கடவுளுடைய வார்த்தையே சத்தியம்
1 “உமது வார்த்தையின் சாராம்சம் சத்தியம்” என சங்கீதக்காரன் எழுதினார். (சங். 119:160, தி.மொ.) பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையின் மூலம் வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை யெகோவா கொடுக்கிறார். பிரச்சினையில் தவிப்பவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறார். அதோடு அவரிடம் எவ்வாறு நெருங்கி செல்வது எனவும் விளக்குகிறார். “பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது மிகவும் மப்பும் மந்தாரமுமான ஒரு இடத்திலிருந்து, தெளிவும் பிரகாசமும் இன்பமும் நிறைந்த ஒரு அறைக்குள் செல்வதைப் போல உள்ளது” என ஒரு பெண்மணி நன்றி பொங்க சொன்னாள். அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை மற்றவர்களிடம் பேச எல்லா சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
2 மாற்றும் வல்லமைமிக்கது, அனைவரையும் கவரக்கூடியது: பைபிள் சத்தியம் இருதயத்தை தொட்டு வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்தது. (எபி. 4:12) ரோஸா என்ற இளம் பெண்ணுக்கு வேசித்தனம், மதுபானம், போதைப்பொருள் என எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன. “ஒரு நாள், நான் ரொம்பவே மனச்சோர்வுடன் இருந்தபோது, எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க பைபிள் எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சியான ஒரு தம்பதியினர் என்னிடம் பேசினார்கள். அதன்பின், கடவுளுடைய வார்த்தையைப் படிக்க ஆரம்பித்தேன்; கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னை கவர்ந்தன. ஒரு மாதத்திற்குள், என் வாழ்க்கையை சுத்தமாக்குவதற்கும், புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கும் வேண்டிய பலம் எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் கிடைத்துவிட்டதால், மதுபானங்களோ போதைப்பொருட்களோ அதன் பிறகும் எனக்குத் தேவைப்படவில்லை. யெகோவாவின் நண்பராக இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதால், அவருடைய தராதரங்களுக்கு ஏற்ப வாழ வேண்டுமென தீர்மானித்தேன். கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் நடைமுறையான ஞானம் மட்டும் எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், எப்போதோ என் வாழ்க்கையை முடித்திருப்பேன்” என்று அவள் சொல்கிறாள்.—சங். 119:92.
3 இன்று கிடைக்கும் அநேக புத்தகங்களுக்கு இல்லாத சிறப்பு பைபிளுக்கு உண்டு; எப்படியெனில், அது ‘எல்லா ஜாதி, கோத்திரம், ஜனம், பாஷையைச்’ சேர்ந்தவர்களையும் கவருகிறது. (வெளி. 7:9) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” கடவுள் விரும்புகிறார். (1 தீ. 2:4) எனவே, வெறுமனே ஒருவருடைய பின்னணியை வைத்து இவர் நற்செய்தியைக் கேட்க மாட்டார் என்று நாமாகவே ஊகித்துவிடக் கூடாது. அதற்கு மாறாக, எல்லாரிடமும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பைபிளிலிருந்து நேரடியாக ராஜ்ய நற்செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
4 வசனங்களை சிறப்பித்துக் காட்டுங்கள்: ஊழியத்தில் பைபிளை உபயோகிக்க அநேக வாய்ப்புகள் உள்ளன. பத்திரிகைகளை அறிமுகப்படுத்தும் போது, பத்திரிகை அளிப்பு பகுதியில் இருக்கும் வசனத்தையும் காண்பிக்க முயற்சி செய்யுங்கள். அந்தந்த மாதத்திற்குரிய பிரசுரங்களை அளிக்கையில், அறிமுகத்தில் கவனமாக தேர்ந்தெடுத்த ஒரு வசனத்தை வாசிப்பதன் மூலம் சிலர் நல்ல பலனை அடைந்திருக்கின்றனர். மறுசந்திப்புகள் செய்யும் ஒவ்வொரு முறையும், ஓரிரண்டு வசனங்களை வீட்டுக்காரரிடம் காண்பிப்பதன் மூலம் திருத்தமான அறிவை அவர் படிப்படியாக பெறுவதற்கு உதவலாம். அதேவிதமாக பைபிள் படிப்பை நடத்துகையில், அந்தக் கலந்தாலோசிப்பின் முக்கிய வசனங்களிடம் கவனத்தை திருப்புங்கள். முறையாக ஊழியம் செய்யாத சமயங்களிலும் பைபிளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்; வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க அது உதவியாக இருக்கும்.—2 தீ. 2:15.
5 ஊழியத்தில் பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பைபிளை பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களும் கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்தின் உந்துவிக்கும் வல்லமையிலிருந்து பயனடைய உதவுவோமாக.—1 தெ. 2:13.
[கேள்விகள்]
1. பைபிளில் என்ன முக்கிய தகவல் அடங்கியுள்ளது?
2. ஜனங்களின் வாழ்க்கையை பைபிள் எவ்வாறு மேம்படுத்துகிறது?
3. மற்றவர்களிடம் பைபிளின் செய்தியை பகிர்ந்து கொள்வதிலிருந்து நாம் ஏன் பின்வாங்கக் கூடாது?
4. சாட்சி கொடுக்கையில் பைபிளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
5. ஊழியத்தில் பைபிளை பயன்படுத்த நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?