2 ராஜாக்கள்
11 அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத்+ தெரிந்துகொண்டதும், ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+ 2 ஆனால், அகசியாவின் சகோதரியான யோசேபாள் அவருடைய மகன் யோவாசைக்+ காப்பாற்றினாள்; அவள் யோராம் ராஜாவின் மகள். மற்ற இளவரசர்கள் கொல்லப்படவிருந்த சமயத்தில் யோவாசை மட்டும் யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு போனாள்; பின்பு, அவனையும் அவனுடைய தாதியையும்* உட்புற படுக்கையறையில் ஒளித்து வைத்தாள். அவனை எப்படியோ அத்தாலியாளின் கண்ணில் படாமல் மறைத்து வைத்தார்கள்; அதனால், யோவாசின் உயிர் தப்பியது. 3 யெகோவாவின் ஆலயத்தில் அவனை ஒளித்து வைத்திருந்தார்கள். அவன் ஆறு வருஷங்களுக்கு அவளோடு இருந்தான். அந்தச் சமயத்தில் அத்தாலியாள் அந்தத் தேசத்தை ஆட்சி செய்துவந்தாள்.
4 ஏழாம் வருஷத்தில், நூறு வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்களை யெகோவாவின் ஆலயத்துக்கு யோய்தா வரவழைத்தார். அவர்கள் சிறப்பு மெய்க்காவல்படை வீரர்களுக்கும்* அரண்மனைக் காவலாளிகளுக்கும்+ தலைவர்களாக இருந்தார்கள். யெகோவாவின் ஆலயத்தில் அவர்களோடு யோய்தா ஒப்பந்தம் செய்து சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு, ராஜாவின் மகனை அவர்களிடம் காட்டினார்.+ 5 அவர்களிடம், “நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஓய்வுநாளில் வேலைக்கு வருகிற காவலாளிகளை மூன்று குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஒரு குழுவினர், அரண்மனையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.+ 6 இன்னொரு குழுவினர், ‘அஸ்திவார நுழைவாசலில்’ நிற்க வேண்டும். இன்னொரு குழுவினர், அரண்மனைக் காவலாளிகள் நிற்கிற இடத்துக்குப் பின்னால் இருக்கும் நுழைவாசலில் நிற்க வேண்டும். நீங்கள் மாறி மாறி ஆலயத்தைக் காவல்காக்க வேண்டும். 7 ஓய்வுநாளில் விடுப்பு எடுக்கிற இரண்டு பிரிவுகளும்கூட அன்றைக்கு வேலைக்கு வர வேண்டும்; ராஜாவைப் பாதுகாப்பதற்காக யெகோவாவின் ஆலயத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். 8 நீங்கள் எல்லாரும் கைகளில் ஆயுதங்களோடு ராஜாவைச் சுற்றி நின்று பாதுகாக்க வேண்டும். உங்களை மீறி உள்ளே நுழைகிற யாரையும் உயிரோடு விடக்கூடாது. ராஜா எங்கே போனாலும் நீங்களும் அவர் கூடவே போக வேண்டும்” என்று கட்டளையிட்டார்.
9 குருவாகிய யோய்தா சொன்னபடியே, நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்+ செய்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய பிரிவிலிருந்த ஆட்கள் எல்லாரையும், அதாவது ஓய்வுநாளில் வேலைக்கு வந்தவர்கள், அன்றைக்கு விடுப்பு எடுக்க வேண்டியவர்கள் என எல்லாரையும், கூட்டிக்கொண்டு குருவாகிய யோய்தாவிடம் வந்தார்கள்.+ 10 அவர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த தாவீது ராஜாவின் ஈட்டிகளையும் வட்டவடிவ கேடயங்களையும் எடுத்து நூறு வீரர்களுக்குத் தலைவர்களிடம் கொடுத்தார். 11 அரண்மனைக் காவலாளிகள்+ ஆலயத்தின் வலது பக்கம் தொடங்கி இடது பக்கம்வரை தங்கள் தங்கள் இடங்களில் ஆயுதம் ஏந்திக்கொண்டு நின்றார்கள். அதோடு, பலிபீடத்தின்+ பக்கத்திலும் ஆலயத்தின் பக்கத்திலும் நின்றார்கள். இப்படி, ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள். 12 பின்பு ராஜாவின் மகனை+ யோய்தா வெளியே கூட்டிக்கொண்டு வந்து, அவனுடைய தலையில் கிரீடத்தையும்* திருச்சட்ட சுருளையும்+ வைத்தார். அப்போது அவர்கள் அவனை அபிஷேகம் செய்து, ராஜாவாக்கினார்கள். அதோடு, கைதட்டி, “ராஜா பல்லாண்டு வாழ்க!”+ என்று ஆரவாரம் செய்தார்கள்.
13 மக்கள் ஓடுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தாள்.+ 14 வழக்கத்தின்படி, தூண் பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள்.+ தலைவர்களும் எக்காளம் ஊதுகிறவர்களும்+ ராஜாவோடு இருந்தார்கள். மக்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள், எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் அத்தாலியாள் தன் உடையைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூச்சல் போட்டாள். 15 அப்போது, குருவாகிய யோய்தா நூறு வீரர்களுக்குத் தலைவர்களைக் கூப்பிட்டு,+ அதாவது படைக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களைக் கூப்பிட்டு, “அவளை வீரர்கள் நடுவிலிருந்து வெளியே கொண்டுபோங்கள். எவனாவது அவள் பின்னால் போனால் அவனையும் வாளால் வெட்டிக் கொல்லுங்கள்” என்று கட்டளையிட்டார். ஏனென்றால், “அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்ல வேண்டாம்” என்று யோய்தா சொல்லியிருந்தார். 16 அவர்கள் அத்தாலியாளைப் பிடித்து, அரண்மனைக்குள்+ குதிரைகள் நுழைகிற இடத்துக்குக் கொண்டுவந்து அங்கே கொன்றுபோட்டார்கள்.
17 பின்பு, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ அவர்கள் என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார். அதோடு, ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்தார்.+ 18 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அங்கிருந்த பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்.+ பாகால் சிலைகளைத் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான+ மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.
பின்பு குருவாகிய யோய்தா, யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்ய அதிகாரிகளை நியமித்தார்.+ 19 அதோடு, நூறு வீரர்களுக்குத் தலைவர்களையும்+ சிறப்பு மெய்க்காவல்படை வீரர்களையும்* அரண்மனைக் காவலாளிகளையும்+ தேசத்து மக்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, ராஜாவை யெகோவாவின் ஆலயத்திலிருந்து அரண்மனைக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்தார். அவர்கள் எல்லாரும் அரண்மனைக் காவலாளிகள் நிற்கிற நுழைவாசல் வழியாக வந்தார்கள். அதன் பின்பு, ராஜாவின் சிம்மாசனத்தில் யோவாஸ் உட்கார்ந்தான்.+ 20 அரண்மனைக்குப் பக்கத்தில் அத்தாலியாளை வாளால் வெட்டிக் கொன்றதால், மக்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள், நகரத்தில் அமைதி நிலவியது.