உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
ராஜ்ய மன்றங்களை பராமரிப்பது
ஏப்ரல் 1, 2024
கொலம்பியாவில் இருக்கிற நிக்கோல் என்ற இளம் சகோதரி இப்படி சொல்கிறார்: “என்னுடைய ராஜ்ய மன்றத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், அங்கே தான் என்னுடைய சகோதர சகோதரிகளோடு ஒன்றாக இருக்க முடியும்.” நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?
உலகம் முழுவதும், யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் கிட்டத்தட்ட 63,000 ராஜ்ய மன்றங்களில் ஒன்றுகூடுகிறோம். சௌகரியமாக யெகோவாவை வணங்க இந்த கட்டிடங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த கட்டிடங்கள் அதற்கு மட்டும் கிடையாது. அதனால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. அதைப் பற்றி கொலம்பியாவில் இருக்கும் டேவிட் என்ற ஒழுங்கான பயனியர் என்ன சொல்கிறார் என்றால், “எங்களுடைய ராஜ்ய மன்றங்கள் எங்களுடைய போதனைகளுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன. எங்கள் ராஜ்ய மன்றத்துக்கு வருபவர்கள் இந்த கட்டிடங்களை நாங்கள் நன்றாக பராமரித்து வைத்திருப்பதைப் பார்த்து அசந்துபோகிறார்கள். இது எதேச்சையாக நடக்கிற விஷயமில்லை. எங்களுடைய ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் அதை பராமரிப்பதற்கும் நாங்கள் கடினமாக முயற்சி செய்கிறோம்.” இதை நாங்கள் எப்படி செய்கிறோம்?
பராமரிப்பு வேலை எப்படி ஒழுங்கமைக்கப்படுகிறது?
ராஜ்ய மன்றத்தை பயன்படுத்துகிற சபைகளுக்குத்தான் அதை பராமரிக்கிற பொறுப்பும் இருக்கிறது. அதனால், சகோதர சகோதரிகள் தங்களுடைய ராஜ்ய மன்றத்தை தவறாமல் சுத்தம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, சின்ன சின்ன ரிப்பேர் வேலைகளையும், ஒருசில பராமரிப்பு வேலைகளையும் செய்கிறார்கள்.
சபைகள் தங்களுடைய ராஜ்ய மன்றத்தை பராமரிக்க உதவுவதற்காக உள்ளூர் வடிவமைப்பு கட்டுமான டிபார்ட்மென்ட் (LDC) சில சகோதரர்களை பராமரிப்பு பயிற்சியாளர்களாக நியமிக்கிறது. ஒவ்வொரு பராமரிப்பு பயிற்சியாளரின் கீழும் ஆறு முதல் பத்து ராஜ்ய மன்றங்கள் இருக்கின்றன. அவர் அந்த ராஜ்ய மன்றங்களுக்கு போய் அதை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை அந்த பிரஸ்தாபிகளுக்கு கொடுக்கிறார். ஒவ்வொரு கட்டிடத்தையும் மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை கவனமாக பரிசோதித்து, அதில் ஏதாவது பாதுகாப்பு வேலை அல்லது பராமரிக்கிற வேலை செய்யப்பட வேண்டுமா என்று பார்க்கிறார்.
ராஜ்ய மன்றங்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள பராமரிப்பு பயிற்சியாளர்கள் உதவுகிறார்கள்
பராமரிப்பு பயிற்சியாளர்கள் கொடுக்கிற பயிற்சிக்கு நம்முடைய சகோதர சகோதரிகள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிற இந்துமதி என்ற ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “அது ரொம்ப அருமையான பயிற்சி. ராஜ்ய மன்றத்தை எப்படி நல்ல நிலைமையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் தெரிந்து கொண்டேன். அது எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது.” கென்யாவில் இருக்கிற இவான்ஸ் என்ற ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “பிரச்சினை சின்னதாக இருக்கும்போது அதை சரிசெய்யாவிட்டால் அது பெரிய செலவில் கொண்டுபோய் விட்டுவிடும், அந்தளவு நிலைமை மோசமாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று கற்றுக்கொண்டோம்.”
