பவுலும் அவருடைய கூட்டாளியான சீலாவும் பிரசங்கித்த வார்த்தையை ஆவலோடு ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், கற்பிக்கப்பட்ட காரியங்களின் வேதப்பூர்வமான அடிப்படையைத் தீர்மானிப்பதற்கு ‘தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்தும்கூட பார்த்தனர்.’—அப்போஸ்தலர் 17:11.
தினந்தோறும் அதை வாசிப்பது
4. நாம் பைபிளை எந்தளவுக்கு வாசிக்க வேண்டும் என்பதை வேதாகமம் எவ்வாறு குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
4 நாம் எந்தளவுக்கு பைபிளை வாசிக்க வேண்டும் என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிடுவதில்லை. என்றபோதிலும், யோசுவா ஞானமாக செயல்படுவதற்காகவும், கடவுள் தனக்குக் கொடுத்திருந்த நியமிப்பை செய்து முடிப்பதில் வெற்றியடைவதற்காகவும், ‘நியாயப்பிரமாண புஸ்தகத்தை தாழ்ந்த குரலில் இரவுல் பகலும் வாசிக்க வேண்டும்’ என்று யெகோவா அவருக்குக் கொடுத்த புத்திமதியை அது பதிவு செய்கிறது. (யோசுவா 1:8, NW) பண்டைய இஸ்ரவேல்மீது ராஜாவாக ஆட்சி செய்த எவரும் வேதாகமத்தை “தன் ஜீவனுள்ள நாளெல்லாம்” வாசிக்க வேண்டியிருந்தது என்று அது நமக்குச் சொல்கிறது. (உபாகமம் 17:20) அது கூடுதலாக சொல்கிறது: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாம[ல்], . . . யெகோவாவினுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தாழ்ந்த குரலில் வாசிக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.” (சங்கீதம் 1:1, 2, NW) மேலும், இயேசு கிறிஸ்து தம்மை சோதிப்பதற்கு சாத்தான் எடுத்த முயற்சிகளை வெறுத்து ஒதுக்கியபோது, ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்திலிருந்து அவர் மேற்கோள்காட்டி, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்,” என்று மத்தேயு பதிவுசெய்த சுவிசேஷம் நமக்கு சொல்கிறது. (மத்தேயு 4:4) நமக்கு எவ்வளவு அடிக்கடி சரீரப்பிரகாரமான உணவு தேவைப்படுகிறது? ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது! தினந்தோறும் ஆவிக்குரிய உணவை உட்கொள்வது இன்னும் அதிக முக்கியமாயிருக்கிறது, ஏனென்றால் அது நம்முடைய நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்புகளைப் பாதிக்கிறது.—உபாகமம் 8:3; யோவான் 17:3.
5. விசுவாசத்தைப் பரீட்சிக்கும் சோதனைகள் நம்மைத் தாக்கும்போது, ‘யெகோவாவுக்குப் பாத்திரராய் நடக்க’ தினந்தோறும் பைபிளை வாசிப்பது நமக்கு எவ்வாறு உதவி செய்யும்?
5 நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையால் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தினந்தோறும்—வீட்டில், வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், தெருக்களில், பொருள் வாங்கச் செல்கையில், நம்முடைய ஊழியத்தில்—விசுவாசத்தைச் சோதிக்கும் சவால்கள் நம்மீது நெருக்கித் தள்ளப்படுகின்றன. நாம் எவ்வாறு இவற்றைக் கையாளுவோம்? பைபிள் கட்டளைகளும் நியமங்களும் மனதுக்கு உடனடியாக வருமா? நம் பேரிலேயே சார்ந்திருக்கும் இயல்பை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12) இவ்வுலகம் அதன் வார்ப்புக்குள் நம்மை அழுத்தித் திணிப்பதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக “கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” தினந்தோறும் பைபிளை வாசிப்பது நமக்கு உதவி செய்யும்.—கொலோசெயர் 1:9, 10; ரோமர் 12:2.
திரும்பத் திரும்ப பைபிளை வாசிக்கவேண்டியதன் அவசியம்
6. பைபிளைத் திரும்பத் திரும்ப வாசிப்பது ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது?
