ஜூன் 22-28, 2026
பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்
‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளிடமிருந்து’ கற்றுக்கொள்ளுங்கள்
“[கடவுளிடமிருந்து] நமக்கு ஆறுதல் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட சோதனையில் இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது.”—2 கொ. 1:4.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவிடம் இருந்தும் அவரைப் பின்பற்றியவர்களிடம் இருந்தும் மற்றவர்களை எப்படி ஆறுதல்படுத்தலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. நாம் ஏன் மற்றவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்?
நாம் எல்லாருமே ‘பலவிதமான சோதனைகளால் வேதனைப்பட்டு’ கொண்டிருக்கிறோம். (1 பே. 1:6) அதனால், நமக்கு ஆறுதலும் உற்சாகமும் தேவைப்படுகிறது. மற்றவர்கள் நமக்கு ஆறுதல் கொடுக்கும்போது நம் மனதுக்கு இதமாக இருக்கும், அதற்கு நாம் நன்றியோடு இருப்போம். அப்படியென்றால், கஷ்டத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் நாம் உடனே ஆறுதல் கொடுக்க வேண்டும். (மத். 7:12) ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிற யெகோவா, “எப்பேர்ப்பட்ட சோதனையில்” இருக்கிறவர்களுக்கும் எப்படி ஆறுதல் தரலாம் என்று நமக்குக் காட்டியிருக்கிறார். ‘ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்தும்போது’ நாம் அவர் மாதிரியே நடந்துகொள்ளலாம். (2 கொ. 1:3, 4; 1 தெ. 4:18) சகோதர சகோதரிகள்மேல் இருக்கிற அன்பினால்தான் நாம் அவர்களை ஆறுதல்படுத்துகிறோம், ஏதோ கடமைக்காக இல்லை. இந்தக் கட்டுரையில் மூன்று விஷயங்களைப் பார்ப்போம். (1) பைபிளில் இருக்கும் ஆறுதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? (2) நாம் எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம்? (3) நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆறுதலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
2. பைபிளில் “ஆறுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கு என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றன?
2 பைபிளில் “ஆறுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. “உற்சாகப்படுத்துவது,” “ஊக்கப்படுத்துவது,” “ஒரு விஷயத்தைச் செய்ய தூண்டுவது” போன்ற அர்த்தங்கள் இருக்கின்றன. (ரோ. 12:8) ஆனால், அதற்கான நேரடி அர்த்தம், ‘ஒருவருக்கு உதவ அவர் பக்கத்தில் போய் நிற்பது.’ அப்படியென்றால், கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு அவருடைய நண்பர் ஓடிவந்து பக்கத்தில் நின்று, தேவையான உதவிகளைச் செய்வதுதான் நம் ஞாபகத்துக்கு வரும். அவர் தன் நண்பரை வித்தியாசமான விதங்களில் ஆறுதல்படுத்தலாம். எந்த விதத்தில் ஆறுதல்படுத்தினாலும் சரி, அந்த நண்பரைப் பலப்படுத்துவதும், அவரை உற்சாகப்படுத்துவதும்தான் அவருடைய நோக்கம்.
3. மற்றவர்களை ஆறுதல்படுத்துவதில் பர்னபா எப்படி நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)
3 ஒரு பைபிள் உதாரணத்தைப் பார்க்கலாம். யோசேப்பு என்று ஒரு கிறிஸ்தவர் இருந்தார். அவர் எப்போதும் மற்றவர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்கு உதவிகள் செய்தார். அதனால், அப்போஸ்தலர்கள் அவருக்கு பர்னபா என்று பெயர் வைத்தார்கள். அதற்கு “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். (அப். 4:36) இந்தப் பெயர் அவருக்கு ரொம்பப் பொருத்தமாக இருந்தது. அதனால்தான் பைபிளில் இந்த வசனத்தைத் தவிர வேறு எங்குமே அவருடைய சொந்த பெயர் வரவில்லை. பர்னபா, அவருடைய பெயருக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்தார். நிறைய சமயங்களில் சகோதர சகோதரிகளுக்கு ஓடிப்போய் உதவி செய்தார். உதாரணத்துக்கு, புதிதாக கிறிஸ்தவராக ஆகியிருந்த சவுல் எருசலேமுக்கு வந்தபோது சீஷர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், முன்பு அவர் கிறிஸ்தவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்தி இருந்ததால் சீஷர்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அப்போது பர்னபாதான் சவுலின் உதவிக்கு வந்தார், அவரை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு போனார்.—அப். 9:26-28.
