எரேமியா
19 யெகோவா என்னிடம், “நீ ஒரு குயவனிடம் போய் ஒரு மண் ஜாடியை வாங்கிக்கொள்.+ ஜனங்களின் பெரியோர்களையும்* மூத்த குருமார்களையும் கூட்டிக்கொண்டு, 2 ‘குயவனின் நுழைவாசலுக்கு’ பக்கத்தில் இருக்கிற பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்குக்குப் போய் இந்த வார்த்தைகளை அறிவி: 3 ‘யூதாவின் ராஜாக்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“நான் சொல்வதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைவீர்கள்.* நான் இந்த இடத்தை அழிக்கப்போகிறேன். 4 ஏனென்றால், நீங்கள் என்னை விட்டுவிட்டு,+ உங்களுக்கும் உங்களுடைய முன்னோர்களுக்கும் யூதாவின் ராஜாக்களுக்கும் தெரியாத பொய் தெய்வங்களுக்கு இங்கே பலி செலுத்துகிறீர்கள். அப்பாவிகளை இங்கே கொன்று குவிக்கிறீர்கள்.+ இந்த இடத்தை அடையாளம் தெரியாதபடி மாற்றிவிட்டீர்கள்.+ 5 இங்கே பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, பாகாலுக்குத் தகன பலி கொடுப்பதற்காக உங்கள் பிள்ளைகளை நெருப்பில் சுட்டெரிக்கிறீர்கள்.+ இதை நான் செய்யச் சொல்லவே இல்லை. இப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.”’+
6 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நாட்கள் வரும். அப்போது இந்த இடம் தோப்பேத் என்றோ பென்-இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படும்.+ 7 யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் போடுகிற திட்டங்களை இங்கே நான் குலைத்துப்போடுவேன். அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் வாளுக்கு அவர்களைப் பலியாக்குவேன். அவர்களுடைய பிணங்களைப் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன்.+ 8 அதனால், அவர்களுடைய தேசத்துக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.* அந்த வழியாகப் போகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சி அடைவான், அதற்குக் கிடைத்த எல்லா தண்டனையையும் பார்த்துக் கேலி செய்வான்.+ 9 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகள் அவர்களைச் சுற்றிவளைப்பார்கள். அப்போது, அவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடுவார்கள். தங்களுடைய மகன்களையும் மகள்களையும்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.”’+
10 பின்பு, நீ கூட்டிக்கொண்டு போனவர்களுடைய கண் எதிரிலேயே அந்த மண்ஜாடியை உடைத்து நொறுக்கிப்போடு. 11 அதன்பின் அவர்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இப்படித்தான் இந்த ஜனங்களையும் இந்த நகரத்தையும் நான் நொறுக்கிப்போடுவேன். சுக்குநூறான மண்ஜாடியை ஒட்ட வைக்க முடியுமா? அதே கதிதான் இவர்களுக்கும் வரும். இறந்தவர்கள் தோப்பேத்தில் புதைக்கப்படுவார்கள். புதைப்பதற்கு இடமே இல்லாத அளவுக்கு அங்கே பிணங்கள் குவிந்திருக்கும்”+ என்று சொல்.’
12 யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இப்படித்தான் இந்த இடத்தையும் இந்த ஜனங்களையும் நான் அழிப்பேன். இந்த நகரத்தை நான் தோப்பேத்தைப் போல ஆக்கிவிடுவேன். 13 எருசலேம் ஜனங்களுடைய வீடுகளும் யூதாவின் ராஜாக்களுடைய அரண்மனைகளும் இந்த தோப்பேத்தைப்+ போலவே அசுத்தமாகும். ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில் அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் பலி செலுத்துகிறார்கள்.+ பொய் தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்’”+ என்று சொன்னார்.
14 யெகோவா சொன்னபடியே எரேமியா தோப்பேத்துக்குப் போய்த் தீர்க்கதரிசனம் சொன்னார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து அதன் பிரகாரத்தில் நின்றுகொண்டு எல்லா ஜனங்களிடமும், 15 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எல்லாரும் என் பேச்சைக் கேட்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டதால்+ நான் சொன்ன எல்லா தண்டனையையும் இந்த நகரத்துக்கும் நகர்ப்புறத்துக்கும் கொண்டுவரப் போகிறேன்’” என்று சொன்னார்.