ஏசாயா
3 உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா,
எருசலேம் ஜனங்களும் யூதா ஜனங்களும் நம்பியிருக்கிற எல்லாவற்றையும் அழிப்பார்.
அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காதபடி செய்துவிடுவார்.+
2 அவர்கள் நம்பியிருக்கிற பலசாலியையும், போர்வீரனையும்,
நீதிபதியையும், தீர்க்கதரிசியையும்,+ குறிசொல்கிறவனையும், பெரியவரையும்,*
3 ஐம்பது பேருக்குத் தலைவனையும்,+ முக்கியப் பிரமுகரையும், ஆலோசகரையும்,
திறமைவாய்ந்த மந்திரவாதியையும், மாயவித்தை நிபுணரையும் அழித்துவிடுவார்.+
சிறுவர்கள் பெரியவர்களைத் தாக்குவார்கள்.
சாதாரண ஆட்கள் மதிப்புக்குரியவர்களை எதிர்த்துப் பேசுவார்கள்.+
6 ஒவ்வொருவனும் தன் அப்பாவின் வீட்டிலுள்ள சகோதரனைப் பார்த்து,
“உன்னிடம் சால்வை இருக்கிறது; அதனால் நீ எங்கள் தலைவனாக இரு.
பாழாய்க் கிடக்கிற இந்த இடத்தை ஆட்சி செய்” என்று சொல்வான்.
7 ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்காமல்,
“என்னால் உங்கள் காயத்துக்குக் கட்டுப் போட முடியாது.
என் வீட்டில் சாப்பாடும் இல்லை, துணிமணியும் இல்லை.
அப்படியிருக்கும்போது, நான் எப்படி ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பேன்?” என்று சொல்வான்.
8 எருசலேம் அழிந்துவிட்டது.
யூதா நாசமாகிவிட்டது.
ஜனங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததையே பேசுகிறார்கள், செய்கிறார்கள்.
அவருடைய மகிமையான கண்களுக்கு முன்னாலேயே அவர் பேச்சை மீறி நடக்கிறார்கள்.+
9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.
சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+
அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை.
அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.
10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+
11 ஆனால், கெட்டவன் ஆபத்தில் சிக்குவான்.
அவன் என்ன செய்தானோ அதுவே அவனுக்குச் செய்யப்படும்.
கடைசியில் அழிந்துபோவான்.
12 வேலை வாங்குகிறவர்கள் என் ஜனங்களைச் சக்கையாகப் பிழிகிறார்கள்.
பெண்கள் அவர்களை ஆட்சி செய்கிறார்கள்.
என் ஜனங்களே, உங்கள் தலைவர்கள் உங்களை அலைய விடுகிறார்கள்.
வழி தெரியாமல் திண்டாட வைக்கிறார்கள்.+
13 யெகோவா அவர்களுக்குத் தீர்ப்பு கொடுக்க வந்துவிட்டார்.
அவர்களுக்குத் தண்டனை கொடுக்கத் தயாராகிவிட்டார்.
14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார்.
“நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.
ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+
15 உங்களுக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் ஜனங்களைப் பாடுபடுத்துவீர்கள்?
எவ்வளவு தைரியம் இருந்தால் ஏழைகளை ஏறி மிதிப்பீர்கள்?”+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.
16 யெகோவா சொல்வது இதுதான்: “சீயோனில் உள்ள பெண்கள் சரியான அகங்காரிகள்.
தலையை நிமிர்த்திக்கொண்டு சுற்றித் திரிகிறார்கள்.
கண்களால் காதல் வலை வீசுகிறார்கள்.
கொலுசு சத்தம் கேட்கும்படி தளுக்கிக் குலுக்கி நடக்கிறார்கள்.
17 யெகோவா அந்தப் பெண்களின் தலையில் புண்கள் வரும்படி செய்வார்.
அவர்களுடைய தலையை யெகோவா வழுக்கையாக்குவார்.+
18 அந்த நாளில் யெகோவா அவர்களுடைய அழகான வளையல்களையும்,
கூந்தல் ஆபரணங்களையும்,* பிறை வடிவ ஆபரணங்களையும்,+
19 தொங்கட்டான்களையும், காப்புகளையும், முக்காடுகளையும்,
20 தலை அணிகலன்களையும், கொலுசுகளையும், மார்க்கச்சைகளையும்,
வாசனைத் தைலக் குப்பிகளையும், தாயத்துகளையும்,*
21 மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22 பட்டாடைகளையும், மேலாடைகளையும், சால்வைகளையும், கைப் பைகளையும்,
23 கைக் கண்ணாடிகளையும்,+ நாரிழை உடைகளையும்,*
தலைப்பாகைகளையும், வலைத்துணிகளையும் பிடுங்கிப்போடுவார்.
24 அவர்களுடைய பரிமளத் தைலம் வாசனையாக+ இருக்காது, நாற்றமாகத்தான் இருக்கும்.
தலையில் கூந்தல் இருக்காது, வழுக்கைதான் இருக்கும்.+
இடுப்பில் வார் இருக்காது, கயிறுதான் இருக்கும்.
ஆடம்பரமான உடைக்குப் பதிலாகத் துக்கத் துணியைத்தான்* அவர்கள் உடுத்துவார்கள்.+
அவர்களுக்கு அழகு இருக்காது, சூட்டுத் தழும்புதான் இருக்கும்.