பர்னபா தன் பெயருக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்தார் (பாரா 3)
மற்றவர்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது...
4. ஆறுதல்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழி என்ன? (ரோமர் 1:11, 12)
4 முடிந்தளவுக்கு நேரில் போய் பாருங்கள். மற்றவர்களை ஆறுதல்படுத்த யெகோவா தன் ஊழியர்களைப் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, எலியா தீர்க்கதரிசி நொந்து போயிருந்தபோது அவரை உற்சாகப்படுத்த யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார். (1 ரா. 19:4-7) அப்போஸ்தலன் பவுலும், சகோதர சகோதரிகளை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவது ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். (ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.) அதனால் ஒருவரை ஆறுதல்படுத்த, அவரை நேரில் போய் பாருங்கள். தேவையான நேரத்தைக் கொடுத்து அவருக்கு உதவுங்கள். (1 கொ. 16:7) ஒருவேளை நேரில் போக முடியவில்லை என்றாலும், ஃபோன் செய்தோ, கடிதம் அல்லது கார்டு எழுதியோ மெசேஜ் அனுப்பியோ உங்களால் அவரை ஆறுதல்படுத்த முடியும். இவைகூட அவரைத் தூக்கி நிறுத்தும். சகோதர சகோதரிகளுக்கு உதவ நாம் தயாராக இருந்தால், அவர்களை ஆறுதல்படுத்த யெகோவா நம்மைப் பயன்படுத்துவார்.
5. என்ன மாதிரி சவால்கள் நமக்கு வரலாம்?
5 கடைசி நாட்களில் நிலைமைகள் இன்னும் மோசமாகும்போது, ஆறுதல் தேவைப்படுகிற சகோதர சகோதரிகளை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவது நமக்கு இன்னும் சவாலாக இருக்கலாம். எபேசுவைச் சேர்ந்த ஒநேசிப்போருவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ரோமில் கைதியாக இருந்த பவுலை ஆறுதல்படுத்த அவர் நினைத்தார். ஆனால் அங்கு போவது ஆபத்தானதாக இருந்தது. ஏனென்றால், அவர் கைது செய்யப்படலாம் அல்லது கொலைகூட செய்யப்படலாம். இருந்தாலும், ஒநேசிப்போரு ரொம்ப முயற்சி எடுத்து பவுலைக் தேடிக் கண்டுபிடித்தார், அவரைப் பலப்படுத்தினார். (2 தீ. 1:16-18) ஒநேசிப்போருவைப் போல, இன்று ரஷ்யாவில் இருக்கும் சகோதர சகோதரிகளும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளை விசாரணைக்காகக் கூட்டிக்கொண்டு போகும்போது, அவர்களை உற்சாகப்படுத்த மற்ற சகோதர சகோதரிகள் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப் போவதால் அவர்களையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த நேரில் போகிறார்கள். உங்களுக்கும் இந்த மாதிரி சூழ்நிலை வரலாம். அதனால், சகோதர சகோதரிகளுக்கு உதவ இப்போதே நீங்கள் தயாராகலாம். அதற்கு பைபிள் காலத்திலும் நம் காலத்திலும் இருக்கிற கடவுளுடைய ஊழியர்களைப் பற்றிப் படித்துப் பாருங்கள். அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்தார்கள், துன்புறுத்தல் வந்தபோதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
6. நாம் எப்படி யெகோவா மாதிரி ஆறுதல்படுத்தலாம்? (படத்தையும் பாருங்கள்.)
