யெகோவாவின் தூய வணக்கத்திற்கான வைராக்கியம்
“வைராக்கியமுள்ளவர் என்ற பெயரையுடைய யெகோவா, வைராக்கியமுள்ள கடவுளாய் இருக்கிறார்.”—யாத்திராகமம் 34:14, NW.
1. கடவுளுடைய பிரதான குணம் என்ன, இது அவருடைய வைராக்கியத்தோடு எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது?
யெகோவா தம்மைத்தாமே ‘வைராக்கியமுள்ள கடவுள்’ என்று விவரிக்கிறார். “வைராக்கியம்/பொறாமை” என்ற பைபிள் வார்த்தை எதிர்மறையான உள் அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனினும், கடவுளுடைய பிரதான குணம் அன்புதான். (1 யோவான் 4:8) ஆகவே அவருடைய பாகத்தில் வைராக்கிய உணர்வு என்பது மனிதகுலத்தின் நலனிற்காகவே இருக்கவேண்டும். சர்வலோகத்தின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் கடவுளின் வைராக்கியம் எவ்வளவு அவசியம் என்பதை உண்மையில் நாம் பார்க்கப்போகிறோம்.
2. “வைராக்கியம்” என்பதற்குரிய எபிரெய வார்த்தைகளை மொழிபெயர்க்கும் சில வழிகள் யாவை?
2 வைராக்கியம் என்ற பதத்தின் தொடர்பான எபிரெய வார்த்தைகள் எபிரெய வேத எழுத்துக்களில் 80-க்கும் மேற்பட்ட தடவைகள் வருகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி தடவைகள் யெகோவா தேவனைப் பற்றியதாக இருக்கின்றன. ஜி. ஹெச். லிவிங்ஸ்டன் விளக்குகிறார், “கடவுளுக்கு பொருத்தப்படும்பொழுது, வைராக்கியம் என்ற எண்ணம் ஒரு விபரீதமான உணர்வைக் குறிக்கிறதில்லை. ஆனால், யெகோவாவின் வணக்கத்தில் தனிப்பட்டதன்மையை வற்புறுத்துவதை குறிக்கிறது.” (தி பென்டடூக் இன் இட்ஸ் கல்ச்சரல் என்விரன்மன்ட்) இதனால்தான், புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) சில சமயங்களில் இந்த எபிரெய பெயர்ச்சொல்லை “தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துதல்” என்று மொழிபெயர்க்கிறது. (எசேக்கியேல் 5:13, NW) மற்ற பொருத்தமான மொழிபெயர்ப்புகள் “கடும் ஆவல்” அல்லது “ஆர்வம்” என்பவையே.—சங்கீதம் 79:5; ஏசாயா 9:7; NW.
3. வைராக்கியம் எந்த வழிகளில் நல்ல நோக்கத்தை சில சமயங்களில் சேவிக்கக்கூடும்?
3 மனிதன் வைராக்கிய உணர்வுகொள்ளும் திறமையுடன் படைக்கப்பட்டான், ஆனால் பாவத்தில் மனிதகுலம் வீழ்ந்துபோனது வைராக்கியத்தின் நெறிபிறழ்வுக்கு வழிநடத்தியிருக்கிறது. ஆனாலும் மனிதனின் வைராக்கிய உணர்வு நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம். ஒருவர் தவறான தூண்டுதல்களிலிருந்து அன்பான ஒருவரைப் பாதுகாக்கும்படி அது தூண்டக்கூடும். மேலும், யெகோவாவின் மற்றும் அவருடைய வணக்கத்தின் சார்பில் மனிதர்கள் சரியாகவே வைராக்கியத்தைக் காண்பிக்கக்கூடும். (1 இராஜாக்கள் 19:10) யெகோவா சார்பில் அப்படிப்பட்ட வைராக்கியத்துக்கு சரியான புரிந்துகொள்ளுதலைக் காண்பிப்பதற்காக, தம்முடன் ‘எந்தப் போட்டியையும் பொறுத்துக்கொள்ளாதிருத்தல்’ என்று இந்த எபிரெய பெயர்ச்சொல் மொழிபெயர்க்கப்படலாம்.—2 இராஜாக்கள் 10:16, NW.
பொன் கன்றுக்குட்டி
4. இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் நீதியான வைராக்கியத்தை உட்படுத்திய எந்தச் சட்டம் பிரதானமானதாய் இருந்தது?
