-
மத்தேயு 21:23-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர் ஆலயத்துக்குள் போய் அங்கே கற்பித்துக்கொண்டிருந்தார்; அப்போது, முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.+ 24 அதற்கு இயேசு, “நானும் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். நீங்கள் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். 25 ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது யார்? கடவுளா* மனுஷர்களா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’+ என்று கேட்பான்; 26 ‘மனுஷர்கள்’ என்று சொன்னால், ஜனங்களிடம் மாட்டிக்கொள்வோம்; ஏனென்றால், யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் எல்லாரும் நம்புகிறார்கள்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 27 அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு அவர், “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
-
-
மாற்கு 11:27-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். ஆலயத்தில் அவர் நடந்துகொண்டிருந்தபோது, முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும்* அவரிடம் வந்து, 28 “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? இதையெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?”+ என்று கேட்டார்கள். 29 அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்; அப்போது, எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். 30 ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக்+ கொடுத்தது கடவுளா* மனுஷர்களா? பதில் சொல்லுங்கள்”+ என்றார். 31 அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான். 32 ‘மனுஷர்கள்’ என்று சொன்னால் நம் கதி என்னவாகும்?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். யோவான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் எல்லாரும் நம்பியதால் அப்படிச் சொல்ல பயந்தார்கள்.+ 33 அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு இயேசு, “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
-