வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 27-29
“தாவீதின் போர்த் தந்திரம்”
it-1-E பக். 41
ஆகீஸ்
சவுலிடமிருந்து தாவீது தப்பித்து ஓடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆகீஸ் ராஜா ஆட்சி செய்த பகுதியில்தான் தாவீது தஞ்சம் தேடினார். முதல் தடவை அந்தப் பகுதிக்கு தாவீது ஓடிப்போனபோது, அங்கே இருந்த ஜனங்கள் அவரை நம்பவில்லை. அவரை ஒரு எதிரி என்று சொன்னார்கள். அதனால், ஒரு பைத்தியக்காரன் போல அவர் நடித்தார். அதைப் பார்த்ததும், அவர் புத்தி பேதலித்துப்போன ஒரு அப்பாவி மனுஷன் என்று நினைத்துக்கொண்டு அவரை விட்டுவிடும்படி ஆகீஸ் ராஜா சொன்னான். (1சா 21:10-15; சங் 34:மேல்குறிப்பு; 56:மேல்குறிப்பு) இரண்டாவது தடவை தாவீது அந்த இடத்துக்குப் போனபோது, 600 வீரர்களும், அவர்களுடைய மனைவி-பிள்ளைகளும் தாவீதோடு இருந்தார்கள். அதனால், சிக்லாகு என்ற ஊரில் அவர்கள் தங்குவதற்கு ஆகீஸ் ராஜா அனுமதி கொடுத்தான். அவர்கள் ஒரு வருஷமும், நான்கு மாதங்களும் அந்த ஊரில் தங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் யூதாவின் நகரங்களின் மேல்தான் அவர்கள் திடீர்த் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்ததாக ஆகீஸ் நினைத்தான். ஆனால் உண்மையில் கேசூரியர்கள், கெஸ்ரியர்கள், அமலேக்கியர்கள் ஆகியவர்களைத்தான் தாவீது சூறையாடிக்கொண்டிருந்தார். (1சா 27:1-12) இப்படி ஆகீஸ் ராஜாவை ரொம்பத் திறமையாக ஏமாற்றினார். அதனால், சவுல் ராஜாவை எதிர்த்து பெலிஸ்தியர்கள் படைதிரண்டு போன சமயத்தில் ஆகீஸ் தன்னுடைய மெய்க்காப்பாளனாக தாவீதை நியமித்தான். ஆனால், கடைசி நேரத்தில் தாவீதையும் அவருடைய ஆட்களையும், சிக்லாகுவுக்கே திருப்பி அனுப்பிவிட்டான். ஏனென்றால், பெலிஸ்திய “தலைவர்களுக்கு” தாவீதைக் கூட்டிக்கொண்டுபோக கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. (1சா 28:2; 29:1-11) தாவீது ராஜாவாக ஆனதற்குப் பிறகு, காத்துக்கு எதிராகப் போர் செய்தபோது ஆகீசை தாவீது கொன்றுபோடவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், சாலொமோன் ஆட்சி செய்துகொண்டிருந்த சமயத்திலும், ஆகீஸ் உயிரோடு இருந்தான்.—1ரா 2:39-41.
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
8 தாவீதின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்: யூதாவின் ராஜாவாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும், அரியணை ஏறுவதற்கு ரொம்ப வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. (1 சா. 16:13; 2 சா. 2:3, 4) அவரால் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது? அரியணை ஏற முடியவில்லையே என்று நினைத்து சோர்ந்து போவதற்குப் பதிலாக, தன்னால் முடிந்ததை எல்லாம் அவர் செய்தார். உதாரணத்துக்கு, பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போனபோது இஸ்ரவேலின் எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டார். இப்படி, யூதாவின் எல்லைகளைப் பாதுகாத்தார்.—1 சா. 27:1-12.
it-2-E பக். 245 பாரா 6
பொய்
பொய் சொல்வது யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதற்காக, உண்மைகளைத் தெரிந்துகொள்ள அவசியம் இல்லாதவர்களிடம் எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்; அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துப்போட்டு, திரும்பிவந்து உங்களைக் குதறிவிடும்” என்று இயேசு கிறிஸ்து ஆலோசனை கொடுத்தார். (மத் 7:6) அதனால்தான், சிலசமயங்களில் இயேசு வேண்டுமென்றே முழு தகவலையும் கொடுக்கவில்லை. சில கேள்விகளுக்கு நேரடியான பதிலையும் சொல்லவில்லை. ஏனென்றால், அப்படிச் செய்தால் பிரச்சினை வரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது.—மத் 15:1-6; 21:23-27; யோவா 7:3-10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w10-E 1/1 பக். 20 பாரா. 5-6
இறந்தவர்களால் உயிரோடு இருப்பவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?
ஒருவர் இறக்கும்போது ‘அவர் மண்ணுக்குத் திரும்புகிறார்’ என்றும் அவருடைய “யோசனைகள் அழிந்துபோகின்றன” என்றும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 146:4) ஆவிகளோடு பேசுகிறவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கடவுள் சொல்லியிருந்தார். இந்த விஷயம் சவுலுக்கும் தெரியும், சாமுவேலுக்கும் தெரியும். அதனால்தான், ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமான எல்லாவற்றையும் நிறைய வருஷங்களுக்கு முன்பே தேசத்திலிருந்து சவுல் ஒழித்துக்கட்டியிருந்தார்.—லேவியராகமம் 19:31.