4 சீனாய் மலையில் இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றபிறகு நடந்த காரியம் நீதியான வைராக்கியத்திற்கு மாதிரியாக இருக்கிறது. அவர்கள் மனிதன் செய்த கடவுட்களை வணங்கக்கூடாது என்று திரும்பத்திரும்ப எச்சரிக்கப்பட்டிருந்தனர். யெகோவா அவர்களிடம் சொன்னார்: “உங்கள் கடவுளாகிய நான், யெகோவா, தனிப்பட்ட பக்தியை முற்றிலும் எதிர்பார்க்கிறேன் [அல்லது, “வைராக்கியமுள்ள (ஆர்வமிக்க) கடவுளாயிருக்கிறேன்; தம்முடன் போட்டியிடுவதைப் பொறுக்காத கடவுளாயிருக்கிறேன்”].” (யாத்திராகமம் 20:5, NW அடிக்குறிப்பு; ஒப்பிடுக: யாத்திராகமம் 20:22, 23; 22:20; 23:13, 24, 32, 33.) இஸ்ரவேலர்களை ஆசீர்வதித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுவருவதாக யெகோவா வாக்குக்கொடுத்து, அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார். (யாத்திராகமம் 23:22, 31) “அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்று சொன்னார்கள்.—யாத்திராகமம் 24:7.
5, 6. (அ) சீனாய் மலையில் பாளயமிறங்கியிருக்கையில், இஸ்ரவேலர்கள் எவ்வாறு பெரிய பாவத்தைச் செய்தார்கள்? (ஆ) யெகோவாவும் அவருடைய பற்றுமாறாத வணக்கத்தாரும் சீனாயில் நீதியான வைராக்கியத்தை எவ்வாறு காண்பித்தனர்?
5 ஆனாலும், இஸ்ரவேலர்கள் சீக்கிரத்தில் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தனர். சீனாய் மலையின் அடிவாரத்தில் இன்னும் பாளயம் இறங்கியிருந்தனர். மோசே கூடுதலான அறிவுரைகளைப் பெறுவதற்காக பல நாட்கள் மலையில் இருந்தார். மக்கள் தங்களுக்கு ஒரு தெய்வத்தை உண்டாக்கவேண்டும் என்று மோசேயின் சகோதரர் ஆரோனை வற்புறுத்தினர். மக்கள் கொடுத்த பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை ஆரோன் வடிவமைத்து உருவாக்கினார். இந்த விக்கிரகம் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்ததாக சொல்லப்பட்டது. (சங்கீதம் 106:20) அடுத்த நாள் அவர்கள் பலிகளைக் கொடுத்து, ‘அதைப் பணிந்துகொண்டனர்.’ பின்னர் அவர்கள் ‘ஆரவாரம் பண்ணிக்கொண்டிருந்தனர்.’—யாத்திராகமம் 32:1, 4, 6, 8, 17-19.
6 இஸ்ரவேலர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது மோசே மலையிலிருந்து கீழே வந்தார். இந்த அவமானப்படத்தக்க நடத்தையைப் பார்த்தபோது, அவர் இவ்வாறு அழைப்புக்கொடுத்தார்: “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?” (யாத்திராகமம் 32:25, 26) மோசேயின் பக்கமாக லேவியின் புத்திரர் கூடிவந்தார்கள். அவர்களிடம் பட்டயங்களை எடுத்து விக்கிரக வணக்கம் செய்யும் கலகக்காரர்களைக் கொலைசெய்யும்படி அவர் கட்டளை கொடுத்தார். கடவுளுடைய தூய வணக்கத்திற்கான தங்கள் வைராக்கியத்தைக் காண்பிப்பவர்களாக லேவியர்கள், பாவம்செய்த சுமார் 3,000 சகோதரர்களைக் கொன்றுபோட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள்மீது ஒரு வாதையை அனுப்புவதன்மூலம் யெகோவா இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். (யாத்திராகமம் 32:28, 35) பின்பு, கடவுள் அந்தக் கட்டளையை மீண்டும் சொன்னார்: “வேறொரு கடவுளைப் பணிந்துகொள்ளாதே, ஏனென்றால், வைராக்கியமுள்ளவர் என்ற பெயரையுடைய யெகோவா, வைராக்கியமுள்ள கடவுளாய் இருக்கிறார்.”—யாத்திராகமம் 34:14, NW.
பாகால்பேயோர்
7, 8. (அ) பாகால்பேயோர் சம்பந்தமாக மகா கொடிய விக்கிரகாராதனைக்குள் பல இஸ்ரவேலர்கள் எவ்வாறு விழுந்தனர்? (ஆ) யெகோவாவிடமிருந்து வந்த வாதை எப்படி ஒரு முடிவுக்கு வந்தது?
