நாம் எப்படி உதவலாம்?
1 உலகின் சில பகுதிகளில் நிகழும் பேரழிவுகளைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் கேள்விப்படுகையில் “நாம் எப்படி உதவலாம்?” என்று அடிக்கடி யோசிக்கிறார்கள். அப்போஸ்தலர் 11:27-30-லுள்ள பதிவு காட்டுகிறபடி, பஞ்சம் உண்டானபோது முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் யூதேயாவில் குடியிருந்த சகோதரர்களுக்கு இடருதவி அளித்தார்கள்.
2 இன்றும்கூட, இயற்கைப் பேரழிவுகளின்போது, அல்லது மனிதனால் உண்டாகிற நாசங்களின்போது, அதோடு தேவை ஏற்படும் மற்ற சமயங்களின்போது மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காகவும், தர்ம காரியங்களுக்காகவும் பணத்தைச் செலவிட நம் அமைப்பின் சாசனம் அனுமதி அளிக்கிறது.
3 உதாரணத்திற்கு, கடந்த வருடம் தெற்கு ஆசியாவில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அநேக சகோதரர்கள் நன்கொடை அளித்தார்கள். இப்படி, அமைப்பின் இடருதவி நிதிக்காக மனதாரக் கொடுத்த நன்கொடைகள் பெரிதும் போற்றப்பட்டன. ஆனால், நன்கொடைகள் ஒரு குறிப்பிட்ட பேரழிவுக்காக மட்டுமே பயன்படுத்துவதற்காக அளிக்கப்படுகையில், அந்நோக்கத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமென, அதுவும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பயன்படுத்த வேண்டுமென, சில நாடுகளில் சட்டப்படி எதிர்பார்க்கப்படுகிறது; அங்குள்ள சகோதரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, அவ்வாறே எதிர்பார்க்கப்படுகிறது.
4 எனவே, மனிதாபிமான அடிப்படையிலும் இடருதவிக்காகவும் கொடுக்கப்படுகிற நன்கொடைகளை உலகளாவிய வேலைக்கென அளிக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இந்த நன்கொடைகள் இடருதவி பணிகளுக்காகவும் கிறிஸ்தவ சகோதரர்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஏதோவொரு காரணத்தால் ஒருவர் உலகளாவிய வேலைக்கென இல்லாமல் தனிப்பட்ட விதத்தில் இடருதவி நன்கொடை அளிக்க விரும்பினால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும், எங்கு இடருதவி தேவைப்படுகிறதோ அங்கு அதற்காக அது பயன்படுத்தப்படும். இருப்பினும், இத்தகைய நன்கொடைகளை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டுமென குறிப்பிடாமல் அனுப்பி வைப்பதே பெரிதும் விரும்பத்தக்கது.
5 நன்கொடைகளை முக்கியமாய் உலகளாவிய வேலைக்காக நாம் அளித்தோமானால், எதிர்கால இடருதவி தேவைகளுக்காக மட்டுமே அதை ஒதுக்கி வைக்காமல் அதன் பெருமளவு தொகையை ராஜ்ய வேலையின் பல்வேறு அம்சங்களுக்காகவும் பயன்படுத்த முடிகிறது. இது எபேசியர் 4:16-ல் சொல்லப்பட்டதற்கு இசைவாக உள்ளது; அதன்படி, ‘சரீர வளர்ச்சியை உண்டாக்குவதற்குத்’ தேவையானதை அளிக்க நாம் ஒற்றுமையாய்ச் செயல்படுகையில், ‘அன்பினாலே பக்திவிருத்தி உண்டாகிறது.’