6 காதுகொடுத்துக் கேளுங்கள். ஒருசமயம், எலியா தீர்க்கதரிசி அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நினைத்து பயந்தார். அப்போது தன் மனதில் இருந்ததை எல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். எதை நினைத்து எலியா வேதனைப்படுகிறார் என்று யெகோவாவுக்கு முன்பே தெரியும். ஆனாலும், எலியா மனந்திறந்து பேசியதை யெகோவா கவனித்துக் கேட்டார். சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னபோதுகூட யெகோவா அதைப் பொறுமையாக கேட்டார். (1 ரா. 19:9, 10, 14) ஆபகூக் தீர்க்கதரிசியும் தன்னுடைய கவலைகளையும், சந்தேகங்களையும் சொன்னபோது யெகோவா காதுகொடுத்துக் கேட்டார். ஆபகூக் சொன்னது யெகோவாவுடைய அதிகாரத்தையே கேள்வி கேட்பதுபோல் இருந்தாலும் யெகோவா அவர்மேல் கோபப்படவில்லை. அவர் சொன்னதைக் கவனித்துக் கேட்டார். (ஆப. 1:2, 3) அதேபோல் இன்றும், நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும், நாம் செய்யும் ஜெபங்களைக் கவனித்துக் கேட்கிறார். நாம் எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்? சகோதர சகோதரிகள் பேசும்போது மரியாதையோடு கவனித்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது குறுக்கே பேசக் கூடாது. அவர்கள் முன்பின் யோசிக்காமல் ஏதாவது பேசினால்கூட கோபப்படக் கூடாது. சொன்னதையே திரும்பத்திரும்ப சொன்னாலும் பொறுமையாக அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.—யாக். 1:19; பிர. 7:9.
சகோதர சகோதரிகள் பேசும்போது கவனித்துக் கேட்பதன்மூலம் யெகோவாவைப் போல நடந்துகொள்ளுங்கள் (பாரா 6)
7. கஷ்டத்தில் இருக்கிற ஒருவருக்கு உண்மையிலேயே என்ன உதவி தேவை என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
7 ஒருவருக்கு உண்மையிலேயே என்ன உதவி தேவை என்று தெரிந்துகொள்ளுங்கள். யெகோவா மாதிரி நம்மால் ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாது. அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்டால்தான் உண்மையிலேயே அவர்களுக்கு என்ன தேவை என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுமோ, அதே உதவிதான் அவர்களுக்கும் தேவைப்படும் என்று நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள். நாம் யாருமே ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்படும். அதனால், நன்றாக நேரம் எடுத்து அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அன்பாகச் சாதுரியமாகச் சில கேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொள்ளுங்கள்.—நீதி. 20:5.
8. லாசரு இறந்தபோது இயேசு எப்படி மார்த்தாளையும் மரியாளையும் ஆறுதல்படுத்தினார்? (படங்களையும் பாருங்கள்.)
8 லாசரு இறந்தபோது மார்த்தாளையும் மரியாளையும் இயேசு எப்படி ஆறுதல்படுத்தினார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இழப்பு ஒன்றுதான். ஆனால் வேறு வேறு விதங்களில் இயேசு அவர்களை ஆறுதல்படுத்தினார். மார்த்தாள் அவரிடம் வந்து பேசியபோது, உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி இயேசு சொன்னார். யெகோவா செய்திருக்கும் இந்த அன்பான ஏற்பாட்டின்மேல் அவளுக்கு இருந்த விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தினார். ஆனால் மரியாள் அவரிடம் அழுதுகொண்டே வந்தபோது இயேசு உயிர்த்தெழுதலைப் பற்றி அவளிடம் பேசியதாக பைபிளில் எங்குமே இல்லை. அதற்குப் பதிலாக, மரியாளோடு சேர்ந்து அழுதார், “[லாசருவை] எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். (யோவா. 11:20-35) நமக்கு என்ன பாடம்? வேதனையில் இருக்கிற ஒருவரை ஆறுதல்படுத்தும்போது, அவருக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாருக்கும் ஒரேமாதிரி ஆறுதலைக் கொடுக்கக் கூடாது.
