யாத்திராகமம்
28 பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+ 2 உன் சகோதரன் ஆரோனுக்கு மதிப்பும் அழகும்+ சேர்க்கிற பரிசுத்த உடைகளை நீ செய்ய வேண்டும். 3 நான் யாருக்கெல்லாம் ஞானமும் திறமையும் தந்திருக்கிறேனோ அவர்கள் எல்லாரிடமும் பேசி ஆரோனுக்காக உடைகளைச் செய்யச் சொல்.+ குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோன் புனிதமாக்கப்பட்டிருப்பதை அந்த உடைகள் காட்டும்.
4 அவர்கள் செய்ய வேண்டிய உடைகள் இவைதான்: மார்ப்பதக்கம்,+ ஏபோத்,+ கையில்லாத அங்கி,+ கட்டம்போட்ட அங்கி, தலைப்பாகை,+ இடுப்புக்கச்சை.+ உன் அண்ணன் ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக இந்தப் பரிசுத்த உடைகளை அவர்கள் செய்ய வேண்டும். 5 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை* ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
6 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர்கள் ஏபோத்தைச் செய்து, அதில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 7 ஏபோத்துக்கு இரண்டு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைக்க வேண்டும். 8 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை+ இணைக்க வேண்டும். ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
9 இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து,+ அவற்றில் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களைப் பொறிக்க வேண்டும்.+ 10 ஒரு கல்லில் ஆறு பெயர்களையும் இன்னொரு கல்லில் ஆறு பெயர்களையும் பொறிக்க வேண்டும். அவர்கள் பிறந்த வரிசையின்படியே அந்தப் பெயர்களைப் பொறிக்க வேண்டும். 11 செதுக்கு வேலை செய்கிற ஒருவர் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்த இரண்டு கற்களிலும் முத்திரையைப் போலப் பொறிக்க வேண்டும்.+ பின்பு, அந்தக் கற்களைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும். 12 இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி, அந்த இரண்டு கற்களை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்த வேண்டும்.+ அவர்களுடைய பெயர்களை ஆரோன் தன்னுடைய இரண்டு தோள்பட்டைகளிலும் நினைவுச் சின்னமாக யெகோவாவின் முன்னிலையில் சுமக்க வேண்டும். 13 தங்கத்தில் வில்லைகளையும், 14 சுத்தமான தங்கத்தில் இரண்டு முறுக்குச் சங்கிலிகளையும் செய்ய வேண்டும்.+ அந்த முறுக்குச் சங்கிலிகளை வில்லைகளுடன் இணைக்க வேண்டும்.+
15 தையல் வேலைப்பாடு செய்கிறவரை வைத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய்ய வேண்டும்.+ ஏபோத்தைப் போலவே இதையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.+ 16 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளத்திலும் ஒரு சாண் அகலத்திலும் இருக்க வேண்டும். 17 அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதிக்க வேண்டும். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 18 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 19 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 20 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். இவற்றைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும். 21 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட வேண்டும்.
22 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்ய வேண்டும்.+ 23 அதோடு, இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளிலும் பொருத்த வேண்டும். 24 இரண்டு தங்க முறுக்குச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் மேல்முனைகளில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்ட வேண்டும். 25 அந்த இரண்டு முறுக்குச் சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும், ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளில் இருக்கிற இரண்டு வில்லைகளில் பொருத்த வேண்டும். 26 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் உள்பக்கத்திலுள்ள இரண்டு கீழ் முனைகளில் பொருத்த வேண்டும். இவை ஏபோத்தைத் தொட்டபடி இருக்கும்.+ 27 தங்கத்தில் இன்னும் இரண்டு வளையங்கள் செய்து அவற்றை ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளின் கீழே, அது இணைக்கப்பட்டுள்ள இடத்துக்குப் பக்கத்தில், ஏபோத்தின் இடுப்புப்பட்டைக்குக் கொஞ்சம் மேலே பொருத்த வேண்டும்.+ 28 மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு நீல நிற நாடாவால் இணைக்க வேண்டும். அப்போதுதான், மார்ப்பதக்கம் இடுப்புப்பட்டைக்கு மேலேயே, ஏபோத்தின் மேல் அசையாமல் நிற்கும்.
