லூக்கா எழுதியது
13 அந்தச் சமயத்தில், பலி கொடுத்துக்கொண்டிருந்த கலிலேயர்களை பிலாத்து கொன்றுபோட்ட செய்தியை அங்கிருந்த சிலர் அவரிடம் சொன்னார்கள். 2 அப்போது அவர், “அந்த கலிலேயர்களுக்கு இப்படி நடந்ததால் மற்ற எல்லா கலிலேயர்களையும்விட அவர்கள் பெரிய பாவிகள் என்று நினைக்கிறீர்களா? 3 இல்லவே இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மனம் திருந்தவில்லை என்றால் நீங்கள் எல்லாரும் அதுபோலவே கொல்லப்படுவீர்கள்.+ 4 அல்லது, சீலோவாம் பக்கத்தில் கோபுரம் இடிந்து விழுந்தபோது செத்துப்போன 18 பேர், எருசலேமில் குடியிருக்கிற மற்ற எல்லாரையும்விட பெரிய குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா? 5 இல்லவே இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மனம் திருந்தவில்லை என்றால் நீங்கள் எல்லாரும் அவர்களைப் போலவே அழிந்துபோவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.
6 பின்பு, அவர் ஓர் உவமையைச் சொன்னார்; “ஒருவர் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். பழம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வந்தபோது அதில் ஒன்றுகூட இல்லை.+ 7 அதனால் தோட்டக்காரரிடம், ‘இந்த அத்தி மரத்தில் பழம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க மூன்று வருஷங்களாக வருகிறேன். ஆனால் இதில் ஒரு பழத்தைக்கூட பார்க்கவில்லை. அதனால், இதை வெட்டிப்போடு! இது ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். 8 அதற்கு அந்தத் தோட்டக்காரர், ‘எஜமானே, இந்த மரம் இன்னும் ஒரு வருஷம் இருக்கட்டும். இதைச் சுற்றிலும் கொத்திவிட்டு எரு போடுகிறேன். 9 வருங்காலத்தில் இது கனி கொடுத்தால் நல்லது. இல்லையென்றால், இதை வெட்டிப்போடுங்கள்’+ என்று சொன்னான்” என்றார்.
10 பின்பு, ஓய்வுநாளில் ஒரு ஜெபக்கூடத்தில் அவர் கற்பித்துக்கொண்டிருந்தார். 11 பேய் பிடித்திருந்ததால் 18 வருஷங்களாக உடல்நலப் பிரச்சினையோடு தவித்துவந்த ஒரு பெண் அங்கே இருந்தாள். கொஞ்சமும் நிமிர முடியாதளவு அவளுக்குக் கூன் விழுந்திருந்தது. 12 இயேசு அவளைப் பார்த்தபோது, “பெண்ணே, உன் உடல்நலப் பிரச்சினையிலிருந்து நீ விடுதலை பெற்றாய்”+ என்று அவளிடம் சொல்லி, 13 அவள்மேல் தன்னுடைய கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று, கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தாள். 14 இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்தியதால் ஜெபக்கூடத் தலைவனுக்கு அவர்மேல் பயங்கர கோபம் வந்தது. அதனால் கூட்டத்தாரிடம், “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கிறதே;+ அந்த நாட்களில் வந்து குணமடையுங்கள், ஓய்வுநாளில் கூடாது”+ என்று சொன்னான். 15 அதற்கு இயேசு, “வெளிவேஷக்காரர்களே,+ ஓய்வுநாளில் நீங்கள் யாரும் உங்களுடைய காளையையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துப்போய் அதற்குத் தண்ணீர் காட்ட மாட்டீர்களா?+ 16 அப்படியானால், சாத்தான் 18 வருஷங்களாகக் கட்டி வைத்திருந்த ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை இந்தக் கட்டிலிருந்து ஓய்வுநாளில் விடுதலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். 17 அவர் இப்படிக் கேட்டபோது, அவரை எதிர்த்த எல்லாரும் வெட்கப்பட்டுப்போனார்கள். ஆனால், கூட்டத்தார் எல்லாரும் அவர் செய்த அற்புதமான செயல்களையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.+
18 பின்பு அவர், “கடவுளுடைய அரசாங்கம் எதைப் போல் இருக்கிறது, அதை எதற்கு ஒப்பிடுவேன்? 19 அது கடுகு விதையைப் போல் இருக்கிறது. ஒருவன் அதை எடுத்து தன்னுடைய தோட்டத்தில் விதைத்தான். அது வளர்ந்து மரமானது, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கின”+ என்று சொன்னார்.
