கேள்விப் பெட்டி
◼ ஊழியம் செய்யக் கூடாது என்று சொன்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
சில சந்தர்ப்பங்களில், ஏதோவொரு விதமான ஊழியத்தைச் செய்துகொண்டிருந்த பிரஸ்தாபிகளை போலீஸார் அணுகி, அவர்கள் சட்டத்தை மீறுவதாகக் குறிப்பிட்டு, ஊழியம் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு உங்களிடம் சொன்னால் பணிவோடு, உடனடியாக அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட வேண்டும். (மத். 5:41; பிலி. 4:5) சட்டப்படி நமக்குள்ள உரிமையைக் குறித்து விவாதித்து பிரச்சினையை நீங்களே தீர்ப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். முடிந்தால், அந்த போலீஸ் அதிகாரியின் பெயரையும் அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் பெயரையும் சாதுரியமாகப் பெறுவதற்குப் பாருங்கள். பின்னர், அதை உடனடியாக மூப்பர்களுக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் கிளை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு அந்தச் சம்பவத்தைப் பற்றித் தெரிவிப்பார்கள். அதேபோல், அடுக்குமாடிக் கட்டிடத்தையோ குடியிருப்புப் பகுதியையோ விட்டு செல்லும்படி அதன் கண்காணிப்பாளரோ பிரதிநிதியோ உங்களைக் கேட்டுக்கொண்டால், அங்கிருந்து உடனடியாக வெளியேறி, அதை மூப்பர்களுக்குத் தெரிவியுங்கள். அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கனிவோடும் தாழ்மையோடும் நடந்துகொள்வது தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கப் பெருமளவு உதவும்.—நீதி. 15:1; ரோ. 12:18.