ஒருவேளை சாமுவேல் ஒரு ஆவி ஆளாக இருந்ததாக வைத்துக்கொள்ளலாம். அவர் ஆவிகளோடு பேசுகிற ஒருவரோடு சேர்ந்துகொண்டு கடவுளுடைய சட்டத்தை மீறி சவுலிடம் பேச வருவாரா? சவுலிடம் பேச விரும்பவில்லை என்று யெகோவா ஏற்கெனவே தெளிவாகச் சொல்லியிருந்தார். அப்படியிருக்கும்போது, இறந்துபோன சாமுவேல் மூலமாக சவுலிடம் அவர் எப்படிப் பேசுவார்? அப்படிப் பேச சொல்லி ஆவிகளோடு பேசுகிற ஒருவரால் சர்வவல்லமையுள்ள கடவுளைக் கட்டாயப்படுத்த முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை. உண்மையில், சவுல் பேசியதாகச் சொல்லும் இந்த சாமுவேல் கடவுளுடைய தீர்க்கதரிசி கிடையாது. இறந்துபோன சாமுவேலைப் போல நடித்த பொல்லாத பேய்தான் அது.
மே 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 30-31
“உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்”
யெகோவாவுக்குப் பயந்திருங்கள்—சந்தோஷமாயிருங்கள்!
12 யெகோவா மீதுள்ள பயம், தவறு செய்வதிலிருந்து மட்டுமே தாவீதைத் தடுக்கவில்லை. கஷ்டமான சூழ்நிலைகளில் உறுதியோடும் ஞானமாகவும் செயல்பட அவரைப் பலப்படுத்தியது. சவுலிடமிருந்து தப்பிக்க, தாவீதும் அவருடைய ஆட்களும் பெலிஸ்தரின் நாட்டிலுள்ள சிக்லாக் எனும் நகரத்திலே ஒரு வருடம், நான்கு மாதங்கள் தஞ்சம் புகுந்தார்கள். (1 சாமுவேல் 27:5-7) ஒருசமயம் தாவீதும் அவருடைய ஆட்களும் இல்லாத சமயத்தில், கொள்ளையடிக்க வந்த அமலேக்கியர் நகரத்தைச் சுட்டெரித்துப்போட்டு, அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும், மந்தைகளையும் கொண்டு சென்றுவிட்டார்கள். தாவீதும் அவருடைய ஆட்களும் திரும்பி வந்தபோது, நடந்த சம்பவத்தைப் பார்த்து சத்தமிட்டு அழுதார்கள். அவருடைய ஆட்களின் துக்கம் கோபமாக மாறியபோது, தாவீதின்மேல் கல்லெறிய வேண்டுமென பேசிக்கொண்டார்கள். அவர் மிகுந்த வேதனையில் இருந்தபோதிலும், சோர்ந்துவிடவில்லை. (நீதிமொழிகள் 24:10) அவர் தேவபயமுள்ளவராய் இருந்ததால், யெகோவாவிடம் வேண்டினார், ‘கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டார்.’ கடவுளுடைய உதவியோடு தாவீதும் அவருடைய ஆட்களும் அமலேக்கியரை முறியடித்து அவர்கள் கொண்டுபோன அனைத்தையும் மீட்டார்கள்.—1 சாமுவேல் 30:1-20.
மீட்பு பெறுவதற்காக யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்
14 வாழ்க்கையில் தாவீது பற்பல வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தார். (1 சா. 30:3-6) அவருடைய உணர்ச்சிகளை யெகோவா அறிந்து வைத்திருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:18-ஐயும் 56:8-ஐயும் வாசியுங்கள்.) நம்முடைய உணர்ச்சிகளையும் யெகோவா நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நம் ‘உள்ளம் உடைந்து’ அல்லது ‘நெஞ்சம் நைந்து’ போயிருக்கும்போது அவர் நம்மிடம் நெருங்கி வருகிறார். இது நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது! இது தாவீதுக்கும் ஆறுதல் அளித்தது. அதனால்தான் இவ்வாறு பாடினார்: “உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.” (சங். 31:7) யெகோவா நம் வியாகுலங்களை, அதாவது துன்பங்களை, பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. நமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்கிறார். இதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு வழி—சபைக் கூட்டங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
30:23, 24. எண்ணாகமம் 31:27-ன் அடிப்படையிலான இத்தீர்மானம், இன்று சபையில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களானாலும் சரி, சிறிய சிறிய உதவிகளைச் செய்பவர்களானாலும் சரி, அவர்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அப்படியானால், நாம் எதைச் செய்தாலும், ‘அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்வோமாக.’—கொலோசெயர் 3:24.
மே 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 1-3
“‘வில்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?”
உங்கள்மேல் அதிகாரமுடையவர்களை கனம்பண்ணுங்கள்
9 தாவீது தவறாக நடத்தப்பட்டபோது மனவேதனைப்பட்டாரா? அந்த சமயத்தில் “கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்,” என அவர் யெகோவாவிடம் புலம்பினார். (சங்கீதம் 54:3) அவர் தன் மனதிலிருந்த பாரத்தையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். “என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும் . . . கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும் பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்” என்றார். (சங்கீதம் 59:1-4) இதேபோன்று, அதிகாரத்திலுள்ள ஒருவருக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யாதபோதிலும், அவர் உங்களை கசக்கிப் பிழிவதாக உணர்ந்திருக்கிறீர்களா? தாவீது சவுலை ஒருபோதும் அவமதிக்கவில்லை. சவுல் மரித்தபோதுகூட அதைக் குறித்து சந்தோஷப்படாமல், தாவீது ஒப்பாரி வைத்தார்: “உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள் . . . கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, . . . சவுலுக்காக அழுது புலம்புங்கள்.” (2 சாமுவேல் 1:23, 24) தாவீது சவுலால் மோசமாக நடத்தப்பட்டபோதிலும், யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு உண்மையான மதிப்பை காட்டிய இந்த சம்பவம், நமக்கு சிறந்த முன்மாதிரி.