மற்றவர்களை ஆறுதல்படுத்தும்போது, உண்மையிலேயே அவர்களுக்கு என்ன தேவை என்று தெரிந்துகொள்ளுங்கள் (பாரா 8)a
9. மற்றவர்களை ஆறுதல்படுத்த ஏன் பைபிளைப் பயன்படுத்த வேண்டும்? (ரோமர் 15:4, 5)
9 பைபிளைப் பயன்படுத்துங்கள். கஷ்டத்தில் இருக்கிற ஒருவருக்கு பைபிளில் இருந்து ஆறுதலான விஷயங்களைக் காட்டும்போது அது அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். (ரோமர் 15:4, 5-ஐ வாசியுங்கள்.) அந்த நம்பிக்கை, அவருக்கு இன்னும் அதிகமான ஆறுதலையும் உற்சாகத்தையும் தரும். (ஏசா. 40:31) ஒருவரை உற்சாகப்படுத்தும் பைபிள் வசனங்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஆறுதல்படுத்த உதவுகிற பைபிள் வசனங்களைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் புத்தகத்தில் “ஆறுதல்” என்ற தலைப்பின் கீழ் இந்த மாதிரி வசனங்களை நீங்கள் பார்க்கலாம். ‘மற்றவர்களை ஆறுதல்படுத்த, பைபிளை நான் நன்றாகப் பயன்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து தேவையான நேரத்தில் சரியான வசனங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.—யோவா. 14:26.
10. ஒருவரை உற்சாகப்படுத்தும்போது நாம் ஏன் கரிசனையோடு பேச வேண்டும்?
10 கரிசனையாகப் பேசுங்கள். கஷ்டத்தில் இருக்கிற ஒருவரை ஆறுதல்படுத்தும்போது, சிலசமயம் அவர் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள நாம் உதவ வேண்டியிருக்கலாம். அதனால், அவரிடம் பேசுவதற்கு முன்பு நன்றாக யோசியுங்கள். உங்களுடைய வார்த்தைகள் அவரைக் குணப்படுத்த வேண்டுமே தவிர அவரைக் காயப்படுத்திவிடக் கூடாது. (நீதி. 12:18) இந்த விஷயத்திலும் யெகோவா ஒரு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். மறுபடியும் எலியாவின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவரைத் தவிர வேறு யாரும் யெகோவாவை வணங்கவில்லை என்றும், தீர்க்கதரிசியாக அவர் செய்த வேலைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் எலியா நினைத்தார். எலியா சொன்னது தவறு என்று யெகோவா அவரை நேரடியாகக் குத்திக்காட்டவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள யெகோவா அவருக்கு அன்போடும் கரிசனையோடும் உதவினார். (1 ரா. 19:15-18) நாமும் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், பேசுவதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும்; அன்பாகவும் கரிசனையாகவும் பேச வேண்டும். பேச்சுகள் கொடுக்கும்போது... கூட்டத்தில் பதில் சொல்லும்போது... என எப்போதும் கரிசனையோடு, நம்பிக்கையோடு பேசுங்கள். அதுதான் உங்கள் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும், பலப்படுத்தும்.
