உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 9/15 பக். 14-19
  • அன்பு பொறாமையை வெல்கிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பு பொறாமையை வெல்கிறது
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிறிஸ்தவர்கள் மத்தியில் பொறாமை
  • சபைக்குள்ளே
  • குடும்பத்திற்குள்ளே
  • பொறாமையை அடக்கியாள உதாரணங்கள்
  • மிகச் சிறந்த உதாரணங்கள்
  • உங்களுடைய பொறாமையை அடக்கியாளுதல்
  • பொறாமை அதைப்பற்றி நீங்கள் எதை அறிந்துகொள்ள வேண்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவின் தூய வணக்கத்திற்கான வைராக்கியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • வைராக்கியமும் பொறாமையும் கிறிஸ்தவ நிலைநிற்கை என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • யோசேப்பு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 9/15 பக். 14-19

அன்பு பொறாமையை வெல்கிறது

“அன்புக்குப் பொறாமையில்லை.”—1 கொரிந்தியர் 13:4.

1, 2. (அ) அன்பைப் பற்றி இயேசு தம் சீஷர்களிடம் என்ன சொன்னார்? (ஆ) அன்போடும் அதே சமயத்தில் பொறாமையோடும் இருக்க முடியுமா, நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?

அன்பு, உண்மைக் கிறிஸ்தவத்தை குறித்துக்காட்டும் அடையாளம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 13:35) கிறிஸ்தவ உறவுகளில் அன்பு எப்படி செல்வாக்கு செலுத்தவேண்டும் என்பதை விளக்கும்படி அப்போஸ்தலன் பவுல் ஆவியினால் ஏவப்பட்டார். மற்ற விஷயங்களோடு அவர் இவ்வாறு எழுதினார்: “அன்புக்குப் பொறாமையில்லை.”—1 கொரிந்தியர் 13:4.

2 பவுல் அந்த வார்த்தைகளை எழுதினபோது, அவர் அப்படிப்பட்ட பொறாமை எவ்வளவு தவறானது என்பதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் அதே சபையிடம் அதே கிரேக்க வார்த்தையின் நல்ல அர்த்தத்தை பயன்படுத்தி, இவ்வாறு சொன்னார்: “உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:2) சபையில் இருந்த தீங்கு விளைவிக்கிற மனிதர்களால் அவருடைய ‘தேவவைராக்கியம்’ தூண்டப்பட்டது. இது கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு அதிக அன்பான ஆலோசனையையுடைய, ஆவியினால் ஏவப்பட்ட இரண்டாவது கடிதத்தை எழுதும்படி பவுலைத் தூண்டியது.—2 கொரிந்தியர் 11:3-5.

கிறிஸ்தவர்கள் மத்தியில் பொறாமை

3. கொரிந்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பொறாமையை உட்படுத்தின பிரச்சினை எழும்பியது எப்படி?

3 பவுல், கொரிந்தியர்களுக்கு எழுதின தன் முதல் கடிதத்தில், இந்தப் புதிய கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொள்வதைத் தடுத்துக்கொண்டிருந்த பிரச்சினையைக் கையாள வேண்டியதிருந்தது. சில மனிதர்களை அவர்கள் மற்றவர்களுக்கு மேலாக உயர்த்தி, ‘ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படைந்திருந்தனர்.’ இது சபைக்குள் பிரிவினைகளுக்கு வழிநடத்தியது. வித்தியாசமானவர்கள், “நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும்,” சொன்னார்கள். (1 கொரிந்தியர் 1:12; 4:6) பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ் அப்போஸ்தலன் பவுல் இந்தப் பிரச்சினையின் மூலகாரணத்தை எட்டமுடிந்தது. கொரிந்தியர்கள் மாம்சத்துக்குரியவர்கள்போல் நடந்துகொண்டனர், ‘ஆவிக்குரியவர்கள்’ போல் நடந்துகொள்ளவில்லை. எனவே பவுல் எழுதினார்: ‘இன்னமும் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருக்கிறீர்கள். பொறாமையும் வாக்குவாதமும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?’—1 கொரிந்தியர் 3:1-3.

