யெகோவாவுடைய வீட்டின்மீது பக்திவைராக்கியத்தைக் காட்டுங்கள்
“உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்.”—யோவா. 2:17.
1, 2. பொ.ச. 30-ல் எருசலேம் ஆலயத்தில் இயேசு என்ன செய்தார், ஏன்?
இந்தச் சம்பவத்தைச் சற்று மனத்திரையில் ஓடவிடுங்கள். வருடம் பொ.ச. 30. பஸ்கா பண்டிகையின் சமயம். ஆறு மாதங்களுக்கு முன்புதான் இயேசு பூமியில் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்திருந்தார். இப்போது அவர் எருசலேமிற்குச் செல்கிறார். அங்கே ஆலயத்தில், புறஜாதியாருக்கான பிராகாரத்தில் ‘ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிற காசுத் தரகர்களையும்’ காண்கிறார். கயிறுகளால் ஒரு சாட்டை செய்து எல்லா மிருகங்களையும் விரட்டுகிறார்; அவற்றிற்குப் பின்னால் வியாபாரிகளும் ஓடுகிறார்கள். காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். புறா விற்பவர்களிடம், தாங்கள் வைத்திருக்கிற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போகும்படி கட்டளையிடுகிறார்.—யோவா. 2:13-16.
2 இயேசு இப்படிச் செய்வது, அவருக்கு ஆலயத்தின்மீது எந்தளவுக்குப் பற்று இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. “என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று அவர் கட்டளையிடுகிறார். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிற இயேசுவின் சீடர்கள், பல நூற்றாண்டுகளுக்குமுன் தாவீது எழுதிய இவ்வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறார்கள்: “உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்.”—யோவா. 2:16, 17; சங். 69:9.
3. (அ) பக்திவைராக்கியம் என்றால் என்ன? (ஆ) நம்மையே என்ன கேள்வி கேட்டுக்கொள்ளலாம்?
3 கடவுளுடைய வீட்டின்மீது இயேசுவுக்கு இருந்த பற்றும் பக்திவைராக்கியமும்தான் அப்படிச் செய்ய அவரைத் தூண்டியது. பக்திவைராக்கியம் என்பது “ஒன்றை அடைவதில் தணியா ஆர்வத்தையும் தீவிர ஈடுபாட்டையும்” குறிக்கிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டில், 70 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வீட்டின்மீது இதேபோன்ற பற்றைக் காட்டுகிறார்கள். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவுடைய வீட்டின்மீது நான் எப்படி இன்னுமதிக பக்திவைராக்கியத்தைக் காட்டலாம்?’ இக்கேள்வியைச் சிந்திப்பதற்குமுன், இன்று கடவுளுடைய வீடாக இருப்பது எது என்பதை ஆராயலாம். அதன் பிறகு, பைபிள் காலத்தில் கடவுளுடைய வீட்டின்மீது பக்திவைராக்கியத்தைக் காட்டிய உண்மையுள்ள மனிதர்களின் உதாரணத்தைச் சிந்திக்கலாம். ‘நமக்கு அறிவுரை’ புகட்டுவதற்காகவே இவர்களுடைய உதாரணங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன; நமக்கிருக்கும் பக்திவைராக்கியம் கொழுந்துவிட்டு எரிய அவை நமக்கு உதவுகின்றன.—ரோ. 15:4.
கடவுளுடைய வீடு—அன்றும் இன்றும்
4. சாலொமோன் கட்டிய ஆலயம் எதற்குரிய இடமாக இருந்தது?
4 பூர்வகால இஸ்ரவேலருக்கு எருசலேமிலிருந்த ஆலயமே கடவுளுடைய வீடாக இருந்தது. யெகோவா அங்கு குடியிருக்கவில்லை என்பது உண்மைதான். சொல்லப்போனால், “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?” என்று அவரே கேட்டார். (ஏசா. 66:1) என்றாலும், சாலொமோனுடைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம், யெகோவாவிடம் ஜெபம் செய்வதற்கும் அவரை வணங்குவதற்குமான முக்கிய இடமாக இருந்தது.—1 இரா. 8:27-30.