நம்பிக்கை துரோகம்—கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
8 உண்மையாய் இருந்தவர்களைப் பற்றிய உதாரணங்களும் பைபிளில் நிறைய உள்ளன. அவற்றில் இரண்டு பேருடைய உதாரணங்களையும்... அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களையும்... பற்றிப் பார்ப்போம். முதலாவதாக, உயிருள்ளவரை தாவீதுக்கு உண்மையாய் இருந்த யோனத்தானைப் பற்றிப் பார்ப்போம். இவர் சவுல் ராஜாவின் மூத்த மகன். நியாயமாக, சவுலுக்குப்பின் இவர்தான் அரியணையில் அமர வேண்டும். ஆனால், அடுத்த அரசனாக ஆவதற்கு தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தார். கடவுளுடைய இந்தத் தீர்மானத்தை யோனத்தான் மதித்ததால் தாவீதைத் தனக்குப் போட்டியாக நினைக்காமல் ‘தன் உயிரைப்போலச் சிநேகித்தார்.’ தாவீதுக்கு காலமெல்லாம் ஆதரவளிப்பதாய் உறுதியளித்தார். அதுமட்டுமல்ல, தன்னிடமிருந்த அங்கி, வாள், வில், கச்சை எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்து அரசனுக்குரிய மரியாதையைச் செலுத்தினார். (1 சா. 18:1-4) ‘தாவீதின் கையைத் திடப்படுத்த’ தன்னால் முடிந்த அனைத்தையும் யோனத்தான் செய்தார். தன் உயிரையே பணயம் வைத்து சவுலிடம் தாவீதுக்காகப் பரிந்துபேசினார். உண்மைத்தன்மைக்கு உதாரணமாய்த் திகழ்ந்த யோனத்தான், “நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்” என்று தாவீதிடம் கூறினார். (1 சா. 20:30-34; 23:16, 17) இப்படிப்பட்ட உயிர் நண்பன் இறந்தபோது தாவீது கண்ணீரில் கரைந்ததில் ஆச்சரியமே இல்லை. யோனத்தான்மீது அளவிலா அன்பு வைத்திருந்த தாவீது துக்கத்தில் அவருக்காக ஒரு சோக கீதம் இயற்றினார்!—2 சா. 1:17, 26.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 369 பாரா 2
சகோதரர்
ஒரே மாதிரியான விருப்பங்களும் குறிக்கோள்களும் உள்ளவர்களைக்கூட “சகோதரர்” என்று பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, “சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்று தாவீது எழுதினார். (சங் 133:1) இங்கே, கூடப்பிறந்த சகோதரர்களைப் பற்றி அவர் சொல்லவில்லை. அப்படியென்றால் இரத்த சொந்தமாக இல்லாதவர்களால்கூட ஒற்றுமையாகவும் நண்பர்களாகவும் இருக்க முடியும். இந்தக் காரணத்தால்தான் யோனத்தானைத் தன்னுடைய சகோதரர் என்று தாவீது சொன்னார். அவர்கள் வேறுவேறு பெற்றோருக்குப் பிறந்தவர்களாக இருந்தாலும், ஒருவர்மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள். அவர்களுடைய விருப்பங்களும் ஒரே மாதிரி இருந்தன.—2சா 1:26.
மே 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 4-6
“யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்கு எப்போதும் தேவை”
இரண்டு சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
6:1-7. தாவீது நல்லெண்ணத்துடன்தான் உடன்படிக்கை பெட்டியை வண்டியிலே எடுத்துவர முற்பட்டார் என்றாலும், அது கடவுளுடைய கட்டளையை மீறுவதாக இருந்தது, அதனால் தோல்வியடைந்தது. (யாத்திராகமம் 25:13, 14; எண்ணாகமம் 4:15, 19; 7:7-9) ஊசா நல்லெண்ணத்துடன் உடன்படிக்கை பெட்டியை பிடித்தது, அப்படிப்பட்ட நல்லெண்ணம் கடவுளுடைய தராதரங்களை ஒருபோதும் மாற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது.
யெகோவா எப்போதும் நீதியானதையே செய்கிறார்
20 ஊசாவுக்கு விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை மனதில் வையுங்கள். அந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்துக்கு அடையாளமாக இருந்தது. உரியவர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொடக்கூடாதென நியாயப்பிரமாணம் கட்டளையிட்டிருந்தது, மீறுபவர்களுக்கு மரண தண்டனை எனவும் தெள்ளத்தெளிவாக எச்சரித்திருந்தது. (எண்ணாகமம் 4:18-20; 7:89) ஆகவே, அந்தப் பரிசுத்தப் பெட்டியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ஏனோதானோவென செய்ய வேண்டிய ஒரு வேலையாக இருக்கவில்லை. ஊசா (ஆசாரியனாக இல்லாவிட்டாலும்) ஒரு லேவியனாக இருந்ததால் நியாயப்பிரமாணச் சட்டத்தை அவன் நன்கு அறிந்தவனாக இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்தப் பெட்டி பத்திரமாக இருப்பதற்காக பல வருடங்களுக்கு முன்பு அவனுடைய அப்பாவின் வீட்டிற்கு அது கொண்டு வரப்பட்டிருந்தது. (1 சாமுவேல் 6:20–7:1) சுமார் 70 வருடங்கள் அந்த வீட்டிலேயே அது இருந்தது, அதன் பிறகுதான் அதை அங்கிருந்து எடுத்துவர தாவீது தீர்மானித்தார். ஆகவே, அந்தப் பெட்டி சம்பந்தமான சட்டங்களைச் சிறுவயதிலிருந்தே ஊசா அறிந்திருக்க வேண்டும்.