4. ஒருவருக்கொருவர் சரியான நோக்குநிலையைப் பெற பவுல் தன் சகோதரர்களுக்கு உதவிசெய்வதற்கு என்ன உதாரணத்தைப் பயன்படுத்தினார், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

4 சபையிலுள்ள வித்தியாசமானவர்களின் சாமர்த்தியங்களையும் திறமைகளையும் பற்றிய சரியான நோக்குநிலையைப் போற்றுவதற்கு பவுல் கொரிந்தியர்களுக்கு உதவிசெய்தார். அவர் கேட்டார்: “உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரிந்தியர் 4:7) ஒன்று கொரிந்தியர் அதிகாரம் 12-ல், ஒரு மனித உடலின் வெவ்வேறான உறுப்புகளாகிய கை, கண், காது போன்றவை போல சபையின் பாகமாயிருந்தவர்கள் இருந்தார்கள் என்று பவுல் விளக்கினார். உடல் உறுப்புகள் ஒன்றையொன்று கவனித்துக்கொள்ளும்வண்ணமாக கடவுள் உண்டாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பவுல் கூடுதலாக எழுதினார்: “ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.” (1 கொரிந்தியர் 12:26) கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கொள்ளும் உறவில் இந்த நியமத்தைப் பொருத்தவேண்டும். மற்றொரு நபர் கடவுளுடைய சேவையில் பெற்ற நியமனம் அல்லது சாதனைகளுக்காக அவர்மீது பொறாமை கொள்வதைவிட அவரோடு நாம் சந்தோஷப்படவேண்டும்.

5. யாக்கோபு 4:5-ல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதென்ன, இந்த வார்த்தைகளின் உண்மைத்தன்மையை வேதாகமங்கள் எப்படி முக்கியப்படுத்திக் காண்பிக்கின்றன?

5 நிச்சயமாகவே, அதைச் செய்வதைவிட சொல்வது மிக எளிது. பாவமுள்ள ஒவ்வொரு மனிதரிலும் ‘பொறாமைகொள்ளுவதற்கான இயல்பு’ இருப்பதாக பைபிள் எழுத்தாளர் யாக்கோபு நமக்கு நினைவுபடுத்துகிறார். (யாக்கோபு 4:5, NW) மனிதருள் முதல் மரணம் நடந்ததற்கு காரணம், காயீன் தன் பொறாமைக்கு ஆளானதாகும். பெலிஸ்தர் ஈசாக்கை அவருடைய வளர்ந்துகொண்டிருந்த செல்வ வளத்தின்மீது பொறாமையினால் தொல்லைபடுத்தினர். ராகேல், தன் சகோதரியின் பிள்ளைப்பேறு திறனுக்காக பொறாமை கொண்டாள். தங்கள் இளைய சகோதரன் யோசேப்புக்குச் சலுகையளித்ததற்காக, யாக்கோபின் மகன்கள் பொறாமையாக இருந்தனர். தெளிவாகவே, மிரியாம் இஸ்ரவேல பெண்ணாக இல்லாத தன் தம்பி மனைவியின்மேல் பொறாமையாக இருந்தாள். கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோர் மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராக பொறாமையோடு சதிதிட்டத்தை உருவாக்கினர். தாவீதின் இராணுவ வெற்றிகளில் அரசன் சவுல் பொறாமை கொண்டார். இயேசுவின் சீஷர்கள் தங்களில் யார் பெரியவன் என்று அடிக்கடி சர்ச்சைக்குள்ளானதற்கு பொறாமையும் ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. உண்மை என்னவென்றால், எந்த அபூரண மனிதனும், இந்தப் பாவமான ‘பொறாமைகொள்ளுவதற்கான இயல்பிலிருந்து’ முற்றிலுமாக விடுபடவில்லை.—ஆதியாகமம் 4:4-8; 26:14; 30:1; 37:11; எண்ணாகமம் 12:1, 2; 16:1-3; சங்கீதம் 106:16; 1 சாமுவேல் 18:7-9; மத்தேயு 20:21, 24; மாற்கு 9:33, 34; லூக்கா 22:24.

சபைக்குள்ளே

6. பொறாமைப்படும் இயல்பை மூப்பர்கள் கட்டுப்படுத்துவது எப்படி?