5. சாலொமோன் கட்டிய ஆலயத்தில் செய்யப்பட்ட வழிபாடு இன்றுள்ள என்ன ஏற்பாட்டிற்கு முன்நிழலாக இருந்தது?
5 இன்று யெகோவாவின் வீடு என்பது, எருசலேமிலோ வேறு இடத்திலோ உள்ள எந்தவொரு கட்டிடத்தையும் குறிப்பதில்லை. மாறாக, கிறிஸ்துவின் மீட்பு பலியின் அடிப்படையில் யெகோவாவை வணங்குவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டையே அது குறிக்கிறது. பூமியில் இருக்கும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரும் இந்த ஆன்மீக ஆலயத்தில் ஒன்றுகூடி அவரை வழிபடுகிறார்கள்.—ஏசா. 60:4, 8, 13; அப். 17:24; எபி. 8:5; 9:24.
6. மெய் வணக்கத்தின்மீது அளவுகடந்த பக்திவைராக்கியத்தைக் காட்டிய யூதேயா ராஜாக்கள் யாவர்?
6 பொ.ச.மு. 997-ல் இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அதன் தென் பகுதியான யூதாவை ஆட்சி செய்த 19 ராஜாக்களில் 4 பேர் மெய் வணக்கத்தின்மீது அளவுகடந்த பக்திவைராக்கியத்தைக் காட்டினார்கள். ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியோரே அவர்கள். இந்த நான்கு பேருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
இருதயப்பூர்வமான சேவையால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
7, 8. (அ) எப்படிப்பட்ட சேவையை யெகோவா ஆசீர்வதிப்பார்? (ஆ) ராஜாவான ஆசாவின் உதாரணத்திலிருந்து என்ன எச்சரிப்பூட்டும் பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
7 ராஜாவான ஆசாவின் ஆட்சிக் காலத்தில் யெகோவா தீர்க்கதரிசிகளை அனுப்பி தம்முடைய ஜனங்கள் உண்மையுள்ளவர்களாய் நடப்பதற்கு உதவினார். உதாரணத்திற்கு, ஓதேதின் மகனாகிய அசரியா தீர்க்கதரிசிக்கு ஆசா கீழ்ப்படிந்ததாக பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 15:1-8-ஐ வாசியுங்கள்.) ஆசா செய்த சீர்திருத்தங்கள் யூதாவிலிருந்த மக்களை மட்டுமல்ல, எருசலேமில் நடந்த மாபெரும் மாநாட்டிற்கு இஸ்ரவேலிலிருந்து வந்த திரளான மக்களையும் ஒன்றுபடுத்தியது. அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை உண்மையோடு வழிபடுவதாக வாக்குக் கொடுத்தார்கள். ஆம், அவர்கள் “மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள். இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.” (2 நா. 15:9-15) நாமும் இருதயப்பூர்வமாக யெகோவாவை வழிபடும்போது நம்மையும் அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—மாற். 12:30.
8 என்றாலும், ஞானதிருஷ்டிக்காரராக, அதாவது தரிசனங்களைக் காண்கிறவராக இருந்த அனானி என்பவர் ஆசாவைக் கண்டித்தபோது அவர்மீது ஆசா மனக்கசப்படைந்தார். (2 நா. 16:7-10) கிறிஸ்தவ மூப்பர்கள் மூலமாக யெகோவா அளிக்கும் அறிவுரையை அல்லது வழிநடத்துதலை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம்? பைபிளிலிருந்து அவர்கள் புத்திமதி அளிக்கும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்கிறோமா? அவர்கள்மீது மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறோமா?
9. யோசபாத்தையும் யூதா மக்களையும் யார் தாக்கவிருந்தார்கள், அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்?