7 நாற்பது வருடங்களுக்குப் பின்பு, இஸ்ரவேல் தேசம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க இருந்தபோது, அழகிய மோவாபிய மற்றும் மீதியானிய பெண்கள், இஸ்ரவேலர்கள் பலரை வசீகரித்து வரவழைத்து தங்களுடைய உபசரிக்கும் தன்மையை அனுபவிக்கும்படி செய்தனர். பொய்க் கடவுட்களை வணங்குபவர்களோடு நெருங்கிய கூட்டுறவை இந்த மனிதர்கள் மறுத்திருக்கவேண்டும். (யாத்திராகமம் 34:12, 15) மாறாக, அவர்கள் ‘பலியிடப்படப்போகிற மாடுகள்போல’ ஓடினார்கள். அந்தப் பெண்களோடு வேசித்தனம் செய்து, பாகால்பேயோரைப் பணிந்துகொள்வதில் அவர்களோடு சேர்ந்துகொண்டனர்.—நீதிமொழிகள் 7:21, 22; எண்ணாகமம் 25:1-3.
8 இந்தக் கேவலமான பாலின வணக்கத்தில் ஈடுபட்டவர்களை கொன்றுபோடும்படி யெகோவா ஒரு வாதையை அனுப்பினார். குற்றம்செய்யாத இஸ்ரவேலர்கள் குற்றம்செய்த தங்கள் சகோதரர்களைக் கொன்றுபோடும்படியும் கடவுள் கட்டளையிட்டார். ஆணவத்தோடு மீறுதலைக் காண்பிக்கும்விதமாக, சிம்ரி என்ற பெயருடைய இஸ்ரவேலப் பிரபு ஒருவன், மீதியானிய இளவரசி ஒருத்தியை பாலுறவுகொள்வதற்காக தன் கூடாரத்திற்குள் கொண்டுவந்தான். இதைக் கண்டபோது, கடவுள் பயமுள்ள ஆசாரியன் பினெகாஸ் ஒழுக்கங்கெட்ட தம்பதியைக் குத்திக் கொலைசெய்தார். அப்போது வாதை நின்றது. கடவுள் அறிவித்தார்: “பினெகாஸ் . . . இஸ்ரவேலர்கள்மீது இருந்த என்னுடைய சீற்றத்தைத் திருப்பினான்; அவன் என்னை உந்துவித்த அதே வைராக்கியமுள்ள கோபத்தை அவர்கள் மத்தியில் காண்பித்தான், எனவே என் வைராக்கியத்தினால் இஸ்ரவேலர்களை அழிக்கவில்லை.” (எண்ணாகமம் 25:11, தி நியூ இங்லிஷ் பைபிள்) அழிவிலிருந்து தேசம் பாதுகாக்கப்பட்டாலும், 23,000 இஸ்ரவேலர்களாவது மரித்தனர். (1 கொரிந்தியர் 10:8) அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க நீண்டகால ஆவலோடு எதிர்பார்த்திருந்த நம்பிக்கையை இழந்தனர்.
எச்சரிப்பான பாடம்
9. யெகோவாவின் தூய வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பியாததன் காரணமாக இஸ்ரவேலர்களுக்கும் யூதாவிலுள்ளவர்களுக்கும் என்ன நேரிட்டது?
9 வருந்தத்தக்கவிதத்தில், இஸ்ரவேலர்கள் இந்தப் பாடங்களையெல்லாம் சீக்கிரத்தில் மறந்துவிட்டனர். அவர்கள் யெகோவாவின் தூய வணக்கத்திற்கு வைராக்கியமுள்ளவர்களாக நிரூபிக்கவில்லை. “செதுக்கப்பட்ட தங்கள் விக்கிரகங்களினால் வைராக்கியங்கொள்ள [கடவுளைத்] தூண்டிக்கொண்டிருந்தனர்.” (சங்கீதம் 78:58, NW) இதன் விளைவாக, பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேலர்களின் பத்துக் கோத்திரத்தார் அசீரியர்களால் அடிமைத்தனத்திற்கு எடுத்துச்செல்லப்பட யெகோவா அனுமதித்தார். தலைநகரமாகிய எருசலேம் பொ.ச.மு. 607-ல் அழிக்கப்பட்டபோது, மற்ற இரண்டு கோத்திர யூதா ராஜ்யமும் இதைப்போன்ற ஒரு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது. அநேகர் கொல்லப்பட்டார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துச்செல்லப்பட்டார்கள். இன்றுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என்னே ஓர் எச்சரிப்பூட்டும் உதாரணமாக இருக்கிறது!—1 கொரிந்தியர் 10:6, 11.