யெகோவா எப்போதும் நீதியானதையே செய்கிறார்
21 முன்பு குறிப்பிட்டபடி, யெகோவா இருதயத்தைப் பார்க்கிறவர். ஊசா செய்தது ‘அவபக்தியான செயல்’ என பைபிள் சொல்வதால், தன்னலமான ஏதோவொரு நோக்கம் அவனுக்கு இருந்ததை யெகோவா பார்த்திருக்கலாம்; பைபிள் பதிவு அதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடாவிட்டாலும் யெகோவா அதைப் பார்த்திருப்பார். ஒருவேளை அகந்தை பிடித்தவனாக, வரம்பு மீறி நடக்கிறவனாக ஊசா இருந்தானா? (நீதிமொழிகள் 11:2) தன் குடும்பத்தார் பாதுகாத்து வந்த அந்தப் பெட்டியை எல்லாருக்கும் முன் தலைமைதாங்கி எடுத்துச் சென்றதில் அவனுக்குத் தற்பெருமை தலைக்கேறியதா? (நீதிமொழிகள் 8:13) யெகோவா, தமது பிரசன்னத்துக்கு அடையாளமாக விளங்கிய அந்தப் பரிசுத்தப் பெட்டியை விழாதவாறு தடுக்க முடியாது என நினைக்குமளவுக்கு அவன் விசுவாசமற்றவனாக இருந்தானா? காரணம் எதுவாயினும், யெகோவா நீதியானதையே செய்தார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஊசாவின் இருதயத்தில் இருந்த ஏதோவொன்றை அவர் பார்த்திருக்க வேண்டும், அதனால்தான் அவர் உடனடியாக அவனைத் தண்டித்தார்.—நீதிமொழிகள் 21:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w96 4/1 பக். 29 பாரா 1
எப்போதும் உங்கள் பாரத்தை யெகோவாவின்மேல் போட்டுவிடுங்கள்
அரசராக தாவீது இதற்கு ஓரளவு பொறுப்பைத் தாங்க வேண்டியவராக இருந்தார். அவருடைய பிரதிபலிப்பானது, யெகோவாவுடன் நல்ல உறவுடையோராக இருப்போரும்கூட, இக்கட்டான சந்தர்ப்பங்களின்போது, சில சமயங்களில் தவறான முறையில் நடந்துவிடக்கூடுமெனக் காட்டுகிறது. முதலாவதாக, தாவீது கோபமடைந்தார். பின்பு அவருக்குப் பயமுண்டாகியது. (2 சாமுவேல் 6:8, 9, NW) யெகோவாவுடன் அவருக்கிருந்த நம்பிக்கையான உறவு கடுமையாகச் சோதிக்கப்பட்டது. யெகோவாவின் கட்டளைகளை அவர் பின்பற்றாதபோது, தன் பாரத்தை யெகோவாவின்மீது போடத் தவறினதாகத் தோன்றின ஒரு சந்தர்ப்பமாக இது இருந்தது. நம்மைக் குறித்ததில் சில சமயங்கள் நிலைமை இவ்வாறு இருந்திருக்கலாமா? யெகோவாவின் கட்டளைகளை நாம் கவனியாமல் விட்டதனால் விளைவுற்ற பிரச்சினைகளுக்காக எப்போதாவது யெகோவாவை நாம் குற்றங்கூறுகிறோமா?—நீதிமொழிகள் 19:3.
jr-E பக். 125-126 பாரா. 23-24
“யெகோவா எங்கே?” என்று தினமும் கேட்கிறீர்களா?
23 ஆலோசனைக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வதோடுகூட ஆழமாகப் படிக்கிற பழக்கத்தையும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் யெகோவாவுடைய விருப்பத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இந்த விஷயத்தில் எரேமியாவுக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நம்மிடம் முழு பைபிளும் இருக்கிறது. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சரித்திரப் பதிவுகளை எழுதுவதற்கு எரேமியா நன்றாக ஆராய்ச்சி செய்தது போல நாமும் கடவுளுடைய வார்த்தையை நன்றாக அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் நாம் யெகோவாவைத் தேடுகிறோம் என்று அர்த்தம். அதாவது, ஆலோசனைக்காக அவரையே நம்பியிருக்கிறோம் என்று அர்த்தம். அவருடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வது மூலமாக அவர்மேல் விசுவாசம் இருக்கிறது என்பதை நாம் காட்டுவோம். அப்போது, “வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு, தண்ணீர் பக்கமாக வேர்விடும் மரத்தைப் போல” நாம் இருப்போம்.—எரேமியா 17:5-8-ஐ வாசியுங்கள்.
24 பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, வித்தியாசமான சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். என்னென்ன நியமங்கள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று தேடிக் கண்டுபிடியுங்கள். பைபிளில் இருக்கிற சரித்திரப் பதிவுகளை... கட்டளைகளை... நியமங்களை... பொன்மொழிகளை... வாசிக்கும்போது ஒவ்வொரு நாளும் அவற்றை அடிப்படையாக வைத்து எப்படித் தீர்மானங்களை எடுக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள். இப்படி நாம் யெகோவாவைத் தேடும்போது எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும், அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதை தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலமாக அவர் தெரியப்படுத்துவார். “இதுவரை தெரியாததும் புரியாததுமான” விஷயங்களை பைபிள் மூலமாகப் புரிய வைப்பார்.—எரே. 33:3.
