2 சாமுவேல்
1 சவுல் இறந்துபோன பின்பு, தாவீது அமலேக்கியர்களைத் தோற்கடித்து* சிக்லாகுவுக்குத்+ திரும்பி வந்து, இரண்டு நாட்கள் தங்கினார். 2 மூன்றாம் நாளில், சவுலுடைய படையிலிருந்து ஒருவன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டும், தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டும் தாவீதிடம் வந்து அவர் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்தான்.
3 தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “இஸ்ரவேல் படையிலிருந்து ஓடிவருகிறேன்” என்று சொன்னான். 4 அப்போது தாவீது, “என்ன நடந்தது? தயவுசெய்து சொல்” என்று கேட்டார். அதற்கு அவன், “இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள், நிறைய பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சவுலும் அவருடைய மகன் யோனத்தானும்கூட செத்துப்போய்விட்டார்கள்”+ என்று சொன்னான். 5 அதற்கு தாவீது, “சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் செத்துப்போய்விட்டார்கள் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று தன்னிடம் செய்தி சொன்ன அந்த இளைஞனிடம் கேட்டார். 6 அதற்கு அவன், “நான் எதேச்சையாக கில்போவா மலைக்குப்+ போயிருந்தேன். அங்கே சவுல் அவருடைய ஈட்டிமீது சாய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்; பெலிஸ்திய ரதவீரர்களும் குதிரைவீரர்களும் அவரை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.+ 7 அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னைக் கூப்பிட்டார்; அதற்கு நான், ‘சொல்லுங்கள், எஜமானே’ என்றேன். 8 அவர் என்னிடம், ‘நீ யார்?’ என்று கேட்டார். அதற்கு, ‘நான் ஒரு அமலேக்கியன்’+ என்று சொன்னேன். 9 அப்போது அவர், ‘நான் மரண வேதனையில் துடிக்கிறேன், என் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து என் பக்கத்தில் வந்து என்னைக் கொன்றுபோடு’ என்று சொன்னார். 10 அவர் படுகாயம் அடைந்திருந்தார்; அதனால் இனிமேல் பிழைக்க மாட்டார் என்று நினைத்து, அவர் பக்கத்தில் போய் அவரைக் கொன்றுபோட்டேன்.+ அவருடைய தலையிலிருந்த கிரீடத்தையும்* கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன், எஜமானே” என்று சொன்னான்.
11 அதைக் கேட்டதும், தாவீது தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டார்; அவருடன் இருந்த எல்லா ஆட்களும்கூட தங்களுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். 12 சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் யெகோவாவின் மக்கள் பலரும் இஸ்ரவேலர்கள்+ பலரும் வாளுக்கு இரையானதால் அவர்கள் கதறினார்கள், புலம்பி அழுதார்கள்; சாயங்காலம்வரை ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்கள்.+
13 பின்பு தாவீது அந்த இளைஞனிடம், “நீ யார், எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்; அதற்கு அவன், “நான் இஸ்ரவேலில் அன்னியனாகக் குடியிருக்கிற ஒரு அமலேக்கியனுடைய மகன்” என்று சொன்னான். 14 அப்போது தாவீது, “எவ்வளவு துணிச்சல் இருந்தால், யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரையே கொன்றுபோட்டிருப்பாய்?”+ என்று கேட்டார். 15 பின்பு அவர் தன்னுடைய ஆட்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டிப்போடு” என்று சொன்னார். அவன் அந்த இளைஞனை வெட்டிப்போட்டான், அவன் செத்துப்போனான்.+ 16 அப்போது தாவீது, “‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான்தான் கொன்றுபோட்டேன்’+ என்று உன் வாயாலேயே சொன்னாய்; அதனால், உன்னுடைய சாவுக்கு நீயேதான் காரணம்”* என்றார்.
17 பின்பு சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் தாவீது புலம்பல் பாடலைப் பாடினார்;+ 18 யாசேர் புத்தகத்தில்,+ “வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புலம்பல் பாடலை யூதா மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்:
19 “இஸ்ரவேலே, அழகானவர்கள் உன்னுடைய மலைகளில் வீழ்ந்து கிடக்கிறார்களே!+
மாவீரர்கள் வீழ்ந்தார்களே!
20 இதை காத் நகரத்திலே சொல்லாதீர்கள்;+
அஸ்கலோன் வீதிகளிலே அறிவிக்காதீர்கள்,
இதைக் கேள்விப்பட்டால் பெலிஸ்தியப் பெண்கள் கொண்டாடுவார்களே!
விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் மகள்கள் துள்ளிக் குதிப்பார்களே!
பனியோ மழையோ உங்கள்மேல் பொழியாமல் இருக்கட்டும்,
பரிசுத்த காணிக்கையாகக் கொடுக்க உங்களுடைய நிலங்களில் எதுவும் விளையாமல் போகட்டும்.+
ஏனென்றால், மாவீரர்களின் கேடயம் அங்கே கறைபடிந்து கிடக்கிறது,
சவுலின் கேடயம் எண்ணெய் பூசப்படாமல் இருக்கிறது.
22 எதிரிகளின் இரத்தத்தைக் குடிக்காமல், வீரர்களின் கொழுப்பை எடுக்காமல்,
யோனத்தானின் அம்பு திரும்பியதில்லை;+
வெற்றி பெறாமல் சவுலின் வாள் வந்ததில்லை.+
24 இஸ்ரவேல் பெண்களே, சவுலுக்காக அழுது புலம்புங்கள்;
வேலைப்பாடுகள் நிறைந்த சிவப்பு ஆடைகளால் அவர் உங்களை அலங்கரித்தாரே,
உங்கள் உடைகள்மீது தங்க நகைகளை அணிவித்தாரே.
25 மாவீரர்கள் போரில் வீழ்ந்தார்களே!
மலையில் யோனத்தான் விழுந்து கிடக்கிறாரே!+
பெண்களின் அன்பைவிட உங்கள் அன்பு மிக அருமையானது.+
27 மாவீரர்கள் வீழ்ந்தார்களே!
அவர்களுடைய போராயுதங்கள் அழிந்துபோனதே!”