10. மனந்திரும்பாத விக்கிரகாராதனைக்காரருக்கு என்ன நடக்கும்?
10 பூமியின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு—சுமார் 190 கோடி—தற்போது கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக் கொள்கின்றனர். (1994 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர்) இவர்களில் பலர், தங்கள் வணக்கத்தில் உருவங்களை, சொரூபங்களை, சிலுவைகளைப் பயன்படுத்துகிற சர்ச்சுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். யெகோவா, தங்களுடைய விக்கிரக ஆராதனையின்மூலம் தம்மை வைராக்கியமடையும்படி தூண்டிய தம்முடைய மக்களை தண்டிக்காமல் விட்டுவிடவில்லை. பருப்பொருளாலான உருவங்களைக் கொண்டு வணங்கிவரும் பெயர்க் கிறிஸ்தவர்களையும் விட்டுவிடுவதில்லை. “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 4:24) மேலுமாக, பைபிள் விக்கிரக ஆராதனைக்கு எதிராக எச்சரிப்பு கொடுக்கிறது. (1 யோவான் 5:21) மனந்திரும்பாத விக்கிரகாராதனைக்காரர், கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கத் தகுதியற்றவர்கள் பக்கம் இருக்கிறார்கள்.—கலாத்தியர் 5:20, 21.
11. கிறிஸ்தவர் ஒருவர் சிலையை வணங்காமலேயே விக்கிரகாராதனைக் குற்றத்திற்குள் எப்படி ஆளாகக்கூடும், அப்படிப்பட்ட விக்கிரக வணக்கத்தைத் தவிர்ப்பதற்கு எது உதவிசெய்யும்? (எபேசியர் 5:5)
11 உண்மைக் கிறிஸ்தவர் ஒருவர் ஒரு விக்கிரகத்தை ஒருபோதும் வணங்காவிட்டாலும், கடவுள் விக்கிரகாராதனைக்குரியதாக, அசுத்தமாக, பாவமாகக் கருதும் எதையுமே அவர் தவிர்க்கவேண்டும். உதாரணமாக, பைபிள் எச்சரிக்கிறது: “விக்கிரகாராதனையான வேசித்தனம், அசுத்தம், காமப்பசி, துர் இச்சை, பொருளாசை ஆகிய இவற்றைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை மரித்துப் போகச்செய்யுங்கள். இவற்றின் பொருட்டே தேவகோபாக்கினை வருகிறது.” (கொலோசெயர் 3:5, 6, NW) இந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல், ஒழுக்கக்கேடான நடத்தையை வெறுத்து ஒதுக்குவதை அவசியப்படுத்துகிறது. இது அசுத்தமான காமப்பசியைத் தூண்டிவிடும் பொழுதுபோக்குகளை தவிர்க்கும்படி தேவைப்படுத்துகிறது. அப்படிப்பட்ட காமப்பசியை திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய தூய வணக்கத்திற்கு வைராக்கியமாய் இருக்கிறார்கள்.
தேவ வைராக்கியத்தின் பிற்கால மாதிரிகள்
12, 13. கடவுளுடைய தூய வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பிப்பதில் இயேசு எவ்வாறு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார்?
12 கடவுளுடைய தூய வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பித்த மனிதரில் மிகச் சிறந்த முன்மாதிரி, இயேசு கிறிஸ்து ஆவார். அவர் தம்முடைய ஊழியத்தின் முதல் ஆண்டில், ஆலயத்தின் பிராகாரங்களில் வியாபாரம் செய்துவந்த பேராசைமிக்க வியாபாரிகளைக் கண்டார். வெளியூரிலிருந்து விஜயம் செய்யும் யூதர்கள் தங்கள் அயல்நாட்டு பணத்தை, ஆலய வரியாக ஏற்றுக்கொள்ளப்படும் பணமாக மாற்றுவதற்கு, பணம் மாற்றுபவர்களுடைய சேவை ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாம். கடவுளுடைய சட்டம் அவசியப்படுத்தின பலிகளைக் கொடுப்பதற்குத் தேவையான பிராணிகளையும் பறவைகளையும்கூட அவர்கள் வாங்கவேண்டியிருந்தது. அப்படிப்பட்ட வணிக நடவடிக்கைகள் ஆலய பிராகாரங்களுக்குப் புறம்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னும் மோசமாக, வியாபாரிகள் தங்களுடைய சகோதரர்களின் மதத் தேவைகளை மிதமிஞ்சிய சாதகமாகப் பயன்படுத்தி மட்டுக்குமீறிய விலைக்கு விற்றார்கள். கடவுளுடைய தூய வணக்கத்திற்கான பக்தி வைராக்கியத்தினால் ஆட்கொள்ளப்பட்டவராக, இயேசு செம்மறியாடுகளையும் கால்நடைகளையும் துரத்திவிட ஒரு சாட்டையைப் பயன்படுத்தினார். மேலுமாகக் காசுக்காரர்களுடைய மேசைகளைக் கவிழ்த்து, அவர் இவ்வாறு சொன்னார்: “என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்.” (யோவான் 2:14-16) இவ்வாறு சங்கீதம் 69:9-ன் வார்த்தைகளை இயேசு நிறைவேற்றினார்: “உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் [அல்லது “வைராக்கியம்,” பயிங்டன்] என்னைப் பட்சித்தது.”