6 அழுக்காறு, பொறாமை இவற்றிற்கு எதிராக எல்லா கிறிஸ்தவர்களும் காத்துக்கொள்ள வேண்டும். இதில் கடவுளுடைய ஜனத்தின் சபையைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட மூப்பர் குழுக்களும் அடங்கும். மூப்பர் ஒருவர் தாழ்மையான மனப்பான்மையைக் கொண்டிருந்தால், மற்றவர்களை விஞ்ச வேண்டும் என்ற குறிக்கோளுடன் முயல மாட்டார். அதற்கு மாறாக, ஒருவேளை ஒரு மூப்பருக்கு ஒழுங்கமைப்பவராக அல்லது பொதுப் பேச்சாளராக மேலோங்கிய திறமைகள் இருக்கும் என்றால், இதை சபைக்கு ஒரு ஆசீர்வாதம் என்று கருதி, மற்றவர்கள் சந்தோஷப்பட வேண்டும். (ரோமர் 12:15, 16) ஒருவேளை ஒரு சகோதரர் நல்ல முன்னேற்றங்களைச் செய்து, தன் வாழ்க்கையில் கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதில் அத்தாட்சியைக் காட்டலாம். அவருடைய தகுதிகளை ஆராயும்போது, அவர் செய்த சிறு தவறைப் பெரிதாக்காமல் இருக்க மூப்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இதுவே அவரை ஓர் உதவி ஊழியனாகவோ மூப்பராகவோ சிபாரிசு செய்யாமலிருக்க சாக்காக இருக்கக்கூடாது. இது அன்பில் குறைவுபட்டிருப்பதையும் நியாயத்தன்மையுடன் இல்லாமல் இருப்பதையும் காட்டக்கூடும்.

7. தேவராஜ்ய நியமிப்பு ஒன்றைக் கிறிஸ்தவர் ஒருவர் பெறும்போது என்ன பிரச்சினை உருவாகக்கூடும்?

7 ஒருவேளை ஒருவருக்கு தேவராஜ்ய நியமிப்பு அல்லது ஆவிக்குரிய ஆசீர்வாதம் கிடைக்குமானால், சபையிலுள்ள மற்றவர்கள், அதற்கு எதிராகப் பொறாமைகொள்ளாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உதாரணமாக, கிறிஸ்தவ கூட்டங்களில் நடிப்புகளுக்காக, ஒரு திறம்பட்ட சகோதரி மற்றொருவரைக்காட்டிலும் அடிக்கடி பயன்படுத்தப்படலாம். சிலநேரங்களில் இது, சில சகோதரிகளுக்கு பொறாமையை ஏற்படுத்தக்கூடும். பிலிப்பி சபையில் இருந்த எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் இடையே ஒருவேளை இதைப்போன்ற பிரச்சினை இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தற்காலப் பெண்கள், மனத்தாழ்மையாக இருப்பதற்கும் ‘கர்த்தருக்குள் ஏக சிந்தையாக’ இருப்பதற்கும், மூப்பர்களின் தயவான உதவி அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம்.—பிலிப்பியர் 2:2, 3; 4:2, 3.

8. பொறாமை பாவமான என்ன செயல்களுக்கு வழிநடத்தக்கூடும்?

8 கிறிஸ்தவர் ஒருவர் தற்போது சபையில் சிலாக்கியங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடைய கடந்தகால தவறுகளை ஒருவேளை அறிந்திருக்கலாம். (யாக்கோபு 3:2) பொறாமையின் காரணமாக, மற்றவர்களிடத்தில் இதைப்பற்றி பேசுவதற்கும், சபையில் அந்த நபரின் நியமிப்பை கேள்விக்குள்ளாக்குவதற்கும் தூண்டப்படலாம். இது, “திரளான பாவங்களை மூடும்” அன்புக்கு முரணானது. (1 பேதுரு 4:8) பொறாமைகொண்ட பேச்சு சபையின் அமைதியைக் குலைக்கலாம். “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது,” என்று சீஷனாகிய யாக்கோபு எச்சரித்தார்.—யாக்கோபு 3:14, 15.

