எரேமியா
16 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “நீ கல்யாணம் செய்துகொள்ளவோ இந்தத் தேசத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ கூடாது. 3 ஏனென்றால், இந்தத் தேசத்தில் பிறக்கிற பிள்ளைகளையும் அவர்களைப் பெற்றெடுக்கிற தாய் தகப்பன்களையும் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: 4 ‘அவர்கள் கொடிய நோய்களால் செத்துப்போவார்கள்.+ அவர்களுக்காகத் துக்கப்படுவதற்கோ அவர்களை அடக்கம் செய்வதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் நிலத்தில் எருவாகிவிடுவார்கள்.+ சிலர் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள்.+ அவர்களுடைய பிணங்களைப் பறவைகளும் மிருகங்களும் தின்றுதீர்க்கும்.’
5 யெகோவா சொல்வது இதுதான்:
‘சாவு வீட்டின் விருந்துக்கு நீ போகாதே.
ஒப்பாரி வைப்பதற்கோ இரங்கல் தெரிவிப்பதற்கோ போகாதே.’+
‘ஏனென்றால், இந்த ஜனங்களுக்கு இனி நான் சமாதானத்தைக் கொடுக்க மாட்டேன்.
இனி அவர்கள்மேல் அன்பும் இரக்கமும் காட்ட மாட்டேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.
6 ‘இந்தத் தேசத்தில் இருக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருமே இறந்துபோவார்கள்.
அவர்கள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள்.
அவர்களுக்காக யாரும் தங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ தலையை மொட்டையடிக்கவோ மாட்டார்கள்.*
7 இறந்தவர்களுக்காகத் துக்கப்படுகிறவர்களுக்கு யாரும் ஆறுதல் சொல்லவோ
சாப்பாடு கொடுக்கவோ மாட்டார்கள்.
அப்பாவையோ அம்மாவையோ பறிகொடுத்த சோகத்திலிருந்து மீளுவதற்காக
யாரும் அவர்களுக்குத் திராட்சமது கொடுக்க மாட்டார்கள்.
8 சந்தோஷமாக விருந்து கொண்டாடுகிறவர்களின் வீட்டுக்குப் போகாதே.
அவர்களோடு உட்கார்ந்து சாப்பிடாதே, குடிக்காதே.’
9 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய காலத்திலேயே, உன்னுடைய கண் முன்னாலேயே, இந்த இடத்தில் எல்லா கொண்டாட்டத்துக்கும் குதூகலத்துக்கும் முடிவுகட்டுவேன். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காமல்போகும்படி செய்வேன்.’+
10 நீ இந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லும்போது அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்? எங்கள் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அப்படியென்ன பாவத்தைச் செய்துவிட்டோம்?’+ என்று கேட்பார்கள். 11 அப்போது நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “உங்கள் முன்னோர்கள் என்னை விட்டுவிட்டு+ வேறு தெய்வங்களைத் தேடிப்போய் பக்தியோடு கும்பிட்டார்கள்.+ என்னைவிட்டு விலகிப்போனார்கள். என் சட்டதிட்டங்களை மீறினார்கள்.+ 12 நீங்களோ அவர்களைவிட படுமோசமாக நடந்துகொண்டீர்கள்.+ என் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக உங்களுடைய பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கில் போனீர்கள்.+ 13 அதனால் நான் உங்களை இந்தத் தேசத்திலிருந்து வேறொரு தேசத்துக்குத் துரத்தியடிப்பேன். உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத அந்தத் தேசத்தில்+ நீங்கள் ராத்திரி பகலாகப் பொய் தெய்வங்களுக்குத்தான் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+ நான் உங்களுக்கு இரக்கம் காட்டவே மாட்டேன்”’ என்று சொல்.
14 ‘ஆனால், காலம் வருகிறது’ என்று யெகோவா சொல்கிறார். ‘அதுமுதல் ஜனங்கள், “இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”*+ என்று சொல்ல மாட்டார்கள். 15 அதற்குப் பதிலாக, “இஸ்ரவேல் ஜனங்களை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”* என்றே சொல்வார்கள். நான் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்துக்கே மறுபடியும் அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+
16 யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, நான் நிறைய மீனவர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை வலைவீசிப் பிடிப்பார்கள்.
அதன் பின்பு, நான் நிறைய வேட்டைக்காரர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை எல்லா மலைகளிலும் குன்றுகளிலும் பாறை இடுக்குகளிலும்
வேட்டையாடிப் பிடிப்பார்கள்.
17 இஸ்ரவேலர்கள் செய்கிற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவர்கள் என் கண்ணிலிருந்து தப்ப முடியாது.
அவர்களுடைய பாவங்களை என்னிடமிருந்து மறைக்க முடியாது.
18 முதலில், அவர்கள் செய்த பாவத்துக்கும் குற்றத்துக்கும் முழுமையாகத் தண்டனை கொடுப்பேன்.+
ஏனென்றால், உயிரில்லாத அருவருப்பான சிலைகளை வணங்கி என் தேசத்தை அவர்கள் தீட்டுப்படுத்திவிட்டார்கள்.
நான் சொத்தாகக் கொடுத்த தேசத்தை அந்த அருவருப்புகளால் நிரப்பியிருக்கிறார்கள்’+ என்று சொன்னார்.”
19 யெகோவாவே, என் பலமே, என் கோட்டையே,
இக்கட்டு நாளில் ஓடி ஒளிந்துகொள்வதற்கான அடைக்கலமே,+
பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் உங்களிடம் வந்து,
“எங்கள் முன்னோர்கள் ஒன்றுக்கும் உதவாத சிலைகளையும்,
வீணான பொய் தெய்வங்களையுமே வணங்கிவந்தார்கள்”+ என்று சொல்வார்கள்.
20 மனுஷன் தனக்காகத் தெய்வங்களை உண்டாக்க முடியுமா?
அவன் உண்டாக்குகிறவை உண்மையில் தெய்வங்கள் கிடையாதே!+
21 “அதனால், அவர்கள் என்னைத் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
இப்போது, என் சக்தியையும் பலத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
என் பெயர் யெகோவா என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”