யாத்திராகமம்
5 பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “‘வனாந்தரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாட என் ஜனங்களை அனுப்பி வை’ என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள். 2 ஆனால் பார்வோன், “யார் அந்த யெகோவா?+ நான் எதற்காக அவருடைய பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை அனுப்ப வேண்டும்?+ யெகோவா யாரென்றே எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலர்களைக் கண்டிப்பாக அனுப்ப மாட்டேன்”+ என்றான். 3 ஆனால் அவர்கள், “எபிரெயர்களின் கடவுள் எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுள் யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும், தயவுசெய்து அனுமதி கொடுங்கள்.+ இல்லையென்றால், அவர் எங்களை நோயினாலோ வாளினாலோ கொன்றுவிடுவார்” என்றார்கள். 4 அதற்கு எகிப்தின் ராஜா, “மோசே! ஆரோன்! இந்த ஜனங்களுடைய வேலையை ஏன் கெடுக்கிறீர்கள்? போய் அவரவர் வேலையைப் பாருங்கள்!”+ என்றான். 5 அதோடு, “இந்தத் தேசத்தில் உங்களுடைய ஜனங்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள். அத்தனை பேருடைய வேலையையும் ஏன் கெடுக்கிறீர்கள்?” என்றான்.
6 ஜனங்களிடம் வேலை வாங்கிய அதிகாரிகளுக்கும் உதவியாளர்களுக்கும்* பார்வோன் அதே நாளில் இப்படிக் கட்டளை கொடுத்தான்: 7 “செங்கல் செய்ய நீங்கள் இனிமேல் ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கக் கூடாது.+ அவர்களே போய் வைக்கோலைக் கொண்டுவரட்டும். 8 ஆனால், முன்பு எத்தனை செங்கல் செய்தார்களோ அதே அளவுக்கு இப்போதும் செய்ய வேண்டும். அதில் ஒரு செங்கல்கூட குறையக் கூடாது. அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டார்கள்.* அதனால்தான், ‘நாங்கள் போக வேண்டும், எங்களுடைய கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டும்’ என்று சொல்கிறார்கள். 9 அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை கொடுங்கள், அவர்களை ஓய்வெடுக்க விடாதீர்கள். அப்போதுதான், வெட்டிப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்று சொன்னான்.
10 அதனால், அந்த அதிகாரிகளும்+ உதவியாளர்களும் ஜனங்களிடம் போய், “இனிமேல் உங்களுக்கு வைக்கோல் தரப்போவதில்லை என்று பார்வோன் சொல்லிவிட்டார். 11 நீங்களே போய் வைக்கோலைத் தேடி எடுத்துக்கொண்டு வர வேண்டும். ஆனால், உங்கள் வேலை கொஞ்சம்கூட குறைக்கப்படாது” என்றார்கள். 12 அதனால், வைக்கோலுக்காக வயல்களில் இருக்கும் தாள்களைத் தேடி ஜனங்கள் எகிப்து தேசமெங்கும் அலைந்தார்கள். 13 அவர்களுடைய அதிகாரிகள், “வைக்கோல் இருந்தபோது எந்தளவுக்கு வேலை செய்தீர்களோ அதே அளவுக்குத் தினமும் வேலை செய்தாக வேண்டும்” என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். 14 அதோடு, உதவியாளர்களாகத் தாங்கள் நியமித்த இஸ்ரவேலர்களை அடித்தார்கள்.+ அவர்களிடம், “முன்பு செய்துவந்த அளவுக்கு ஏன் நேற்றைக்கும் இன்றைக்கும் செங்கல் செய்யவில்லை?” என்று அதட்டினார்கள்.
15 அதனால், அவர்களுடைய உதவியாளர்களாக இருந்த இஸ்ரவேலர்கள் பார்வோனிடம் போய், “உங்கள் வேலையாட்களாகிய எங்களை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? 16 வைக்கோலே தராமல், ‘செங்கல் செய்யுங்கள்!’ என்று உங்கள் ஆட்கள் சொல்கிறார்கள். உங்கள் வேலையாட்களாகிய எங்களை அடிக்கிறார்கள். ஆனால், தப்பு உங்களுடைய ஆட்கள்மேல்தான் இருக்கிறது” என்று முறையிட்டார்கள். 17 அதற்கு அவன், “நீங்கள் சோம்பேறிகளாகிவிட்டீர்கள்,* சோம்பேறிகளாகிவிட்டீர்கள்!+ அதனால்தான், ‘நாங்கள் போக வேண்டும், யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும்’ என்று சொல்கிறீர்கள்.+ 18 போங்கள், போய் வேலையைப் பாருங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரவே மாட்டோம், ஆனால், நீங்கள் முன்பு செய்துவந்த அதே அளவுக்குச் செங்கல் செய்ய வேண்டும்” என்றான்.
19 வழக்கமாகச் செய்துவந்த செங்கலில் ஒன்றுகூட குறையக் கூடாது என்று ராஜா கட்டளை கொடுத்ததால், தாங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டதாக அந்த உதவியாளர்கள் நினைத்தார்கள். 20 அவர்கள் பார்வோனைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவர்களைச் சந்திக்க மோசேயும் ஆரோனும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். 21 உடனே அவர்களிடம், “பார்வோனும் அவருடைய ஆட்களும் எங்களை வெறுக்கும்படி செய்துவிட்டீர்கள். எங்களைக் கொலை செய்வதற்காக நீங்களே அவர்கள் கையில் வாளைக் கொடுத்துவிட்டீர்கள்.+ யெகோவா உங்களைப் பார்த்துக்கொள்ளட்டும், அவர் உங்களை நியாயந்தீர்க்கட்டும்” என்று சொன்னார்கள். 22 அப்போது மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, ஏன் இந்த ஜனங்களுக்குக் கஷ்டம் கொடுத்தீர்கள்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்கள்? 23 உங்கள் பெயரில் பேசுவதற்காக நான் பார்வோனிடம் போன+ சமயத்திலிருந்து அவன் இவர்களை இன்னும் அதிகமாகக் கொடுமைப்படுத்தி வருகிறானே.+ உங்கள் ஜனங்களை நீங்கள் ஏன் காப்பாற்றாமல் இருக்கிறீர்கள்?”+ என்றார்.