குடும்பத்திற்குள்ளே

9. பொறாமை உணர்வுகளைத் திருமணத் துணைகள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

9 பொறாமையின் காரணமாக பல திருமணங்கள் முறிந்துவிடுகின்றன. திருமண துணைவர் மீது நம்பிக்கையற்று இருப்பது அன்பான காரியமல்ல. (1 கொரிந்தியர் 13:7) மறுபட்சத்தில், தன் துணைவரின் பொறாமை உணர்வுகளைப் பற்றி மற்றவர் ஒருவேளை உணராதிருக்கலாம். உதாரணமாக, தன் கணவர் வேறொரு எதிர்பாலாரிடத்தில் செலுத்தும் கவனத்தினால், மனைவி பொறாமைப்படலாம். அல்லது பராமரிப்பு தேவைப்படும் உறவினரைக் கவனிப்பதில் தன் மனைவி செலவிடும் நேரத்திற்காக கணவன் பொறாமைப்படலாம். திருமண துணைவர்கள் இத்தகைய உணர்வுகளைக்குறித்து சங்கடப்பட்டு அமைதியாக இருந்துவிட்டு, பிரச்சினையை சிக்கலாக்கும் மற்ற வழிகளில் தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தக்கூடும். மாறாக பொறாமை கொண்ட திருமணத் துணைவர், அவனுடைய அல்லது அவளுடைய உணர்வுகளை ஒளிவுமறைவின்றி பேசவேண்டும். மறுபட்சத்தில் மற்ற துணைவரும் புரிந்துகொள்ளுதலைக் காண்பிக்க வேண்டும், அவன் அல்லது அவளின் அன்பைக்குறித்து திரும்பவும் உறுதியளிக்க வேண்டும். (எபேசியர் 5:28, 29) பொறாமை உணர்வுகளைத் தணிப்பதற்காக, அந்த உணர்வைத் தூண்டக்கூடிய சூழ்நிலைகளை இருவருமே தவிர்க்க வேண்டும். சிலநேரங்களில் ஒரு கிறிஸ்தவ கண்காணி, கடவுளுடைய மந்தையின் மேய்ப்பனாக தன் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, எதிர்பாலாரிடத்தில் வரம்புக்குட்பட்ட, ஒழுங்கான கவனத்தைக் கொடுக்கிறார் என்பதை தன் மனைவி புரிந்துகொள்ள உதவ வேண்டியதிருக்கலாம். (ஏசாயா 32:2) நிச்சயமாகவே, பொறாமை கொள்வதற்கான எத்தகைய தகுதியான காரணத்துக்கும் இடங்கொடாதபடி ஒரு மூப்பர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது சமநிலையையும் தன் சொந்த திருமண உறவை வலுப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுகிறார் என்பதை நிச்சயப்படுத்துவதையும் தேவைப்படுத்துகிறது.—1 தீமோத்தேயு 3:5; 5:1, 2.

10. பொறாமை உணர்வுகளை மேற்கொள்ள பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யக்கூடும்?

10 தங்கள் பிள்ளைகள் பொறாமையின் உட்கருத்தைப் புரிந்துகொள்ளவும்கூட பெற்றோர்கள் உதவ வேண்டும். பிள்ளைகள் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபடக்கூடும், அவை சண்டைகளாக மாறிவிடக்கூடும். மூலகாரணம் பெரும்பாலும் பொறாமையே. பிள்ளைகளை ஒரேவிதமாக நடத்தமுடியாது. ஏனென்றால், ஒவ்வொரு பிள்ளையின் தேவைகளும் பிரத்தியேகமானவையாக இருக்கின்றன. மேலுமாக, தங்கள் ஒவ்வொருவரிடத்திலும் வித்தியாசமான பலங்களும் பலவீனங்களும் இருக்கின்றன என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையைப் போல நன்றாகச் செய்வதற்கு எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தால், இது ஒன்றினிடத்தில் பொறாமையையும் மற்றொன்றினிடத்தில் பெருமையையும் வளர்க்கக்கூடும். எனவே, ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதன் மூலமல்ல, கடவுளின் வார்த்தையில் உள்ள முன்மாதிரிகளைக் கவனிப்பதன் மூலம் பிள்ளைகள் தங்களின் முன்னேற்றத்தை அளவிட பெற்றோர்கள் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். பைபிள் கூறுகிறது: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” அதற்கு மாறாக, “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” (கலாத்தியர் 5:26; 6:4) மிக முக்கியமாக, கிறிஸ்தவப் பெற்றோர்கள் ஒழுங்கான பைபிள் படிப்பின்போது, கடவுளுடைய வார்த்தையில் அடங்கியிருக்கும் நல்ல மற்றும் கெட்ட முன்மாதிரிகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.—2 தீமோத்தேயு 3:15.

