மத்தேயு எழுதியது
2 ஏரோது* ராஜாவின் காலத்தில்,+ யூதேயாவிலுள்ள பெத்லகேமில்+ இயேசு பிறந்தார்; அதன் பின்பு, கிழக்கிலிருந்து ஜோதிடர்கள் எருசலேமுக்கு வந்து, 2 “யூதர்களுடைய ராஜா+ எங்கே பிறந்திருக்கிறார்? நாங்கள் கிழக்கிலே இருந்தபோது அவருடைய நட்சத்திரத்தைப் பார்த்தோம்; அதனால், அவர் முன்னால் தலைவணங்க வந்தோம்” என்று சொன்னார்கள். 3 இதைக் கேட்டு, ஏரோது ராஜாவும் எருசலேமிலிருந்த எல்லா மக்களும் கலக்கம் அடைந்தார்கள். 4 அதனால், ஏரோது முதன்மை குருமார்களையும் வேத அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, கிறிஸ்து* எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5 அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்+ பிறப்பார்; ஏனென்றால், தீர்க்கதரிசி மூலம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது: 6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.
7 பின்பு ஜோதிடர்களை ஏரோது ரகசியமாகக் கூப்பிட்டு, அந்த நட்சத்திரத்தை முதன்முதலில் எப்போது பார்த்தார்கள் என்பதை நன்றாக விசாரித்து உறுதிசெய்துகொண்டான்; 8 அதன் பின்பு அவர்களிடம், “நீங்கள் போய் அந்தப் பிள்ளையைக் கவனமாகத் தேடிப்பாருங்கள், கண்டுபிடித்ததும் என்னிடம் வந்து சொல்லுங்கள்; நானும் போய் அந்தப் பிள்ளையின் முன்னால் தலைவணங்குகிறேன்” என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். 9 ராஜா சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்; இதோ! கிழக்கில்+ இருந்தபோது அவர்கள் பார்த்த நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் போய், அந்தப் பிள்ளை இருந்த இடத்துக்குமேல் வந்து நின்றது. 10 அந்த நட்சத்திரத்தைப் பார்த்தபோது அவர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். 11 அவர்கள் அந்த வீட்டுக்குள் போனபோது, அந்தப் பிள்ளை தன் அம்மா மரியாளிடம் இருந்ததைப் பார்த்து, அதன் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். பின்பு, தங்கள் பொக்கிஷப் பெட்டிகளிலிருந்து தங்கத்தையும் சாம்பிராணியையும் வெள்ளைப்போளத்தையும்* எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். 12 ஆனால், ஏரோதுவிடம் திரும்பிப்போக வேண்டாம் என்று கடவுள் அவர்களைக் கனவில் எச்சரித்ததால்+ வேறொரு வழியாகத் தங்களுடைய நாட்டுக்குத் திரும்பிப்போனார்கள்.
13 அவர்கள் திரும்பிப்போன பின்பு யெகோவாவின்* தூதர் யோசேப்பின் கனவில் வந்து,+ “எழுந்திரு, பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போ; நான் சொல்லும்வரை அங்கேயே இரு. ஏனென்றால், பிள்ளையைக் கொல்வதற்காக ஏரோது அதைத் தேடப்போகிறான்” என்று சொன்னார். 14 அதனால் யோசேப்பு எழுந்து, பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு ராத்திரியோடு ராத்திரியாக எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார். 15 ஏரோது சாகும்வரை அங்கேயே இருந்தார்; “எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்”+ என்று தீர்க்கதரிசி மூலம் யெகோவா* சொன்னது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
16 ஜோதிடர்கள் தன்னைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெரிந்ததும் ஏரோது பயங்கரமாகக் கோபப்பட்டான்; அதனால், ஜோதிடர்களிடம் நன்றாக விசாரித்து உறுதிசெய்த காலத்தை+ வைத்து அந்தப் பிள்ளையின் வயதைக் கணக்கிட்டான்; பின்பு, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட்டான். 17 எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்ட இந்த விஷயம் அப்போது நிறைவேறியது: 18 “ராமாவில் அழுகை சத்தமும் பயங்கர புலம்பல் சத்தமும் கேட்டது; ராகேல்+ தன்னுடைய பிள்ளைகளுக்காக அழுதுகொண்டிருந்தாள்; யாராலும் அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை; ஏனென்றால், அவளுடைய பிள்ளைகள் அவளோடு இல்லை.”+
19 ஏரோது இறந்த பின்பு, யெகோவாவின்* தூதர் எகிப்திலிருந்த யோசேப்புக்குக் கனவில்+ தோன்றி, 20 “நீ எழுந்து பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; இந்தப் பிள்ளையைக் கொல்லப் பார்த்தவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று சொன்னார். 21 அதனால், அவர் எழுந்து பிள்ளையையும் அதன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போனார். 22 ஆனால், ஏரோதுவுக்குப் பதிலாக அவனுடைய மகன் அர்கெலாயு யூதேயாவில் ஆட்சி செய்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு, அங்கே போக பயந்தார். அதோடு, கடவுள் அவரைக் கனவில் எச்சரித்ததால்+ கலிலேயா பகுதிக்குப்+ போய், 23 நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்.+ “அவர்* நாசரேத்தூரார்*+ என அழைக்கப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.