2 நாளாகமம்
3 பின்பு, சாலொமோன் எருசலேமிலிருந்த மோரியா மலையில்+ யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்.+ அவருடைய அப்பாவான தாவீதுக்கு யெகோவா தரிசனம் தந்த இடத்தில்,+ அதாவது ஆலயம் கட்டுவதற்காக எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் தாவீது தயார் செய்திருந்த இடத்தில்,+ அதைக் கட்டத் தொடங்கினார். 2 சாலொமோன் ராஜாவாக ஆன நான்காம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியில், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார். 3 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்; பழங்கால அளவின்படி,* அதன் நீளம் 60 முழம், அகலம் 20 முழம்.+ 4 ஆலயத்துக்கு முன்னால் இருந்த நுழைவு மண்டபத்தின் உயரம் 20 முழம்,* நீளம் 20 முழம். நுழைவு மண்டபத்தின் நீளமும் ஆலயத்தின் அகலமும் சரிசமமாய் இருந்தது. அதன் உட்புறத்தில் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ 5 ஆலயத்தின் பெரிய அறையை* ஆபால் மரப்பலகைகளால் மூடி, சொக்கத்தங்கத்தால் தகடு அடித்தார்.+ பின்பு, அதன்மீது பேரீச்ச மரங்களின் உருவங்களைப் பொறித்தார்;+ சங்கிலி வேலைப்பாடுகளையும் செய்தார்.+ 6 அதோடு, விலைமதிப்புள்ள அழகிய கற்களை அந்த அறையில் பதித்தார்.+ அவர் பயன்படுத்திய தங்கம்+ பர்வாயீம் தங்கம். 7 அந்த அறையின் உட்கூரையையும் நிலைக்கால்களையும் சுவர்களையும் கதவுகளையும் தங்கத்தால் தகடு அடித்தார்.+ சுவர்களில் கேருபீன் உருவங்களைப் பொறித்தார்.+
8 பின்பு, மகா பரிசுத்த அறையைக் கட்டினார்.+ அதன் நீளமும் ஆலயத்தின் அகலமும் சரிசமமாய் இருந்தது, அதாவது நீளம் 20 முழமாகவும் அகலம் 20 முழமாகவும் இருந்தது. அந்த அறையின் உட்புறத்தில் 600 தாலந்து* சொக்கத்தங்கத்தால் தகடு அடித்தார்.+ 9 ஆணிகள் செய்ய பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் எடை 50 சேக்கல்.* மாடி அறைகளுக்குத் தங்கத் தகடு அடித்தார்.
10 மகா பரிசுத்த அறையில் இரண்டு கேருபீன் உருவங்களைச் செய்து, அவற்றின்மீது தங்கத் தகடு அடித்தார்.+ 11 அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின்+ நீளம் மொத்தம் 20 முழம்; முதல் கேருபீனுடைய ஒரு சிறகின் நீளம் 5 முழம். அது அறையின் ஒரு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது. மற்றொரு சிறகின் நீளம் 5 முழம்; அது இரண்டாவது கேருபீனின் சிறகைத் தொட்டுக்கொண்டிருந்தது. 12 இரண்டாவது கேருபீனுடைய ஒரு சிறகின் நீளம் 5 முழம். அது முதல் கேருபீனின் சிறகைத் தொட்டுக்கொண்டிருந்தது. இன்னொரு சிறகின் நீளம் 5 முழம். அது அறையின் இன்னொரு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது. 13 அந்தக் கேருபீன்கள் 20 முழ நீளத்துக்குச் சிறகுகளை விரித்திருந்தன; அவற்றின் பாதங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் முகங்கள் பரிசுத்த அறையைப் பார்த்தபடி இருந்தன.
14 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நிற நூல், உயர்தர துணி ஆகியவற்றால் திரைச்சீலையைச் செய்து,+ அதில் கேருபீன் உருவங்களைத் தையல் போட்டார்.+
15 ஆலயத்தின் முன்பகுதியில் இரண்டு தூண்களை நிறுத்தினார்;+ அவற்றின் உயரம் 35 முழமாக இருந்தது; ஒவ்வொரு தூணின் உச்சியிலிருந்த கும்பத்தின் உயரமும் 5 முழமாக இருந்தது.+ 16 கழுத்தில் அணியும் ஆபரணங்களைப் போல் சங்கிலிகள் செய்து, தூண்களின் உச்சியிலிருந்த கும்பங்களில் வைத்தார். அதோடு, 100 மாதுளம்பழ வடிவங்களைச் செய்து அந்தச் சங்கிலிகளில் தொங்கவிட்டார். 17 அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் நிறுத்தினார். ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்று பெயர் வைத்தார்; மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்று பெயர் வைத்தார்.