மே 30–ஜூன் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 7-8
“தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்”
‘உனது ஆட்சி . . . தொடரும்’
தாவீதின் உள்ளார்ந்த ஆசையைப் பார்த்து யெகோவா நெகிழ்ந்துபோகிறார். தாவீதின் பக்தியை அங்கீகரிக்கும் விதத்திலும் தாம் முன்னுரைத்ததற்கு இசைவாகவும், அவர் தாவீதுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்கிறார்; அதன்படி, என்றென்றும் அரசாளப் போகும் ஒருவரை தாவீதின் பரம்பரையில் தோன்றச் செய்யப் போவதாக அவர் சொல்கிறார். கடவுள் கொடுத்த வாக்குறுதியை தாவீதிடம் நாத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!” (வசனம் 16, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்த ஒப்பந்தத்தின்படி, என்றென்றும் அரசாளும் அந்த நிரந்தர வாரிசு யார்?—சங்கீதம் 89:20, 29, 34-36.
‘உனது ஆட்சி . . . தொடரும்’
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, தாவீதின் வம்சத்தில் வந்தவர். இயேசுவின் பிறப்பைப் பற்றி ஒரு தேவதூதர் அறிவிக்கையில் இவ்வாறு சொன்னார்: “தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; யாக்கோபின் குடும்பத்தின் மீது அவர் என்றென்றும் ராஜாவாக ஆளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது.” (லூக்கா 1:32, 33) ஆகவே, தாவீதுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றமடைகிறது. எனவே, மனிதர்கள் தேர்ந்தெடுப்பதால் அவர் அரசாளுவதில்லை; ஆனால், கடவுளுடைய வாக்குறுதியின் அடிப்படையில் என்றென்றும் ஆளுவதற்கான உரிமை பெற்றிருப்பதால் அரசாளுகிறார். கடவுளுடைய வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறும் என்பதை நாம் மனதில் வைப்போமாக.—ஏசாயா 55:10, 11.
கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
14 தாவீதிடம் யெகோவா ஒரு வாக்குக் கொடுத்தார். அதைத்தான் தாவீதோடு செய்த ஒப்பந்தம் என்று சொல்கிறோம். (2 சாமுவேல் 7:12, 16-ஐ வாசியுங்கள்.) தாவீது எருசலேமின் ராஜாவாக இருந்தபோது யெகோவா இந்த ஒப்பந்தத்தைச் செய்தார். மேசியா தாவீதுடைய வம்சத்தில்தான் வருவார் என்று வாக்குக் கொடுத்தார். (லூக். 1:30-33) கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் ‘உரிமையுள்ளவர்’ தாவீதின் சந்ததியில்தான் வருவார் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. (எசே. 21:25-27) தாவீதுடைய சிங்காசனம் ‘என்றென்றைக்கும் உறுதியாக’ இருக்கும்; தாவீதுடைய சந்ததியில் வருபவர் ‘என்றென்றைக்கும் இருப்பார்; அவர் சிங்காசனம் சூரியனைப்போல நிலைநிற்கும்.’ இயேசு ஆட்சி செய்யும்போது இந்த வார்த்தைகள் நிறைவேறும். (சங். 89:34-37) இயேசு எப்போதுமே நீதியாக ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சியில் ஒருநாளும் அநீதி இருக்காது. அந்த ஆட்சியால் வரும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் இருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 206 பாரா 2
கடைசி நாட்கள்
பிலேயாமின் தீர்க்கதரிசனம். இஸ்ரவேலர்கள், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போவதற்கு முன்னால் மோவாபின் ராஜாவான பாலாக்கைப் பற்றி பிலேயாம் ஒரு தீர்க்கதரிசனம் சொன்னான்: “வாருங்கள், எதிர்காலத்தில் இந்த ஜனங்கள் [இஸ்ரவேலர்கள்] உங்களுடைய ஜனங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைச் சொல்கிறேன். . . . யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும். இஸ்ரவேலிடமிருந்து ஒரு செங்கோல் எழும்பும். மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார். வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.” (எண் 24:14-17) மோவாபியர்களை தாவீது ராஜா தோற்கடித்து அவர்களைத் தன்னுடைய வேலைக்காரர்களாக ஆக்கியபோது அந்தத் தீர்க்கதரிசனம் சிறிய அளவில் நிறைவேறியது. அந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்த நட்சத்திரம் தாவீது ராஜாதான்.—2சா 8:2.
ஜூன் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 9-10
“தாவீது மாறாத அன்பைக் காட்டினார்”
சந்தோஷம் அதை நீங்களும் கண்டுபிடிக்கலாம்
“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW], தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான் [சந்தோஷமுள்ளவனாயிருப்பான், NW]” என்று தாவீது எழுதினார். (சங்கீதம் 41:1, 2) தாவீதின் உயிர் நண்பனான யோனத்தானின் மகன் மேவிபோசேத், முடவனாயிருந்தான். இவனுக்கு தாவீது அன்பும் கரிசனையும் காட்டினார். சிறுமைப்பட்டவரிடம் இப்படிப்பட்ட மனப்பான்மையைத்தான் காட்ட வேண்டும், அல்லவா?—2 சாமுவேல் 9:1-13.
இரண்டு சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:1, 6, 7. தாவீது தன் வாக்கைக் காப்பாற்றினார். நாமும்கூட நம்முடைய வாக்கைக் காப்பாற்ற முயல வேண்டும்.
