நெகேமியா
1 அகலியாவின் மகனான நெகேமியாவின்*+ வார்த்தைகள்: 20-ஆம் வருஷம் கிஸ்லே* மாதத்தில் நான் சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். 2 அப்போது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும்+ வேறு சிலரும் யூதாவிலிருந்து வந்தார்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகிப்+ போன யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் விசாரித்தேன். 3 அதற்கு அவர்கள், “கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்படாமல் யூதா மாகாணத்தில் விடப்பட்ட ஜனங்கள் மோசமான நிலைமையில் இருக்கிறார்கள், ரொம்பவே அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ எருசலேமின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன.+ அதன் நுழைவாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன”+ என்று சொன்னார்கள்.
4 இதைக் கேட்டதும் நான் அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். அதன்பின் நாள்கணக்காக துக்கம் அனுசரித்துக்கொண்டும், விரதம் இருந்துகொண்டும்,+ பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டும் இருந்தேன். 5 “பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவே, அதிசயமும் அற்புதமுமானவரே, உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம்+ மாறாத அன்பைக் காட்டுபவரே, ஒப்பந்தத்தைக் காப்பவரே, 6 தயவுசெய்து அடியேனைப் பாருங்கள், இன்று நான் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். உங்களுடைய ஊழியர்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களை உங்கள்முன் ஒத்துக்கொண்டு ராத்திரி பகலாய் அவர்களுக்காகக் கெஞ்சுகிறேன்.+ நானும் என் ஜனங்களும்* பாவம் செய்துவிட்டோம்.+ 7 உங்களுக்குப் பிடிக்காத வழியில் போய்விட்டோம்.+ உங்களுடைய ஊழியரான மோசே மூலம் நீங்கள் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும்+ பின்பற்றாமல் இருந்துவிட்டோம்.
8 மோசே மூலம் நீங்கள் சொன்னதை* தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். நீங்கள் அவரிடம், ‘என் பேச்சைக் கேட்காமல் போனால், உங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்திவிடுவேன்.+ 9 ஆனால் என் வழிக்குத் திரும்பி வந்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், நீங்கள் பூமியின் எந்த மூலைக்குத் துரத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ என் பெயரின் மகிமைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடத்தில்+ உங்களைக் குடிவைப்பேன்’ என்று சொன்னீர்களே. 10 இஸ்ரவேலர்கள் உங்களுடைய ஊழியர்கள், உங்களுடைய ஜனங்கள். அவர்களை உங்களுடைய மகா வல்லமையாலும் கைபலத்தாலும் விடுவித்தீர்கள்.+ 11 யெகோவாவே, அடியேனின் ஜெபத்தையும் உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்க விரும்புகிறவர்களின் ஜெபத்தையும் தயவுசெய்து கேளுங்கள். அடியேன் நினைப்பது இன்று கைகூடி வருவதற்குத் தயவுசெய்து உதவுங்கள். ராஜா எனக்குக் கரிசனை காட்டும்படி செய்யுங்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.
நான் ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.+