6 பைபிளை வாசிப்பது கற்பனைக்கதை புத்தகம் ஒன்றை வாசிப்பதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாய் இருக்கிறது. அதிக புகழ்பெற்ற கற்பனைக்கதை இலக்கியங்கள் ஒருமுறை வாசிப்பதற்கென்று உருவாக்கப்பட்டிருக்கின்றன; அக்கதையையும், அது எவ்வாறு முடிவடைகிறது என்பதையும் ஒரு நபர் அறிந்தவுடன், அப்புத்தகத்தை வாசிப்பதில் வேறெந்த நோக்கமும் இல்லாமல் போய்விடுகிறது. அதற்கு எதிர்மாறாக, நாம் பைபிளை எத்தனை தடவை வாசித்திருந்தாலும், அதை மறுபடியுமாக வாசிப்பதன் மூலம் நாம் மிகுதியாக பயனடைகிறோம். (நீதிமொழிகள் 9:9) பகுத்தறியும் ஆற்றலுள்ள ஒரு நபருக்கு, வேதவார்த்தைகள் எப்போதும் புது அர்த்தத்தைக் கொடுக்கின்றன. சமீப மாதங்களில் அவர் பார்த்தும், கேட்டும், தனிப்பட்டவிதமாய் அனுபவித்தும் இருப்பவற்றின் வெளிச்சத்தில் அவருக்கு கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மேலுமதிகமாய் பதியத்தக்கவையாக ஆகின்றன. (தானியேல் 12:4) வாழ்க்கையில் அவர் தன்னுடைய அனுபவத்தை விரிவாக்கி, பிரச்சினைகளை சமாளிக்கையில் பகுத்தறியும் ஆற்றலுள்ள பைபிள் வாசகர் தான் முன்பு அதிக கவனம் செலுத்தாது படித்த அறிவுரைகளை மேலுமதிகமாக மதித்துணருகிறார். (நீதிமொழிகள் 4:18) அவர் கடும் நோய்வாய்ப்படுவாராகில், வேதனை நீக்கப்பட்டு ஆரோக்கியம் திரும்ப அளிக்கப்படுவதைக் குறித்த பைபிளின் வாக்குறுதிகள் அவருக்கு முன்னொருபோதும் இருந்ததைக் காட்டிலும் ஆழ்ந்த அர்த்தமுடையவையாக ஆகின்றன. நெருங்கிய நண்பர்களும் குடும்ப அங்கத்தினர்களும் மரித்துப்போகையில், உயிர்த்தெழுதலைப் பற்றிய வாக்குறுதி மேலும் அருமையானதாக ஆகிறது.
7. வாழ்க்கையில் நாம் புதிய உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளும்போது எது நமக்கு உதவி செய்யும், ஏன்?
7 தனிப்பட்ட விதத்தில் நீங்கள் பல ஆண்டுகளாக பைபிளைப் படித்து அதன் அறிவுரைகளைப் பிரயோகித்து வந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது வாழ்க்கையில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தறுவாயில் ஒருவேளை நீங்கள் இருக்கக்கூடும். நீங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு பெற்றோராக ஆகப்போகிறீர்களா? சபையில் ஒரு மூப்பராகவோ அல்லது ஒரு உதவி ஊழியராகவோ பொறுப்பு உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா? பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் கூடுதலான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு முழுநேர சுவிசேஷகராக நீங்கள் ஆகியிருக்கிறீர்களா? இந்தப் புதிய உத்தரவாதங்களை மனதில்கொண்டு முழு பைபிளையும் திரும்ப வாசிப்பது எவ்வளவு பயனளிப்பதாக இருக்கும்!—எபேசியர் 5:24, 25, 27; 6:4; 2 தீமோத்தேயு 4:1, 2.
8. நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம் என்று எண்ணிய காரியங்களைக் குறித்து நாம் இன்னுமதிகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதை சூழ்நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு காண்பிக்கும்?
8 கடந்தகாலங்களில் நீங்கள் நல்ல விதத்தில் ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக்காட்டி வந்திருக்கக்கூடும். (கலாத்தியர் 5:22, 23) ஆயினும் அத்தகைய தெய்வீகப் பண்புகளைக் குறித்து மேலுமதிகம் கற்றுக்கொள்வதை அவசியப்படுத்தும் மாறுபட்ட சூழ்நிலைமைகளை நீங்கள் எதிர்ப்படக்கூடும். (எபிரெயர் 5:8-ஐ ஒப்பிடுக.) முன்பு பயணக் கண்காணியாக இருந்த ஒருவர் தனது வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதற்காக தன் விசேஷ சேவையை விட்டுவிட வேண்டியிருந்தது, அவர் சொன்னதாவது: “ஆவியின் கனிகளை நான் நியாயமான அளவு நன்றாக வெளிக்காட்டிக் கொண்டிருந்ததாக நினைத்ததுண்டு. இப்போதோ அனைத்தையும் மறுபடியும் ஆரம்பிப்பதைப் போல நான் உணருகிறேன்.” இதேவிதமாக, சரீரப்பிரகாரமான அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட கடும் நோயினால் துன்புறும் விவாகத் துணையையுடைய கணவர்களும் மனைவிகளும் அவர்களுக்குத் தனிப்பட்ட கவனிப்பை அளித்து வருகையில், சிலசமயங்களில் அழுத்தத்தின் காரணமாக வரும் பிரதிபலிப்புகள் சோர்வை ஏற்படுத்தக்கூடும். ஒழுங்கான பைபிள் வாசிப்பு பெரும் ஆறுதலுக்கும் உதவிக்கும் ஓர் ஊற்றுமூலமாய் இருக்கிறது.