மாம்சத்திலிருந்த முட்களை பொறுத்துக்கொண்டார்கள்
10 சில ஆண்டுகளுக்குப் பின் தாவீது ராஜா, தனக்கு யோனத்தானிடம் இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, மேவிபோசேத்துக்கு அன்புள்ள தயவைக் காட்டினார். சவுலின் சொத்து முழுவதையும் அவனுக்குக் கொடுத்து, சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அந்த நிலத்தின் பராமரிப்பாளனாக தாவீது நியமித்தார். மேலும், “நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்” என்றும் மேவிபோசேத்திடம் சொன்னார். (2 சாமுவேல் 9:6-10) தாவீது காட்டிய அன்புள்ள தயவு மேவிபோசேத்துக்கு ஆறுதலளித்து, அவனுடைய ஊனத்தின் வேதனையைக் குறைக்க உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எத்தகைய சிறந்த பாடம்! மாம்சத்தில் ஒரு முள்ளோடு போராடுகிறவர்களுக்கு நாமுங்கூட அன்புள்ள தயவைக் காட்ட வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 266
தாடி
அந்தக் காலத்தில் கிழக்கத்திய நாடுகளில் ஆண்கள் என்றால் தாடி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைக் கவுரவமாக நினைத்தார்கள். ஆனால், பொய்க் கடவுள்களை வணங்குகிறவர்களுக்குத் தங்களுடைய தாடியை மழிப்பதோ வெட்டுவதோ ஒரு மதப் பழக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் “கிருதாவை” சிரைப்பதையும் தாடியை வெட்டி குறுந்தாடி வைப்பதையும் கடவுளுடைய சட்டம் தடை செய்தது.—லேவி 19:27; 21:5.
ஜூன் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 11-12
“தவறான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்”
சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
10 தாவீது ராஜாவும் பேராசை என்ற கண்ணியில் விழுந்துவிட்டார். வசதிவாய்ப்புகள்... பேர்புகழ்... போர்களில் வெற்றி... என்று யெகோவா அவருக்கு எல்லாமே கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆசீர்வாதங்கள், “கணக்கில் அடங்காதவை” என்று தாவீது சொன்னார். (சங். 40:5) ஆனால், ஒருகட்டத்தில் யெகோவா கொடுத்த எல்லாவற்றையும் தாவீது மறந்துவிட்டார். அவருக்கு என்ன இருந்ததோ அதில் அவர் திருப்தியாக இல்லை. இன்னும் நிறைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஏற்கெனவே அவருக்கு நிறைய மனைவிகள் இருந்தும் இன்னொருவருடைய மனைவிமேல் ஆசைப்பட்டார். ஏத்தியனான உரியாவின் மனைவி பத்சேபாள்தான் அந்தப் பெண். சுயநலத்தோடு பத்சேபாளுடன் அவர் உடலுறவு கொண்டார். அதனால், அவள் கர்ப்பமானாள். இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தது பத்தாது என்று உரியாவைக் கொல்லவும் ஏற்பாடு செய்தார்! (2 சா. 11:2-15) தான் செய்துகொண்டிருந்ததை எல்லாம் யெகோவா கவனிக்க மாட்டார் என்று ஒருவேளை தாவீது நினைத்திருப்பாரோ? ரொம்ப வருடங்களாக தாவீது யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், இந்தச் சமயத்தில் சுயநலத்தோடும் பேராசையோடும் நடந்துவிட்டார். அதன் விளைவுகளையும் அனுபவித்தார். ஆனால், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர் செய்த தவறை உணர்ந்து மனம் திரும்பினார். மறுபடியும் யெகோவாவின் தயவை அனுபவித்தார். அதற்காக, யெகோவாவுக்கு அவர் எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பார்!—2 சா. 12:7-13.
யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்—ஏன், எப்படி?
15 தாவீதை, அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு இஸ்ரவேல் தேசத்துக்குமே தலைவனாக யெகோவா நியமித்திருந்தார். ராஜாவாக இருந்ததால், தாவீதுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. சிலசமயங்களில், அந்த அதிகாரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தினார்; படுமோசமான தவறுகளைச் செய்தார். (2 சா. 11:14, 15) ஆனாலும், யெகோவாவின் கண்டிப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார். தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி ஜெபம் செய்தார். யெகோவாவின் அறிவுரைகளின்படி நடப்பதற்கு எல்லா முயற்சியும் எடுத்தார். (சங். 51:1-4) அதோடு, ஆண்களிடமிருந்து மட்டுமல்ல, பெண்களிடமிருந்தும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு மனத்தாழ்மையோடு இருந்தார். (1 சா. 19:11, 12; 25:32, 33) தவறுகளிலிருந்து தாவீது பாடம் கற்றுக்கொண்டார், யெகோவாவின் சேவையை முதலிடத்தில் வைத்தார்.
கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!
7 கடவுளுடைய சட்டங்களை மீறுவதால் ஏற்படுகிற மோசமான விளைவுகளை அனுபவித்த பிறகுதான், சரி எது தவறு எது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லவே இல்லை. கடந்த காலத்தில் தவறு செய்தவர்களுடைய அனுபவங்களிலிருந்தே நாம் அதைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய அனுபவங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. “ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்” என்று நீதிமொழிகள் 1:5 சொல்கிறது. கடவுளிடமிருந்து வரும் இந்த அறிவுரை எவ்வளவு அருமையானது, இல்லையா? இப்போது, தாவீதின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதாலும், பத்சேபாளுடன் விபச்சாரம் செய்ததாலும் அவர் எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்! (2 சா. 12:7-14) இந்தப் பதிவை வாசிக்கும்போது, உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த எல்லா பிரச்சினைகளையும் தாவீது எப்படி தவிர்த்திருக்கலாம்? அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா, நான் என்ன செய்வேன்? தாவீது மாதிரி நடந்துக்குவேனா, இல்ல யோசேப்பு மாதிரி நடந்துக்குவேனா?’ (ஆதி. 39:11-15) பாவத்தால் வரும் பயங்கர விளைவுகளைப் பற்றி யோசித்துப்பார்த்தால், நம்மால் “கெட்டதை” இன்னுமதிகமாக ‘வெறுக்க முடியும்.’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 590 பாரா 1
தாவீது
தாவீதும் பத்சேபாளும் செய்ததை யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவர்கள் செய்த தப்பை மூடிமறைக்க வேண்டுமென்று நினைக்காமல், அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். தாவீதும் பத்சேபாளும் செய்த தப்புக்கு மனித நீதிபதிகளைத் தீர்ப்பு கொடுக்க அனுமதித்திருந்தால் திருச்சட்டத்தின்படி அவர்கள் இரண்டு பேருமே கொலை செய்யப்பட்டிருப்பார்கள். (உபா 5:18; 22:22) வயிற்றில் இருந்த குழந்தையும் அந்தத் தாயோடு செத்துப்போயிருக்கும். ஆனால், இந்த வழக்குக்குத் தானே தீர்ப்பு கொடுக்க யெகோவா முடிவு செய்தார். தாவீதோடு அரசாங்க ஒப்பந்தம் செய்திருந்ததால் அவருக்கு யெகோவா இரக்கம் கட்டினார். (2சா 7:11-16) இன்னொரு காரணம், மற்றவர்களுக்கு தாவீது இரக்கம் காட்டியிருந்தார். (1சா 24:4-7; யாக் 2:13-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்) அதுமட்டுமல்ல தாவீதும் பத்சேபாளும் மனம் திருந்தியதையும் யெகோவா பார்த்தார். (சங் 51:1-4) அதனால் தாவீதை மன்னித்தார். அதற்காக அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. “உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்” என்று நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார்.—2சா 12:1-12.