11. நிறைய சமயங்களில், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது? (1 யோவான் 3:18)
11 தேவைப்படும் உதவிகளைச் செய்யுங்கள். நிறைய சமயங்களில், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் மட்டும் போதாது. சில உதவிகள் தேவைப்படும். (1 யோவான் 3:18-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயத்தில் பர்னபா ஒரு நல்ல முன்மாதிரி. புதிதாக ஞானஸ்நானம் எடுத்த சகோதர சகோதரிகளுக்கு உதவ, பர்னபா தன்னுடைய நிலத்தை விற்று அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். (அப். 4:36, 37) பர்னபா மாதிரி இன்றும், நிறைய சகோதர சகோதரிகள் தேவையில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்குத் தாராளமாக உதவுகிறார்கள். போலந்தில் இருக்கிற கேப்ரியெல்லா என்ற சகோதரிக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். ஒரு பெரிய வெள்ளத்தில் அவருடைய வீடு ரொம்ப நாசமாகிவிட்டது. அவர் இப்படிச் சொல்கிறார்: “நானும் என் அப்பா-அம்மாவும் ரொம்பப் பயந்துபோய்விட்டோம். அடுத்து என்ன செய்யப்போகிறோம், இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று ரொம்பக் கவலைப்பட்டோம். ஆனால், பக்கத்து சபைகளில் இருந்து நிறைய சகோதரர்கள் வந்தார்கள். ஒரே நாளில் எங்கள் வீட்டைச் சரிசெய்து கொடுத்தார்கள். இது, யெகோவாமேல் எனக்கு இருந்த நம்பிக்கையை இன்னும் பலப்படுத்தியது. யெகோவாதான் அவருடைய மக்களைப் பயன்படுத்தி கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறார்.”
12. நாம் கஷ்டங்களைச் சகித்திருப்பது மற்ற சகோதர சகோதரிகளுக்கு எப்படி உற்சாகத்தைக் கொடுக்கும்?
12 நீங்கள் சந்தோஷமாகச் சகித்திருங்கள். துன்புறுத்தல் வந்தபோதும் தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்கள், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது பவுலுக்கு உற்சாகம் கிடைத்தது. ஏனென்றால், அவர்களுக்காக பவுல் நிறைய உதவிகள் செய்திருந்தார். அதெல்லாம் வீண் போகவில்லை என்று தெரிந்ததே அவருக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. (1 தெ. 3:5-8) அதேசமயத்தில், அவர் கஷ்டங்களைச் சகித்திருந்தால், அவரை நேரில் பார்க்காதவர்களுக்கும்கூட அது உற்சாகத்தைக் கொடுக்கும் என்று பவுல் நம்பினார். (கொலோ. 2:1, 2) அதேபோல், நாமும் சந்தோஷமாகச் சகித்திருப்பதை நம் சகோதர சகோதரிகள் பார்க்கும்போது அவர்களுக்கு உற்சாகம் கிடைக்கும். யெகோவா நமக்கு உதவிய மாதிரியே அவர்களுக்கும் உதவுவார் என்ற நம்பிக்கை கிடைக்கும்.
13. மற்றவர்களை ஆறுதல்படுத்த வேறு என்ன செய்ய வேண்டும்?
13 பொறுமையாக இருங்கள். சிலசமயத்தில், எவ்வளவுதான் ஆறுதல் கொடுத்தாலும் சோர்ந்துபோய் இருக்கிற சிலர் உடனே சரியாகிவிட மாட்டார்கள். ஆனால், “எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தெ. 5:11) “எப்போதும்” என்று சொல்லும்போது தொடர்ந்து உற்சாகப்படுத்த வேண்டும் என்பது புரிகிறது. அப்படியென்றால், தொடர்ந்து ஆறுதல்படுத்த பொறுமை தேவை. (1 தெ. 5:14) சிலசமயம், ஆறுதல் கொடுக்கிறவர்களுக்கும் ஆறுதல் தேவைப்படும். அப்போது என்ன செய்யலாம்?
உங்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது...
14-15. நாம் கஷ்டத்தில் தவிக்கும்போது என்ன செய்யலாம்?