9 பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் யோசபாத் ராஜா யூதாவை ஆண்டார். அவரையும் யூதாவிலிருந்த எல்லா மக்களையும் தாக்குவதற்காக அம்மோனியரும் மோவாபியரும் சேயீர் மலைத்தேசத்து மக்களும் ஒன்றுசேர்ந்து படையெடுத்து வந்தார்கள். ராஜா பயந்துபோனாலும் என்ன செய்தார்? அவரும் அவருடைய ஆட்களும் அவர்களுடைய மனைவி மக்களும் ஜெபிப்பதற்காக யெகோவாவின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். (2 நாளாகமம் 20:3-6-ஐ வாசியுங்கள்.) இதற்குமுன் ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ஜெபித்ததற்கு இசைவாக, யோசபாத் யெகோவாவிடம் மன்றாடினார்; “எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” என்று மன்றாடினார். (2 நா. 20:12, 13) யோசபாத் ஜெபம் செய்த பின்பு, ‘சபையின் நடுவிலிருந்த’ லேவியனான யகாசியேலை யெகோவாவின் சக்தி தூண்டியது; அவர் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.—2 நாளாகமம் 20:14-17-ஐ வாசியுங்கள்.
10. (அ) யோசபாத்தும் யூதா மக்களும் எப்படி வழிநடத்துதலைப் பெற்றார்கள்? (ஆ) இன்று யெகோவா அளிக்கும் வழிநடத்துதலுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?
10 ஆம், அன்று யோசபாத்தும் யூதா மக்களும் யகாசியேலின் மூலம் யெகோவாவின் வழிநடத்துதலைப் பெற்றார்கள். இன்று நாம் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரின் மூலமாக ஆறுதலையும் வழிநடத்துதலையும் பெறுகிறோம். நியமிக்கப்பட்ட மூப்பர்களோடு நாம் எப்போதும் ஒத்துழைக்கவும் அவர்களுக்கு மரியாதை காட்டவும் விரும்புகிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், நம்மை மேய்ப்பதற்கும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வழங்கும் அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.—மத். 24:45; 1 தெ. 5:12, 13.
11, 12. யோசபாத் மற்றும் யூதா மக்களின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
11 யெகோவாவின் வழிநடத்துதலைப் பெறுவதற்காக யோசபாத்தும் அவருடைய மக்களும் ஒன்றுகூடி வந்தது போலவே நாமும் நம்முடைய சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கூட்டங்களுக்குத் தவறாமல் வர வேண்டும். சில சமயங்களில் நாம் துன்பப் புயலில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும்போது யோசபாத் மற்றும் யூதா மக்களின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றலாம்; அவர்களைப் போலவே நாமும் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து ஜெபம் செய்யலாம். (நீதி. 3:5, 6; பிலி. 4:6, 7) நாம் தனிமைப்படுத்தப்பட்டாலும் யெகோவாவிடம் நாம் செய்யும் விண்ணப்பங்கள் ‘உலகிலுள்ள [நம்] சகோதரர்கள் அனைவரோடும்’ நம்மை ஒன்றுசேர்க்கிறது.—1 பே. 5:9.
12 யோசபாத்தும் அவருடைய மக்களும் யகாசியேலின் மூலமாகக் கடவுள் கொடுத்த அறிவுரைக்குக் கீழ்ப்படிந்தார்கள். அதன் பலன் என்ன? அவர்கள் போரில் வெற்றி அடைந்து, “மகிழ்ச்சியோடே . . . தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு” திரும்பினார்கள். (2 நா. 20:27, 28) நாமும், யெகோவா தமது அமைப்பு மூலமாகத் தரும் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து ஒருசேர அவரைப் புகழ வேண்டும்.
கூடிவரும் இடங்களை நன்கு பராமரியுங்கள்
13. எசேக்கியா ஆட்சி செய்ய ஆரம்பித்ததும் என்ன வேலையை மேற்கொண்டார்?