செலவுகளை கவனித்துக்கொள்ளுதல்
ஒவ்வொரு வருஷமும் ஒரு ராஜ்ய மன்றத்தை பயன்படுத்துவதற்கும் அதை பராமரிப்பதற்கும் நூற்றுக்கணக்கான டாலர்a முதல் ஆயிரக்கணக்கான டாலர் வரை செலவாகிறது. அந்த மன்றம் இருக்கிற இடம்... அதை கட்டி எத்தனை வருஷம் ஆகிறது... இன்னும் எத்தனை சபைகள் அதை பயன்படுத்துகின்றன... என்பதையெல்லாம் பொறுத்து அந்த செலவுகள் மாறுபடுகின்றன. இந்தச் செலவுகளையெல்லாம் நாம் எப்படி செய்கிறோம்?
எங்களுக்குக் கிடைக்கிற நன்கொடைகளைப் பயன்படுத்தி ராஜ்ய மன்றங்களை பராமரிக்கிறோம். கஸகஸ்தானைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்ற சகோதரர் இப்படி சொல்கிறார்: “எங்களுக்கு கிடைக்கிற நன்கொடையில் ஒரு பகுதியை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதற்கும் தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். இன்னொரு பகுதியை டிஷ்யு பேப்பர், கையுறைகள், சுத்தம் செய்வதற்கான பொருள்கள், பெயின்ட் போன்ற அவசியமான பொருள்களை வாங்குவதற்கும் பயன்படுத்துகிறோம்.” எங்களுடைய தேவைக்குமேல் கிடைக்கிற நன்கொடைகளை உலகளாவிய வேலைக்கு கொடுத்துவிடுகிறோம். உலகத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் அதிக செலவு வைக்கிற... பெரிய அளவில் செய்யப்படுகிற... பராமரிப்பு வேலைகளுக்கு அதை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
பெரிய அளவில் செய்யப்படுகிற பராமரிப்பு வேலைகள்
ஒரு ராஜ்ய மன்றத்தை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வழக்கமாக செய்யப்படுகிற செலவை விட அதிகமாக இருந்தால், மூப்பர்கள் LDC பராமரிப்பு பயிற்சியாளரிடம் கலந்து பேசுவார்கள். LDC அந்த பராமரிக்கிற வேலைக்கு அனுமதி கொடுத்துவிட்டால் உலகளாவிய வேலைக்காக கொடுக்கப்படுகிற நன்கொடையிலிருந்து அந்த செலவுகள் செய்யப்படும். 2023 ஊழிய ஆண்டில், 8793 பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டன. அதற்கான செலவுகள், 76.6 மில்லியன் டாலர்கள். அப்படிப்பட்ட இரண்டு வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
அங்கோலாவில், 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு ராஜ்ய மன்றத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. உதாரணத்துக்கு, மின்சார அமைப்பு பழுதடைந்து முழுமையாக மாற்றப்பட வேண்டியிருந்தது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தண்ணீர் வழிந்து தங்களுடைய வீடுகளுக்குள் நுழைந்ததாக அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் சொன்னார்கள். இந்த பிரச்சினைகளை எல்லாம் சரி செய்வதற்காக LDC ஒரு திட்டம் போட்டது. அந்த வேலைக்கு 9285 டாலர்கள் செலவானது. நம்முடைய வேலைகள் நடந்த விதத்தைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், நமக்கு நன்றியும் சொன்னார்கள்.
அங்கோலாவில் புதுப்பிக்கப்பட்ட ராஜ்ய மன்றம்
போலந்தில், ஒரு ராஜ்ய மன்றத்தின் கூரை ஒழுகியது. அதுமட்டுமல்லாமல் அங்கே இருந்த தரைவிரிப்பு சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் இருந்தது. தண்ணீர் ஒழுகாதபடி கூரையை அமைப்பதற்கும், புது தரைவிரிப்பை மாற்றுவதற்கும் LDC அனுமதி கொடுத்தது. அந்த வேலைகளுக்கு 9757 டாலர்கள் செலவானது. இனி, அந்த ராஜ்ய மன்றத்துக்கு பல வருஷங்களுக்கு பெரிய அளவில் புதுப்பிக்கிற வேலை தேவைப்படாது.
