2 சாமுவேல்
11 வருஷத்தின் ஆரம்பத்தில்,* ராஜாக்கள் போருக்குப் போவது வழக்கம். அப்போது, அம்மோனியர்களை அழிப்பதற்காக யோவாபையும் அவருடைய ஊழியர்களையும்* இஸ்ரவேல் படை முழுவதையும் தாவீது அனுப்பிவைத்தார். அவர்கள் ரப்பாவை+ முற்றுகையிட்டார்கள். ஆனால், தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டார்.+
2 ஒருநாள் சாயங்காலம்* படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மேல்மாடியில் தாவீது நடந்துகொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவள் மிகவும் அழகாக இருந்தாள். 3 அவள் யாரென்று விசாரிக்க தாவீது ஒருவரை அனுப்பினார். “அவள் எலியாமின்+ மகள் பத்சேபாள்,+ ஏத்தியனான+ உரியாவின்+ மனைவி” என்று அவர் சொன்னார். 4 அவளைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக தாவீது ஆட்களை அனுப்பினார்.+ அவள் தாவீதிடம் வந்தபோது, அவர் அவளுடன் உறவுகொண்டார்.+ (அவள் தன்னுடைய தீட்டுக் கழிக்க சுத்திகரித்துக்கொண்டிருந்த சமயத்தில்* இது நடந்தது.)+ பின்பு, அவள் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.
5 அவள் கர்ப்பமானாள். அப்போது, “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று தாவீதுக்குச் சொல்லி அனுப்பினாள். 6 அதைக் கேட்டதும், “ஏத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை” என்று யோவாபுக்கு தாவீது செய்தி அனுப்பினார். அதனால், உரியாவை யோவாப் அனுப்பி வைத்தார். 7 உரியா வந்ததும், யோவாபையும் வீரர்களையும் போர் நிலவரத்தையும் பற்றி தாவீது விசாரித்தார். 8 பின்பு, “வீட்டுக்குப் போய் ஓய்வெடு” என்று உரியாவிடம் சொன்னார். அங்கிருந்து அவர் புறப்பட்டபோது அவருடைய வீட்டுக்கு ராஜா அன்பளிப்பை* அனுப்பினார். 9 ஆனால், உரியா தன்னுடைய வீட்டுக்குப் போகாமல், ராஜாவின் மற்ற ஊழியர்கள் எல்லாரோடும் சேர்ந்து அரண்மனை முற்றத்திலேயே படுத்துத் தூங்கினார். 10 உரியா தன்னுடைய வீட்டுக்குப் போகவில்லை என்பதை தாவீது தெரிந்துகொண்டார். அதனால் உரியாவிடம் “நீ ரொம்பத் தூரம் பயணம் செய்து வந்திருக்கிறாய், ஏன் உன்னுடைய வீட்டுக்குப் போகவில்லை?” என்று கேட்டார். 11 அதற்கு உரியா, “கடவுளுடைய பெட்டி+ கூடாரத்தில் இருக்கிறது, இஸ்ரவேல் ஆட்களும் யூதா ஆட்களும் கூடாரத்தில் தங்கியிருக்கிறார்கள், என் எஜமான் யோவாபும் அவருடைய ஊழியர்களும் வெட்டவெளியில் முகாம்போட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நான் மட்டும் எப்படி வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் குடித்து மனைவியோடு சந்தோஷமாக இருக்க* முடியும்?+ உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் கண்டிப்பாக வீட்டுக்குப் போக மாட்டேன்!” என்று சொன்னார்.