13 எசேக்கியா, தான் ஆட்சி செய்த முதல் மாதத்தில், ஆலயத்தை மீண்டும் திறந்து பழுதுபார்த்ததன் மூலம் யெகோவாவின் வழிபாட்டின்மீது தனக்குப் பக்திவைராக்கியம் இருந்ததைக் காட்டினார். கடவுளுடைய வீட்டைச் சுத்தம் செய்வதற்கு அவர் ஆசாரியர்களையும் லேவியர்களையும் நியமித்தார். 16 நாட்களில் அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டார்கள். (2 நாளாகமம் 29:16-18-ஐ வாசியுங்கள்.) அவர்கள் அப்படிச் செய்தது, வணக்கத்திற்காக நாம் கூடிவரும் இடங்களைப் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது; நாம் அப்படிச் செய்வது, யெகோவாவைப் பக்திவைராக்கியத்துடன் வழிபடுகிறோம் என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட வேலையில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட்ட நம் சகோதர சகோதரிகளைக் கண்டு மக்கள் மனங்கவரப்பட்டதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அல்லவா? ஆம், நம் சகோதர சகோதரிகளின் முயற்சிகள் யெகோவாவுக்குப் பெருமளவு புகழைச் சேர்க்கின்றன.
14, 15. இன்று என்ன வேலை யெகோவாவுக்குப் பெருமளவு புகழைச் சேர்த்திருக்கிறது? உதாரணங்களைத் தருக.
14 வட இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரத்தில், ஒரு ராஜ்ய மன்றத்தைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன; அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சகோதரர்களோ அந்த நபரிடம் கனிவாக நடந்துகொண்டார்கள். ராஜ்ய மன்றத்திற்கும் அவருடைய வீட்டிற்கும் இடையே இருந்த மதில்சுவர் சேதமடைந்திருந்ததால் அதைச் சகோதரர்கள் இலவசமாகச் சரிசெய்து கொடுத்தார்கள். அவர்கள் கடினமாக உழைத்தார்கள்; சொல்லப்போனால், சுவரின் பெரும்பாலான பகுதியை மீண்டும் கட்டினார்கள். அவர்கள் அவ்வளவு நன்றாக நடந்துகொண்டதால் அந்த நபரின் மனம் இளகியது. இப்போதெல்லாம் அவர் ராஜ்ய மன்றத்தை அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்.
15 யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறார்கள். உள்ளூரில் இருக்கும் சகோதரர்கள் சர்வதேச முழுநேர ஊழியர்களுடன் சேர்ந்து ராஜ்ய மன்றங்களை மட்டுமல்ல, மாநாட்டு மன்றங்களையும் பெத்தேல் வீடுகளையும் கட்டும் வேலையில் மனமுவந்து ஈடுபடுகிறார்கள். குளிர்சாதன வசதி, வெப்பசாதன வசதி, காற்றோட்ட வசதி போன்றவற்றைச் செய்துகொடுப்பதில் சாம் ஒரு திறமையான பொறியியலாளர். அவரும் அவருடைய மனைவி ரூத்தும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களிலுள்ள பல நாடுகளுக்குச் சென்று கட்டுமான வேலையில் உதவியிருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள சபையினரோடு சேர்ந்து ஊழியத்திலும் ஈடுபட்டு மகிழ்கிறார்கள். இதுபோன்ற சர்வதேச கட்டுமான வேலைகளில் ஈடுபட தன்னை எது தூண்டியது என்று சாம் சொல்கிறார்: “இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள பெத்தேல் வீடுகளில் சேவை செய்தவர்கள் அளித்த உற்சாகமே என்னைத் தூண்டியது. அவர்களுடைய பக்திவைராக்கியத்தையும் சந்தோஷத்தையும் பார்த்தபோது இந்தச் சேவையை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வந்தது.”
கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்
16, 17. என்ன விசேஷ வேலையில் கடவுளுடைய மக்கள் ஆர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள், அதன் பலன் என்ன?
16 எசேக்கியா ஆலயத்தைப் பழுதுபார்த்ததோடு, யெகோவா கட்டளையிட்டிருந்தபடி வருடாந்தர பஸ்கா பண்டிகையை மீண்டும் கொண்டாட ஆரம்பித்தார். (2 நாளாகமம் 30:1, 4, 5-ஐ வாசியுங்கள்.) எசேக்கியாவும் எருசலேம் குடிமக்களும், வடக்கு ராஜ்யம் உட்பட முழு தேசத்தையும் அந்தப் பண்டிகைக்கு அழைத்தார்கள். அஞ்சல்காரர்கள் அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு எட்டுத் திக்கும் ஓடினார்கள்.—2 நா. 30:6-9.