பைபிள் வாசிப்பு எப்போது செய்யப்படலாம்
9. (அ) அதிக வேலையாயிருக்கும் ஒரு நபருக்குத் தினந்தோறும் பைபிளை வாசிப்பதற்கென்று நேரத்தைக் கண்டுபிடிக்க எது உதவக்கூடும்? (ஆ) கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது விசேஷமாக மூப்பர்களுக்கு ஏன் முக்கியமானதாய் இருக்கிறது?
9 செய்வதற்கு ஏற்கெனவே அதிக வேலை இருக்கும் ஆட்களுக்கு இன்னும் கூடுதலான ஒன்றை ஓர் ஒழுங்கான அடிப்படையில் செய்வதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. ஆயினும், யெகோவாவின் முன்மாதிரியிலிருந்து பயனடையலாம். அவர் ‘குறித்த நேரத்தில்’ காரியங்களைச் செய்வதாக பைபிள் வெளிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 21:2; யாத்திராகமம் 9:5; லூக்கா 21:24; கலாத்தியர் 4:5) கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்த மதித்துணர்வு அதற்கு நம்முடைய அன்றாடக அட்டவணையில் ஒரு நேரத்தை குறித்துக்கொள்ள உதவி செய்யும். (எபேசியர் 5:15-17) விசேஷமாக மூப்பர்கள் தாங்கள் கொடுக்கும் புத்திமதி சந்தேகத்திற்கு இடமின்றி பைபிள் நியமங்களின் பேரில் சார்ந்திருப்பதற்கும் தாங்கள் காண்பிக்கும் ஆவி ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பிரதிபலிப்பதற்கும் ஒழுங்கான பைபிள் வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கி வைப்பது அவசியம்.—யாக்கோபு 3:17; தீத்து 1:9.
10. தினந்தோறும் பைபிளை வாசிப்பவர்கள், அதை வாசிப்பதற்கு எப்போது நேரத்தைக் கண்டுபிடிக்கின்றனர்?
10 தனிப்பட்ட பைபிள் வாசிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செய்துவரும் அநேகர், தங்கள் வாசிப்பை அதிகாலையில் அந்நாளின் வேலைகளை தாங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு செய்துவிடுகின்றனர். பிறர் வேறொரு சமயத்தில் அதை ஒழுங்காக தங்களால் செய்யமுடிவதாகக் காண்கின்றனர். பைபிள் ஆடியோகேசட்டுகள் (கிடைக்குமிடங்களில்), வேலைக்குப் பிரயாணம் செய்பவர்கள் தங்கள் பயணநேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன. சில சாட்சிகள் அன்றாடக வீட்டு வேலைகளைச் செய்கையில் அவற்றைப் போட்டுக் கேட்கின்றனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கத்திய நாடுகள் போன்ற இடங்களிலுள்ள பற்பல சாட்சிகள் வெற்றிகரமானதாகக் கண்ட வாசிப்புத் திட்டங்கள், பக்கங்கள் 20, 21-ல் “எப்போது அவர்கள் அதை வாசிக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பயனடைகின்றனர்” என்ற தலைப்பின்கீழ் காண்பிக்கப்பட்டுள்ளது.
11. கிடைக்கக்கூடிய நேரம் மட்டுப்படுத்தப்பட்டதாயிருந்தாலும்கூட, தினந்தோறும் எவ்வாறு பைபிள் வாசிப்பை செய்து முடிக்கலாம்?