14 யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது ஆறுதலைச் தரச் சொல்லி அவரிடம் கேளுங்கள். (சங். 94:19) அந்தக் கஷ்டம் உங்களுக்கு எவ்வளவு வேதனையைத் தருகிறது என்று குறிப்பாகச் சொல்லி ஜெபம் செய்யுங்கள். (சங். 62:8) மனதில் இருப்பதை எல்லாம் அவரிடம் கொட்டுங்கள். நீங்கள் ஜெபம் செய்வதற்கு முன்பே உங்களுக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்தான். இருந்தாலும், நீங்கள் மனம் திறந்து அவரிடம் பேசும்போது, அவர்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். இப்படி நம்பிக்கையோடு செய்கிற ஜெபங்களுக்கு யெகோவா அவருடைய வழியில் கண்டிப்பாகப் பதில் கொடுப்பார். (மாற். 11:24) பிலிப்பியர் 4:6, 7 இப்படிச் சொல்கிறது: “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் . . . கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும்.”
15 மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். உங்கள் மனதில் இருப்பதை ஒரு முதிர்ச்சியுள்ள நண்பரிடமோ நம்பகமான மூப்பரிடமோ சொல்லுங்கள். சகோதர, சகோதரிகளால் உங்களுக்குத் தேவையான ஆறுதலைக் கொடுக்க முடியும். ஆனால், உங்களுக்கு என்ன தேவை என்றும் உங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்றும் நீங்கள் சொன்னால்தான் அவர்களுக்குத் தெரியும். (நீதி. 14:10) உங்களுடைய பிரச்சினையைப் பற்றி அவர்களிடம் பேச விரும்புவதாக சொல்லலாம். அல்லது, அவர்களுக்கு ஆறுதலாக இருந்த ஒரு வசனத்தையோ கட்டுரையையோ உங்களுக்குக் காட்ட சொல்லலாம்.
16. சகோதர சகோதரிகள் உங்களை உற்சாகப்படுத்த முயற்சி செய்யும்போது என்ன ஆகிவிடலாம், நீங்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?
16 பொறுமையாக இருங்கள், மன்னியுங்கள். சகோதர சகோதரிகள் உங்களை உற்சாகப்படுத்தும்போது சில தவறுகளைச் செய்துவிடலாம். ஒருவேளை அவர்கள் சொல்வதோ செய்வதோ, உங்களுடைய வலியை இன்னும் அதிகமாக்கிவிடலாம். அந்த மாதிரி சமயத்தில் அவர்களிடம் பொறுமையாக இருங்கள். (1 கொ. 13:4, 7) “பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்” என்று யாக்கோபு 3:2 சொல்வதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சகோதர சகோதரிகள் நல்ல எண்ணத்தோடுதான் உங்களுக்கு உதவ முயற்சி செய்கிறார்கள். ஆனால், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்பதை மறந்துவிடாதீர்கள்.—மத். 26:41.
17. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்கலாம்?
17 நாம் கடைசி நாட்களில் வாழ்வதால் நம் எல்லாருக்குமே ஆறுதல் தேவைப்படுகிறது. நாட்கள் போகப்போக நமக்கு இன்னும் நிறைய கஷ்டங்கள் வரும். கடவுளுடைய எதிரிகள் நம்மைக் கொடூரமாகத் தாக்குவார்கள். அதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு அப்போது நமக்கு ஆறுதல் தேவைப்படும். அப்படியென்றால், ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்த நம்மால் செய்ய முடிந்ததை எல்லாம் இப்போதே செய்ய உறுதியாக இருப்போம்!
பாட்டு 130 மன்னியுங்கள்
a படவிளக்கம்: சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு சகோதரர் பேசுவதை ஒரு மூப்பர் அனுதாபத்தோடு காதுகொடுத்து கேட்கிறார். பிறகு அதே மூப்பர், இன்னொரு சகோதரரைச் சந்திக்கிறார். அந்தச் சகோதரர், சில வருஷங்களுக்கு முன் இறந்துபோன தன் மனைவியோடு இருந்த நல்ல நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.