13 மூன்று வருடங்களுக்குப் பின், பேராசைமிக்க வியாபாரிகள் மீண்டும் யெகோவாவின் ஆலயத்தில் வணிகம்செய்ததை இயேசு கண்டார். அவர் இரண்டாவது முறையும் சுத்தப்படுத்துவாரோ? அவர் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இருந்தது போலவே கடவுளுடைய தூய வணக்கத்திற்கான அவருடைய பக்திவைராக்கியம் திடமானதாக இருந்தது. அவர் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தினார். தம்முடைய செயல்களுக்கு அதிக திடமான காரணத்தையும்கூட அவர் கொடுத்தார்: “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்.” (மாற்கு 11:17) தேவ வைராக்கியத்தைக் காண்பிப்பதில் உறுதியாக இருப்பதற்கு என்னே ஓர் முன்மாதிரி!
14. தூய வணக்கத்துக்கான இயேசுவின் வைராக்கியம் நம்மை எப்படிப் பாதிக்கவேண்டும்?
14 இப்போது மகிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருக்கும் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ஆளுமை மாறிவிடவில்லை. (எபிரெயர் 13:8) அவர் பூமியிலிருந்தபோது இருந்ததுபோலவே தூய வணக்கத்திற்கு வைராக்கியமிக்கவராக இந்த 20-ம் நூற்றாண்டிலும் இருக்கிறார். இதை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏழு சபைகளுக்கான இயேசுவின் செய்திகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இவை, இப்போது ‘கர்த்தருடைய நாளில்’ பெரும்பாலான நிறைவேற்றத்தைக் கொண்டுள்ளன. (வெளிப்படுத்துதல் 1:10; 2:1–3:22) ‘அக்கினிஜுவாலையைப் போலிருந்த கண்களையுடையவராக’ மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். (வெளிப்படுத்துதல் 1:14) இது கிறிஸ்து, சபைகள் சுத்தமாகவும் யெகோவாவின் சேவையைச் செய்ய தகுதியான நிலையிலும் இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்துவதற்கு அவற்றைச் சோதனையிடும்போது அவருடைய பார்வையில் படாமல் எதுவும் தப்புகிறதில்லை என்பதைக் குறிக்கிறது. இன்றைய கால கிறிஸ்தவர்கள் இரண்டு எஜமான்களை—கடவுளையும் ஐசுவரியத்தையும்—சேவிக்க முயற்சிசெய்வதற்கு எதிராக இயேசுவின் எச்சரிக்கையை மனதில் வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. (மத்தேயு 6:24) லவோதிக்கேயா சபையின் பொருளாசைமிக்க அங்கத்தினரிடம் இயேசு சொன்னார்: “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். . . . ஆகையால் ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.” (வெளிப்படுத்துதல் 3:14-19) நியமிக்கப்பட்ட மூப்பர்கள் வார்த்தையாலும் முன்மாதிரியாலும் தங்கள் உடன் விசுவாசிகள் பொருளாசை என்ற கண்ணியைத் தவிர்ப்பதற்கு உதவிசெய்யவேண்டும். மூப்பர்கள் பாலின மனச்சாய்வுமிக்க இந்த உலகத்தின் ஒழுக்கநெறி சீரழிவிலிருந்து மந்தையைப் பாதுகாக்கவும் வேண்டும்; மேலுமாக கடவுளுடைய ஜனங்கள் சபையில் எந்தவித யேசபேல் செல்வாக்கையும் பொறுக்காதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.—எபிரெயர் 12:14, 15; வெளிப்படுத்துதல் 2:20.
15. அப்போஸ்தலன் பவுல் யெகோவாவின் வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பிப்பதில் இயேசுவை எப்படிப் பின்பற்றினார்?
