செவ்வாய், மே 13
உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள். —மத். 5:16.
அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. கீழ்ப்படியாதவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வோம். (ரோ. 13:1, 4) அதோடு, யெகோவாவின் சாட்சிகளை அதிகாரிகள் நல்ல விதமாகப் பார்ப்பார்கள். நிறைய வருஷங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் ராஜ்ய மன்றத்துக்குள் நுழைந்தார்கள். வரி கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் செய்கிற யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று பார்க்க வந்தார்கள். ஆனால், அந்த ராணுவ வீரர்களின் அதிகாரி, “யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பாக வரி கட்டுவார்கள், அதனால் நாம் இங்கிருந்து போய்விடலாம்” என்று சொன்னார். ஒவ்வொரு தடவை நாம் சட்டத்துக்குக் கீழ்ப்படியும்போதும், யெகோவாவின் மக்களுக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றுகிறோம். இந்த நல்ல பெயர், என்றைக்காவது ஒருநாள் இன்னொரு யெகோவாவின் சாட்சியைப் பாதுகாக்கும். w23.10 9 ¶13
புதன், மே 14
நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது அவசியம்.—எபி. 10:36.
முடிவு வருவதற்கு ரொம்ப தாமதமாவதுபோல் நமக்கு ஒருவேளை தோன்றலாம். யெகோவா அதைப் புரிந்துகொள்கிறார். சொல்லப்போனால், அவர் ஆபகூக் தீர்க்கதரிசியிடம், “நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும். அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது. ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு. தரிசனம் நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” என்று சொன்னார். (ஆப. 2:3) ஆபகூக் தீர்க்கதரிசிக்காக மட்டும்தான் யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? அல்லது, நமக்காகவும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாரா? பவுல் இந்த வார்த்தைகளை, புதிய உலகத்துக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்திக் காட்டினார். (எபி. 10: 37) யெகோவா நம்மை விடுவிக்கப்போகும் நாள் தாமதிப்பதுபோல் தெரிந்தாலும், அது “நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” w23.04 30 ¶16
வியாழன், மே 15
அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.—எண். 14:2.
தெளிவான ஆதாரங்கள் இருந்தும் மோசேயைப் பயன்படுத்திதான் யெகோவா தங்களுக்கு வழிகாட்டுகிறார் என்பதை நிறைய இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (எண். 14:10, 11) இதனால் அந்தத் தலைமுறையை சேர்ந்த யாராலும் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக முடியவில்லை. (எண். 14:30) ஆனாலும், சில இஸ்ரவேலர்கள் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். உதாரணத்துக்கு, “காலேப் . . . முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான்” என்று யெகோவா சொன்னார். (எண். 14:24) அதனால், கானான் தேசத்தில் அவர் கேட்ட பகுதியை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (யோசு. 14:12-14) இஸ்ரவேலர்களுடைய அடுத்த தலைமுறையும் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். மோசேக்கு அடுத்து யோசுவா தலைவராக ஆனபோது அவருக்கு அவர்கள் “வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.” (யோசு. 4:14) அதனால், யெகோவா அவர்களை கானான் தேசத்தில் குடிவைத்தார்.—யோசு. 21:43, 44. w24.02 21 ¶6-7