1 ராஜாக்கள்
9 யெகோவாவின் ஆலயத்தையும் தன்னுடைய அரண்மனையையும்+ தான் விரும்பிய எல்லாவற்றையும் சாலொமோன் கட்டி முடித்ததுமே,+ 2 கிபியோனில் யெகோவா அவருக்குக் கனவில் தோன்றியதுபோல்+ மறுபடியும் கனவில் தோன்றினார். 3 அப்போது யெகோவா, “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன், கருணை காட்டச் சொல்லி வேண்டியதையும் கேட்டேன். நீ கட்டிய இந்த ஆலயத்தைப் புனிதப்படுத்தினேன்; என்றென்றும் என்னுடைய பெயர் இங்கே நிலைத்திருக்கும்.+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+ 4 என்னுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடித்து,+ உன் அப்பா தாவீது உத்தம இதயத்தோடு,+ நேர்மையாக+ நடந்ததுபோல்+ நீயும் நடந்து என் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படி;+ 5 அப்படிச் செய்தால், இஸ்ரவேலில் உன் சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்கச் செய்வேன். ‘இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’ என்று உன் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.+ 6 நீயோ உன்னுடைய வாரிசுகளோ என் வழியைவிட்டு விலகி, என் கட்டளைகளுக்கும் என் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் போனால், மற்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றின் முன்னால் தலைவணங்கினால்,+ 7 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிப்பேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன்.+ அப்போது, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் இஸ்ரவேல் மக்களை ஏளனமாகப் பேசுவார்கள், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+ 8 இந்த ஆலயம் மண்மேடாகும்.+ இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்; ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’ என்று கிண்டலாக* கேட்பார்கள்.+ 9 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த இவர்களுடைய கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு, மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள். அதனால்தான், இந்தக் கஷ்டத்தையெல்லாம் யெகோவா இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.
10 யெகோவாவின் ஆலயம், தன்னுடைய அரண்மனை ஆகிய இரண்டையும் 20 வருஷங்களில் சாலொமோன் கட்டி முடித்தார்.+ 11 இதற்காக தேவதாரு மரங்களையும் ஆபால் மரங்களையும் சாலொமோன் விரும்பிய அளவுக்கு+ தங்கத்தையும் தீருவின் ராஜாவாகிய ஈராம்+ கொடுத்திருந்தார். அதனால், கலிலேயா பகுதியில் இருந்த 20 நகரங்களை ஈராமுக்கு சாலொமோன் ராஜா கொடுத்தார். 12 தீருவிலிருந்து ஈராம் புறப்பட்டு வந்து சாலொமோன் கொடுத்த நகரங்களைப் பார்த்தார். ஆனால், அவருக்கு அந்த நகரங்கள் பிடிக்கவில்லை. 13 அதனால் சாலொமோனிடம், “சகோதரரே, இந்த நகரங்களைப்போய்க் கொடுத்திருக்கிறீர்களே!” என்று சொன்னார். அதனால் அது இந்நாள்வரை காபூல் பிரதேசம்* என்று அழைக்கப்படுகிறது. 14 இதற்கிடையே, சாலொமோன் ராஜாவுக்கு 120 தாலந்து* தங்கத்தை ஈராம் அனுப்பியிருந்தார்.+
15 யெகோவாவின் ஆலயம்,+ தன்னுடைய அரண்மனை, மில்லோ,*+ எருசலேம் மதில், ஆத்சோர்,+ மெகிதோ,+ கேசேர்+ ஆகியவற்றைக் கட்டுவதற்காக சாலொமோன் ராஜா ஆட்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ 16 (எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் படையெடுத்து வந்து கேசேரைக் கைப்பற்றி அதைத் தீ வைத்துக் கொளுத்தியிருந்தான். அதோடு, அந்த நகரத்தில் குடியிருந்த கானானியர்களையும் கொன்றுபோட்டிருந்தான்.+ பின்பு அந்த நகரத்தைத் தன்னுடைய மகளுக்கு,+ அதாவது சாலொமோனின் மனைவிக்கு, கல்யாணப் பரிசாக* கொடுத்திருந்தான்.) 17 சாலொமோன் திரும்பக் கட்டிய* நகரங்கள்: கேசேர், கீழ் பெத்-ஓரோன்,+ 18 பாலாத்+ நகரம், இஸ்ரவேலின்* வனாந்தரத்திலிருந்த தாமார். 19 அதோடு, சாலொமோன் தன் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார். 20 மற்ற தேசத்து மக்களான எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 21 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார், தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+ 22 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கவில்லை.+ ஏனென்றால் அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, ஊழியர்களாக, தலைவர்களாக, படை அதிகாரிகளாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள். 23 சாலொமோனுடைய வேலையை மேற்பார்வை செய்ய 550 பேர் இருந்தார்கள். இவர்கள் நிர்வாகிகளுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். அந்த வேலையைச் செய்த ஆட்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள்.+
24 பார்வோனுடைய மகள்+ ‘தாவீதின் நகரத்தைவிட்டு’+ சாலொமோன் அவளுக்காகக் கட்டிய மாளிகையில் குடியேறினாள். அதன் பின்பு, அவர் மில்லோவை* கட்டினார்.+
25 யெகோவாவுக்காகத் தான் கட்டிய பலிபீடத்தில், வருஷத்துக்கு மூன்று தடவை+ சாலொமோன் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்.+ அதோடு, யெகோவாவுக்கு முன்னால் இருந்த பலிபீடத்தில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார். இப்படி, அவர் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்.+
26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார். 27 ஈராம் தன்னுடைய கப்பல்களையும் அனுபவமுள்ள மாலுமிகளாக இருந்த தன்னுடைய ஊழியர்களையும் அனுப்பி வைத்தார்.+ அவர்கள் சாலொமோனின் ஆட்களோடு சேர்ந்து வேலை செய்தார்கள். 28 அவர்கள் ஓப்பீருக்குப்+ போய் அங்கிருந்து 420 தாலந்து* தங்கத்தை சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டுவந்தார்கள்.