‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ அடுக்குமாடி குடியிருப்புகளில்
1. ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ வேறு எங்கும்கூட நாம் பிரசங்கிக்க வேண்டும்?
1 அப்போஸ்தலன் பவுலைப் போல ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். (அப். 20:24) எனவே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை முடிந்தவரை நம் பிராந்தியத்திலுள்ள எல்லோரிடமும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களிடம்கூட, சொல்வதற்காகக் கடும் முயற்சியெடுக்கிறோம். சில சமயம், அத்தகைய குடியிருப்புகளுக்குள் செல்வது சவாலாக இருக்கலாம். என்றாலும், அங்கே அதிகமான ஆட்கள் குடியிருப்பதால், நற்செய்தியைப் பிரசங்கிக்க நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
2. அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரசங்கிக்கும்போது சூழ்நிலைக்கு ஏற்ப விவேகமாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்?
2 தற்போது குற்றச்செயலும் வன்முறையும் பெருகிவருவதால், அடுக்குமாடி குடியிருப்புகளின் வாயிற்கதவுகள் பூட்டி வைக்கப்படுகின்றன, அங்கு வாட்ச்மேன்கள் நியமிக்கப்படுகிறார்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. (2 தீ. 3:1, 2) முன்பின் தெரியாத ஆட்களை உள்ளே விடக் கூடாது என்று குடியிருப்பு நிர்வாகம் சட்டம் போட்டிருக்கலாம். நாம் அங்கு சென்றதைக் குறித்து ஒரு வீட்டுக்காரர் புகார் செய்தால்கூட, வாட்ச்மேனோ மேனேஜரோ நம்மை உடனடியாக வெளியேற்றலாம். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரசங்கிக்கும்போது சூழ்நிலைக்கு ஏற்ப விவேகமாக நடந்துகொள்வது முக்கியம்.
3. அடுக்குமாடி குடியிருப்புகளில் எப்போது பிரசங்கிப்பது நல்லது, ஏன்?
3 எப்போது பிரசங்கிக்கலாம்: மற்ற பிராந்தியங்களில் பிரசங்கிப்பதைப் போலவே அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஆட்கள் இருக்கும்போது பிரசங்கிக்க வேண்டும். ஆட்கள் இல்லாத சமயத்தில் சென்றால் நம்மேல் வீண் சந்தேகம் எழலாம். அநேக பிரஸ்தாபிகள் மாலை வேளைகளிலும் சனி-ஞாயிறுகளிலும் ஆட்களை வீடுகளில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அதிகாலையிலேயே, முக்கியமாக சனி-ஞாயிறு அன்று அதிகாலையிலேயே, ஊழியம் செய்தால் வீட்டுக்காரர்கள் நிர்வாகத்திடம் புகார் செய்துவிடலாம்.
4, 5. வாயிற்கதவு பூட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குள் செல்ல நாம் என்ன செய்யலாம்?
4 உள்ளே செல்ல என்ன செய்யலாம்: பிரஸ்தாபிகள் அங்கு ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு அந்தக் குடியிருப்பின் மேனேஜரையோ நிர்வாகப் பொறுப்பிலுள்ள நபர்களையோ அணுகக் கூடாது. அந்தக் குடியிருப்பின் நுழைவாயிலில் இன்டர்காம் வசதி இருந்தால், நம்மிடம் பேச விருப்பமுள்ள யாராவது இருக்கிறார்களா என அதைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். விருப்பமுள்ள அந்த நபரைச் சந்தித்துப் பேசிய பிறகு, அக்குடியிருப்பிலுள்ள மற்ற வீடுகளிலும் போய்ச் சாட்சி கொடுக்கலாம்; அது எவ்விதமான குடியிருப்பு என்பதைப் பொறுத்து அவ்வாறு செய்யலாம். என்றாலும், மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு வீட்டுக்காரரிடம் பேசிய பிறகு நுழைவாயிலுக்கு வந்துவிடுவது ஞானமானது. மறுபடியும் இன்டர்காமைப் பயன்படுத்தி அடுத்தடுத்த வீட்டுக்காரர்களைத் தொடர்புகொள்ளலாம். ஒரே சந்தர்ப்பத்தில் எத்தனை வீட்டுக்காரர்களைத் தொடர்புகொள்வது என்பதை நாம் ஞானமாகத் தீர்மானிக்க வேண்டும்.