11 பைபிள் வாசிப்புக்கென்று எந்தவொரு சமயத்திலும் நீங்கள் செலவிடும் நேரத்தின் அளவு முக்கியமல்ல, அது எவ்வளவு ஒழுங்காக செய்யப்படுகிறது என்பதே அதிமுக்கியம். நீங்கள் ஒருதடவை உட்கார்ந்து வாசிப்பதில் ஒருமணியோ அல்லது அதற்கு அதிகமோ நேரத்தை செலவிட்டு, கூடுதலான ஆராய்ச்சி செய்து, அவ்விஷயத்தில் முற்றிலும் மூழ்கிவிடுவது பயனளிப்பதாகக் காணக்கூடும். ஆனால் அதை ஒழுங்கான அடிப்படையில் செய்ய உங்களுடைய அட்டவணை அனுமதிக்கிறதா? பைபிளைக் கொஞ்சம்கூட வாசிக்காமல் அநேக நாட்கள் கடந்துசெல்ல அனுமதிப்பதைக் காட்டிலும் ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களோ அல்லது ஒருவேளை ஐந்து நிமிடங்களோ வாசிப்பது மேலானதல்லவா? தினந்தோறும் பைபிளை வாசிக்க தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின்பு சமயம் கிடைக்கும்போதெல்லாம் கூடுதலான ஆராய்ச்சியை அதோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பைபிள் வாசிப்புக்குப் பலதரப்பட்ட அணுகுமுறைகள்
12. பெத்தேல் குடும்பத்தின் புதிய அங்கத்தினர்களும் கிலியட் பள்ளி மாணவர்களும் என்ன பைபிள் வாசிப்புத் திட்டத்தைக் கொண்டிருக்கின்றனர்?
12 பைபிளை வாசிக்க அநேக வழிகள் உள்ளன. அதை ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை வாசிப்பது பயனளிக்கும். உலக தலைமைக் காரியாலயத்திலோ அல்லது சங்கத்தின் கிளைக்காரியாலயங்களிலோ சேவிக்கும் உலகளாவிய பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் அவர்களுடைய பெத்தேல் சேவையின் முதல் ஆண்டில் முழு பைபிளையும் வாசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. (நாள் ஒன்றுக்கு அவற்றின் அளவைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து அதிகாரங்கள் அல்லது நான்கு முதல் ஐந்து பக்கங்கள் வாசிப்பதை இது பொதுவாக உட்படுத்தும்.) காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியின் மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கு முன் முழு பைபிளையும் வாசிக்க வேண்டும். தினந்தோறும் பைபிளை வாசிப்பதை அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆக்கிக்கொள்ள இது உதவும் என்று நம்பப்படுகிறது.
13. புதிதாக முழுக்காட்டப்பட்டிருக்கும் சாட்சிகளுக்கு என்ன இலக்கு சிபாரிசு செய்யப்படுகிறது?
13 முழு பைபிளையும் வாசிப்பதை ஒரு இலக்காக தங்கள் முன் வைத்துக்கொள்வது புதிதாக முழுக்காட்டப்பட்ட சாட்சிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 1975-ல் பிரான்ஸிலுள்ள ஒரு இளைஞன் முழுக்காட்டுதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கையில் பைபிளை வாசிப்பதற்கு திட்டவட்டமான ஏற்பாடு அவனுக்கு இருக்கிறதா என்று ஒரு மூப்பர் கேட்டார். அது முதற்கொண்டு அவன் ஒவ்வொரு வருடமும் முழு பைபிளையும் வாசித்து வருகிறான், பொதுவாக தன் வாசிப்பைக் காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன் முடித்துவிடுகிறான். அதன் விளைவுகளைக் குறித்து அவன் சொல்வதாவது: “நான் யெகோவாவை மேலும் நன்றாக அறிய வந்திருக்கிறேன். அவர் செய்வதெல்லாம் எப்படி அவருடைய நோக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும், தடங்கல்கள் எழும்புகையில் அவர் எப்படி பிரதிபலிக்கிறார் என்பதையும் என்னால் காணமுடிகிறது. அதே சமயத்தில் யெகோவா தம் எல்லா செயல்களிலும் நீதியுள்ளவராயும் நல்லவராயும் இருக்கிறார் என்பதை நான் காண்கிறேன்.”
14. (அ) தொடர்ந்து இருக்கக்கூடிய தனிப்பட்ட பைபிள் வாசிப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு என்ன தேவைப்படுகிறது? (ஆ) ஒவ்வொரு பைபிள் புத்தகத்தையும் வாசிக்கையில், அதன் சுருக்கத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு எது நமக்கு உதவக்கூடும்?
