எசேக்கியேல்
27 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, தீருவைப் பார்த்து நீ இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:+
3 ‘கடலின் நுழைவாசலில் குடியிருக்கிறவளே,
பல தீவுகளோடு வியாபாரம் செய்கிறவளே,
உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“தீருவே, நீ அழகே உருவானவள் என்று சொல்லிக்கொண்டாய்.+
4 உன் எல்லைகள் கடலுக்கு நடுவில் இருக்கின்றன.
உன்னைக் கட்டியவர்கள் உன்னைப் பேரழகோடு கட்டினார்கள்.
5 கப்பல் கட்டுவது போல செனீரின்+ ஆபால் மரங்களால் உனக்குப் பலகைகளைச் செய்தார்கள்.
லீபனோனின் தேவதாரு மரத்தால் உனக்குப் பாய்மரத்தைச் செய்தார்கள்.
6 பாசானின் கருவாலி மரங்களை வைத்து உனக்குத் துடுப்புகள் செய்தார்கள்.
யானைத்தந்தம் பதிக்கப்பட்ட ஊசியிலை மரத்தை கித்தீம்+ தீவுகளிலிருந்து கொண்டுவந்து உன்னுடைய முன்பகுதியைச் செய்தார்கள்.
7 எகிப்தின் பலவண்ண நாரிழை* துணியால் உனக்குக் கப்பற்பாயைச் செய்தார்கள்.
எலிஷா+ தீவுகளின் நீல நிற நூலினாலும் ஊதா நிற கம்பளியினாலும் உன்னுடைய தளத்துக்குக் கூரை அமைத்தார்கள்.
8 சீதோன் ஜனங்களும் அர்வாத்+ ஜனங்களும் உனக்காகத் துடுப்புப் போட்டார்கள்.
தீருவே, திறமைசாலிகளான உன்னுடைய ஜனங்கள்தான் உனக்குக் கப்பலோட்டிகளாக இருந்தார்கள்.+
9 அனுபவமும் திறமையும் உள்ள ஆட்கள் கேபாலிலிருந்து+ வந்து உன்னுடைய விரிசல்களை அடைத்தார்கள்.+
கடலில் போன எல்லா கப்பல்களும் வியாபாரத்துக்காக உன்னிடம் வந்தன.
எல்லா கப்பலோட்டிகளும் பண்டமாற்றத்துக்காக உன்னைத் தேடிவந்தார்கள்.
10 பெர்சியர்களும் லூத்தியர்களும் பூத்தியர்களும்+ உன்னுடைய படைவீரர்களாக இருந்தார்கள்.
கேடயங்களையும் தலைக்கவசங்களையும் தொங்கவிட்டு உன்னை மேன்மைப்படுத்தினார்கள்.
11 உன் படையிலிருந்த அர்வாத் வீரர்கள் உன் மதில்கள்மேல் காவலுக்கு நின்றார்கள்.
வீரதீரமுள்ள ஆட்கள் உன்னுடைய கோபுரங்களைக் காவல் காத்தார்கள்.
உன்னுடைய மதில்களைச் சுற்றிலும் வட்டமான கேடயங்களைத் தொங்கவிட்டு
உன்னுடைய அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.
12 உன்னிடம் ஏராளமான செல்வம்+ இருந்ததால் தர்ஷீஸ்+ உன்னோடு வியாபாரம் செய்தது. வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் கொடுத்து உன்னுடைய சரக்குகளை வாங்கியது.+ 13 யாவானும் தூபாலும்+ மேசேக்கும்+ உன்னோடு வியாபாரம் செய்தன. அடிமைகளையும் செம்புப் பொருள்களையும் கொடுத்து உன்னிடமிருந்து சரக்குகளை வாங்கின.+ 14 தொகர்மா+ வம்சத்தார் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும்* கொடுத்து உன்னோடு பண்டமாற்றம் செய்தார்கள். 15 தேதான்+ ஜனங்கள் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். நீ நிறைய தீவுகளில் ஆட்களை வேலைக்கு வைத்து வியாபாரம் செய்தாய். அவர்கள் உனக்கு யானைத்தந்தங்களையும்+ கருங்காலி மரங்களையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.* 16 உன்னிடம் ஏராளமான சரக்குகள் இருந்ததால் ஏதோம் உன்னோடு வியாபாரம் செய்தது. நீலபச்சைக் கல்லையும், ஊதா நிற கம்பளி நூலையும், பல நிறங்களில் தையல்* வேலைப்பாடு செய்த உடைகளையும், உயர்தரமான துணிகளையும், பவளங்களையும், மாணிக்கங்களையும் கொடுத்து உன்னுடைய பொருள்களை வாங்கியது.