5 நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை இன்டர்காமிலேயே சொல்லும்படி சில வீட்டுக்காரர்கள் கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது, சிநேகப்பான்மையுடன் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். அங்குள்ள ஃபோன் டைரக்டரியில் அல்லது பெயர்ப் பலகையில் வீட்டுக்காரரின் பெயர் இருந்தால், அவர் பெயரைப் பயன்படுத்திப் பேசுங்கள். எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று சுருக்கமாகச் சொல்லுங்கள்.
6. வாட்ச்மேன் உள்ள குடியிருப்புகளில் பிரசங்கிக்கச் செல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
6 குடியிருப்புக்குள் சென்று பிரசங்கிக்க வாட்ச்மேன் அனுமதிக்கவில்லை என்றால், அவரிடமே சாட்சி கொடுக்கலாம். அநேக வாட்ச்மேன்கள் நம்முடைய பிரசுரங்களை விரும்பிப் படிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பைபிள் படிப்பை நடத்தலாம். ஆர்வம் காட்டிய ஒரு வீட்டுக்காரரைச் சந்திக்க வாட்ச்மேன் நம்மை அனுமதித்தால், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அங்குள்ள மற்ற வீட்டுக்காரர்களைச் சந்திக்கக் கூடாது.
7. அடுக்குமாடி குடியிருப்பின் பிரெசிடென்ட் அல்லது செக்ரட்டரியிடமிருந்து அனுமதி வாங்க நாம் என்ன சொல்லலாம்?
7 அடுக்குமாடி குடியிருப்புக்குள் பிரசங்கிக்க நிர்வாகத்திடமிருந்து அனுமதி வாங்கும்படி சில சமயம் வாட்ச்மேன் நம்மிடம் சொல்லலாம். எனவே, அந்தக் குடியிருப்பின் பிரெசிடென்ட் அல்லது செக்ரட்டரியைச் சந்திக்கும்போது நாம் இவ்வாறு சொல்லலாம்: “என் பெயர் ____________________________. நாங்கள் யெகோவாவின் சாட்சிகள். உலகெங்கும் இருக்கிறோம். ஜனங்களைச் சந்தித்துப் பேசுகிறோம். குடும்ப வாழ்க்கையை எப்படிச் சந்தோஷமாக்குவது, பிள்ளைகளை எப்படிப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது, கவலைகளை எப்படி மேற்கொள்வது, எதிர்காலத்தைப் பற்றி எப்படி நம்பிக்கையோடு இருப்பது போன்ற விஷயங்களைப் பேசுகிறோம். [இந்த விஷயங்கள் உள்ள பத்திரிகைகளையோ பிரசுரங்களையோ காட்டுங்கள்.] நீங்கள் அனுமதித்தால், இங்குள்ளவர்களிடம் சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறோம்; அவர்கள் விருப்பப்பட்டால், இந்தப் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்; இவற்றுக்கு விலையில்லை. ஒருவேளை அவர்கள் வேலையாக இருந்தால் அல்லது அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம்.” இப்படியும் நாம் சொல்லி முடிக்கலாம்: “இந்த விஷயத்தை இங்குள்ளவர்களிடம் பேச நீங்கள் அனுமதித்தால், ரொம்பவும் சந்தோஷப்படுவோம். அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், இந்தப் பிரசுரங்களை விலையில்லாமல் கொடுத்துவிட்டுச் செல்கிறோம்.”
8. வெளி ஊழியப் பையைக் குறித்து நாம் எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
8 தோற்றமும் நன்னடத்தையும்: ஊழியத்திற்குப் பெரிய பையைத் தூக்கிச் செல்வது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். ஆகவே, மற்றவர்களுடைய பார்வையை உறுத்தாதபடி சிறிய பையை எடுத்துச் செல்லலாம் அல்லது எதுவுமே இல்லாமல் செல்லலாம். சில பிரஸ்தாபிகள் பிரசுரங்களை ஃபோல்டரில் எடுத்துச் செல்கிறார்கள், பைபிளை பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்கள்.
9. நாம் எப்படிப் பண்போடு நடந்துகொள்ளலாம், இது ஏன் முக்கியம்?
9 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் செல்லும்போது, மிதியடிகளில் காலணிகளை நன்றாகத் துடைத்துவிட்டுச் செல்லுங்கள்; அதோடு, வாயிற்கதவை நன்றாக மூடிவிட்டுச் செல்லுங்கள். இப்படி, பண்போடு நடந்துகொண்டால் அங்கே குடியிருப்பவர்கள் நம்மீது புகார் செய்வதைத் தவிர்க்க முடியும். உள்ளே சென்றவுடன் நுழைவாயிலில் தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருக்காதீர்கள்; நேராக லிஃப்ட்டை நோக்கி அல்லது போக வேண்டிய தளத்தை நோக்கிச் செல்லுங்கள். யாருக்கும் சந்தேகம் வராது.
10. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் போகும்போது அனாவசியமாகச் சத்தம் செய்வதை எப்படித் தவிர்க்கலாம்?
10 பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் சத்தம் எதிரொலிக்கும். ஆகவே, வீட்டுக்காரருக்குக் கேட்கிற விதத்தில் பேசினாலே போதும். உங்களோடுள்ள பிரஸ்தாபிகளிடம் பேசும்போது குரலைத் தாழ்த்தி மெதுவாகப் பேசுங்கள், அதற்கென்று கிசுகிசுப்பான குரலில் பேசாதீர்கள்; அப்பொழுதுதான் உங்கள்மீது யாருக்கும் சந்தேகம் வராது. ஒரு தளத்தில், அடுத்தடுத்துள்ள கதவைத் தட்டி வீட்டுக்காரர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக, பிரஸ்தாபிகள் முதல் வீட்டில் பேசிமுடித்த பிறகு அதே வரிசையிலுள்ள கடைசி வீட்டில் பேசுகிறார்கள். கதவைச் சத்தமாகவோ அதிகார தோரணையிலோ தட்டினால் வீட்டிற்குள் இருப்பவர்கள் பயந்துவிடுவார்கள்.
11. லென்ஸ் பொருத்தப்பட்ட கதவைத் தட்டும்போது நாம் என்ன ஆலோசனைகளை மனதில் வைக்க வேண்டும்?
11 வீட்டுக் கதவில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தால், உங்களையும் உங்களோடு இருப்பவரையும் வீட்டுக்காரர் நன்றாகப் பார்க்கும் விதத்தில் அதற்கு நேராக நின்றுகொள்ளுங்கள். அந்த லென்ஸ் மீது உங்கள் கண்கள் இருக்கட்டும்; உள்ளேயிருந்து யாராவது அதன் வழியாக உங்களைப் பார்ப்பது தெரிந்தால், அவருக்குக் கனிவோடு வணக்கம் தெரிவித்துவிட்டு நற்செய்தியைச் சொல்ல ஆரம்பியுங்கள். அந்த நபர், ‘யார் நீங்கள்?’ என்று விசாரித்தால், உங்கள் பெயரையும் உங்களோடு இருப்பவரின் பெயரையும் சொல்வது நல்லது. அதைக் கேட்ட பிறகு ஒருவேளை அவர் கதவைத் திறக்கலாம். அவர் கதவைத் திறக்காவிட்டாலும், நீங்கள் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்.
12. ஆட்கள் இல்லாத வீடுகளில் பிரசுரங்களை விட்டு வரும்போது பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்?
12 ஆட்கள் வீட்டில் இல்லாதபோது: அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றியுள்ள இடங்களிலும், நடக்கிற வழிகளிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் பிரசுரங்களை அப்புறப்படுத்த வேண்டியிருப்பதாகக் கண்காணிப்பாளர்கள் அடிக்கடி புகார் கூறியிருக்கிறார்கள். கதவில் செருகி வைக்கப்படுகிற பிரசுரங்கள் தரையில் விழுந்து குப்பையைப் போல ஆகிவிடலாம். எனவே, ஆட்கள் இல்லாத வீடுகளில், பிறர் கண்ணில் படாத விதத்தில் பிரசுரங்கள் வைக்கப்பட வேண்டும்.
13. எரிச்சலடையும் வீட்டுக்காரரைச் சந்திக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
13 எரிச்சலடையும் வீட்டுக்காரர்கள்: நாம் சந்திக்கும் வீட்டுக்காரர் எரிச்சலடைந்து, வாட்ச்மேனைக் கூப்பிடப்போகிறார் என்றால், அந்தத் தளத்தைவிட்டு வந்துவிடுவது நல்லது; அந்தத் தளத்தில் குடியிருப்பவர்களை வேறொரு சமயத்தில் சென்று சந்திக்கலாம். குடியிருப்பு நிர்வாகியோடு அல்லது வாட்ச்மேனோடு பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகச் சில சந்தர்ப்பங்களில் அந்தக் குடியிருப்பை விட்டே வந்துவிடுவது ஞானமானது. இனிமேல் தன்னைச் சந்திக்கக் கூடாதென்று அந்த வீட்டுக்காரர் சொல்லாவிட்டாலும், அந்தக் கதவு எண்ணை குறித்துக்கொள்ளலாம்; அவரை ‘சந்திக்க வேண்டாம்’ என ஒரு தாளில் குறிப்பிட்டு அதைப் பிராந்திய அட்டையோடு வைத்துவிடலாம். இதுபோன்ற வீட்டுக்காரர்களை அவ்வப்போது சென்று எப்படிச் சந்திப்போமோ அப்படியே அந்த வீட்டுக்காரரையும் சந்தித்து அவருடைய விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.