15 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவராக இருந்தார். ஆவிக்குரிய வகையில் தீங்குவிளைவிக்கக்கூடிய செல்வாக்குகளிலிருந்து புதியதாக முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு, அவர் சொன்னார்: “உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:2) இதற்கு முன்பாக, தீங்குவிளைவிக்கும் செல்வாக்கைக் கொண்டிருந்த மனந்திரும்பாத வேசித்தனக்காரர் ஒருவரை சபை நீக்கம்செய்யும்படி இதே சபைக்கு அறிவுரைகூறும்படி தூய வணக்கத்திற்கான பவுலின் வைராக்கியம் அவரை உந்துவித்தது. அந்தச் சமயத்தில் ஆவியினால் ஏவப்பட்டு கொடுக்கப்பட்ட அறிவுரைகள், யெகோவாவின் சாட்சிகளுடைய 75,500-க்கும் மேற்பட்ட சபைகளைச் சுத்தமாக வைத்திருக்க கடினமாக முயற்சிசெய்யும் இன்றுள்ள மூப்பர்களுக்கு அதிக உதவியாக இருக்கின்றன.—1 கொரிந்தியர் 5:1, 9-13.
தேவ வைராக்கியம் அவருடைய மக்களுக்குப் பலன்தருகிறது
16, 17. (அ) கடவுள் பூர்வீக யூதாவைத் தண்டித்தபோது, என்ன மனப்பான்மையை தேசங்கள் காண்பித்தன? (ஆ) யூதாவின் 70 வருட சிறையிருப்புக்குப் பின்பு, எருசலேமின்மீது யெகோவா தம் வைராக்கியத்தை எவ்வாறு காண்பித்தார்?
16 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்படி அனுமதிப்பதன்மூலம் கடவுள் யூதாவின் மக்களைத் தண்டித்தபோது, அவர்கள் கேலிசெய்யப்பட்டார்கள். (சங்கீதம் 137:3) பொறாமைமிக்க வெறுப்புடன் ஏதோமியர்கள், கடவுளுடைய மக்களின்மீது துன்பத்தைக் கொண்டுவருவதில் பாபிலோனியர்களுக்கு உதவியும்கூட செய்தனர். யெகோவா இதைக் கவனித்தார். (எசேக்கியேல் 35:11; 36:15) தப்பிப்பிழைத்தவர்கள் சிறையிருப்பில் மனந்திரும்பினர். 70 வருடங்கள் கழித்து யெகோவா அவர்களைத் தங்கள் தேசத்திற்கு மீண்டும் கொண்டுவந்தார்.
17 ஆரம்பத்தில், யூதாவின் மக்கள் படுமோசமான நிலையில் இருந்தார்கள். எருசலேம் நகரமும் அதன் ஆலயமும் சிதைவுற்றிருந்தது. ஆனால் அக்கம்பக்கத்து நாடுகள் ஆலயத்தைக் கட்டுகிற அனைத்து முயற்சிகளையும் எதிர்த்தனர். (எஸ்றா 4:4, 23, 24) இதைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார்? ஏவப்பட்ட பதிவு சொல்கிறது: “சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரியா 1:14-16) இந்த வாக்குத்தத்தத்திற்கு இசைவாக, எருசலேம் ஆலயமும் நகரமும் வெற்றிகரமாகத் திரும்பக் கட்டப்பட்டன.
18. முதல் உலகப் போரின்போது உண்மைக் கிறிஸ்தவர்கள் எதை அனுபவித்தனர்?
18 உண்மைக் கிறிஸ்தவ சபை 20-ம் நூற்றாண்டில் இதே போன்ற அனுபவத்தைக் கொண்டிருந்தது. முதல் உலகப் போரின்போது, யெகோவா தம்முடைய மக்களைச் சிட்சித்தார்; ஏனென்றால் அவர்கள் அந்த உலகப்பிரகாரமான சண்டையில் கண்டிப்பான நடுநிலையைக் காத்துக்கொள்ளவில்லை. (யோவான் 17:16) அரசாங்க அதிகாரங்கள் அவர்களை ஒடுக்கும்படி கடவுள் அனுமதித்தார், கிறிஸ்தவமண்டல மதகுருக்கள் இந்தத் துன்புறுத்தலைக் குறித்து சந்தோஷப்பட்டனர். உண்மையில் பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தடை கொண்டுவருவதற்கு அரசியல்வாதிகளைத் தூண்டிவிடுவதில் மதகுருக்கள் முன்னின்று செயல்பட்டனர்.—வெளிப்படுத்துதல் 11:7, 10.
19. யெகோவா 1919-லிருந்து தம் வணக்கத்திற்கான வைராக்கியத்தை எவ்வாறு காண்பித்துவருகிறார்?
