பொறாமை அதைப்பற்றி நீங்கள் எதை அறிந்துகொள்ள வேண்டும்
பொறாமை என்றால் என்ன? ஒருவரைக் கவலையாக, வருத்தமாக, அல்லது கோபமாக உணரவைக்கும் ஒரு தீவிர உணர்ச்சியாக அது இருக்கிறது. ஒரு வேலையில் நம்மைவிட வேறொருவர் அதிக வெற்றிகரமாகத் தோன்றும்போது நாம் பொறாமையை அனுபவிக்கக்கூடும். அல்லது ஒரு நண்பர் நம்மைக் காட்டிலும் அதிக பாராட்டைப் பெற்றால் நாம் பொறாமையுள்ளவர்களாக உணரக்கூடும். ஆனால் பொறாமை ஏன் கேடுள்ளது?
பொறாமையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தங்களுக்கு போட்டியாளராகும் சாத்தியமுள்ளவர்களை சந்தேகிக்கும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார்கள். பண்டைய இஸ்ரவேலைச் சேர்ந்த அரசனாகிய சவுல் இதற்கொரு உதாரணமாக இருந்தார். முதலில் அவர் தன்னுடைய ஆயுததாரியான தாவீதை நேசித்தார்; படைக்குத் தலைவராகவும்கூட அவரை உயர்த்தினார். (1 சாமுவேல் 16:21; 18:5) பின்னர் ஒருநாள் பின்வரும் வார்த்தைகளால் பெண்கள் தாவீதைப் புகழுவதை அரசனாகிய சவுல் கேட்டார்: “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்.” (1 சாமுவேல் 18:7) தான் தாவீதுடன் கொண்டிருந்த நல்ல உறவை இது பாதிக்கும்படி சவுல் அனுமதித்திருக்கக்கூடாது. என்றபோதிலும், அவருடைய உணர்ச்சி புண்பட்டது. “அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.”—1 சாமுவேல் 18:9.
பொறாமையுள்ள நபர் ஒருவர் மற்றவருக்குக் கேடு நினைக்காமல் இருக்கக்கூடும். அவர் அல்லது அவள், ஒரு கூட்டாளியின் வெற்றியை அறவே வெறுத்து, அதே பண்புகள் அல்லது சூழ்நிலைகள் தனக்கிருக்கும்படி ஏக்கம் கொண்டிருக்கக்கூடும். மறுபட்சத்தில், பொறாமையின் குறிப்பிடத்தக்க ஓர் எதிர்மறையான தன்மையை ஒருவர் கொண்டிருந்தால், தனக்கு பொறாமையை எழுப்பும் நபருக்கு நன்மை விளையாதபடி இரகசியமாக தடுத்துவைக்கக்கூடும் அல்லது அந்த நபருக்கு கேடு ஏற்படவேண்டும் என்று விரும்பக்கூடும். சில நேரங்களில், பொறாமையுள்ள நபர் ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை இரகசியமாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. அரசனாகிய சவுல் தாவீதைக் கொலைசெய்ய முயன்றதுபோல மற்றொருவருக்கு வெளிப்படையாகவே கெடுதல் செய்யும்படி அவர் தூண்டுவிக்கப்படக்கூடும். ஒரு தடவைக்கும் மேலாக, சவுல் ஈட்டியைத் தூக்கி எறிந்து ‘தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போட’ முயன்றார்.—1 சாமுவேல் 18:11; 19:10.
‘ஆனால் நான் பொறாமையுள்ள ஆள் அல்ல’ என்று நீங்கள் சொல்லக்கூடும். பொறாமை உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். என்றாலும், ஓரளவுக்கு நாம் எல்லாரும் பொறாமையால்—நம் சொந்த பொறாமையுள்ள உணர்ச்சிகளாலும் மற்றவர்களுடையதாலும்—பாதிக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களில் பொறாமை இருப்பதை நாம் சீக்கிரமாகக் கண்டுபிடிக்கிறபோதிலும், அதை நம்மில் நாம் அவ்வளவு சீக்கிரம் காணாமல் இருக்கக்கூடும்.