பொறாமையை அடக்கியாள உதாரணங்கள்

11. பொறாமையைக் கையாளுவதில் மோசே எவ்வாறு நல்ல ஒரு முன்மாதிரியாக இருந்தார்?

11 அதிகார-வெறிகொண்ட இவ்வுலகத்தின் தலைவர்களைப்போல் இல்லாமல், “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) இஸ்ரவேலர்கள்மீது செலுத்தும் தலைமைத்துவத்தை தனியே தாங்குவது மோசேக்கு பாரமானபோது, யெகோவா தம்முடைய ஆவியை மற்ற இஸ்ரவேலர் 70 பேர்மீது செயல்பட செய்து, மோசேக்கு உதவும்படி பலப்படுத்தினார். அவர்களில் இருவர் தீர்க்கதரிசி போல செயல்படத் தொடங்கியபோது, இது மோசேயின் தலைமைத்துவத்தை குறைவுபடச் செய்வதாக யோசுவா உணர்ந்தார். யோசுவா இந்த மனிதர்களை தடைபண்ண நினைத்தார், அதற்கு மோசே தாழ்மையாகக் காரணங்கூறி விளக்கினார்: “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தருடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணிணால் நலமாயிருக்குமே என்றான்.” (எண்ணாகமம் 11:29) ஆம், மற்றவர்கள் சேவையின் சிலாக்கியங்களைப் பெற்றபோது, மோசே மகிழ்ந்தார். பொறாமையோடு தனக்கு மேன்மையை விரும்பவில்லை.

12. பொறாமை உணர்வுகளைத் தவிர்ப்பதற்கு யோனத்தானுக்கு எது உதவியது?

12 வரக்கூடிய பொறாமை உணர்வுகளை அன்பு எவ்வாறு மேற்கொள்ளும் என்பதற்கு நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தவர், இஸ்ரவேலின் அரசனாகிய சவுலின் மகன் யோனத்தான். தன் தந்தைக்கு அடுத்ததாக அரியணையைப் பெற்றுக்கொள்ள இருந்தவர் யோனத்தான். ஆனால், யெகோவா, ஈசாயின் குமாரன் தாவீதை அடுத்த அரசராக தேர்ந்தெடுத்திருந்தார். யோனத்தானின் ஸ்தானத்திலிருக்கும் பலர், தாவீதைத் தன்னுடைய போட்டியாக நினைத்து பொறாமை கொண்டிருக்கக்கூடும். எப்படியிருந்தாலும், அத்தகைய உணர்வு யோனத்தானை ஒருபோதும் ஆட்கொள்ளாமலிருக்க தாவீதின்மீது யோனத்தானுக்கு இருந்த அன்பு தடைசெய்தது. யோனத்தானின் மரணத்தைக் கேட்டவுடன், தாவீது இவ்வாறு சொல்லமுடிந்தது: “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.”—2 சாமுவேல் 1:26.

மிகச் சிறந்த உதாரணங்கள்

13. பொறாமை சம்பந்தமாக மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது யார், ஏன்?

13 வைராக்கியத்தையும்கூட அடக்கியாளுவதில், வேறு யாரைக்காட்டிலும், மிகச் சிறந்த உதாரணம் யெகோவா தேவனாவார். அத்தகைய உணர்வுகளை அவர் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறார். தெய்வீக வைராக்கியத்தின் எத்தகைய வல்லமையான வெளிக்காட்டுதலும், கடவுளுடைய அன்பு, நீதி, ஞானம் இவற்றிற்கு இசைவாகவே எப்போதும் உள்ளன.—ஏசாயா 42:13, 14.

14. சாத்தானுடையதற்கு மாறுபட்ட என்ன முன்மாதிரியை இயேசு வைத்தார்?