19 இருந்தாலும், யெகோவா தம்முடைய வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பித்தார், போர் முடிந்துபோன 1919-ம் வருடத்தில் மனந்திரும்பின தம் மக்களை தம்முடைய தயவுக்கு மீண்டும் கொண்டுவந்தார். (வெளிப்படுத்துதல் 11:11, 12) இதன் விளைவாக, 1918-ல் 4,000-க்கும் குறைவானவர்களாக இருந்த யெகோவாவைத் துதிப்போர், இப்போது 50 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்திருக்கின்றனர். (ஏசாயா 60:22) தூய வணக்கத்திற்கான யெகோவாவின் வைராக்கியம் மனதில் பதியவைக்கத்தக்க விதத்தில் சீக்கிரத்தில் வெளிக்காட்டப்படும்.
கடவுளுடைய வைராக்கியத்தின் எதிர்கால செயல்கள்
20. கடவுள் தூய வணக்கத்திற்கான தம் வைராக்கியத்தைக் காண்பிப்பதற்கு சீக்கிரத்தில் என்ன செய்வார்?
20 பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகள் யெகோவாவைக் கோபமூட்டின விசுவாசதுரோக யூதர்களின் போக்கைப் பின்பற்றின. (எசேக்கியேல் 8:3, 17, 18) ஐக்கிய நாடுகளின் அங்கத்தினர்களுடைய இருதயங்களில் தீர்க்கமான சிந்தனை ஒன்றை வைப்பதன்மூலம் யெகோவா தேவன் சீக்கிரமாக செயல்படுவார். இது கிறிஸ்தவமண்டலத்தையும் பொய் மதத்தின் மற்ற பாகங்களையும் பாழாக்கும்படிசெய்ய இந்த அரசாங்க அதிகாரங்களைத் தூண்டும். (வெளிப்படுத்துதல் 17:16, 17) கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் அந்தப் பயங்கரமான நிறைவேற்றத்தை தூய வணக்கத்தார்கள் தப்பிப்பிழைப்பார்கள். அவர்கள் பின்வருமாறு சொல்கிற பரலோக சிருஷ்டிகளின் வார்த்தைகளுக்குப் பிரதிபலிப்பர்: “அல்லேலூயா, . . . தன் வேசித்தனத்தினால் [தன்னுடைய பொய்ப் போதகங்களினாலும் ஊழல்நிறைந்த அரசியலை ஆதரிப்பதாலும்] பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு [பொய் மதத்துக்கு] அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே.”—வெளிப்படுத்துதல் 19:1, 2.
21. (அ) பொய் மதம் அழிக்கப்பட்டபின்பு, சாத்தானும் அவனுடைய ஒழுங்குமுறையும் என்ன செய்யும்? (ஆ) கடவுள் எவ்வாறு பதில்செய்வார்?
21 பொய் மத உலகப் பேரரசு அழிக்கப்பட்ட பின்பு என்ன நடக்கும்? யெகோவாவின் மக்கள்மீது ஓர் உலகளாவிய தாக்குதலைத் திட்டமிட, அரசாங்க அதிகாரங்களைச் சாத்தான் தூண்டுவான். பூமியில் எங்கும் உண்மை வணக்கம் இராதபடி நீக்கிப்போட சாத்தான் செய்யும் இந்த முயற்சிக்கு உண்மைக் கடவுள் எப்படிப் பிரதிபலிப்பார்? எசேக்கியேல் 38:19-23 நமக்குச் சொல்கிறது: “என் எரிச்சலினாலும் [அல்லது, வைராக்கியத்தினாலும்] என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். . . . கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே [சாத்தானோடே] வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.”—இவற்றையும் காண்க: செப்பனியா 1:18; 3:8.
22. யெகோவாவின் தூய வணக்கத்திற்காக வைராக்கியமாய் இருக்கிறோம் என்று நாம் எவ்வாறு காட்டலாம்?
22 சர்வலோகப் பேரரசர் தம் உண்மை வணக்கத்தாரை வைராக்கியத்தோடு கவனித்துக்கொள்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிப்பதாய் இருக்கிறது! அவருடைய தகுதியற்ற தயவிற்கு ஆழமான போற்றுதல் காரணமாக, யெகோவா தேவனின் தூய வணக்கத்தைக் குறித்து வைராக்கியத்தோடு செயல்படுவோமாக. ஆர்வத்தோடு நாம் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து, யெகோவா தம்முடைய மகத்தான பெயரை மகிமைப்படுத்தவும் பரிசுத்தப்படுத்தவும் போகும் அந்த மகத்தான நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருப்போமாக.—மத்தேயு 24:14.