17 சமீப வருடங்களில் நாமும் இதேபோன்ற ஒரு வேலையைச் செய்திருக்கிறோம். கண்கவர் அழைப்பிதழ்களைப் பயன்படுத்தி, இயேசுவின் கட்டளைக்கு இணங்க அவரது மரண நாளை அனுசரிப்பதற்காக நம் பிராந்தியத்திலுள்ளவர்களை நாம் அழைத்தோம், அல்லவா? (லூக். 22:19, 20) ஊழியக் கூட்டத்தில் நமக்குக் கிடைத்த ஆலோசனைகளின்படி இந்த வேலையில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட்டோம், அல்லவா? யெகோவா நம்முடைய முயற்சிகளை எந்தளவிற்கு ஆசீர்வதித்தார்! சென்ற வருடம் நம்மில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் இந்த அழைப்பிதழை வினியோகித்தோம், அதன் பலனாக மொத்தம் 1,77,90,631 பேர் அந்நிகழ்ச்சிக்கு ஆஜராகியிருந்தார்கள்!
18. நீங்கள் மெய் வணக்கத்தின்மீது பக்திவைராக்கியமாக இருப்பது ஏன் மிக முக்கியம்?
18 எசேக்கியாவைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டது: “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.” (2 இரா. 18:5, 6) நம்முடைய விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கட்டும். கடவுளுடைய வீட்டின்மீது நமக்கிருக்கும் பக்திவைராக்கியம், ‘யெகோவாவைச் சார்ந்திருக்கவும்’ முடிவில்லா வாழ்க்கை என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கவும் நமக்கு உதவும்.—உபா. 30:16.
அறிவுரைக்கு உடனே கீழ்ப்படியுங்கள்
19. நினைவு நாள் அனுசரிப்பு சமயத்தில் என்ன தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது?
19 யோசியா ராஜாவும் தன் ஆட்சிக் காலத்தில் பஸ்கா பண்டிகைக்காகப் பெரியளவில் முன்னேற்பாடுகளைச் செய்தார். (2 இரா. 23:21-23; 2 நா. 35:1-19) நாமும்கூட மாவட்ட மாநாடுகளுக்கும் வட்டார மாநாடுகளுக்கும் விசேஷ மாநாட்டுத் தினங்களுக்கும் நினைவு நாள் அனுசரிப்புக்கும் முன்னேற்பாடுகளைச் செய்ய மிகுந்த கவனம் செலுத்துகிறோம். கிறிஸ்துவின் நினைவு நாள் அனுசரிப்பில் கலந்துகொள்வதற்காகச் சில நாடுகளில் சகோதரர்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கிறார்கள். பக்திவைராக்கியமுள்ள மூப்பர்கள் சபையிலுள்ள அனைவரும் அதில் கலந்துகொள்ளும்படி பார்த்துக்கொள்கிறார்கள். வயதானவர்களும் சுகவீனர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குத் தேவையான உதவியைப் பெறுகிறார்கள்.
20. (அ) யோசியா ராஜா ஆட்சி செய்த காலத்தில் என்ன நடந்தது, அவர் என்ன செய்தார்? (ஆ) என்ன பாடங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?