14 நீங்கள் முழு பைபிளையும் வாசிக்கிறீர்களா? இல்லையென்றால் ஆரம்பிப்பதற்கு இதுவே நல்ல சமயம். ஒரு திட்டவட்டமான ஏற்பாட்டை செய்துகொள்ளுங்கள், பின்பு அதைக் கடைப்பிடியுங்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை பக்கங்கள் அல்லது அதிகாரங்கள் நீங்கள் படிப்பீர்கள் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள், அல்லது எவ்வளவு நேரம் நீங்கள் செலவிடுவீர்கள் என்பதையும், அதை எப்போது செலவிடுவீர்கள் என்பதையும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். பைபிளை ஒரு வருடத்தில் வாசித்து முடித்துவிட அனைவராலும் முடியாது, ஆனால் கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக படிப்பது, முடியுமானால் தினந்தோறும் படிப்பதுதான் முக்கியமானதாகும். நீங்கள் பைபிளை வாசித்துக்கொண்டு போகையில், அவ்விஷயத்தின் சுருக்கத்தை உங்கள் மனதில் பதியவைத்துக்கொள்வதற்கு சில குறிப்பிட்ட நோக்கீட்டுப் புத்தகங்களைப் பயன்படுத்துவது பிரயோஜனமளிப்பதாக நீங்கள் காணக்கூடும். வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) உங்கள் மொழியில் கிடைக்குமானால், ஒரு குறிப்பிட்ட பைபிள் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் முன் உட்பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அப்புத்தகத்தின் முக்கிய குறிப்புகளின் சுருக்க உரையை வாசியுங்கள்.* விசேஷமாக சுருக்க உரையிலுள்ள தடித்த எழுத்து தலைப்புகளைக் கவனியுங்கள். அல்லது “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” (ஆங்கிலம்) புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விரிவான சுருக்க உரையை இவ்விதமே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.a
15. (அ) உங்களுடைய பைபிள் வாசிப்பை மேம்படுத்துவதற்கு பக்கங்கள் 16, 17-ல் கொடுக்கப்பட்டிருக்கும் என்ன ஆலோசனைகள் உதவி செய்யக்கூடும்? (ஆ) குறிப்பிட்ட சில பக்கங்களை வாசிப்பதை ஒரு சடங்காச்சாரமாக ஆக்கிக்கொள்வதற்குப் பதிலாக, எந்த முக்கியமான விஷயத்துக்கு நாம் அதிகக் கவனத்தைச் செலுத்த வேண்டும்?
15 தொடர்ச்சியாக பைபிளை வாசிப்பது பயனுள்ளது, ஆனால் ஒரு சடங்காச்சாரத்தைப் போல் பைபிளை வாசிப்பவராக ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு வருடமும் பைபிளை முழுவதுமாக வாசித்து முடித்து விட்டேன் என்று சொல்லிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பக்கங்களை வாசிக்காதீர்கள். “உங்களுடைய பைபிள் வாசிப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகள்” (பக்கங்கள் 16, 17) என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளபடி நீங்கள் பைபிளை வாசித்து அதில் மகிழ்ச்சியடைவதற்கு பல வழிகள் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் முறை எதுவாக இருப்பினும் உங்கள் மனதையும் இருதயத்தையும் போஷிக்க நிச்சயித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாசிப்பவற்றின் உட்கருத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
16. நாம் வாசிப்பவற்றின் பேரில் தியானம் செய்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
16 இயேசு தம் சீஷர்களுக்குப் போதிக்கையில் அவர் கூறியவற்றை அவர்கள் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அழுத்தியுரைத்தார். அத்தியாவசியமானது என்னவெனில், அறிவுக்குகந்த புரிந்துகொள்ளுதல் மட்டுமல்ல, ஆனால் அதை தங்கள் வாழ்க்கையில் பொருத்துமாறு, ‘அதன் உட்கருத்தை இருதயத்தினால் உணர்ந்துகொள்வதாகும்.’ (மத்தேயு 13:14, 15, 19, 23) ஒரு நபர் உள்ளான மனுஷனில் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைதான் கடவுள் முக்கியமானதாகக் கருதுகிறார், இதுதான் இருதயத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. (1 சாமுவேல் 16:7; நீதிமொழிகள் 4:23) பைபிள் பகுதிகள் என்ன சொல்கின்றன என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் நிச்சயப்படுத்திக்கொள்ளாமல், அவற்றின் பேரில் தியானிக்க வேண்டும், நம்முடைய சொந்த வாழ்க்கையில் அவற்றின் பாதிப்புகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.—சங்கீதம் 48:9; 1 தீமோத்தேயு 4:15.
17. வேதாகமத்தில் நாம் வாசிக்கும் காரியங்களை எந்தச் சில கோணங்களிலிருந்து தியானித்துப் பார்க்கலாம்?