29 ஆரோன் பரிசுத்த அறைக்குள் போகும்போது நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைப் போட்டுக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை யெகோவாவின் முன்னிலையில் நினைவுச் சின்னமாக எப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டு போக வேண்டும். 30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் ஊரீமையும் தும்மீமையும்*+ நீ வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் வரும்போது அவை அவர் நெஞ்சுக்கு மேலே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக ஆரோன் அவற்றை யெகோவாவின் முன்னால் எப்போதும் தன் நெஞ்சுக்கு மேலே சுமக்க வேண்டும்.
31 ஏபோத்துக்கு உள்ளே போடுவதற்காகக் கையில்லாத ஒரு அங்கியை முழுக்க முழுக்க நீல நிற நூலால் செய்ய வேண்டும்.+ 32 அதன் நடுவில் கழுத்துப் பகுதியை அமைக்க வேண்டும். அந்தக் கழுத்துப் பகுதியைச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் நெசவாளர் நெய்ய வேண்டும். அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதியைப் போல் இருக்க வேண்டும்; அப்போதுதான், அது கிழியாமல் இருக்கும். 33 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் மாதுளம்பழங்கள் போல செய்து, அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். தங்கத்தில் மணிகள்போல் செய்து இடையிடையே வைத்துத் தைக்க வேண்டும். 34 ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம், ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம் என அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். 35 குருத்துவச் சேவை செய்யும்போது ஆரோன் இந்த அங்கியைப் போட்டிருக்க வேண்டும். அவன் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே யெகோவாவின் முன்னிலையில் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அந்த மணிகளின் ஓசை கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவன் கொல்லப்படுவான்.+
36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும். 37 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்ட வேண்டும்.+ அது எப்போதும் தலைப்பாகையின் முன்பக்கம் இருக்க வேண்டும். 38 அது ஆரோனின் நெற்றிமேல் இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கிற பரிசுத்தமான காணிக்கைகளின் விஷயத்தில் யாராவது பாவம் செய்தால், அதற்கு ஆரோன் பொறுப்பேற்க வேண்டும்.+ ஜனங்களை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஆரோன் எப்போதும் தன் நெற்றியில் அந்தத் தகட்டைக் கட்டியிருக்க வேண்டும்.
39 கட்டம்போட்ட அங்கியையும் தலைப்பாகையையும் உயர்தர நாரிழையால் நெய்ய வேண்டும். அதோடு, இடுப்புக்கச்சையையும் நெய்ய வேண்டும்.+
40 ஆரோனின் மகன்களுக்கு மதிப்பும் அழகும் சேர்க்கிற அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், முண்டாசுகளையும்கூட நீ செய்ய வேண்டும்.+ 41 உன் அண்ணன் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவற்றை நீ போட்டுவிட வேண்டும். அவர்களை அபிஷேகம் செய்து,+ புனிதப்படுத்தி, குருமார்களாக நியமிக்க+ வேண்டும். 42 அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளை மறைப்பதற்காக நாரிழையில் கால்சட்டைகளைச் செய்ய வேண்டும்.+ அவை இடுப்பிலிருந்து தொடைவரை நீண்டதாக இருக்க வேண்டும். 43 ஆரோனும் அவனுடைய மகன்களும் சந்திப்புக் கூடாரத்துக்கு வரும்போதும், பரிசுத்த இடத்திலுள்ள பலிபீடத்தில் சேவை செய்ய வரும்போதும் அந்தக் கால்சட்டையைப் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தக் குற்றத்துக்காக அவர்கள் சாவார்கள். அவருக்கும் அவருடைய வருங்காலச் சந்ததிக்கும் இது நிரந்தரச் சட்டமாக இருக்கும்” என்றார்.