20 யோசியா ராஜா ஆலயத்தைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த சமயத்தில், ‘மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட யெகோவாவுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தார்.’ அவர் அரசவைச் செயலரான சாப்பானிடம் அதைக் கொடுத்தார்; அவர் அதிலுள்ளவற்றை யோசியாவுக்கு வாசித்துக்காட்டினார். (2 நாளாகமம் 34:14-18-ஐ வாசியுங்கள்.) அதன் விளைவு? தாங்க முடியாத துக்கத்தில் ராஜா தன்னுடைய உடையைக் கிழித்து, யெகோவாவிடம் விசாரிக்கும்படி தன் ஆட்களிடம் சொன்னார். உல்தாள் என்னும் பெண் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கடவுள் யூதாவில் செய்யப்பட்ட சில பொய் மத பழக்கங்களைக் கண்டிப்பதாக அறிவித்தார். இருந்தாலும், உருவ வழிபாட்டை ஒழித்துக்கட்ட யோசியா எடுத்த அபார முயற்சிகளை யெகோவா பார்த்தார்; முழு தேசத்திற்கும் படுமோசமான அழிவு காத்திருந்தபோதிலும் யோசியாவுக்கு யெகோவா தொடர்ந்து தயவு காட்டினார். (2 நா. 34:19-28) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யோசியாவுடைய ஆசையே நம்முடைய ஆசையாகவும் இருக்க வேண்டும். நம் வணக்கத்தில் விசுவாசதுரோகத்திற்கும் பாவச் செயல்களுக்கும் நாம் இடமளித்தால் என்ன நேரிடும் என்பதற்கான எச்சரிப்பூட்டும் உதாரணத்தை மனதில் வைத்து யெகோவா அளிக்கும் அறிவுரைக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, மெய் வணக்கத்தின்மீது நமக்கிருக்கும் பக்திவைராக்கியத்தை யெகோவா பார்த்து யோசியாவுக்குச் செய்ததைப் போலவே நமக்கும் தயவு காட்டுவார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.
21, 22. (அ) யெகோவாவுடைய வீட்டின்மீது நாம் ஏன் பக்திவைராக்கியம் காட்ட வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் என்ன சிந்திப்போம்?
21 கடவுளுடைய வீட்டின் மீதும் வணக்கத்தின் மீதும் பக்திவைராக்கியம் காட்டுவதில் யூதாவை ஆண்ட நான்கு ராஜாக்களான ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியோர் நமக்குச் சிறந்த உதாரணங்கள். அவர்களைப் போல் யெகோவாமீது நம்பிக்கை வைக்கவும் அவருடைய வணக்கத்திற்காக முழுமூச்சாய் பாடுபடவும் நமக்கிருக்கும் பக்திவைராக்கியம் நம்மைத் தூண்ட வேண்டும். கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, சபையிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் வரும் அன்பான ஆலோசனைகளையும் புத்திமதியையும் ஏற்றுக்கொள்வது நிச்சயமாகவே ஞானமானது, அது சந்தோஷத்திற்கு வழிவகுக்கிறது.
22 ஊழியத்தில் பக்திவைராக்கியமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அடுத்த கட்டுரை சிறப்பித்துக் காட்டும்; அதோடு, நம் அன்பான தகப்பனைப் பக்திவைராக்கியத்தோடு சேவிப்பதற்கான உற்சாகத்தை இளைஞர்களுக்கு அளிக்கும். மேலும், சாத்தானுடைய படுமோசமான செல்வாக்குகளில் ஒன்றை எப்படித் தவிர்க்கலாம் என்பதை நாம் சிந்திப்போம். யெகோவா அளிக்கும் இந்த எல்லா நினைப்பூட்டுதல்களுக்கும் நாம் பக்திவைராக்கியத்தோடு செவிசாய்க்கும்போது அவருடைய சொந்த மகனான இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம். ஆம், ‘[கடவுளுடைய] வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் [இயேசுவுக்குள்] பற்றியெரிந்தது’ போலவே நமக்குள்ளும் பற்றியெரியும்.—சங். 69:9; 119:111, 129; 1 பே. 2:21.
நினைவிருக்கிறதா?
• எப்படிப்பட்ட சேவையை யெகோவா ஆசீர்வதிப்பார், ஏன்?
• யெகோவா மீதுள்ள நம்பிக்கையை நாம் எப்படிக் காட்டலாம்?
• கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிய பக்திவைராக்கியம் நம்மை எப்படித் தூண்டும்?
[பக்கம் 9-ன் படங்கள்]
ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியோர் யெகோவாவுடைய வீட்டின்மீது எப்படிப் பக்திவைராக்கியத்தைக் காட்டினார்கள்?