1 ராஜாக்கள்
6 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த 480-வது வருஷத்தில்,+ சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷத்தில், சிவ்*+ மாதத்தில் (அதாவது, இரண்டாம் மாதத்தில்) யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை* கட்ட ஆரம்பித்தார்.+ 2 யெகோவாவுக்காக சாலொமோன் ராஜா கட்டிய ஆலயத்தின் நீளம் 60 முழம்,* அகலம் 20 முழம், உயரம் 30 முழம்.+ 3 ஆலயத்துக்கு முன்னால் இருந்த நுழைவு மண்டபத்தின்+ நீளம் 20 முழம். நுழைவு மண்டபத்தின் நீளமும் ஆலயத்தின் அகலமும் சரிசமமாய் இருந்தது. ஆலயத்தின் முன்பக்கத்திலிருந்து 10 முழ அகலத்தில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.
4 ஆலயத்தில் குறுகலான சட்டங்களைக்+ கொண்ட ஜன்னல்களை அவர் வைத்தார். 5 ஆலயத்தின் சுவர்களை ஒட்டி, அதாவது பரிசுத்த அறையின் சுவரையும் மகா பரிசுத்த அறையின்+ சுவரையும் ஒட்டி, சுற்றிலும் ஒரு கட்டிடம் எழுப்பினார். அதில் பக்கவாட்டு அறைகளைக் கட்டினார்.+ 6 பக்கவாட்டு அறைகளின் கீழ்த்தளம் 5 முழ அகலமாகவும் நடுத்தளம் 6 முழ அகலமாகவும் மேல்தளம் 7 முழ அகலமாகவும் இருந்தது. பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் சுற்றியிருக்கிற சுவர்களில் அவர் திட்டுகளை அமைத்தார். அதனால், உத்திரங்களை இணைப்பதற்காக அந்தச் சுவர்களில் ஓட்டை போட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.+
7 ஏற்கெனவே செதுக்கித் தயாராக வைக்கப்பட்டிருந்த கற்களைப் பயன்படுத்தி ஆலயம் கட்டப்பட்டது.+ அதனால், ஆலயம் கட்டப்பட்டபோது சுத்தியல் சத்தமோ உளி சத்தமோ, வேறெந்த இரும்புக் கருவியின் சத்தமோ கேட்கவில்லை. 8 கீழ்த்தளத்தில் இருக்கிற பக்கவாட்டு அறைகளுக்குப் போகும் வாசல், ஆலயத்தின் தெற்கு* பக்கத்தில் இருந்தது.+ கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளத்துக்கும் நடுத்தளத்திலிருந்து மேல்தளத்துக்கும் போவதற்குச் சுழல் படிக்கட்டுகளை அமைத்தார். 9 ஆலயத்தின் மற்ற பகுதிகளையும் கட்டி முடித்த பின்பு+ ஆலயத்தின் உட்கூரையில் தேவதாரு உத்திரங்களைப் பொருத்தி, அவற்றைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடினார்.+ 10 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கவாட்டு அறைகளைக் கட்டினார்;+ அந்த அறைகள் ஒவ்வொன்றின் உயரமும் ஐந்து முழமாக இருந்தது. ஆலயத்தின் சுவரையும் பக்கவாட்டு அறைகளையும் தேவதாரு உத்திரங்களால் இணைத்தார்.
11 இதற்கிடையே யெகோவா சாலொமோனிடம், 12 “நீ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடந்தால், என் நீதித்தீர்ப்புகளையும் என்னுடைய எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்தால்,+ நீ கட்டுகிற இந்த ஆலயம் சம்பந்தமாக நான் உன்னுடைய அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.+ 13 நான் இஸ்ரவேலர்களுடன் தங்கியிருப்பேன்,+ என் மக்களாகிய இஸ்ரவேலர்களைக் கைவிட மாட்டேன்”+ என்று சொன்னார்.
14 சாலொமோன் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து கட்டினார். 15 ஆலயத்தின் உட்சுவர்களை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். இப்படி, தரைமுதல் கூரைவரை எல்லாவற்றையும் மரப்பலகைகளால் மூடினார். தரையை ஆபால் மரப்பலகைகளால் மூடினார்.+ 16 ஆலயத்தின் பின்பகுதியில் 20 முழ நீளத்தில் ஓர் அறையை+ அமைத்து, தரையிலிருந்து கூரைவரை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். ஆலயத்தின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அறைதான் மகா பரிசுத்த அறை.+ 17 மகா பரிசுத்த அறைக்கு முன்னாலிருந்த பகுதியான பரிசுத்த அறையின்+ நீளம் 40 முழம். 18 ஆலயத்தின் உட்புறத்தை மூடிய தேவதாரு மரப்பலகைகளில் குமிழ் வடிவங்களும் விரிந்த பூக்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டன.+ கற்களே தெரியாத அளவுக்குச் சுவர் முழுவதையும் தேவதாரு மரப்பலகைகளால் மூடினார்.
