யோசுவா
6 இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பயந்து, எரிகோ நகரத்தின் வாசல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. யாரும் வெளியே போகவும் இல்லை, உள்ளே வரவும் இல்லை.+
2 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இதோ, நான் எரிகோவையும் அதன் ராஜாவையும் பலம்படைத்த வீரர்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+ 3 போர்வீரர்களாகிய நீங்கள் எல்லாரும் அணிவகுத்துப் போய் இந்த நகரத்தை ஒரு தடவை சுற்றிவர வேண்டும். இப்படி ஆறு நாட்கள் சுற்றிவர வேண்டும். 4 ஏழு குருமார்கள் ஆளுக்கொரு ஊதுகொம்பை* எடுத்துக்கொண்டு ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் போக வேண்டும். ஆனால் ஏழாம் நாளில் ஏழு தடவை நகரத்தைச் சுற்றிவர வேண்டும். குருமார்கள் ஊதுகொம்புகளை ஊத வேண்டும்.+ 5 ஊதுகொம்பின் சத்தம்* கேட்டவுடன் எல்லாரும் போர் முழக்கம் செய்ய வேண்டும். அப்போது நகரத்தின் மதில் இடிந்து விழுந்து தரைமட்டமாகும்,+ ஒவ்வொருவரும் நேராக உள்ளே போய்த் தாக்குதல் நடத்த வேண்டும்” என்று சொன்னார்.
6 அதனால், நூனின் மகன் யோசுவா குருமார்களைக் கூப்பிட்டு, “ஒப்பந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள். ஏழு குருமார்கள் ஆளுக்கொரு ஊதுகொம்பை எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் போக வேண்டும்”+ என்று சொன்னார். 7 பின்பு அந்த ஜனங்களிடம், “அணிவகுத்துப் போய் நகரத்தைச் சுற்றி வாருங்கள். வீரர்கள் ஆயுதங்களோடு+ யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் போக வேண்டும்” என்று சொன்னார். 8 யோசுவா அந்த ஜனங்களிடம் சொன்னபடியே, ஏழு குருமார்கள் தங்களுடைய ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டே யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள். யெகோவாவின் பெட்டி அவர்களுக்குப் பின்னால் போனது. 9 ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டு போன குருமார்களுக்கு முன்னால் முன்னணி வீரர்கள் போனார்கள். பெட்டிக்குப் பின்னால் பின்னணி வீரர்கள் போனார்கள். ஊதுகொம்புகள் முழங்கிக்கொண்டே இருந்தன.
10 யோசுவா அந்த ஜனங்களிடம், “குரல் எழுப்ப வேண்டுமென்று நான் சொல்லும் நாள்வரை குரல் எழுப்பாதீர்கள், சத்தம் போடாதீர்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரக் கூடாது. நான் சொல்லும்போது மட்டும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும்” என்று கட்டளை கொடுத்திருந்தார். 11 யெகோவாவின் பெட்டி ஒரு தடவை நகரத்தைச் சுற்றி வந்தது. அதன்பின் அவர்கள் முகாமுக்குத் திரும்பி வந்து ராத்திரி அங்கே தங்கினார்கள்.