தியானிப்பதற்கு குறிப்புகள்
◻ யெகோவாவுக்காக வைராக்கியமாய் இருத்தல் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ பூர்வீக இஸ்ரவேலர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ யெகோவாவுக்கு வைராக்கியமூட்டுவதை நாம் தவிர்ப்பது எப்படி?
◻ கடவுளும் கிறிஸ்துவும் எவ்வாறு தூய வணக்கத்திற்கு வைராக்கியத்தைக் காண்பித்திருக்கின்றனர்?
[பக்கம் 12-ன் பெட்டி]
அன்புக்குப் பொறாமையில்லை
பொறாமையைக் குறித்து, 19-ம் நூற்றாண்டு பைபிள் அறிஞராகிய ஆல்பர்ட் பார்ன்ஸ் இவ்வாறு எழுதினார்: “அது பொல்லாங்கின் மிகப் பொதுவான வெளிக்காட்டுதல்களில் ஒன்றாக இருக்கிறது; மனிதனின் படுமோசமான சீர்கெட்ட நிலையை அது தெளிவாகக் காட்டுகிறது.” அவர் மேலுமாகச் சொன்னார்: “எல்லா போர்கள், சச்சரவுகள், மற்றும் உலகப்பிரகாரமான திட்டங்கள் ஆகியவற்றின் மூல காரணம் வரையாக—தங்கள் மதத்தின் பெயரைக் கெடுத்து தங்களை உலகப்பிரகாரமான மனமுள்ளவர்களாக்குவதற்கு அதிகத்தைச் செய்கிற பெயர் கிறிஸ்தவர்களின் எல்லா திட்டங்கள் மற்றும் நோக்கங்களையும்கூட, அவற்றின் உண்மையான ஆரம்ப மூலம் வரையாக—தேடிக்காணக்கூடிய ஒருவர், பொறாமை அவற்றிற்கு எவ்வளவு பெரிய காரணமாக இருக்கிறது என்பதைக் காண ஆச்சரியப்படுவார். நம்மைவிட மற்றவர்கள் அதிக செழுமையாக இருக்கும்போது நாம் வேதனைப்படுகிறோம்; நமக்கு உரிமை இல்லையென்றாலும், மற்றவர்கள் கொண்டிருப்பதை நாம் கொண்டிருக்க விரும்புகிறோம்; இது அவர்கள் அதை அனுபவித்து மகிழ்வதைக் குறைப்பதற்காக, அல்லது அதை நாம்தாமே கொண்டிருப்பதற்காக, அல்லது பொதுவாக எண்ணப்பட்டிருப்பதைப் போன்று அவர்கள் அவ்வளவைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காண்பிப்பதற்காகத் தொடரப்படும் அநேக குற்றமுள்ள வழிமுறைகளுக்கு வழிநடத்துகிறது. . . . இவ்வாறாக நம் நெஞ்சிலுள்ள பொறாமையின் ஆவி திருப்தி செய்யப்படும்.”—ரோமர் 1:29; யாக்கோபு 4:5.
இதற்கு மாறாக, “பொறாமைப்படாத” அன்பைக் குறித்து பார்ன்ஸ் ஒரு அக்கறையூட்டும் கூற்றைக் கூறினார். (1 கொரிந்தியர் 13:4, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) அவர் எழுதினார்: “அன்பு மற்றவர்களிடம், அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியிடமாக பொறாமை கொள்வதில்லை; அது அவர்களுடைய நலனில் ஆனந்தமடையும்; . . . , அவர்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கப்படும்போது, அன்பால் செல்வாக்குச் செலுத்தப்பட்டவர்கள் . . . அதைக் குறைப்பது கிடையாது; பிறர் கொண்டிருக்கும் காரியங்களுக்காக அவர்களைச் சங்கடமாக உணரவைப்பதில்லை; அந்த மகிழ்ச்சியிலிருந்து அவர்கள் குறைவுபடுவதில்லை; தங்களுக்கு அவ்வளவு அதிகமான வாய்ப்புவசதிகள் இல்லையென அவர்கள் முணுமுணுக்கவோ அதிருப்தி அடையவோ மாட்டார்கள். . . . நாம் மற்றவர்களில் அன்புகூர்ந்தோமானால்—நாம் அவர்களுடைய மகிழ்ச்சியில் களிகூர்ந்தோமானால், நாம் அவர்களிடம் பொறாமைப்படக் கூடாது.”
[பக்கம் 10-ன் படம்]
பினெகாஸ் யெகோவாவின் தூய வணக்கத்துக்கு வைராக்கியமுள்ளவராக இருந்தார்