உபாகமம்
20 பின்பு அவர், “நீங்கள் போருக்குப் போகும்போது, உங்களைவிட உங்கள் எதிரிகளிடம் ஏராளமான குதிரைகளும் ரதங்களும் வீரர்களும் இருப்பதைப் பார்த்தால் பயப்பட வேண்டாம். ஏனென்றால், எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்.+ 2 நீங்கள் போருக்குப் புறப்படும்போது, குருவானவர் வீரர்களின் முன்னால் வந்து,+ 3 ‘இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்று உங்களுடைய எதிரிகளோடு போர் செய்யப் போகிறீர்கள். தைரியமாக இருங்கள். அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள், நடுங்காதீர்கள். 4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் எதிரிகளோடு போர் செய்து உங்களைக் காப்பாற்றுவார்’+ என்று சொல்ல வேண்டும்.
5 அதிகாரிகளும் அந்த வீரர்களிடம், ‘உங்களில் யாராவது புது வீடு கட்டி இன்னும் குடிபோகாமல்* இருந்தால், அவன் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அங்கு குடிபோக வேண்டியிருக்குமே. 6 யாராவது திராட்சைத் தோட்டத்தை நாட்டி இன்னும் அதை அனுபவிக்காமல் இருந்தால், வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அதை அனுபவிக்க வேண்டியிருக்குமே. 7 யாராவது ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு இன்னும் கல்யாணம் செய்யாமல் இருந்தால், வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்.+ அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அவளைக் கல்யாணம் செய்ய வேண்டியிருக்குமே’ என்று சொல்ல வேண்டும். 8 அதோடு, ‘யாராவது பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தால்,+ வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். இல்லாவிட்டால், மற்ற வீரர்களுடைய தைரியத்தையும் அவன் கெடுத்துவிடுவான்’+ என்று சொல்ல வேண்டும். 9 அதிகாரிகள் இப்படி வீரர்களிடம் பேசி முடித்த பின்பு, அவர்களை நடத்திக்கொண்டு போவதற்குப் படைத் தலைவர்களை நியமிக்க வேண்டும்.
10 நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.+ 11 அவர்கள் தங்களுடைய நகரவாசலைத் திறந்து உங்களோடு சமாதானத்துக்கு வந்தால், அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாகி, உங்களுக்குப் பணிவிடை செய்வார்கள்.+ 12 ஆனால், அவர்கள் உங்களோடு சமாதானத்துக்கு வராமல் சண்டை போடுவதற்கு வந்தால், நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றிவளைக்க வேண்டும். 13 உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்கள் கையில் கொடுப்பார். நீங்கள் அங்குள்ள ஆண்கள் எல்லாரையும் வெட்டி வீழ்த்த வேண்டும். 14 ஆனால் அங்குள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும், கைப்பற்றிய மற்ற எல்லா பொருள்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய எல்லாவற்றையும் சாப்பிடலாம்.+
15 தூரத்தில் இருக்கிற எல்லா நகரங்களுக்கும் இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். 16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ 18 இல்லாவிட்டால், அவர்களுடைய தெய்வங்களுக்குச் செய்கிற அருவருப்பான காரியங்களை அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வைத்துவிடுவார்கள்.+
19 நீங்கள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதைச் சுற்றிவளைத்து, பல நாட்களாக அதற்கு எதிராகப் போர் செய்துவந்திருக்கிறீர்கள் என்றால், அங்குள்ள மரங்களைக் கோடாலியால் வெட்டிச் சாய்க்கக் கூடாது. அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம், ஆனால் அந்த மரங்களை வெட்டிச் சாய்க்கக் கூடாது.+ மனுஷனை அழிப்பது போல மரத்தை அழிப்பது சரியா? 20 ஒரு மரத்திலுள்ள பழங்கள் சாப்பிட முடியாததாக இருந்தால் மட்டுமே அதை வெட்டிப்போடலாம். உங்களோடு போர் செய்யும் நகரத்தை வீழ்த்தும்வரை, அதைச் சுற்றிவளைப்பதற்காக அப்படிப்பட்ட மரங்களை வெட்டி அவற்றைக் கம்பங்களாக நாட்டலாம்” என்றார்.