எண்ணாகமம்
9 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருஷம் முதலாம் மாதம்,+ சீனாய் வனாந்தரத்தில் யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்கள் நான் சொன்ன சமயத்தில்+ பஸ்கா பண்டிகையைக்+ கொண்டாட வேண்டும். 3 அதாவது, இந்த மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். அது சம்பந்தமாக நான் கொடுத்த எல்லா சட்டதிட்டங்களையும் முறைமைகளையும் பின்பற்ற வேண்டும்”+ என்றார்.
4 அவர் சொன்னது போலவே, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் சீனாய் வனாந்தரத்தில் அவர்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியெல்லாம் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
6 அந்த நாளில் சிலர் ஒரு பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்டிருந்தார்கள்.+ அதனால், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலையில் இருந்தார்கள். அவர்கள் அன்றைக்கு மோசேயிடமும் ஆரோனிடமும் வந்து,+ 7 “பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம். யெகோவா சொன்ன இந்த நாளில், எல்லாரோடும் சேர்ந்து நாங்கள் பண்டிகையைக் கொண்டாடவே முடியாதா?”+ என்று கேட்டார்கள். 8 அதற்கு மோசே, “கொஞ்சம் பொறுங்கள், யெகோவா என்ன சொல்கிறார் என்று கேட்டுச் சொல்கிறேன்”+ என்றார்.
9 யெகோவா மோசேயிடம், 10 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களிலோ உங்களுக்குப் பின்வரும் தலைமுறைகளிலோ யாராவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால்+ அல்லது நீண்டதூரப் பயணம் போயிருந்தால், அவரும் யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 11 ஆனால், இரண்டாம் மாதம்+ 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். பலி கொடுக்கும் ஆட்டைப் புளிப்பில்லாத ரொட்டியோடும் கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+ 12 எதையும் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+ ஆட்டின் எந்த எலும்பையும் முறிக்கக் கூடாது.+ பஸ்கா பண்டிகை சம்பந்தப்பட்ட எல்லா சட்டதிட்டங்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். 13 ஆனால் ஒருவன் பிணத்தினால் தீட்டுப்படாமலோ, நீண்டதூரப் பயணம் போகாமலோ இருந்தும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடாமல் அதை அலட்சியப்படுத்தினால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் பண்டிகையை அதற்கான நாளில் அவன் கொண்டாடவில்லை. அந்தப் பாவத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.
14 வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவன் உங்களோடு வாழ்ந்துவந்தால் அவனும் யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அதற்கான எல்லா சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.+ இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்’”+ என்றார்.
15 வழிபாட்டுக் கூடாரம், அதாவது சாட்சிப் பெட்டியின் கூடாரம், அமைக்கப்பட்ட நாளில்+ அதன்மேல் மேகம் தங்கியது. ஆனால், சாயங்காலத்திலிருந்து காலைவரை அது நெருப்புபோல் தெரிந்தது.+ 16 இதேபோல் தினமும் நடந்துவந்தது. பகலில் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும், ராத்திரியில் அது நெருப்புபோல் தெரியும்.+ 17 கூடாரத்தைவிட்டு மேகம் மேலே எழும்பும்போதெல்லாம் இஸ்ரவேலர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்படுவார்கள்.+ எந்த இடத்தில் மேகம் தங்குகிறதோ, அங்கே அவர்கள் முகாம்போடுவார்கள்.+ 18 யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் புறப்படுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே முகாம்போடுவார்கள்.+ வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்வரை அவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருப்பார்கள். 19 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் பல நாட்கள் தங்கியிருந்தாலும் இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அங்கேயே இருப்பார்கள்.+ 20 சிலசமயம், அந்த மேகம் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் சில நாட்கள் மட்டும்தான் தங்கியிருக்கும். யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள். 21 சிலசமயம் சாயங்காலத்திலிருந்து காலை வரைக்கும்தான் அந்த மேகம் தங்கியிருக்கும். காலையில் மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் அங்கிருந்து புறப்படுவார்கள். பகலோ ராத்திரியோ, மேகம் மேலே எழும்பும்போது அவர்கள் புறப்படுவார்கள்.+ 22 இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, அதற்கும் அதிகமான காலமோ, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்போது அவர்களும் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஆனால், மேகம் மேலே எழும்பும்போது அங்கிருந்து புறப்படுவார்கள். 23 இப்படி, யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படி அவர்கள் செய்தார்கள், யெகோவாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.