ஏசாயா
39 எசேக்கியா வியாதிப்பட்டு குணமான விஷயத்தை பாபிலோன் ராஜாவும் பலாதானின் மகனுமான மெரொதாக்-பலாதான் கேள்விப்பட்டான். அதனால் கடிதங்களையும் அன்பளிப்பையும் தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து அனுப்பினான்.+ 2 அவர்களை எசேக்கியா சந்தோஷமாக வரவேற்று தன் பொக்கிஷ அறை+ முழுவதையும் காட்டினார். தங்கம், வெள்ளி, பரிமளத் தைலம், விலைமதிப்புள்ள எண்ணெய் வகைகள் ஆகியவற்றையும், ஆயுதக்கிடங்கையும், தான் சேர்த்து வைத்திருந்த மற்ற எல்லாவற்றையும் காட்டினார். தன் அரண்மனையிலும் ராஜ்யத்திலும் இருந்த ஒன்றைக்கூட அவர் காட்டாமல் இருக்கவில்லை.
3 பின்பு எசேக்கியா ராஜாவிடம் ஏசாயா தீர்க்கதரிசி வந்து, “இந்த ஆட்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “ரொம்பத் தூரத்திலிருக்கிற பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று சொன்னார்.+ 4 அப்போது ஏசாயா, “உங்கள் அரண்மனையில் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “என் அரண்மனையிலிருந்த எல்லாவற்றையும் பார்த்தார்கள். என்னுடைய பொக்கிஷங்களில் ஒன்றைக்கூட நான் காட்டாமல் இருக்கவில்லை” என்றார்.
5 அப்போது ஏசாயா எசேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வதைக் கேளுங்கள். 6 யெகோவா சொல்வது இதுதான்:+ ‘இதோ! ஒரு காலம் வரும், அப்போது உன் அரண்மனையில் இருக்கிற எல்லா பொருள்களும், இதுவரை உன் முன்னோர்கள் சேர்த்து வைத்த எல்லா பொருள்களும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும், எதுவுமே விட்டுவைக்கப்படாது.+ 7 உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.
8 அதற்கு எசேக்கியா, “யெகோவா சொன்னது நியாயம்தான். என்னுடைய வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும்* இருக்குமே!” என்றார்.+