20 மறுபடியும் அவர், “கடவுளுடைய அரசாங்கத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21 அது புளித்த மாவுக்கு ஒப்பாக இருக்கிறது. ஒரு பெண் அதை மூன்று பெரிய படி* மாவில் கலந்து* வைத்தாள், அந்த மாவு முழுவதும் புளித்துப்போனது”+ என்று சொன்னார்.
22 எருசலேமுக்குப் பயணம் செய்தபோது, அவர் நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் கற்பித்துக்கொண்டே போனார். 23 அப்போது ஒருவன் அவரிடம் வந்து, “எஜமானே, மீட்கப்படுகிறவர்கள் சிலர்தானா?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவர்களிடம், 24 “இடுக்கமான கதவு வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.+ ஏனென்றால், நிறைய பேர் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். ஆனால், நுழைய முடியாமல்போகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 25 வீட்டுச் சொந்தக்காரர் எழுந்து கதவைப் பூட்டிய பின்பு நீங்கள் வெளியில் நின்று கதவைத் தட்டி, ‘எஜமானே, கதவைத் திறங்கள்’+ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்களோ, உங்களை எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிடுவார். 26 அப்போது, ‘உங்களோடு சாப்பிட்டோம், குடித்தோம். எங்களுடைய முக்கியத் தெருக்களில் நீங்கள் கற்பித்தீர்கள்’+ என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள். 27 ஆனால் அவர், ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்களோ, உங்களை எனக்குத் தெரியாது. அநீதி செய்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டுப் போய்விடுங்கள்!’ என்று சொல்வார். 28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளும் கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பதைப் பார்ப்பீர்கள். நீங்களோ வெளியே வீசப்படுவீர்கள், அங்கே அழுது அங்கலாய்ப்பீர்கள்.*+ 29 அதோடு, கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மக்கள் வந்து கடவுளுடைய அரசாங்கத்தில் விருந்து சாப்பிட உட்காருவார்கள். 30 இப்படி, பிந்தினவர்கள் முந்தினவர்களாக ஆவார்கள், முந்தினவர்கள் பிந்தினவர்களாக ஆவார்கள்”+ என்று சொன்னார்.
31 அந்த நேரத்தில் பரிசேயர்கள் சிலர் அவரிடம் வந்து, “இங்கிருந்து போய்விடுங்கள், ஏரோது உங்களைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கிறான்” என்று சொன்னார்கள். 32 அப்போது அவர், “‘இன்றைக்கும் நாளைக்கும் பேய்களை விரட்டி, நோய்களைக் குணப்படுத்தி, மூன்றாம் நாளில் என் வேலையை முடித்துவிடுவேன்’ என்று நான் சொன்னதாக அந்தக் குள்ளநரியிடம் போய்ச் சொல்லுங்கள். 33 இருந்தாலும், இன்றைக்கும் நாளைக்கும் அதற்கடுத்த நாளைக்கும் எருசலேமை நோக்கி என் பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், ஒரு தீர்க்கதரிசி எருசலேமுக்கு வெளியே கொல்லப்படுவது நடக்காத காரியம்.*+ 34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே! உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே!+ கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன். ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை!+ 35 இதோ! உங்கள் வீடு* ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்.+ ‘யெகோவாவின்* பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’+ என்று நீங்கள் சொல்லும்வரை இனி ஒருபோதும் என்னைப் பார்க்க மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.