19 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்காகவே+ ஆலயத்தின் மகா பரிசுத்த அறையைத் தயார்படுத்தினார்.+ 20 மகா பரிசுத்த அறையின் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 20 முழம்.+ அந்த அறை முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். பீடத்தை*+ தேவதாரு பலகைகளால் மூடினார். 21 ஆலயத்திலுள்ள பரிசுத்த அறையின் உட்சுவர்கள் முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ தங்கத் தகடு அடிக்கப்பட்ட மகா பரிசுத்த அறையின் முன்பகுதியில் தங்கச் சங்கிலிகளை இணைத்துக் கட்டினார்.+ 22 ஆலயம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார். மகா பரிசுத்த அறைக்கு வெளியே இருந்த தூபபீடம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.+
23 மகா பரிசுத்த அறையில் வைப்பதற்காக எண்ணெய் மரத்தால்* இரண்டு கேருபீன்களைச்+ செய்தார். அவற்றின் உயரம் 10 முழம்.+ 24 முதல் கேருபீனுடைய ஒரு சிறகின் நீளம் ஐந்து முழம், மற்றொரு சிறகின் நீளம் ஐந்து முழம். ஒரு சிறகின் முனையிலிருந்து மறு சிறகின் முனைவரை 10 முழம். 25 இரண்டாவது கேருபீனின் உயரமும் 10 முழம். இரண்டு கேருபீன்களும் அளவிலும் உருவத்திலும் ஒரே மாதிரி இருந்தன. 26 ஒவ்வொரு கேருபீனையும் 10 முழ உயரத்தில் செய்தார். 27 பின்பு, அந்தக் கேருபீன்களை+ மகா பரிசுத்த அறையில் வைத்தார். கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி நின்றன. அதனால், ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது, அடுத்த கேருபீனின் சிறகு மறு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது. இரண்டு கேருபீன்களின் மற்ற சிறகுகள் அறையின் நடுப்பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன. 28 அந்தக் கேருபீன்கள்மீது அவர் தங்கத் தகடு அடித்தார்.
29 ஆலயத்தில் உள்ள எல்லா சுவர்களிலும், அதாவது உட்புற அறையிலும் வெளிப்புற அறையிலும் இருக்கிற எல்லா சுவர்களிலும், கேருபீன்கள்,+ பேரீச்ச மரங்கள்,+ விரிந்த பூக்கள் ஆகியவற்றின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.+ 30 மகா பரிசுத்த அறை, பரிசுத்த அறை ஆகியவற்றின் தரைகளைத் தங்கத் தகட்டால் மூடினார். 31 மகா பரிசுத்த அறையின் வாசலுக்காக இரட்டைக் கதவுகளை எண்ணெய் மரத்தால் செய்தார். தூண்களையும் நிலைக்கால்களையும் அதன் ஐந்தாம் பாகமாக* செய்தார். 32 அந்த இரட்டைக் கதவுகள் எண்ணெய் மரத்தால் செய்யப்பட்டன. அவற்றில் கேருபீன்கள், பேரீச்ச மரங்கள், விரிந்த பூக்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கினார். பின்பு, அவற்றுக்குத் தங்கத் தகடு அடித்தார். கேருபீன்கள், பேரீச்ச மரங்கள் ஆகியவற்றின்மீது தங்கத் தகடுகளை வைத்து சுத்தியலால் அடித்தார். 33 பரிசுத்த அறையின் வாசல் நிலைக்கால்களை எண்ணெய் மரத்தால் செய்தார். இது நான்காம் பாகத்தை* சேர்ந்தது. 34 ஆபால் மரத்தால் இரட்டைக் கதவுகளைச் செய்தார். ஒவ்வொரு கதவிலும் இரண்டு மடிப்புகள் இருந்தன. திறப்பதற்கு உதவியாக அந்தக் கதவுகள் சுழல் அச்சுகளோடு இணைக்கப்பட்டிருந்தன.+ 35 அந்தக் கதவுகளில் கேருபீன்களையும் பேரீச்ச மரங்களையும் விரிந்த பூக்களையும் செதுக்கி, அவற்றைத் தங்கத் தகட்டால் மூடினார்.
36 செதுக்கப்பட்ட கற்களை மூன்று வரிசையாக அடுக்கி அதன்மீது ஒரு வரிசை தேவதாரு மரக்கட்டைகளை வைத்து உட்பிரகாரத்தின்+ மதில் சுவரைக் கட்டினார்.+
37 நான்காம் வருஷம், சிவ்* மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டது.+ 38 பதினோராம் வருஷம், பூல்* மாதத்தில் (அதாவது, எட்டாம் மாதத்தில்) ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. வரைபடத்தில் சொல்லப்பட்ட எல்லா நுட்ப விவரங்களின்படியே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.+ சாலொமோன் ஏழு வருஷங்களில் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.