செவ்வாய், செப்டம்பர் 8
‘யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.’—2 ரா. 17:13.
தன்னுடைய மக்களை எச்சரிப்பதற்கும் திருத்துவதற்கும் யெகோவா தீர்க்கதரிசிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, எரேமியா மூலமாக யெகோவா இப்படிச் சொன்னார்: “சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா . . . நான் உண்மையோடு நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன் . . . நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன். நீ உன் குற்றத்தை மட்டும் ஒத்துக்கொள். ஏனென்றால், உன் கடவுளான யெகோவாவுக்கு நீ அடங்கி நடக்கவில்லை.” (எரே. 3:12, 13) யோவேல் மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: “முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.” (யோவே. 2:12, 13) ஏசாயா மூலமாக இப்படிச் சொன்னார்: “உங்களைத் தூய்மையாக்குங்கள். என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும். அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.” (ஏசா. 1:16-19) எசேக்கியேல் மூலம் இப்படிச் சொன்னார்: “பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்? அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்? . . . யாரும் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை. அதனால் திருந்தி வாழுங்கள்.” (எசே. 18:23, 32) மக்கள் மனம் திருந்தும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், அவர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். w24.08 9 ¶5-6
புதன், செப்டம்பர் 9
‘வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன, பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.’—2 தீ. 3:16.
தன் மக்கள் எல்லாருக்குமே ஆன்மீக உணவையும், வழிநடத்துதலையும், பாதுகாப்பையும் யெகோவா தருகிறார். அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதற்கு ஒரு உதாரணம், உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருக்குமே பைபிள் கிடைக்கும்படி அவர் செய்திருக்கிறார். பைபிள் ஆரம்பத்தில் எபிரெயு, அரமேயிக், கிரேக்கு என்ற மூன்று மொழிகளில் எழுதப்பட்டது. அந்த மொழிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக யெகோவாவோடு நெருக்கமாக இருக்கிறார்களா? இல்லை! (மத். 11:25) நாம் நிறைய படித்திருந்தால் மட்டும்தான் அல்லது ஆரம்பத்தில் பைபிள் எழுதப்பட்ட மொழிகளைத் தெரிந்து வைத்திருந்தால் மட்டும்தான் யெகோவா நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்வார் என்பதில்லை. யெகோவா தன்னுடைய ஞானம் பொதிந்த வார்த்தைகளை உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கிறார். அவர்கள் நிறைய படித்திருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. அவருடைய புத்தகமான பைபிள் இன்று ஆயிரக்கணக்கான மொழிகளில் கிடைக்கிறது. அதனால், உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருமே அதில் இருக்கும் போதனைகளிலிருந்து நன்மை அடைகிறார்கள், கடவுளோடு எப்படி நண்பராகலாம் என்றும் தெரிந்துகொள்கிறார்கள்.—2 தீ. 3:16, 17. w24.06 6-7 ¶13-15
வியாழன், செப்டம்பர் 10
‘எருசலேமுக்கு அழிவு நெருங்கிவிட்டது.’—லூக். 21:20.
இயேசு சொல்லியிருந்த எருசலேமின் அழிவு ரொம்பச் சீக்கிரத்தில் வரவிருந்தது. மீதி இருந்த நாட்களைப் பயன்படுத்தி அந்தக் கிறிஸ்தவர்களால் விசுவாசம், சகிப்புத்தன்மை மாதிரியான குணங்களை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கும்; அழிவைச் சந்திக்க தயாராகவும் முடிந்திருக்கும். (எபி. 10:25; 12:1, 2) எபிரெய கிறிஸ்தவர்கள் சந்தித்ததைவிட ரொம்பப் பயங்கரமான ஒரு உபத்திரவத்தை நாம் எல்லாருமே சந்திக்கப் போகிறோம். (மத். 24:21; வெளி. 16:14, 16) அதனால், அந்தக் கிறிஸ்தவர்களுக்கு யெகோவா கொடுத்த ஆலோசனைகள் இப்போது நமக்கும் பிரயோஜனமாக இருக்கும். கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படிக்கச் சொல்லி எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 5:14–6:2) எபிரெய வேதாகமத்தைப் பயன்படுத்தி, யூத வழிபாட்டு முறையைவிட கிறிஸ்தவர்கள் வழிபடுகிற முறைதான் உயர்ந்தது என்பதை பவுல் அவர்களுக்குப் புரிய வைத்தார். சத்தியத்தைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் இன்னும் அதிகமாக்கச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார். w24.09 8-9 ¶2-3; 10 ¶6