17 பைபிள் பதிவுகளில் உள்ள அடிப்படையான நியமங்களை அடையாளங்கண்டுகொள்ள முயற்சி செய்யுங்கள், அப்போது நீங்கள் எதிர்ப்படும் சூழ்நிலைமைகளுக்கு இவற்றைப் பொருத்தலாம். (ஒப்பிடுக: மத்தேயு 9:13; 19:3-6.) யெகோவாவின் மகத்தான பண்புகளைப் பற்றி வாசித்து அதன் பேரில் தியானிக்கையில், அவரோடு நீங்கள் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை பலப்படுத்திக்கொள்வதற்கும், உங்களுக்குள்ளே தேவபக்திக்கான பலமான உணர்வை வளர்த்துக்கொள்வதற்கும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய கூற்றுகளை நீங்கள் வாசிக்கையில், இவற்றிற்கு இசைவாக செயல்பட நீங்கள் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நேரடியான புத்திமதியை நீங்கள் வாசிக்கும்போது, ‘எனக்கு அது தெரியும்’ என்று வெறுமனே நீங்களே உங்களிடம் சொல்லிக்கொள்வதற்கு பதிலாக, ‘அது சொல்வதை நான் செய்கிறேனா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி செய்கிறீர்களென்றால், ‘அதை என்ன வழிகளில் நான் இன்னும் “அதிக முழுமையாய்” செய்யமுடியும்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். (1 தெசலோனிக்கேயர் 4:1, NW) கடவுளுடைய தேவைகளைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்கையில், அந்தத் தேவைகளுக்கு இசைவாக வாழ்ந்தவர்கள் மற்றும் அதற்கிசைவாக வாழாதவர்களைப் பற்றிய பைபிளின் மெய்-வாழ்க்கை உதாரணங்களையும்கூட நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஏன் அந்த வாழ்க்கைப்போக்கைப் பின்பற்றினார்கள், அதன் விளைவு என்னவாக இருந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வாசிக்கும்போது, பூமியனைத்தின் மீதும் ராஜரீகம் செலுத்தும் பொறுப்பை யெகோவா இயேசுவுக்கே ஒப்படைத்திருக்கிறார் என்பதை மனதில் வையுங்கள்; கடவுளுடைய புதிய உலகுக்கான வாஞ்சையை உங்களுக்குள்ளே பலப்படுத்திக்கொள்ள அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள். கடவுளுடைய குமாரனை நீங்கள் இன்னுமதிக முழுமையாக பின்பற்றுவதற்கான வழிகளையும்கூட நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.—1 பேதுரு 2:21.
18. “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலம் அளிக்கப்படும் படிப்பு பிரசுரங்களைப் பயன்படுத்துவதையும், பைபிள் வாசிப்பையும் நாம் எவ்வாறு சமநிலைப்படுத்தலாம்?
18 “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலம் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த படிப்பு பிரசுரங்களை நீங்கள் பயன்படுத்துவதை பைபிள் வாசிப்பு பதிலீடு செய்யக்கூடாது. அதுவும்கூட யெகோவாவின் ஏற்பாட்டின் ஒரு பாகமாக உள்ளது—அதிக மதிப்புமிக்க ஒன்று. (மத்தேயு 24:45-47) கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பதே உங்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைக் கொண்டிருக்க நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் கூடுமானால், “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்.”
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது பைபிள் வாசிப்பை செய்வது ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது?
◻ நாம் ஏன் பைபிளைத் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்?
◻ உங்களுடைய சொந்த அட்டவணையில், தினந்தோறும் பைபிளை வாசிப்பதற்கு எது நல்ல சமயம்?
◻ நீங்கள் பைபிளைத் திரும்பத் திரும்ப வாசிக்கையில், உங்களுடைய பைபிள் வாசிப்பு அட்டவணைக்கு எது பல்வேறு முறைகளைக் கூட்டக்கூடும்?
◻ நாம் வாசிப்பவற்றின் பேரில் தியானம் செய்வது ஏன் மிகவும் முக்கியமானது?
[பக்கம் 16, 17-ன் பெட்டி]
உங்களுடைய பைபிள் வாசிப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகள்
(1) அநேக மக்கள் பைபிள் புத்தகங்களை அவை வழக்கமாக அச்சிடப்பட்டிருக்கும் வரிசையில், அதாவது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை வாசிக்கின்றனர். அவற்றை ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த வரிசைமுறைப்படியும்கூட நீங்கள் வாசிக்கலாம். பைபிள் 66 ஏவப்பட்ட புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு, ஒரு தெய்வீக நூல்நிலையம் என்பதை மனதில் வையுங்கள். ஒரு மாற்றம் இருப்பதற்காக, வெறுமனே முதல் பக்கத்திலிருந்து வாசிக்காமல், சரித்திரத்தை சிறப்பித்துக் காண்பிக்கும் புத்தகங்கள் சிலவற்றை, பின்பு தீர்க்கதரிசனங்கள் அதிகமாக அடங்கியிருக்கும் புத்தகங்கள், அதைத் தொடர்ந்து புத்திமதிகள் அடங்கியிருக்கும் கடிதங்கள் ஆகியவற்றை நீங்கள் வாசிக்க விரும்பலாம். நீங்கள் வாசித்தவற்றை மனதில் வையுங்கள், முழு பைபிளையும் வாசித்து முடிக்க நிச்சயமாய் இருங்கள்.