“பொறாமைகொள்ளுவதற்கான இயல்பு”
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பாவமுள்ள மனித இயல்பைப் பற்றிய பதிவு, பெரும்பாலும் பொறாமையின் பாவங்களைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. காயீன் மற்றும் ஆபேலின் பதிவு உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆதாம் ஏவாளின் இந்த மகன்கள் இருவரும் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தினர். ஆபேல் ஒரு விசுவாசமுள்ள மனிதனாக இருந்ததால் அவ்வாறு செய்தார். (எபிரெயர் 11:4) பூமியைக் குறித்து தம்முடைய மகத்தான நோக்கத்தை கடவுள் நிறைவேற்றுவதற்கான திறமையில் அவர் விசுவாசம் வைத்திருந்தார். (ஆதியாகமம் 1:28; 3:15; எபிரெயர் 11:1) வரப்போகும் பூமிக்குரிய பரதீஸில் உண்மையுள்ள மனிதர்களுக்குக் கடவுள் ஜீவனைப் பலனாக அளிப்பார் என்றும் ஆபேல் நம்பினார். (எபிரெயர் 11:6) இதன் காரணமாக, ஆபேலின் பலியின்மீது கடவுள் தம்முடைய விருப்பத்தைக் காண்பித்தார். காயீன் உண்மையிலேயே தன் சகோதரனை நேசித்திருந்தால், கடவுள் ஆபேலை ஆசீர்வதித்ததைக் கண்டு அவன் மகிழ்ந்திருப்பான். அதற்குப் பதிலாக, காயீனுக்கு ‘மிகவும் எரிச்சல் உண்டானது.’—ஆதியாகமம் 4:5.
காயீனும் ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, கடவுள் அவனை நன்மை செய்யும்படி தூண்டினார். பின்னர் கடவுள் இவ்வாறு எச்சரித்தார்: “நீ நன்மைசெய்ய முற்படவில்லை என்றால் பாவம் வாசலில் வந்து பதுங்கி நின்றுகொண்டிருக்கிறது, அதன் தீவிர ஆசை உன்மேல் இருக்கும்; நீயோ, உன்னுடைய பங்கில், அதைக் கட்டுப்படுத்தி அடக்கிக் கொள்வாயா?” (ஆதியாகமம் 4:7, NW) நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? ஆனால் நீ நன்மைசெய்ய முற்படவில்லை என்றால் பாவம் வாசலில் வந்து பதுங்கி நின்றுகொண்டிருக்கிறது, அதன் தீவிர ஆசை உன்மேல் இருக்கும்; நீயோ, உன்னுடைய பங்கில், அதைக் கட்டுப்படுத்தி அடக்கிக் கொள்வாயா? (ஆதியாகமம் 4:7) காயீன் தன்னுடைய பொறாமையுள்ள கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்பது வருத்தகரமானது. அது நீதிமானாகிய தன் சகோதரனைக் கொல்லுவதற்கு அவனை வழிநடத்தியது. (1 யோவான் 3:12) அப்போதிருந்து, சண்டைகளும் போர்களும் கோடிக்கணக்கான உயிர்களைக் கொள்ளைகொண்டிருக்கின்றன. “போருக்கான அடிப்படை காரணங்களில் சில அதிகப்படியான இடத்திற்கான ஆவல், அதிக செல்வத்திற்கான ஆவல், அதிக அதிகாரத்திற்கான ஆவல், அல்லது பாதுகாப்பிற்கான ஆவல் ஆகியவையாக இருக்கக்கூடும்” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது.
உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்த உலகின் போர்களில் பங்கெடுப்பதில்லை. (யோவான் 17:16) என்றாலும், கவலைக்குரியவிதத்தில், தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலசமயங்களில் வாய்ச்சண்டைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். சபையிலுள்ள மற்ற அங்கத்தினர் இதில் உட்பட்டார்களென்றால் இவை கேடு விளைவிக்கும் சொற்போர்களாக மாறலாம். “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது”? என்று பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபு உடன் விசுவாசிகளிடம் கேட்டார். (யாக்கோபு 4:1) அவர்களுடைய பொருள்சம்பந்தமான பேராசையை சுட்டிக்காட்டி அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பவராய் அவர், “பேராசை கொள்கிறீர்கள்,” அல்லது “பொறாமை” உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்று மேலுமாக சொன்னார். (யாக்கோபு 4:2, அடிக்குறிப்பு, NW) ஆம், பொருளாசையானது பேராசை கொள்வதற்கும் நம்மைவிட நல்ல சூழ்நிலைகளில் இருப்பதாகத் தோன்றுகிறவர்களைக் குறித்து பொறாமை கொள்ளவும் வழிநடத்தலாம். இந்தக் காரணத்துக்காக, மனிதனின் “பொறாமைகொள்ளுவதற்கான இயல்பு”க்கு எதிராக யாக்கோபு எச்சரித்தார்.—யாக்கோபு 4:5, NW. அல்லது “நமக்குள் குடிகொண்டிருக்கும் ஆவி பொறாமைகொள்ளுவதற்கான இயல்புடனேயே ஏங்கிக்கொண்டிருக்கிறது” என்று வேதவசனம் வீணாகச் சொல்வதாகவா உங்களுக்குத் தோன்றுகிறது?—யாக்கோபு 4:5, NW.
பொறாமையின் காரணங்களை ஆராய்வதில் என்ன நன்மை இருக்கிறது? இது நாம் நேர்மையாக இருப்பதற்கும் மற்றவர்களுடன் மேம்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கும் உதவலாம். மேலும் அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களாகவும், சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், மன்னிக்கிறவர்களாகவும் இருப்பதற்கு இது உதவி செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்சிப்பைப் பெறுவதற்கான கடவுளின் அன்பான ஏற்பாடும் மனிதனின் பாவமுள்ள மனச்சாய்வுகளிலிருந்து விடுவிப்பும் மனிதனுக்கு எவ்வளவாகத் தேவைப்படுகிறது என்பதை அது சிறப்பித்துக் காட்டுகிறது.—ரோமர் 7:24, 25.
பாவமுள்ள பொறாமை இல்லாத ஓர் உலகம்
மனித நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், பாவமுள்ள பொறாமை இல்லாத ஓர் உலகம் சாத்தியமற்றதாகத் தோன்றக்கூடும். ராம் லான்டாவ் என்ற எழுத்தாசிரியர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “அநேக தலைமுறைகளில், தத்துவ அறிஞர்கள் . . . மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோரால் அந்தப் பொருளின்பேரில் சொல்லப்பட்ட ஞானத்தின் திரட்சி அனைத்தும் சேர்ந்தும், பொறாமையால் அலைக்கழிக்கப்பட்ட மனிதனுக்கு எவ்வித வழிநடத்துதலையும் அளிப்பதில்லை. . . . பொறாமையுள்ள ஒரு மனிதனை எந்த மருத்துவராவது எப்போதாவது குணப்படுத்தியதுண்டா?”
ஆனால் தேவபக்தியற்ற வைராக்கியம் அல்லது பொறாமையால் எவரும் இனி ஒருபோதும் தாக்கப்படாத ஒரு புதிய உலகில் பரிபூரண மனித வாழ்க்கையை அடையும் நம்பிக்கையை கடவுளுடைய வார்த்தை முன்வைக்கிறது. மேலுமாக, அப்படிப்பட்ட பொல்லாத குணங்களை வெளிக்காட்டும் மக்களால் அந்தப் புதிய உலகின் சமாதானம் சிதைக்கப்படாது.—கலாத்தியர் 5:19-21; 2 பேதுரு 3:13.
பொறாமை என்பது தவறானதாகவும் கேடுள்ளதாகவும் இருக்கையில், வைராக்கியம் அவ்வாறாக இல்லை. உண்மையில், பைபிள், யெகோவா ஒரு “எரிச்சலுள்ள தேவன்” என்று சொல்லும்போது, இருவிதமாகவும் மொழிபெயர்க்கப்படக்கூடிய ஒரு எபிரெய வார்த்தையை அது பயன்படுத்துகிறது. (யாத்திராகமம் 34:14) அதன் அர்த்தம் என்ன? சரியான வைராக்கியத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது? அதேநேரத்தில், தவறான பொறாமையை ஒருவர் எவ்வாறு கட்டுப்படுத்தி அடக்க முடியும்? அடுத்துவரும் கட்டுரைகளைப் பாருங்கள்.