2 நாளாகமம்
7 சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததுமே,+ வானத்திலிருந்து நெருப்பு வந்து+ தகன பலியையும் மற்ற பலிகளையும் சுட்டெரித்தது. ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 2 யெகோவாவின் மகிமை யெகோவாவின் ஆலயத்தில் நிறைந்ததன் காரணமாக, குருமார்களால் யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.+ 3 வானத்திலிருந்து நெருப்பு வந்ததையும், ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்ததையும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அங்கே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள், “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று புகழ்ந்து பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.
4 பின்பு, ராஜாவும் மக்கள் எல்லாரும் சேர்ந்து யெகோவாவுக்கு முன்னால் பலிகளைக் கொடுத்தார்கள்.+ 5 சாலொமோன் ராஜா 22,000 மாடுகளையும் 1,20,000 ஆடுகளையும் பலி கொடுத்தார். இப்படி, ராஜாவும் மக்கள் எல்லாரும் உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவை நடத்தினார்கள்.+ 6 குருமார்கள் அவரவர் பணி செய்யும் இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். அதேபோல, லேவியர்களும் யெகோவாவுக்குப் பாடல்கள் பாட இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.+ (யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக இந்த இசைக் கருவிகளை தாவீது ராஜா உருவாக்கியிருந்தார். தாவீது பாடும்போது, “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி அவர்கள்* பதில்பாட்டுப் பாடுவார்கள்.) பின்பு, லேவியர்களுக்கு எதிரில் இருந்த குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதினார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
7 இத்தனை தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்கு சாலொமோன் செய்திருந்த செம்புப் பலிபீடத்தில்+ இடம் போதவில்லை. அதனால், தகன பலிகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொடுப்பதற்கு, யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை சாலொமோன் அன்றைக்குப் புனிதப்படுத்தினார். 8 லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல் சபையார்+ எல்லாரும் மிகப் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். சாலொமோன் ராஜா அவர்களுடன் சேர்ந்து ஏழு நாட்கள் பண்டிகை கொண்டாடினார்;+ 9 முதல் ஏழு நாட்கள் பலிபீடத்தின் அர்ப்பண விழாவையும், அடுத்த ஏழு நாட்கள் பண்டிகையையும் அவர்கள் கொண்டாடினார்கள்; எட்டாம் நாளில்* விசேஷ மாநாட்டை நடத்தினார்கள்.+ 10 பின்பு, ஏழாம் மாதம் 23-ஆம் நாளில், மக்கள் எல்லாரையும் அவரவருடைய வீடுகளுக்கு சாலொமோன் அனுப்பி வைத்தார். அவர்களும் தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள்.+ தாவீதுக்கும் சாலொமோனுக்கும் தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் யெகோவா செய்த நன்மைகளை நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.+
11 இப்படி, யெகோவாவின் ஆலயத்தையும் தன்னுடைய அரண்மனையையும் சாலொமோன் கட்டி முடித்தார்;+ யெகோவாவின் ஆலயத்துக்காகவும் தன்னுடைய அரண்மனைக்காகவும் தான் செய்ய நினைத்த வேலைகளையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.+ 12 அன்றிரவு சாலொமோனின் கனவில் யெகோவா தோன்றி,+ “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன். எனக்குப் பலி கொடுப்பதற்கான இடமாக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்தேன்.+ 13 மழை பெய்யாதபடி நான் வானத்தை அடைக்கும்போது, நிலத்தை அழிப்பதற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பும்போது, என் மக்களைத் தாக்க கொள்ளைநோயை அனுப்பும்போது 14 என் பெயரால் அழைக்கப்படும் என் மக்கள்+ தாழ்மையாக நடந்து+ என்னிடம் ஜெபம் செய்தால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்பேன்; தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டு விலகி என்னைத் தேடினால்,+ அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன், அவர்களுடைய தேசத்தைச் செழிப்பாக்குவேன்.+ 15 இந்த இடத்திலிருந்து ஒருவர் ஜெபம் செய்யும்போது நான் கண்ணோக்கிப் பார்ப்பேன், காதுகொடுத்துக் கேட்பேன்.+ 16 இந்த ஆலயத்தில் என்னுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதற்காக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்து புனிதப்படுத்தினேன்;+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+
17 உன் அப்பா தாவீதைப் போல் நீயும் என்னுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடித்தால், என் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிந்தால்,+ 18 உன் சிம்மாசனத்தை நிலைக்கச் செய்வேன்;+ ‘இஸ்ரவேலை ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று உன் அப்பா தாவீதோடு செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்.+ 19 ஆனால், நீ என் வழியைவிட்டு விலகி என் சட்டதிட்டங்களையும் என் கட்டளைகளையும் மீறினால், மற்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றின் முன்னால் தலைவணங்கினால்,+ 20 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை வேரோடு பிடுங்கியெறிவேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன். எல்லா மக்களும் அதைப் பார்த்து ஏளனமாகப் பேசும்படி செய்வேன், கேலி கிண்டல் செய்யும் நிலைக்குக் கொண்டுவருவேன்.+ 21 இந்த ஆலயம் மண்மேடாகும். இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்;+ ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’+ என்று கேட்பார்கள். 22 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த+ இவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள்.+ அதனால்தான் இந்தக் கஷ்டத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.