ஜூன் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 13-14
“அம்னோனின் சுயநலம் விபரீதத்தில்போய் முடிந்தது”
it-1-E பக். 32
அப்சலோம்
அம்னோனின் கொலை. அப்சலோமின் தங்கை தாமார் பேரழகியாக இருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணனான அம்னோன் அவளுக்காக ரொம்ப ஏங்கினான். அதனால், நோயாளி மாதிரி நடித்துக்கொண்டு தாமாரைத் தன்னிடம் அனுப்பும்படி கேட்டான். அவளும் வீட்டுக்கு வந்து அவனுக்காக சமைத்து கொடுத்தாள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளை அவன் கெடுத்தான். அதற்குப் பிறகு அவள்மேல் அவனுக்கு இருந்த மோகம் வெறுப்பாக மாறிவிட்டது. அதனால், அவளைத் துரத்தியடித்து அம்போவென்று விட்டுவிட்டான்.—2சா 13:1-20.
சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்
11 ஆசையை அடக்காமல் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவர்களுடைய உதாரணங்களும் பைபிளில் இருக்கின்றன. சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாதபோது நாம் எப்படி மோசமான விளைவுகளைச் சந்திப்போம் என்பதை பைபிள் காட்டுகிறது. நீங்களும் கிம்முடைய சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் முட்டாள் வாலிபனைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அம்னோனைப் பற்றியும் அவனுடைய நடத்தையால் ஏற்பட்ட பயங்கரமான விளைவுகளைப் பற்றியும்கூட யோசித்துப் பாருங்கள். (2 சா. 13:1, 2, 10-15, 28-32) அப்படிப்பட்ட உதாரணங்களைப் பற்றிப் பெற்றோர்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துபேச வேண்டும்; அப்போது, சுயக்கட்டுப்பாட்டையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு அவர்களால் உதவ முடியும்.
it-1-E பக். 33 பாரா 1
அப்சலோம்
தாமாரை அம்னோன் கெடுத்த சம்பவம் நடந்து இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. ஆடுகளை மயிர் கத்தரிப்பதற்கான நாள் வந்தபோது எருசலேமுக்கு வடகிழக்கில் 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற பாகால்-ஆசோரில் அப்சலோம் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். தாவீதையும் அவருடைய மகன்கள் எல்லாரையும் அந்த விருந்துக்கு அவன் கூப்பிட்டான். தன்னால் வரமுடியாது என்று தாவீது சொன்னார். அதனால் தாவீதுக்குப் பதிலாக அவருடைய மூத்த மகன் அம்னோனை அனுப்பச் சொல்லி அப்சலோம் கட்டாயப்படுத்தினான். (நீதி 10:18) விருந்தில் அம்னோன் “திராட்சமது குடித்து குஷியாக இருக்கும்போது” அவனைத் தீர்த்துக்கட்டும்படி தன்னுடைய வேலைக்காரர்களிடம் அப்சலோம் சொன்னான்.—2சா 13:23-38.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g04-E 12/22 பக். 8-9
எது உண்மையான அழகு?
அப்சலோம் பேரழகனாக இருந்தான். “இஸ்ரவேல் தேசத்தில், அப்சலோமைப் போல் பேரழகன் யாருமே இல்லை. எல்லாரும் அவனுடைய அழகைப் புகழ்ந்தார்கள். உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவனிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (2 சாமுவேல் 14:25) ஆனாலும் அவனுடைய சுபாவம் மற்றவர்களைக் கவருவதுபோல் இல்லை. ஏனென்றால், பேர்புகழுக்காகவும் பதவிக்காகவும் அவன் ஆசைப்பட்டான். அதனால் தன்னுடைய அப்பாவையே எதிர்த்து கலகம் செய்தான். அப்பாவிடமிருந்து ஆட்சியைப் பறிக்க நினைத்தான். அதுமட்டுமல்ல, அப்பாவின் மறுமனைவிகளோடு உறவு வைத்துக்கொண்டான். இப்படி நடந்துகொண்டதால் யெகோவாவுக்கு அவன்மேல் பயங்கர கோபம் வந்தது. கடைசியில், ரொம்ப வேதனைப்பட்டு சாக வேண்டிய நிலைமை அப்சலோமுக்கு வந்தது.—2 சாமுவேல் 15:10-14; 16:13-22; 17:14; 18:9, 15.
