எசேக்கியேல்
32 12-ஆம் வருஷம், 12-ஆம் மாதம், முதல் நாளில் யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனைப் பற்றி இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:
‘நீ தேசங்களின் நடுவில் பலமான இளம் சிங்கத்தைப் போல இருந்தாய்.
ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்டாய்.
ராட்சதக் கடல் பிராணியைப் போல+ உன் ஆறுகளில் துடிப்போடு திரிந்தாய்.
கால்களால் சேற்றைக் கிளறி, ஆறுகளை அசுத்தமாக்கினாய்.’
3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘மற்ற தேசத்து ஜனங்களைக் கூட்டமாக வர வைப்பேன்.
அவர்களைக் கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்.
அவர்கள் உன்னை என்னுடைய வலையில் பிடித்துத் தூக்குவார்கள்.
4 நான் உன்னை நிலத்தில் போட்டுவிடுவேன்.
வெட்டவெளியில் எறிந்துவிடுவேன்.
வானத்துப் பறவைகள் உன்மேல் வந்து உட்காரும்படி செய்வேன்.
பூமியெங்கும் இருக்கிற காட்டு மிருகங்களுக்கு உன்னை இரையாக்குவேன்.+
5 உன்னுடைய சதையை மலைகள்மேல் வீசிவிடுவேன்.
உன்னுடைய உடலில் மிச்சம் மீதியிருக்கிறவற்றைக் கொண்டு
பள்ளத்தாக்குகளை நிரப்புவேன்.+
6 உன்னிடமிருந்து பீறிக்கொண்டு வருகிற இரத்தத்தால் நான் தேசத்தை மூழ்கடிப்பேன்.
உன் இரத்தம் உயரமான மலைகளை எட்டும்.
அது நீரோடைகளை நிரப்பும்.’
7 ‘நான் உன்னை அழிக்கும்போது வானத்தை மூடிவிடுவேன்.
நட்சத்திரங்களை இருண்டுபோக வைப்பேன்.
சூரியனை மேகங்களால் மறைப்பேன்.
நிலவு வெளிச்சம் தராது.+
8 வானத்தில் இருக்கிற விளக்குகளையெல்லாம் அணைத்துவிடுவேன்.
உன் தேசத்தைக் கும்மிருட்டாக்குவேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
9 ‘உன்னுடைய ஜனங்கள் முன்பின் தெரியாத தேசங்களுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போகும்படி செய்வேன்.+
அப்போது, பல தேசத்து ஜனங்களின் நெஞ்சத்தைக் கலங்க வைப்பேன்.
10 அவர்களை அதிர்ச்சியடைய வைப்பேன்.
அவர்களுடைய ராஜாக்களுக்குமுன் உன்னைத் தாக்குவதற்காக என் வாளைச் சுழற்றுவேன்.
அப்போது, அந்த ராஜாக்கள் பயத்தில் மிரண்டுபோவார்கள்.
நீ வெட்டி வீழ்த்தப்படும் நாளில்
அவர்கள் எல்லாரும் உயிருக்குப் பயந்து நடுங்கிக்கொண்டே இருப்பார்கள்.’
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘பாபிலோன் ராஜாவின் வாள் உனக்கு எதிராக வரும்.+
12 பலம்படைத்த வீரர்களின் வாளால் உன்னுடைய ஜனக்கூட்டத்தை வெட்டிச் சாய்ப்பேன்.
அந்த வீரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.+
அவர்கள் எகிப்தின் தலைக்கனத்துக்கு முடிவுகட்டி, அவளுடைய ஜனக்கூட்டத்தை அடியோடு அழிப்பார்கள்.+
13 பாய்ந்தோடுகிற தண்ணீரின் ஓரமாக மேயும் அவளுடைய மந்தையையெல்லாம் நான் அழிப்பேன்.+
இனி எந்த மனுஷனின் காலோ மிருகத்தின் காலோ அந்தத் தண்ணீரைக் கலக்காது.’+
14 ‘அப்போது நான் அந்தத் தண்ணீரைத் தெளிய வைத்து,
ஆறுகளை எண்ணெய் போல ஓட வைப்பேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
15 ‘நான் எகிப்திலுள்ள எல்லாவற்றையும் பாழாக்கி, அதைப் பொட்டல் காடாக்குவேன்.+
அங்கு குடியிருக்கிற எல்லாரையும் அழிப்பேன்.
அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+
16 இது ஒரு புலம்பல் பாட்டு. ஜனங்கள் கண்டிப்பாக இதைப் பாடுவார்கள்.
மற்ற தேசத்துப் பெண்களும் இதைப் பாடுவார்கள்.
எகிப்து தேசத்தையும் அதன் ஜனக்கூட்டத்தையும் பற்றி அவர்கள் இப்படிப் புலம்பிப் பாடுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
17 12-ஆம் வருஷம், மாதத்தின்* 15-ஆம் நாளில் யெகோவா என்னிடம், 18 “மனிதகுமாரனே, எகிப்தின் ஜனக்கூட்டத்துக்காக நீ ஒப்பாரி வை. சவக்குழிக்குப் போகிறவர்களோடு சேர்ந்து அவளும்* பலம்படைத்த தேசங்களின் ஜனங்களும் மண்ணுக்குக் கீழே போவார்கள் என்று அறிவிப்பு செய்.
19 ‘உன்னைப் போல அழகி யாரும் இல்லை என்று நினைக்கிறாயோ? நீ மண்ணுக்குள் போய், விருத்தசேதனம் செய்யப்படாத ஆட்களோடு கிட!’