14, 15. குடியிருப்பு நிர்வாகி நம்மை வெளியேறச் சொன்னால் என்ன செய்ய வேண்டும்?
14 “வெளியே போங்கள்” என்று சொன்னால்: அடுக்குமாடி குடியிருப்புகளில் சாட்சி கொடுக்கும்போது, அதன் கண்காணிப்பாளரோ, வாட்ச்மேனோ, பராமரிப்புப் பணியாளரோ, நிர்வாகியோ, “வெளியே போங்கள்” என்று சொன்னால், உடனடியாக அங்கிருந்து வந்துவிடுவது ஞானமானது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் போலீஸில் புகார் செய்யப்போவதாகவும் வீட்டுக்காரர் அச்சுறுத்துகிற சூழ்நிலை ஏற்படாதபடி முடிந்தவரை பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும், அங்குள்ள பணியாளர்கள் யெகோவாவின் சாட்சிகள் மீதுள்ள வெறுப்பினால் அவ்வாறு செய்வதில்லை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையையே செய்கிறார்கள்.
15 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களைப் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்வது குடியிருப்பு நிர்வாகியின் பொறுப்பு. ஆகவே, சில சமயங்களில் அவர் உங்களை வெளியேறச் சொன்னால், அங்குள்ள ஆட்களைச் சந்திப்பதற்கான காரணத்தை அவரிடம் கனிவாகவும் நாசூக்காகவும் விளக்கலாம். (1 பே. 3:15) அப்போதும் அவர் உங்களை அனுமதிக்காவிட்டால் மறுபேச்சின்றி வந்துவிடுங்கள். சூழ்நிலையைப் பொறுத்து, பிரசுரங்களை தபால் பெட்டிகளில் அவ்வப்போது விட்டுச்செல்வதற்கு அவரிடம் நீங்கள் அனுமதி கேட்கலாம். (கொலோ. 4:6) இப்படிப்பட்ட சம்பவங்களை உடனுக்குடன் ஊழியக் கண்காணியிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
16. அடுக்குமாடி குடியிருப்புகளில் சாட்சி கொடுக்க முயலும்போது பிரச்சினைகள் தொடர்ந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?
16 ஒருவேளை, சிறிது காலம் கழித்து பிரஸ்தாபிகள் அந்தக் குடியிருப்புக்குச் சென்று விவேகத்தோடு சாட்சி கொடுக்க முயற்சிக்கலாம். அப்படிப்பட்ட குடியிருப்புகளில் பிரஸ்தாபிகளால் சாட்சி கொடுக்க முடியவில்லை என்றால், மற்ற வழிகளில், அதாவது தொலைபேசி மூலமாகவோ கடிதம் மூலமாகவோ, அங்குள்ளவர்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யலாம். அவர்களுடைய பெயர்களும் தொலைபேசி எண்களும் உள்ள பட்டியலை செக்யூரிட்டி ஆபீஸிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். கடிதம் எழுதும்போது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில், பக்கங்கள் 71-73 வரை கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கவனமாகப் பின்பற்றுங்கள். சில பிரஸ்தாபிகள் அந்தக் குடியிருப்பு வாசலில் அல்லது அதற்கு அருகில் நின்றுகொண்டு தெரு ஊழியம் செய்கிறார்கள்; காலையில் ஆட்கள் வேலைக்குப் போகிறபோதும் மாலையில் வீடு திரும்புகிறபோதும் அவ்வாறு ஊழியம் செய்கிறார்கள்.
17. அடுக்குமாடி குடியிருப்புகளில் சாட்சி கொடுப்பது ஏன் முக்கியம்?
17 வெகு சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவு வரப்போகிறது. யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள். “என்றாலும், அவர்மீது விசுவாசம் வைக்காதவர்கள் எப்படி அவரிடம் வேண்டிக்கொள்வார்கள்? அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவர்மீது விசுவாசம் வைப்பார்கள்?” (ரோ. 10:13, 14) “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்” பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். (அப். 13:48) ஆகையால், சூழ்நிலைக்கு ஏற்ப விவேகத்தோடு நடந்துகொள்வதன் மூலம் நம்மால் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முடியும்.