12 அதற்கு தாவீது, “சரி, இன்றைக்கும் இங்கே தங்கியிரு. நாளைக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்று உரியாவிடம் சொன்னார். அதனால், உரியா அன்றும் அடுத்த நாளும் எருசலேமில் தங்கியிருந்தார். 13 பின்பு தாவீது, தன்னுடன் சாப்பிட்டுக் குடிப்பதற்காக உரியாவை வரவழைத்தார். போதை தலைக்கேறும் அளவுக்கு உரியாவைக் குடிக்க வைத்தார். ஆனாலும், உரியா சாயங்காலத்தில் தன்னுடைய வீட்டுக்குப் போகவில்லை. அதற்குப் பதிலாக, ராஜாவின் ஊழியர்கள் படுத்திருந்த இடத்துக்குப் போய்த் தன் படுக்கையில் படுத்துக்கொண்டார். 14 தாவீது அடுத்த நாள் காலையில் யோவாபுக்குக் கடிதம் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினார். 15 அந்தக் கடிதத்தில், “போர் மிகத் தீவிரமாக நடக்கும் இடத்தில் உரியாவை நிறுத்து. போர்முனையில் அவனை விட்டுவிட்டுப் பின்னால் வந்துவிடு. எதிரிகள் அவனைக் கொன்றுபோடட்டும்”+ என்று எழுதியிருந்தார்.
16 நகரத்தை யோவாப் உன்னிப்பாகக் கவனித்திருந்தார். அதனால், எதிரி படையைச் சேர்ந்த மாவீரர்கள் இருந்த இடத்தில் உரியாவை நிற்க வைத்தார். 17 எதிரிகள் நகரத்தைவிட்டு வெளியே வந்து யோவாபுடன் போர் செய்தபோது, தாவீதின் வீரர்களில் சிலர் செத்தார்கள்; அவர்களில் ஏத்தியனான உரியாவும் ஒருவர்.+ 18 உடனே, போர்க்களத்தில் நடந்தவற்றை தாவீதுக்கு யோவாப் சொல்லி அனுப்பினார். 19 செய்தி கொண்டுபோகும் ஆளிடம், “ராஜாவிடம் போர் நிலவரத்தைப் பற்றிச் சொல்லும்போது, 20 அவர் ஒருவேளை கோபப்படலாம். அவர் உன்னிடம், ‘நகரத்துக்கு இவ்வளவு பக்கத்தில் போய் ஏன் போர் செய்தீர்கள்? மதில் மேலிருந்து அம்பு எறிவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? 21 எருப்பேசேத்தின்*+ மகன் அபிமெலேக்கு+ எப்படிச் செத்துப்போனான்? தேபேசில் மதில்மேல் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்தானே மாவு அரைக்கிற கல்லின்* மேற்கல்லை அவன்மேல் தூக்கிப்போட்டாள்? அப்புறம் ஏன் மதிலுக்கு இவ்வளவு பக்கத்தில் போய் சண்டை போட்டீர்கள்?’ என்று கேட்டால், ‘உங்கள் போர்வீரர்களில் ஏத்தியனான உரியாவும் செத்துப்போனான்’ என்று சொல்” என்றார்.
22 யோவாப் சொல்லி அனுப்பிய விவரங்களை எல்லாம் தாவீதிடம் அந்த வீரன் சொன்னான்: 23 “எதிரிகளுடைய கை ஓங்கியது. நகரத்துக்கு வெளியே வந்து அவர்கள் எங்களோடு போர் செய்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களை நகரத்தின் நுழைவாசலுக்கே துரத்தியடித்தோம். 24 வில்வீரர்கள் மதில் மேலிருந்து அம்பு எறிந்தார்கள், நம்முடைய வீரர்களில் சிலர் செத்துப்போனார்கள். ஏத்தியனான உரியாவும் செத்துப்போனார்”+ என்று சொன்னான். 25 அதற்கு தாவீது, “இதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று யோவாபிடம் சொல். போர் என்றாலே சிலர் வாளுக்கு இரையாகத்தான் செய்வார்கள். தீவிரமாகப் போர் செய்து, நகரத்தைக் கைப்பற்றும்படி+ அவரிடம் சொல். அதோடு, அவரைத் தைரியமாக இருக்கச் சொல்” என்றார்.
26 உரியா இறந்துபோனதைக் கேள்விப்பட்டதும் அவருடைய மனைவி அவருக்காகத் துக்கம் அனுசரித்தாள். 27 துக்கம் அனுசரிக்கிற நாட்கள் முடிந்தவுடனே, தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அவள் அவருடைய மனைவியாகி,+ ஒரு மகனைப் பெற்றாள். ஆனால், தாவீது செய்த காரியம் யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.*+