-
மாற்கு 12:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பின்பு, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக பரிசேயர்கள் சிலரையும் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் அனுப்பினார்கள்.+ 14 அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர், யாருடைய தயவையும் எதிர்பார்க்காதவர், மனுஷர்களுடைய வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரோம அரசனுக்கு* வரி* கட்டுவது சரியா இல்லையா? 15 நாங்கள் வரி கட்ட வேண்டுமா வேண்டாமா?” என்று கேட்டார்கள். அவர்களுடைய வெளிவேஷத்தை அவர் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரியுவை* என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். 17 அப்போது இயேசு, “அரசனுடையதை* அரசனுக்கும்+ கடவுளுடையதைக் கடவுளுக்கும்+ கொடுங்கள்” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
-
-
லூக்கா 20:20-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதனால் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பின்பு, ரகசியமாக ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் அனுப்பினார்கள். நீதிமான்களைப் போல நடித்து, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைத்து,+ அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும்* அவரை ஒப்படைப்பதற்காக அவர்களை அனுப்பினார்கள். 21 அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் சரியாகப் பேசுகிறவர், சரியாகக் கற்பிக்கிறவர், பாரபட்சம் காட்டாதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு, 22 “ரோம அரசனுக்கு* வரி கட்டுவது சரியா இல்லையா?” என்று கேட்டார்கள். 23 இயேசு அவர்களுடைய தந்திரத்தைப் புரிந்துகொண்டு, 24 “ஒரு தினாரியுவை* என்னிடம் காட்டுங்கள். இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று கேட்டார். அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். 25 அதற்கு அவர், “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும்+ கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 26 மக்கள்முன் அவரைப் பேச்சிலேயே சிக்க வைக்க அவர்களால் முடியவில்லை. மாறாக, அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப்போய் அமைதியாகிவிட்டார்கள்.
-