17 யூதாவும் இஸ்ரவேலும்கூட உன்னோடு வியாபாரம் செய்தன. மின்னித்+ நகரத்தின் கோதுமையையும், தரமான உணவுப் பொருள்களையும், தேனையும்,+ எண்ணெயையும், பரிமளத் தைலத்தையும்+ கொடுத்து உன்னோடு பண்டமாற்றம் செய்தன.+
18 உன்னிடம் ஏராளமான பொருள்களும் செல்வமும் இருந்ததால் தமஸ்கு+ உன்னோடு வியாபாரம் செய்து, கெல்போனின் திராட்சமதுவையும் சேகாரின்* கம்பளியையும் பண்டமாற்றம் செய்தது. 19 ஊசாலைச் சேர்ந்த வேதானும் யாவானும் உன்னுடைய சரக்குகளை வாங்கிக்கொண்டு உறுதியான இரும்பையும், கருவாய்ப்பட்டையையும்,* வசம்பையும் கொடுத்தன. 20 சவாரி செய்வதற்காக மிருகங்கள்மேல் போடப்படும் துணிகளை தேதான்+ ஜனங்கள் உன்னிடம் விற்றார்கள். 21 அரேபியர்களையும் கேதாரின்+ தலைவர்கள் எல்லாரையும் வைத்து நீ வியாபாரம் செய்தாய். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் வியாபாரம் செய்கிறவர்கள்.+ 22 சேபாவையும் ராமாகுவையும்+ சேர்ந்த வியாபாரிகள், மிகவும் தரமான வாசனைத் தைலங்களையும், விலைமதிப்புள்ள கற்களையும், தங்கத்தையும் கொடுத்து உன்னுடைய சரக்குகளை வாங்கினார்கள்.+ 23 ஆரான்,+ கன்னே, ஏதேன்+ ஊர்களைச் சேர்ந்த ஆட்களும், சேபாவையும்+ அஷூரையும்+ கில்மாத்தையும் சேர்ந்த வியாபாரிகளும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். 24 அழகான உடைகளையும், பல நிறங்களில் தையல் வேலைப்பாடு செய்த நீல நிற சால்வைகளையும், பலவண்ண தரைவிரிப்புகளையும் கயிறுகளால் நன்றாகக் கட்டி உன்னுடைய சந்தையில் விற்றார்கள்.
25 தர்ஷீசின் கப்பல்கள்+ உனக்காகச் சரக்குகளைச் சுமந்து போவதும் சுமந்து வருவதுமாக இருந்தன.
அதனால், நடுக்கடலில் நீ சொத்துகளால் நிரம்பி வழிந்தாய்.*
26 உனக்காகத் துடுப்புப் போட்டவர்கள் உன்னை ஆழ்கடலுக்குக் கொண்டுபோனார்கள்.
கிழக்குக் காற்று உன்னை நடுக்கடலில் உடைத்துப்போட்டது.
27 நீ வீழ்ச்சி அடையும் நாளில் உன்னோடு சேர்ந்து உன்னுடைய சொத்துகளும், சரக்குகளும், பொருள்களும் நடுக்கடலில் மூழ்கிவிடும்.
உன்னுடைய கப்பலோட்டிகளும், உன்னுடைய விரிசல்களை அடைக்கிறவர்களும், உன்னோடு வியாபாரம் செய்கிறவர்களும்,+ போர்வீரர்களும்+
எல்லாருமே மொத்தமாக உன்னோடு சேர்ந்து மூழ்கிவிடுவார்கள்.+
28 உன்னுடைய கப்பலோட்டிகள் அலறும் சத்தத்தில் கடலோரப் பகுதிகளே அதிரும்.
29 துடுப்புப் போடுகிறவர்கள், கப்பலோட்டிகள் என எல்லாரும்
கப்பல்களிலிருந்து இறங்கி கரையில் நிற்பார்கள்.
30 அவர்கள் உன்னுடைய கதியைப் பார்த்துக் கதறிக் கதறி அழுவார்கள்.+
தலைகளில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு, சாம்பலில் புரளுவார்கள்.
31 மொட்டையடித்துக்கொண்டு, துக்கத் துணியை* உடுத்திக்கொள்வார்கள்.
தாங்க முடியாத வேதனையில் ஓலமிட்டு அழுவார்கள்.
32 ஒப்பாரி வைத்து, இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:
‘நடுக்கடலில் சமாதியாகிவிட்ட தீருவைப் போல ஒரு நகரம் உண்டா?+
33 கடல் வழியாகச் சரக்குகளை அனுப்பி எத்தனையோ பேரை நீ சந்தோஷப்படுத்தினாயே!+
நீ குவித்த சொத்துகளாலும் சரக்குகளாலும் உலக ராஜாக்கள் பெரும் பணக்காரர்களாக ஆனார்களே!+
34 ஆனால், இப்போது நடுக்கடலில் நீ நாசமாகிவிட்டாயே! ஆழ்கடலில் அமிழ்ந்துபோனாயே!+
உன்னுடைய சரக்குகளெல்லாம் உன்னோடு மூழ்கிவிட்டதே!
உன்னுடைய ஜனங்கள் எல்லாரும் உன்னோடு சேர்ந்து மூழ்கிவிட்டார்களே!+
35 தீவுகளில் இருக்கிற எல்லாரும் அதிர்ச்சியோடு உன்னைப் பார்ப்பார்கள்.+
அவர்களுடைய ராஜாக்கள் கதிகலங்கிப்போவார்கள்.+ அவர்களுடைய முகம் பயத்தில் வெளுத்துப்போகும்.
36 உன் கதியைப் பார்த்து மற்ற தேசங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கேலி செய்வார்கள்.*
உனக்குத் திடீரென்று பயங்கரமான முடிவு வரும்.
நீ அடியோடு அழிந்துபோவாய்’”’”+ என்று சொன்னார்.