இப்படிப்பட்ட ஒருவரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்வீர்களா? கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள். அவரைப் பார்த்தாலே உங்களுக்கு வெறுப்புதான் வரும். அப்சலோம் திமிர் பிடித்தவனாக, உண்மையில்லாதவனாக நடந்துகொண்டான். அவனுடைய அழகே அவனை அழிவுக்கு கொண்டுபோய்விட்டது. அவனைப் போல் இல்லாமல், ஞானமாக நடந்துகொண்ட... நல்ல குணங்களைக் காட்டிய... நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. ஆனால், அவர்களுடைய தோற்றத்தைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஏனென்றால், அவர்களுடைய உண்மையான அழகு அவர்களுக்குள் இருந்த முத்தான குணங்கள்தான்.
ஜூன் 27–ஜூலை 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 15-17
“கர்வம் வந்ததால் அப்சலோம் கலகம் செய்தான்”
it-1-E பக். 860
முன்னோடிகள்
பூர்வ காலங்களில் இஸ்ரவேல் போன்ற நாடுகளில் ராஜாவுடைய ரதத்துக்கு முன்னால் சிலர் ஓடுவார்கள். அவர்கள் ராஜா வருவதை அறிவிப்பு செய்து, மக்களைத் தயார்படுத்துவார்கள். அதுமட்டுமல்ல, ராஜாவுக்குத் தேவையான மற்ற உதவிகளையும் செய்வார்கள். (1சா 8:11) அப்சலோமும் அதோனியாவும் ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். எப்படியென்றால், பொதுவாக ராஜாவுடைய ரதத்துக்கு முன்னால்தான் ஆட்கள் ஓடுவார்கள். ஆனால் அப்சலோமும் அதோனியாவும் தங்களுடைய ரதத்துக்கு முன்னால் 50 ஆட்களை ஓட வைத்தார்கள். மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும், தாங்கள்தான் அடுத்த ராஜா என்று அவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தார்கள்.—2சா 15:1; 1ரா 1:5.
விடுதலை அளிக்கும் கடவுளை வணங்குங்கள்
5 மற்றவர்களைக் கெடுத்தவர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் அப்சலோம், தாவீது ராஜாவின் மகன். அவன் அழகென்றால் அப்படியொரு அழகு. ஆனால், சாத்தானைப் போல் அவனுடைய மனதுக்குள்ளும் பேராசை தலைதூக்கியது. தன் தந்தையின் சிம்மாசனத்தில் உட்காரத் துடியாய்த் துடித்தான். அரச பீடத்தில் அமரும் உரிமை தனக்கு இல்லை என்பது தெரிந்தும் அதற்காக ஆசைப்பட்டான். அரியணையை அபகரிக்கும் வெறியில், இஸ்ரவேலர்மீது தனக்கு ரொம்ப அக்கறை இருப்பது போலவும்... அரசவையில் உள்ள யாருக்குமே அந்தளவுக்கு அக்கறை இல்லாதது போலவும்... கபட நாடகம் ஆடினான். ஏதேன் தோட்டத்தில்... பிசாசு செய்தது போலவே ‘தன்னை நல்லவனாக’ காட்டிக்கொண்டு தன் அப்பாமீது அபாண்டமாகப் பழிசுமத்தினான்.—2 சா. 15:1-5.
it-1-E பக். 1083-1084
எப்ரோன்
சில வருஷங்களுக்குப் பிறகு தாவீதுடைய மகன் அப்சலோம் எப்ரோனுக்குப் போய், தன் அப்பாவின் ஆட்சியைப் பறிப்பதற்கு முயற்சி செய்தான். ஆனால் அது தோல்வியடைந்தது. (2சா 15:7-10) அவன் ஏன் எப்ரோனுக்குப் போனான்? ஒருவேளை அது அவன் பிறந்த ஊராக இருந்திருக்கலாம். அதுமட்டுமல்ல, ஒருகாலத்தில் எப்ரோன்தான் யூதாவுடைய தலைநகரமாக இருந்தது. இப்படி சரித்திரத்தில் ரொம்ப முக்கியமான ஒரு இடமாக எப்ரோன் இருந்ததால் அவன் அங்கே போயிருக்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?
11 மற்றவர்கள் நம்மைப் பற்றிய அரைகுறையான விஷயங்களை மட்டுமே பரப்பியதால், நாம் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேவிபோசேத்துக்கு அதுதான் நடந்தது! அவருடைய தாத்தா சவுலின் சொத்துகள் எல்லாவற்றையும் தாவீது ராஜா மேவிபோசேத்துக்குத் தாராளமாகக் கொடுத்தார். (2 சா. 9:6, 7) ஆனால் பிற்பாடு, அவரைப் பற்றிய தவறான தகவலை தாவீது ராஜா கேள்விப்பட்டார். அந்தத் தகவல் சரியா தவறா என்று பார்க்காமல், அவருக்குக் கொடுத்த சொத்துகளை தாவீது இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டார். (2 சா. 16:1-4) ஆனால், மேவிபோசேத்திடம் பேசிய பிறகுதான், தான் செய்தது தவறு என்பது தாவீதுக்குப் புரிந்தது. பிறகு, சொத்துகள் சிலவற்றைத் திரும்பவும் அவருக்குக் கொடுத்தார். (2 சா. 19:24-29) தாவீது, தனக்குக் கிடைத்த பாதித் தகவலை வைத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வந்ததற்குப் பதிலாக, நேரம் எடுத்து உண்மைகளை அலசி ஆராய்ந்திருந்தால், மேவிபோசேத்துக்கு இப்படியொரு அநீதி நடந்திருக்குமா?