(2) வேதாகமத்தின் ஒரு பகுதியை நீங்கள் வாசித்து முடித்த பின்பு, யெகோவாவைப் பற்றி, அவருடைய நோக்கம், அவர் காரியங்களை செய்யும் விதம் ஆகியவற்றைப் பற்றி அது எதை வெளிப்படுத்துகிறது; அது உங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்க வேண்டும், வேறு ஒருவருக்கு உதவி செய்ய நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
(3) வேதாகமத்தின் பேரில் உட்பார்வை புத்தகத்தில் “இயேசு கிறிஸ்து” என்ற தலைப்பின்கீழ் (“வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” புத்தகத்திலும்கூட) பிரசுரிக்கப்பட்டிருக்கும் “இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்” என்ற விளக்க அட்டவணையை வழிகாட்டியாக உபயோகித்து, ஒரே சம்பவத்தை விளக்கும் பதிவுகளை சுவிசேஷங்களிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வாசியுங்கள். இதோடு சேர்ந்து எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் அதற்கு ஒத்திசைவாக இருக்கும் பகுதிகளை சிந்தித்துப் பாருங்கள்.
(4) அப்போஸ்தலருடைய நடபடிகளிலிருந்து பவுலின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றிய பதிவை நீங்கள் வாசிக்கும்போது, அதற்கு சம்பந்தப்பட்ட ஏவப்பட்ட கடிதங்களையும்கூட வாசியுங்கள். பவுல் பிரசங்கித்த பல்வேறு பட்டணங்கள் அல்லது பிராந்தியங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை வாசிக்கும்போது அங்கே நிறுத்திவிட்டு, அந்த இடங்களில் இருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு அவர் பிற்பாடு எழுதிய கடிதங்களை வாசித்துப் பாருங்கள். அவர் செய்த பிரயாணங்களை ஒரு வரைபடத்தில், புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளின் கடைசி பக்கத்தில் உள்ளது போன்ற படத்தை பார்ப்பதும்கூட உதவியளிப்பதாய் இருக்கும்.
(5) நீங்கள் யாத்திராகமத்திலிருந்து உபாகமம் வரை வாசிக்கும்போது, அநேக தீர்க்கதரிசன முன்மாதிரிகளுக்கு விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எபிரெயருக்கு எழுதின கடிதத்தை வாசியுங்கள். வேதாகமத்தின் பேரில் உட்பார்வை புத்தகத்தில் “நியாயப்பிரமாணம்” என்ற தலைப்பின்கீழ், “நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சில அம்சங்கள்” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் விளக்க அட்டவணையைப் பாருங்கள்.
(6) தீர்க்கதரிசன புத்தகங்களை வாசிக்கும்போது, பைபிளில் அதற்கு சம்பந்தமாக உள்ள சரித்திரப்பூர்வமான பின்னணியை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஏசாயாவின் புத்தகத்தை வாசிக்கும்போது, ஏசாயா 1:1-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா போன்ற ராஜாக்களைப் பற்றி வேறு இடத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றை மறுபடியும் சிந்தியுங்கள். (2 இராஜாக்கள், அதிகாரங்கள் 15-20; 2 நாளாகமம், அதிகாரங்கள் 26-32) அல்லது ஆகாய் மற்றும் சகரியா புத்தகங்களை வாசிக்கும்போது, எஸ்றா புத்தகத்தில் இருப்பவற்றை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
(7) பைபிளிலிருந்து ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுங்கள், அதிலிருந்து ஒரு பகுதியை வாசியுங்கள் (அது ஒரு அதிகாரமாக இருக்கலாம்), பிறகு காவற்கோபுர பிரசுர இண்டெக்ஸ் (ஆங்கிலம்) அல்லது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட காவற்கோபுர நூல்நிலையம் (ஆங்கிலம்) உங்கள் மொழியில் இருக்குமேயானால் அவற்றை உபயோகித்து ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அந்த விஷயங்களைப் பொருத்துங்கள். அதைப் பேச்சுகளிலும் வெளி ஊழியத்திலும் பயன்படுத்துங்கள். பிறகு மற்றொரு பகுதிக்குச் செல்லுங்கள்.