14 பொறாமையின் உணர்வுகளை அடக்கியாண்டவர்களில், இரண்டாவது மிகச் சிறந்த உதாரணம் கடவுளுடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து. “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,” இயேசு “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக [“கைப்பற்ற வேண்டும் என்று,” NW] எண்ணாமல்” இருந்தார். (பிலிப்பியர் 2:6) பிசாசாகிய சாத்தானாக மாறிய பொறாமைகொண்ட அந்தத் தேவதூதன் எடுத்த போக்கிற்கு எத்தகைய நேர் எதிரான முரண்பாடு! ‘பாபிலோன் ராஜாவை,’ போல் சாத்தான் பொறாமையோடு, ‘உன்னதமானவருக்கு ஒப்பாக,’ ஆக விரும்பி தன்னை யெகோவாவிற்கு எதிராக போட்டிக் கடவுளாக ஆக்கினான். (ஏசாயா 14:4, 14; 2 கொரிந்தியர் 4:4) ‘சாஷ்டாங்கமாக விழுந்து, [ஒருமுறை] பணிந்துகொள்ளும்படி’ இயேசுவை செய்யவைப்பதற்கு சாத்தான் முயற்சி செய்தான். (மத்தேயு 4:9) ஆனால், யெகோவாவின் அரசாட்சிக்கு தம்முடைய தாழ்மையான கீழ்ப்படிதலுள்ள போக்கிலிருந்து இயேசுவை எதுவுமே திசைதிருப்ப முடியவில்லை. சாத்தானுக்கு நேர் மாறாக இயேசு, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷராய்க் காணப்பட்டு, மரணபரியந்தமும், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” இயேசு பிசாசின் மேட்டிமையும் பொறாமையுமான போக்கை முற்றிலுமாகத் தள்ளிவிட்டு, தம்முடைய பிதாவினுடைய ஆட்சியின் உரிமையை உயர்ந்தோங்கச் செய்தார். இயேசுவினுடைய உண்மைத்தன்மைக்காக, “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:7-11.

உங்களுடைய பொறாமையை அடக்கியாளுதல்

15. பொறாமை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்படி நாம் ஏன் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?

15 கிறிஸ்தவர்கள் கடவுளைப்போலவோ கிறிஸ்துவைப்போலவோ அல்லாமல், அபூரணர்களாக இருக்கிறார்கள். பாவத்திலிருப்பதால், சிலநேரங்களில் பாவமான பொறாமையினால் செயல்பட தூண்டப்படலாம். உடன் விசுவாசியின் ஏதோவொரு சிறிய தவற்றை அல்லது அவரில் இருப்பதாக நாம் கற்பனை செய்த தவற்றைக் குறைகூறுவதற்கு மாறாக, பின்வரும் ஏவப்பட்ட வார்த்தைகளின்பேரில் தியானிப்பது முக்கியம்: “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?”—பிரசங்கி 7:16.

16. இந்தப் பத்திரிகையின் பழைய ஆங்கில இதழ் ஒன்றில் பொறாமை பற்றிய என்ன அருமையான ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது?

16 பொறாமை என்ற பொருளில், மார்ச் 15, 1911, தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு எச்சரித்தது: “கர்த்தருடைய நோக்கத்தைச் செய்வதில் நாம் பேரார்வத்துடனும், வெகு வைராக்கியத்துடனும் இருக்கவேண்டியதிருந்தாலும், மற்றொரு கிறிஸ்தவனின் இந்தப் பலவீனம் யாரும் தலையிடக்கூடாத ஒரு தனிப்பட்ட விஷயமா என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; நாம் ‘சம்பந்தமில்லாமல் பிறர் அலுவல்களில் தலையிடுபவர்களாக’ இருக்கிறோமா இல்லையா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலுமாக, ஒருவேளை மூப்பர்கள் அதைக் கையாளுவதற்கு சரியான காரியமா என்றும், மூப்பர்களிடம் போகவேண்டியது நம் வேலையா என்றும் சிந்தித்துப்பார்க்கவேண்டும். கர்த்தருடைய காரியத்துக்கும் கர்த்தருடைய வேலைக்கும் அதிகளவான வைராக்கியத்தை நாம் அனைவரும் கொண்டிருக்கவேண்டும், ஆனால் கேடுவிளைவிப்பதாக இல்லாதபடி மிக கவனமாய் இருக்கவேண்டும் . . . வேறு வார்த்தைகளில் சொன்னால், அது மற்றொருவரின்மீதான பொறாமையல்ல, ஆனால் அவரைப்பற்றிய, அவருடைய அக்கறைகளை மற்றும் சிறந்த நலன் குறித்த வைராக்கியமே என்பதை நாம் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவேண்டும்.”—1 பேதுரு 4:15.

17. பொறாமையின் பாவமான செயல்களைத் தவிர்ப்பது எப்படி?

17 கிறிஸ்தவர்களாக நாம் பெருமையையும், பொறாமையையும், அழுக்காறையும் எப்படி தவிர்ப்பது? நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய பரிசுத்த ஆவி தடையின்றி செயல்படும்படி அனுமதிப்பதில் தீர்வு சார்ந்திருக்கிறது. உதாரணமாக, கடவுளுடைய ஆவிக்காகவும், அதனுடைய நல்ல கனிகளைக் காண்பிப்பதற்குரிய உதவிக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும். (லூக்கா 11:13) கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நாம் ஆஜராகவேண்டிய தேவையிருக்கிறது. அவை ஜெபத்தோடு ஆரம்பிக்கப்பட்டு, கடவுளுடைய ஆவியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கின்றன. மேலும், கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளை நாம் படிக்கவேண்டிய அவசியமிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) யெகோவாவினுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் செய்யப்படுகிற ராஜ்ய பிரசங்க வேலையில் பங்கெடுக்கவேண்டியதிருக்கிறது. (அப்போஸ்தலர் 1:8) கடவுளுடைய ஆவியின் நல்ல செல்வாக்கிற்கு பணிந்துபோகும் மற்றொரு வழி, ஏதோ மோசமான அனுபவத்தால் நொறுக்கப்பட்டிருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்வதாகும். (ஏசாயா 57:15; 1 யோவான் 3:15-17) இந்தக் கிறிஸ்தவக் கடமைகளையெல்லாம் ஆர்வத்துடன் நிறைவேற்றுவது பொறாமையின் பாவமான பழக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.”—கலாத்தியர் 5:16.

18. பொறாமை உணர்வுகளுக்கு எதிராக எப்போதும் போராட வேண்டிய அவசியம் நமக்கு ஏன் இருக்காது?

18 கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் அன்பு முதலாவதாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) அன்பைக் காண்பிப்பது பாவமான குணங்களை இப்பொழுது கட்டுப்படுத்துவதற்கு நமக்கு உதவிசெய்யும். எதிர்காலத்தைப் பற்றி என்ன? யெகோவாவின் ஊழியர்களில் லட்சக்கணக்கானோர் வரப்போகிற பூமிக்குரிய பரதீஸில் வாழும் நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறார்கள். அங்கு அவர்கள் பரிபூரண மனிதர்களாக ஆகும் எதிர்பார்ப்போடு இருக்கலாம். அந்தப் புதிய உலகில், அன்பு எங்கும் வியாபித்திருக்கும். பொறாமையான உணர்வுகளால் யாருமே ஆட்கொள்ளப்பட மாட்டார்கள். ஏனென்றால், “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.”—ரோமர் 8:20.

தியானிப்பதற்கு குறிப்புகள்

◻ பொறாமையை எதிர்த்து செயல்படுவதில் உதவ பவுல் என்ன உதாரணத்தைப் பயன்படுத்தினார்?

◻ சபையின் சமாதானத்தை பொறாமை எவ்வாறு கெடுத்துப்போடக்கூடும்?

◻ பொறாமையை மேற்கொள்வதற்கு பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கக்கூடும்?

◻ பொறாமையின் பாவமான செயல்களை நாம் தவிர்ப்பது எப்படி?

[பக்கம் 16-ன் படம்]

சபையின் சமாதானத்தை பொறாமை கெடுத்துப்போடும்படி அனுமதிக்காதீர்கள்

[பக்கம் 17-ன் படம்]

பொறாமை உணர்வுகளை மேற்கொள்வதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்