போலந்தில், ராஜ்ய மன்றத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுகிறது
யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் பராமரிப்பு வேலை
பராமரிப்பு வேலை நமக்கு கிடைக்கிற மதிப்புமிக்க நன்கொடைகளை மிச்சப்படுத்துவது மட்டும் இல்லாமல் யெகோவாவுக்கு புகழையும் சேர்க்கிறது. டோங்காவில் இருக்கிற ஷான் என்ற ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “இந்த பராமரிப்பு வேலைகளால், சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கிற... எல்லாமே சரியாக இயங்குகிற... ராஜ்ய மன்றத்தில் நம்மால் யெகோவாவை வணங்க முடிகிறது. இதனால் சுற்றி இருக்கிறவர்கள் மத்தியில் அது யெகோவாவுக்கு புகழ் சேர்க்கிறது. மற்றவர்களை நம்முடைய ராஜ்ய மன்றத்துக்கு அழைப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம்.”
நீங்கள் என்ன செய்யலாம்?
வணக்கத்துக்காக கூடி வருகிற இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் அதை பராமரிப்பதற்கும் நம் எல்லாருமே உதவலாம். ஆஸ்திரேலியாவில் இருக்கிற பராமரிப்பு பயிற்சியாளரான மெரினோ இப்படி சொல்கிறார்: “நம்முடைய ராஜ்ய மன்றங்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்கிற அருமையான வாய்ப்பு நம் எல்லாருக்குமே இருக்கிறது. இப்படி செய்யும்போது நன்கொடையாக கிடைத்த பணத்தை நம்மால் பெரிய அளவில் மிச்சப்படுத்த முடிகிறது. உண்மையாகவே எங்கு தேவை இருக்கிறதோ அங்கு அதை பயன்படுத்த முடிகிறது.”
இந்தியாவில் இருக்கிற ஜோயல் என்ற சகோதரர் அவருடைய ராஜ்ய மன்றத்தை பராமரிக்கிற வேலையை ரொம்ப சந்தோஷமாக செய்கிறார். அவர் இப்படி சொல்கிறார்: “என்னுடைய சகோதரர்கள் கூட சேர்ந்து வேலை செய்வதால் பூஞ்சோலையில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.” நாம் ஏற்கெனவே பார்த்த நிக்கோல் இப்படி சொல்கிறார்: “சமீபத்தில், பாத்ரூமில் தண்ணீர் ஒழுகுவதை சகோதரர்கள் சரிசெய்தபோது, தரையில் இருந்த தண்ணீரை துடைக்க நான் உதவி செய்தேன். நான் அந்த பிரச்சினையை சரிசெய்யவில்லை என்றாலும், எந்த விபத்தும் நடந்துவிடாமல் இருக்க என்னால் உதவி செய்ய முடிந்தது.”
உங்கள் ராஜ்ய மன்றத்தை பராமரிக்க வாலண்டியராக உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், உங்கள் சபை மூப்பர்களிடம் அதைப் பற்றி பேசுங்கள். நீங்கள் கொடுக்கிற நன்கொடைகள் உங்களுடைய ராஜ்ய மன்றத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற மற்ற ராஜ்ய மன்றங்களையும் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. உங்கள் ராஜ்ய மன்றத்தில் இருக்கிற நன்கொடை பெட்டிகள் மூலமாகவோ, donate.jw.org மூலமாகவோ நீங்கள் இந்த நன்கொடைகளை கொடுக்கலாம். நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!
நம்முடைய ராஜ்ய மன்றத்தை நன்றாக வைப்பதற்கு நாம் எல்லாருமே உதவலாம்
a இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டாலர் தொகையும் அமெரிக்க டாலர்களைக் குறிக்கிறது.