(8) ஒரு பைபிள் புத்தகத்தின் பேரிலோ அல்லது அதன் ஒரு பகுதியின் பேரிலோ விளக்கவுரை அளிக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டி பிரசுரம் ஒன்று இருக்குமேயானால், பைபிளின் அந்தப் பகுதியை நீங்கள் வாசிக்கும்போது, அதை அடிக்கடி எடுத்துப்பாருங்கள். (உதாரணமாக: சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்தின் பேரில், காவற்கோபுரம், டிசம்பர் 1, 1957, பக்கங்கள் 720-34; எசேக்கியேல் புத்தகத்தின் பேரில், “நான் யெகோவா என்று தேசத்தார் அறிந்துகொள்வார்கள்”—எப்படி? (ஆங்கிலம்); தானியேல் புத்தகத்தின் பேரில், “உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக” (ஆங்கிலம்) அல்லது வரப்போகும் நம் உலக அரசாங்கம்—கடவுளுடைய ராஜ்யம் (ஆங்கிலம்); ஆகாய் மற்றும் சகரியாவின் பேரில், பரதீஸ் மனிதவர்க்கத்துக்கு திரும்பவும் நிலைநாட்டப்படுகிறது—தேவாட்சியின் மூலம்! (ஆங்கிலம்); வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பேரில், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! [ஆங்கிலம்])
(9) நீங்கள் வாசித்துக்கொண்டே போகையில், சில குறுக்குக் குறிப்புகளை எடுத்துப்பாருங்கள். எபிரெய வேதாகமத்திலிருந்து 320 பகுதிகள், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நேரடியாக எடுத்துக் குறிப்பிடப்பட்டிருப்பதையும், மற்ற நூற்றுக்கணக்கான பகுதிகள் மேற்கோள்களாகவும் அதோடுகூட அதன் பொருத்தம் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள். பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் நிலயியல் சார்ந்த விவரங்கள், நீங்கள் புரிந்துகொள்வதற்குக் கடினமாகக் காணும் சொற்றொடர்களை விளக்கும் ஒரேவிதமான சிந்தனைகள் ஆகியவற்றை குறுக்குக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
(10) துணைக் குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் பதிப்பு உங்கள் மொழியில் கிடைக்குமென்றால், அதை உபயோகித்து நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதோடு சம்பந்தப்பட்ட அடிக்குறிப்புகளையும் பிற்சேர்க்கை கட்டுரைகளையும் எடுத்துப் பாருங்கள். உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளுக்கு அடிப்படையையும் முக்கியமான பதங்கள் மொழிபெயர்க்கப்படக்கூடிய மற்ற விதங்களையும் இவை காட்டும். பிற பைபிள் மொழிபெயர்ப்புகளில் சில குறிப்பிட்ட பைபிள் வசனங்கள் எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துப்பார்க்கவும் நீங்கள் விரும்பக்கூடும்.
(11) ஒவ்வொரு அதிகாரத்தையும் நீங்கள் வாசித்த பிறகு, அந்த அதிகாரத்தில் உள்ள முக்கிய கருத்தை வெகு சுருக்கமாய் எழுதுங்கள். பிற்பாடு மறுபார்வையிடவும் தியானிக்கவும் அதை அடிப்படையாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
(12) நீங்கள் பைபிளை வாசிக்கையில், நீங்கள் ஞாபகத்தில் வைக்க விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அல்லது அட்டைகளில் அவற்றை எழுதி நீங்கள் தினந்தோறும் பார்க்கக்கூடிய இடத்தில் அவற்றை வையுங்கள். அவற்றை மனப்பாடம் செய்யுங்கள்; அவற்றின் பேரில் தியானியுங்கள்; அவற்றை உபயோகியுங்கள். ஒரே சமயத்தில் அநேக வசனங்களை மனப்பாடம் செய்ய முயற்சிக்காதீர்கள், ஒரு வாரத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ போதுமானது; அடுத்த முறை நீங்கள் பைபிளை வாசிக்கையில் இன்னும் கூடுதலான வசனங்களைத் தேர்ந்தெடுங்கள்.
[பக்கம் 15-ன் படங்கள்]
நீங்கள் பைபிளை வாசிக்கிறீர்களா அல்லது அதன் ஆடியோகேசட் பதிவுகளைத் தினந்தோறும் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா?