வைராக்கியமும் பொறாமையும் கிறிஸ்தவ நிலைநிற்கை என்ன?
“அன்பை நாடுங்கள்” என்று கிறிஸ்தவர்களாகிய நமக்கு உற்சாகமளிக்கப்படுகிறது; “அன்புக்குப் பொறாமையில்லை” என்றும் சொல்லப்படுகிறது. (1 கொரிந்தியர் 13:4; 14:1) “யெகோவா . . . வைராக்கியமுள்ள கடவுள்” என்று நமக்கு சொல்லப்படுகிறது; “தேவனைப் பின்பற்றுகிறவர்களா[குங்கள்]” என்றும் நமக்கு கட்டளையிடப்படுகிறது. (யாத்திராகமம் 34:14, NW; எபேசியர் 5:1) ஆகவே பொறாமையையும் வைராக்கியத்தையும் குறித்ததில் கிறிஸ்தவ நிலைநிற்கை என்ன?
எபிரெய, கிரேக்க மொழிகளில் “பொறாமை” “வைராக்கியம்” என்ற இரு வார்த்தைகளுக்கும் ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒரே சொல்லுக்கு (எபிரெயுவில், கினா; கிரேக்கில், ஸீலாஸ்) பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படும் விதத்தைப் பொருத்து அவை நல்லதையோ, கெட்டதையோ குறிக்கலாம். உதாரணமாக, அந்த எபிரெய வார்த்தை, “தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துதல்; போட்டியை பொறுத்துக் கொள்ளாதிருத்தல்; வைராக்கியம்; ஆர்வ முனைப்பு; பொறாமை; பேராசை; சகிக்க முடியாத பொறாமை” என்றெல்லாம் அர்த்தம் தரலாம். அதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கும் அதைப் போலவே பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதாக தானாகவே நினைத்துக்கொண்டு அதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறையை இவ்வார்த்தைகள் குறிக்கலாம். (நீதிமொழிகள் 14:30) கடவுள் அருளிய ஒரு நல்ல குணத்தை—தனக்குப் பிரியமானவரை தீங்கிலிருந்து காப்பாற்றும் விருப்பத்தை—நல்ல விதத்தில் வெளிக்காட்டுவதையும் அவை அர்த்தப்படுத்தலாம். (2 கொரிந்தியர் 11:2) வைராக்கியம் என்ற நல்ல பண்பையும் பொறாமை என்ற கெட்ட பண்பையும் குறிக்க தமிழில் வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒப்பற்ற முன்மாதிரி
வைராக்கியமெனும் நல்ல குணத்தை வெளிக்காட்டுவதில் யெகோவா ஒப்பற்ற முன்மாதிரியாக திகழ்கிறார். அவருடைய உள்நோக்கங்கள் தூய்மையும் சுத்தமுமானவை; இவை தம் மக்களை ஆன்மீக, தார்மீக கேட்டிலிருந்து காக்கும் ஆவலால் தூண்டப்படுபவை. சீயோன் என்று அடையாள அர்த்தத்தில் பேசப்படும் தம் பண்டைய மக்களைக் குறித்து அவர் கூறியதாவது: “நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்கான மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன்.” (சகரியா 8:2) தம் பிள்ளைகளை தீங்கிலிருந்து காக்க ஓர் அன்புள்ள தகப்பன் எவ்வாறு எப்போதுமே முன்ஜாக்கிரதையாய் இருப்பாரோ அதே விதமாக யெகோவா தம்மை சேவிப்பவர்களை உடல் ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற தயார்நிலையில் இருக்கிறார்.
தம் மக்களை பாதுகாப்பதற்கு யெகோவா தம் வார்த்தையாகிய பைபிளை அளித்திருக்கிறார். அவர்கள் ஞானமாக நடக்க உதவும் புத்திமதிகள் அதில் பெருமளவு உள்ளன; அவ்வாறு ஞானமாக நடந்தவர்களின் ஏராளமான உதாரணங்களும் அதில் உள்ளன. ஏசாயா 48:17-ல் நாம் வாசிப்பதாவது: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.” நம்மீது அக்கறை காட்டவும் நம்மை கவனித்துக் கொள்ளவும் அவருடைய வைராக்கியமே அவரைத் தூண்டுகிறது என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலை அளிக்கிறது! இவ்வாறு பலன் தரத்தக்க வைராக்கியத்தை அவர் காட்டவில்லையெனில் நம் அனுபவக் குறைவால் எல்லா விதமான தீங்கையும் அனுபவிப்போம். உண்மையில் யெகோவா காட்டும் வைராக்கியம் சுயநலமற்றது.
ஆகவே, தெய்வீக வைராக்கியத்திற்கும் பொல்லாத பொறாமைக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன? அதை அறிந்துகொள்ள மிரியாம், பினெகாஸ் ஆகியோரின் உதாரணங்களை நாம் கவனிப்போம். எது அவர்களை உந்துவித்தது என்பதை கவனியுங்கள்.
மிரியாமும் பினெகாஸும்
எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்களை வழிநடத்தி வந்த மோசே மற்றும் ஆரோனின் மூத்த சகோதரிதான் மிரியாம். இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது தன் தம்பி மோசேயின்மீது மிரியாமுக்கு பொறாமை பொங்கியது. பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.” மோசேக்கு விரோதமாக எதிர்ப்பு கிளம்பியதற்கு மிரியாமே முக்கிய காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது; ஏனெனில் யெகோவா ஆரோனை தண்டிக்காமல் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்காக மிரியாமைத்தான் குஷ்டரோகத்தால் தண்டித்தார்; அது ஒரு வாரகாலம் நீடித்தது.—எண்ணாகமம் 12:1-15.
மோசேக்கு விரோதமாக செயல்பட எது மிரியாமைத் தூண்டியது? மெய் வணக்கத்திற்கான சிரத்தையும், உடன் இஸ்ரவேலர்களை தீங்கிலிருந்து காப்பாற்றும் ஆவலுமா? இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் பேரும் புகழும் அடைய வேண்டும், பிறர்மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற தவறான ஆசை இருதயத்தில் வேர்விட்டு வளர மிரியாம் இடமளித்திருந்தாள் என தெரிகிறது. இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசினியாக இருந்ததால், மக்கள் மத்தியில் அதிலும் பெண்கள் மத்தியில் அவளுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. இஸ்ரவேலர்கள் செங்கடலில் அற்புதமாக பாதுகாக்கப்பட்டதற்குப் பின் அவர்களை இசையிலும் பாடலிலும் முன்நின்று வழிநடத்தினாள். என்றாலும் சற்றுப் பின்னர், மோசேயின் மனைவி தனக்குப் போட்டியாக இருப்பதாக தானாகவே எண்ணிக்கொண்டு, தன் பெயரும் புகழும் மங்கிவிடுமோ என்று அவள் அநாவசியமாக கவலைப்பட்டிருக்கலாம். போட்டியுணர்வு கலந்த பொறாமையால் தூண்டப்பட்டவளாய், யெகோவா நியமித்த மோசேக்கு விரோதமாக கலகத்தை தூண்டிவிட்டாள்.—யாத்திராகமம் 15:1, 20, 21.
மறுபட்சத்தில் பினெகாஸைப் பொறுத்ததிலோ, அவரது செயல்களுக்கு வேறு உள்நோக்கம் இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்பு, மோவாப் சமவெளியில் இஸ்ரவேலர் பாளயமிறங்கியிருந்தபோது, மோவாபிய, மீதியானிய பெண்கள் இஸ்ரவேலரான ஆண்களில் அநேகரை ஒழுக்கக்கேட்டிலும் விக்கிரக வணக்கத்திலும் சிக்க வைத்தனர். பாளயத்தை சுத்திகரிப்பதற்கும் யெகோவாவின் பொங்கியெழுந்த கோபத்திற்கு அணை போடுவதற்கும், திசைமாறிப்போன அனைவரையும் கொல்லும்படி இஸ்ரவேலின் நியாயாதிபதிகளுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. சிமியோன் கோத்திரத்து தலைவன் சிம்ரி, ஒழுக்கக்கேடான காரியத்தில் ஈடுபடும் எண்ணத்தில், “இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் . . . நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக” துணிச்சலுடன் மீதியானிய பெண்ணாகிய கஸ்பியை பாளயத்தினுள் அழைத்து வந்தான். அதைக் கண்ட பினெகாஸ் தீர்மானத்துடன் துரிதமாக செயல்பட்டார். யெகோவாவின் வணக்கத்திடமுள்ள வைராக்கியத்தாலும் அல்லது ஆர்வக்கனலாலும், பாளயத்தின் தார்மீக சுத்தத்தைக் காத்துக்கொள்ளும் ஆவலாலும் தூண்டப்பட்டவராக, வேசித்தனம் செய்தவர்களை அவர்களுடைய கூடாரத்தினுள் சென்று கொன்றுபோட்டார். யெகோவாவுக்கு எதிராக “எந்தவொரு போட்டியையும் சகிக்க முடியாத” ‘வைராக்கியமுள்ள கோபத்தை’ காட்டியதற்காக அவர் பாராட்டப்பட்டார். பினெகாஸின் துரித நடவடிக்கை, கடவுளிடமிருந்து வந்த தண்டனையான, 24,000 பேரின் உயிரைக் குடித்திருந்த வாதையை நிறுத்தியது. அவருக்கும் அவருக்குப் பின்பு அவர் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்லி கடவுள் அவருக்குப் பலனும் அளித்தார்.—எண்ணாகமம் 25:4-13, NW; த நியூ இங்லிஷ் பைபிள்.
பைபிள் எழுதப்பட்ட மூல மொழிப்படி, ஒரே பண்பின் இந்த இரண்டு வெளிக்காட்டுதல்களுக்கு இடையே என்ன வித்தியாசம் இருந்தது? மிரியாம் தன்னல போட்டியுணர்வால் எழுந்த பொறாமையினால் தன் சகோதரனுக்கு விரோதமாக செயல்பட்டாள். மறுபட்சத்தில் பினெகாஸோ, தெய்வீக குணமான வைராக்கியத்தால் நீதியை நிலைநாட்டினார். பினெகாஸைப் போலவே, யெகோவாவின் பெயருக்கு, அவருடைய வணக்கத்திற்கு, அவருடைய ஜனங்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசுவதற்கான அல்லது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கும் உள்ளன.
தகாத வைராக்கியம்
என்றாலும், தகாத வைராக்கிய உணர்வு எழுவதற்கு வாய்ப்பு உள்ளதா? ஆம், வாய்ப்பு உள்ளது. பொதுவாக முதல் நூற்றாண்டு யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள். கடவுள் கொடுத்த சட்டத்தையும் அவர்களுடைய பாரம்பரியங்களையும் தகாத வைராக்கியத்தோடு பாதுகாத்தார்கள். நியாயப்பிரமாணத்தை காக்கும் தங்கள் முயற்சியில், கணக்கிலடங்கா நுட்ப விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கினார்கள்; இவை மக்களுக்கு பெருஞ்சுமையாக ஆயின. (மத்தேயு 23:4) முன்நிழலாக இருந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தை கடவுள் நிஜமாக்கி நடைமுறைப்படுத்தி இருந்ததை புரிந்துகொள்ள முடியாமல், அல்லது அதை ஏற்க மனமில்லாமல் பொறாமையால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களிடம் அவர்கள் கட்டுக்கடங்கா கோபத்தை கொப்பளித்தனர். தவறான கருத்தில், ஒருகாலத்தில் நியாயப்பிரமாணத்தை வைராக்கியத்துடன் உண்மையோடு கடைப்பிடித்து வந்த அப்போஸ்தலன் பவுலும்கூட, நியாயப்பிரமாணத்தை ஆதரித்து பேசினவர்களை குறித்து, ‘தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டு; . . . ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல’ என்று குறிப்பிட்டார்.—ரோமர் 10:2; கலாத்தியர் 1:14.
கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களில் பலருக்கும்கூட, நியாயப்பிரமாணத்திடம் தங்களுக்கிருந்த அளவுக்கு அதிகமான வைராக்கியத்தை விட்டுவிடுவது கடினமாக இருந்தது. தன் மூன்றாம் மிஷனரி பயணத்திற்குப் பிறகு, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் ஆளும் குழுவிடம் புறஜாதிகள் மதம் மாறியதைப் பற்றிய ஓர் அறிக்கையை பவுல் சமர்ப்பித்தார். அப்பொழுது, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ யூதர்கள் ‘நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாய்’ இருந்தனர். (அப்போஸ்தலர் 21:20) இது, புறமதத்திலிருந்து வந்த கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்ய தேவையில்லை என்ற தீர்மானத்தை ஆளும் குழு அறிவித்ததற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பது சம்பந்தமாய் எழும்பிய கேள்விகள் சபையில் சச்சரவை கிளப்பியிருந்தன. (அப்போஸ்தலர் 15:1, 2, 28, 29; கலாத்தியர் 4:9, 10; 5:7-12) அப்போது யெகோவா தம் மக்களை நடத்திய விதத்தை முழுமையாய் புரிந்துகொள்ள தவறிய யூத மதத்திலிருந்து வந்த கிறிஸ்தவர்களில் சிலர் தங்கள் சொந்த கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களிடம் குறை கண்டனர்.—கொலோசெயர் 2:17; எபிரெயர் 10:1.
ஆகவே நாம், கடவுளுடைய வார்த்தையில் வேரூன்றப்பட்டிராத, நமக்கு நலமாய் தோன்றி பேணிக்காத்து வந்த கருத்துக்களையோ வழிகளையோ விடாப்பிடியாக வைராக்கியத்துடன் பின்பற்றும் தவறை செய்யாதிருக்க வேண்டும். யெகோவா இன்று பயன்படுத்தும் வழிமூலத்தின் வாயிலாக கடவுளுடைய வார்த்தையின் பேரில் பெறும் அறிவொளி மிக்க புதுப்புது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யெகோவாவுக்கு வைராக்கியமாய் இருங்கள்
என்றாலும், தெய்வீக குணமாகிய வைராக்கியத்திற்கு மெய் வணக்கத்தில் ஓர் இடமுண்டு. நம் சொந்த நற்பெயருக்காகவோ உரிமைகளுக்காகவோ அநாவசியமாக கவலைப்படும் மனச்சாய்வுடன் இருக்கையில், தெய்வீக வைராக்கியம் நம் கவனத்தை அவரிடம் திருப்புகிறது. அவரைப் பற்றிய சத்தியத்தை அறிவிக்க வெவ்வேறு வழிகளை கண்டுபிடிக்கவும், அவருடைய வழிகளையும் அவருடைய ஜனங்களையும் ஆதரிக்கவும் நம்மை உந்துவிக்கிறது.
யெகோவாவின் சாட்சிகளில் முழுநேர ஊழியராக இருக்கும் ஆகீகோ ஊழியத்தில் ஒருவரை சந்தித்தார்; அந்தப் பெண்மணிக்கு இரத்தம் சம்பந்தமான கடவுளுடைய சட்டத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் இருந்ததால் ஆகீகோவை கடுமையாக சாடினார். ஆகீகோவோ சாதுரியத்துடன் கடவுளுடைய வார்த்தையை ஆதரித்து பேசினார்; இரத்தமேற்றுவதில் உட்பட்டுள்ள மருத்துவ சிக்கல்களையும் பிரச்சினைகளையும்கூட குறிப்பிட்டார். யெகோவாவைப் பற்றி பேசுவதற்கு தனக்கிருந்த தீராத ஆசையால் உந்துவிக்கப்பட்டவராக, அந்தப் பெண்மணி எதிர்ப்பு தெரிவித்ததற்கு எது காரணமாக இருக்கலாம் என ஊகித்த விஷயத்திடம் அவர் கவனத்தைத் திருப்பினார்; படைப்பாளர் ஒருவர் இருப்பதை நம்பாததே காரணமாக இருந்தது. படைப்பாளர் ஒருவர் இருப்பதற்கு படைப்பு எவ்வாறெல்லாம் அத்தாட்சி அளிக்கிறது என்பதை நியாயம் காட்டிப் பேசினார். படைப்பாளரைப் பற்றி அவர் தைரியமாக பேசியது, அந்தப் பெண்மணியின் மனதில் இருந்த அனாவசியமான தப்பெண்ணங்களை அகற்றியதோடு அவருக்கு பைபிள் படிப்பை துவங்குவதற்கும் வழிவகுத்தது. அன்று கோபத்தில் வெகுண்டெழுந்த அந்தப் பெண்மணி, இன்று யெகோவாவைத் துதிப்பவராக ஆகியிருக்கிறார்.
மெய் வணக்கத்திடம் நமக்கிருக்கும் வைராக்கியம் அல்லது ஆர்வக்கனலே, வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், கடையில், பயணத்தில் என எல்லா சந்தர்ப்பங்களிலும் நம் விசுவாசத்தைக் குறித்து பேசவும் அதை ஆதரிக்கவும் வாய்ப்புகளைத் தேட விழிப்புடன் இருக்குமாறு நம்மை வற்புறுத்துகிறது. உதாரணமாக, தன் நம்பிக்கைகளைக் குறித்து தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் பேசுவதற்கு மீடோரீ தீர்மானத்துடன் இருக்கிறாள். அவளுடன் வேலை பார்ப்பவர்களில், 40 வயதைத் தாண்டிய ஒரு பெண்மணிக்கு யெகோவாவின் சாட்சிகளிடம் பேச சுத்தமாக பிடிக்காது. பின்னர், ஒரு சமயம் உரையாடுகையில் அந்தப் பெண்மணி தன் மகளின் போக்கு வர வர சரியில்லாதிருப்பதைச் சொல்லி புலம்பினாள். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்a என்ற புத்தகத்தை மீடோரீ அவளிடம் காட்டினாள்; அவளுடைய மகளுக்கு அந்தப் புத்தகத்திலிருந்து படிப்பு நடத்த முன்வந்தாள். இப்படியாக மகளிடம் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; ஆனால் அந்தப் பெண்மணியோ படிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு* என்ற வீடியோவை அவளுக்குக் காட்ட மீடோரீ முடிவு செய்தாள். இது அவளுக்கிருந்த பெருமளவு தப்பெண்ணங்களை மாற்றிக்கொள்ள உதவியது. தான் கண்டவற்றால் அவள் கவரப்பட்டதால், “நான் யெகோவாவின் சாட்சிகளைப் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்” என்றாள். தன் மகளுடன் சேர்ந்து பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தாள்.
கிறிஸ்தவ சபையிலும் வைராக்கியம் காட்டப்பட வேண்டும். அது அன்பும் அக்கறையுமுள்ள கனிவான மனோபாவத்தை உற்சாகப்படுத்துவதுடன், நம் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வீண்பேச்சு, விசுவாச துரோக சிந்தனை போன்ற பிரிவினை உண்டுபண்ணும் செல்வாக்குகளை எதிர்க்கவும் நம்மை உந்துவிக்கிறது. சில சமயங்களில், தவறிழைப்பவர்களை கடிந்துகொள்வதற்கு மூப்பர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க தெய்வீக வைராக்கியம் நம்மை உந்துவிக்கும். (1 கொரிந்தியர் 5:11-13; 1 தீமோத்தேயு 5:20) கிறிஸ்தவ சபையிலுள்ள தன் உடன் விசுவாசிகளிடம் தனக்குள்ள வைராக்கியத்தைப் பற்றி எழுதுபவராய் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:2) அதைப் போலவே, சபையில் உள்ளோரின் கொள்கை சம்பந்தப்பட்ட சுத்தத்தையும், ஆன்மீக, தார்மீக சுத்தத்தையும் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வைராக்கியம் நம்மை தூண்டுகிறது.
ஆம், சரியான விதத்தில் தூண்டுவிக்கப்படும் வைராக்கியம்—தெய்வீக வைராக்கியம்—பிறர்மீது சாதகமான செல்வாக்கை செலுத்துகிறது. அது யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது; இன்று கிறிஸ்தவர்களிடம் காணப்படும் ஒரு குணமாக அது இருக்க வேண்டும்.—யோவான் 2:17.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 29-ன் படங்கள்]
பினெகாஸின் செயல்கள் தெய்வீக வைராக்கியத்தால் விளைந்தவை
[பக்கம் 30-ன் படங்கள்]
தகாத வைராக்கியத்தின் ஆபத்தில் சிக்கிக்கொள்வதைத் தவிருங்கள்
[பக்கம் 31-ன் படங்கள்]
தெய்வீக வைராக்கியம் நம் நம்பிக்கையை அறிவிக்கவும் நம் சகோதரத்துவத்தை பேணிக்காக்கவும் நம்மை உந்துவிக்கிறது