-
மாற்கு 5:25-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஒரு பெண் 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்.+ 26 நிறைய மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சைகளால் அவள் பயங்கர வேதனையை அனுபவித்திருந்தாள், தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்திருந்தாள்; ஆனால், அவள் குணமாகவில்லை; நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருந்தது. 27 இயேசுவைப் பற்றி அவள் நிறைய கேள்விப்பட்டிருந்ததால், “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்”+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, 28 பின்பக்கமாகக் கூட்டத்துக்குள் நுழைந்து அவருடைய மேலங்கியைத் தொட்டாள்.+ 29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னைப் பாடாய்ப் படுத்திய அந்த நோயிலிருந்து குணமானதை அவளால் உணர முடிந்தது.
30 இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை+ வெளியேறியதை உடனடியாக உணர்ந்தார்; அதனால் கூட்டத்தாரிடம் திரும்பி, “என் மேலங்கியைத் தொட்டது யார்?”+ என்று கேட்டார். 31 அப்போது அவருடைய சீஷர்கள், “கூட்டம் உங்களை நெருக்கித் தள்ளுவதை நீங்களே பார்க்கிறீர்கள்; அப்படியிருக்கும்போது, ‘யார் என்னைத் தொட்டது?’ என்று கேட்கிறீர்களே” என்றார்கள். 32 ஆனாலும், தன்னைத் தொட்டது யார் என்று தெரிந்துகொள்வதற்காக அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். 33 அப்போது அந்தப் பெண் தனக்கு நடந்ததை உணர்ந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, எல்லா உண்மையையும் சொன்னாள். 34 அதற்கு அவர், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. உன்னைப் பாடாய்ப் படுத்திய நோயிலிருந்து சுகமாகி,+ சமாதானமாகப் போ”+ என்று சொன்னார்.
-
-
லூக்கா 8:43-48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
43 ஒரு பெண் 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்; யாராலும் அவளைக் குணமாக்க முடியவில்லை.+ 44 அவள் அவருக்குப் பின்னால் போய் அவருடைய மேலங்கியின் ஓரத்தைத்+ தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது. 45 அப்போது இயேசு, “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார். எல்லாரும் மறுத்தபோது பேதுரு அவரிடம், “போதகரே, மக்கள் உங்களைச் சுற்றிலும் நெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 46 ஆனால் இயேசு, “யாரோ என்னைத் தொட்டார்கள்; என்னிடமிருந்து வல்லமை+ வெளியேறியது எனக்குத் தெரியும்” என்று சொன்னார். 47 தான் இனியும் மறைந்திருக்க முடியாது என்பதை அந்தப் பெண் உணர்ந்து, நடுக்கத்தோடு அவர் முன்னால் வந்து மண்டிபோட்டாள்; அவரைத் தொட்டதற்கான காரணத்தையும் தான் உடனடியாகக் குணமானதையும் பற்றி அங்கிருந்த எல்லா மக்களுக்கு முன்பாகவும் சொன்னாள். 48 இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது; சமாதானமாகப் போ”+ என்று சொன்னார்.
-