20 ‘எகிப்தியர்கள்* வாளால் வெட்டப்பட்டவர்களோடு கிடப்பார்கள்.+ எகிப்து* வாளுக்குப் பலியாக்கப்பட்டாள். அவளையும் அவளுடைய கூட்டத்தையும் இழுத்துக்கொண்டு போங்கள்.
21 கல்லறையின் ஆழத்திலே, பலம்படைத்த போர்வீரர்கள் பார்வோனோடும் அவனுக்கு உதவி செய்தவர்களோடும் பேசுவார்கள். அவர்கள் கண்டிப்பாக மண்ணுக்குள் போவார்கள். வாளால் வெட்டப்பட்டுக் கிடக்கிற விருத்தசேதனம் செய்யப்படாத ஆட்களோடு கிடப்பார்கள். 22 அசீரியா அவளுடைய ஜனங்களோடு அங்கே இருக்கிறாள். அவர்களுடைய ராஜாவை* சுற்றி அவர்களுடைய கல்லறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாருமே வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்கள்.+ 23 அவளுடைய கல்லறைகள் ஆழத்தில் இருக்கின்றன. அவளுடைய ஜனக்கூட்டம் அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் இருக்கிறது. உலகத்தில் இருக்கிறவர்களை அவர்கள் பயமுறுத்தி வந்ததால் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.
24 ஏலாமும்+ அங்கே இருக்கிறாள். அவளுடைய ஜனக்கூட்டம் அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் இருக்கிறது. உலகத்தில் இருந்தவர்களைப் பயமுறுத்தி வந்ததால் அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமல் மண்ணுக்குக் கீழே போனார்கள். சவக்குழியில் இறங்குகிறவர்களோடு சேர்ந்து அவர்களும் அவமானம் அடைவார்கள். 25 வெட்டப்பட்டுக் கிடக்கிறவர்களின் நடுவில் அவளுக்கு* ஒரு படுக்கையைப் போட்டிருக்கிறார்கள். அவளுடைய ஜனக்கூட்டம் அவளுடைய கல்லறைகளைச் சுற்றிலும் இருக்கிறது. அவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள், உலகத்தில் இருந்தவர்களைப் பயமுறுத்தி வந்ததால் வாளினால் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்கள். சவக்குழியில் இறங்குகிறவர்களோடு சேர்ந்து அவர்களும் அவமானம் அடைவார்கள். அவளும் வெட்டப்பட்டவர்களோடு கிடக்கிறாள்.
26 அங்குதான் மேசேக்கும் தூபாலும்+ அவர்களுடைய ஜனக்கூட்டமும் இருக்கின்றன. அவனை* சுற்றி அவர்களுடைய* கல்லறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள், உலகத்தில் இருந்தவர்களைப் பயமுறுத்தி வந்ததால் வாளால் குத்திக் கொல்லப்பட்டவர்கள். 27 விருத்தசேதனம் செய்யப்படாத பலசாலி வீரர்களோடு அவர்களும் கிடக்க மாட்டார்களா? போர் ஆயுதங்களுடன் கல்லறையில் இறங்கிய அந்த வீரர்களோடு அவர்களும் இறங்க மாட்டார்களா? அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய தலைகளின் கீழ் வைக்கப்படும்.* அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனை அவர்களுடைய எலும்புகளின் மேல் சுமத்தப்படும். ஏனென்றால், பலசாலிகளான இந்த வீரர்கள் உலகத்தில் இருந்தவர்களைப் பயமுறுத்திக்கொண்டு இருந்தார்கள். 28 நீ* விருத்தசேதனம் செய்யப்படாதவர்களோடு நொறுக்கப்பட்டு, வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களோடு கிடப்பாய்.
29 ஏதோமும்+ அங்கே இருக்கிறாள். அவளுடைய ராஜாக்களும் தலைவர்களும் பலம்படைத்தவர்களாக இருந்தும்கூட வாளால் வெட்டப்பட்டவர்களோடு கிடத்தப்பட்டார்கள். அவர்களும்கூட விருத்தசேதனம் செய்யப்படாதவர்களோடும்+ சவக்குழியில் இறங்குகிறவர்களோடும் கிடப்பார்கள்.
30 வடதிசை தலைவர்கள் எல்லாரும், சீதோனியர்கள்+ எல்லாரும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தினால் எல்லாரையும் பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது கேவலப்பட்டுப்போய், வாளால் வெட்டப்பட்டவர்களோடு மண்ணுக்குள் போயிருக்கிறார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில், வாளுக்குப் பலியானவர்களோடு கிடப்பார்கள். சவக்குழியில் இறங்குகிறவர்களோடு சேர்ந்து அவர்களும் அவமானம் அடைவார்கள்.
31 பார்வோன் இதையெல்லாம் பார்ப்பான். தன்னுடைய ஜனக்கூட்டத்தின் கதியைப் பார்த்து ஆறுதல் அடைவான்.+ பார்வோனும் அவனுடைய எல்லா படைவீரர்களும் வாளுக்குப் பலியாவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
32 ‘பார்வோனும் அவனுடைய ஜனக்கூட்டமும் உலகத்தில் இருந்தவர்களைப் பயமுறுத்தி வந்ததால், விருத்தசேதனம் செய்யப்படாமல் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்ட ஆட்களோடு கிடத்தப்படுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.