கேள்விப் பெட்டி
◼ பிற நாடுகளில் தேவையில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்வதற்காக நன்கொடைகளை அனுப்புவதற்கு எது சிறந்த வழியாகும்?
சில சமயங்களில், வேறொரு நாட்டில் சகோதரர்கள் பண வசதியின்றி கஷ்டப்படுவதை நாம் கேள்விப்படலாம்; துன்புறுத்தல், பேரழிவு ஆகியவற்றாலோ வேறெதாவது சூழ்நிலையாலோ இந்தப் பணக் கஷ்டம் வந்திருக்கலாம். சில சகோதரர்கள் மனம் இரங்கி, அப்படிப்பட்ட நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக பணத்தை அனுப்பி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு, ஒரு சபைக்கு, அல்லது ஒரு கட்டுமான திட்டத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எழுதியிருக்கின்றனர்.—2 கொ. 8:1-4.
உடன் விசுவாசிகளின் மீது அப்படிப்பட்ட அன்பையும் அக்கறையையும் காட்டுவது மெச்சத்தக்க விஷயமே; ஆனால் அவர்கள் நினைப்பதைவிட மிக அவசர தேவைகள் அடிக்கடி ஏற்பட்டு விடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் எந்தப் பிரச்சினைக்காகப் பணம் அனுப்பப்படுகிறதோ, அந்தப் பிரச்சினை ஏற்கெனவே தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு விஷயத்தைக் குறித்து நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்; அது என்னவெனில், உலகளாவிய வேலைக்காக, ராஜ்ய மன்ற கட்டுமான நிதிக்காக, அல்லது பேரழிவு நிவாரணப் பணிக்காக நன்கொடைகளை உள்நாட்டுக் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கையில், அனுப்புநரின் வேண்டுகோளுக்கு ஏற்பவே அவை பயன்படுத்தப்படும்.
எதிர்பாரா சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுகையில் அவற்றை உடனே தீர்த்து வைப்பது சம்பந்தமாக எல்லாக் கிளை அலுவலக சகோதரர்களுக்கும் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், கிளை அலுவலகம் நிலவரத்தை ஆளும் குழுவிற்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறது. கூடுதலான உதவி தேவைப்படுமாயின், அருகிலுள்ள கிளை அலுவலகங்கள் உதவும்படி ஆளும் குழு கேட்கலாம் அல்லது தலைமை அலுவலகத்திலிருந்து நேரடியாக பணம் அனுப்பியும் வைக்கலாம்.—2 கொ. 8:14, 15.
ஆகவே, உலகளாவிய வேலைக்காக, பிற நாடுகளில் கட்டுமான திட்டங்களுக்காக, அல்லது பேரழிவு நிவாரணத்திற்காகக் கொடுக்கப்படும் நன்கொடைகள் எதுவாயினும், நீங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு நேரடியாகவோ சபை மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். இவ்வாறாக, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார், ஆளும் குழுவால் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமைப்பின் முறைமைகள் மூலமாக உலகளாவிய சகோதரத்துவத்தின் தேவைகளைக் கிரமமாய் கவனித்துக் கொள்கின்றனர்.—மத். 24:45-47, NW; 1 கொ. 14:33, 40.