12 அடுத்த நாள் விடியற்காலையிலேயே யோசுவா எழுந்தார். குருமார்கள் யெகோவாவின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.+ 13 ஏழு குருமார்கள் தங்களுடைய ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் நடந்து போனார்கள். முன்னணி வீரர்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து போனார்கள். பின்னணி வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குப் பின்னால் போனார்கள். ஊதுகொம்புகள் முழங்கிக்கொண்டே இருந்தன. 14 அந்த நாளில் அவர்கள் அணிவகுத்துப் போய் நகரத்தை ஒரு தடவை சுற்றிவந்தார்கள், பின்பு முகாமுக்குத் திரும்பினார்கள். இப்படியே ஆறு நாட்களும் செய்தார்கள்.+
15 ஏழாம் நாளில், பொழுது விடிந்தவுடனேயே அவர்கள் எழுந்து அதே போல நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள். அந்த நாளில் மட்டும்தான் நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள்.+ 16 ஏழாவது தடவை சுற்றி வந்தபோது, குருமார்கள் ஊதுகொம்புகளை ஊதினார்கள். அப்போது யோசுவா அந்த ஜனங்களிடம், “இந்த நகரத்தை யெகோவா உங்களுக்குக் கொடுத்துவிட்டார், குரல் எழுப்புங்கள்!+ 17 நகரத்தையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்.+ அவை எல்லாமே யெகோவாவுக்குச் சொந்தம். நாம் அனுப்பிய உளவாளிகளை ராகாப்+ என்ற விலைமகள் ஒளித்துவைத்துக் காப்பாற்றியதால்,+ அவளையும் அவள் வீட்டில் இருக்கிறவர்களையும் மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள். 18 ஆனால், அழிக்க வேண்டிய எந்தப் பொருளின் பக்கத்திலும் போகாதீர்கள்.+ அப்படிப் போனால், அழிக்க வேண்டிய பொருள்கள் எதையாவது ஆசைப்பட்டு எடுத்துக்கொள்வீர்கள்.+ இதனால், இஸ்ரவேலர்களின் முகாமுக்கே அழிவைக் கொண்டுவந்துவிடுவீர்கள். அது அடியோடு அழிந்துபோகும்படி செய்துவிடுவீர்கள்.+ 19 எல்லா வெள்ளியும் தங்கமும் செம்புப் பொருள்களும் இரும்புச் சாமான்களும் யெகோவாவுக்குச் சொந்தமானவை, பரிசுத்தமானவை.+ அவை யெகோவாவின் பொக்கிஷத்தில் சேர வேண்டும்”+ என்று சொன்னார்.
20 ஊதுகொம்புகள் ஊதப்பட்டபோது அந்த ஜனங்கள் குரல் எழுப்பி போர் முழக்கம் செய்தார்கள்.+ உடனே, நகரத்தின் மதில் பொலபொலவென இடிந்து விழுந்தது.+ அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் நேராக உள்ளே போய்த் தாக்குதல் நடத்தி, நகரத்தைக் கைப்பற்றினார்கள். 21 அந்த நகரத்திலிருந்த எல்லா ஆண்களையும் பெண்களையும், வாலிபர்களையும் வயதானவர்களையும், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாளால் கொன்றுபோட்டார்கள்.+
22 தேசத்தை உளவு பார்த்த இரண்டு பேரையும் யோசுவா கூப்பிட்டு, “அந்த விலைமகளின் வீட்டுக்குப் போங்கள். நீங்கள் அந்தப் பெண்ணுக்கு வாக்குக் கொடுத்தபடியே, அவளையும் அவளுக்குச் சொந்தமான எல்லாரையும் வெளியே கூட்டிக்கொண்டு வாருங்கள்”+ என்று சொன்னார். 23 அதனால், உளவாளிகளாகிய அந்த வாலிபர்கள் போய் ராகாபையும் அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் சகோதரர்களையும் அவளுக்குச் சொந்தமான எல்லாரையும் வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.+ அவளுடைய முழு குடும்பத்தையும் இஸ்ரவேலின் முகாமுக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்கள்.
24 பின்பு அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நெருப்பினால் சுட்டெரித்தார்கள். ஆனால், வெள்ளியையும் தங்கத்தையும் செம்புப் பொருள்களையும் இரும்புச் சாமான்களையும் யெகோவாவுடைய வீட்டின் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.+ 25 விலைமகள் ராகாபையும் அவளுடைய அப்பாவின் குடும்பத்தாரையும் அவளுக்குச் சொந்தமானவர்களையும் மட்டுமே யோசுவா உயிரோடு விட்டுவைத்தார்.+ அவள் இன்றுவரை இஸ்ரவேலில் வாழ்கிறாள்.+ ஏனென்றால், எரிகோவை உளவு பார்க்க யோசுவா அனுப்பிய வாலிபர்களை அவள் ஒளித்துவைத்துக் காப்பாற்றினாள்.+
26 எரிகோ அழிக்கப்பட்டபோது யோசுவா, “எரிகோ நகரத்தைத் திரும்பக் கட்ட முயற்சி செய்கிறவன் யெகோவாவின் முன்னால் சபிக்கப்பட்டவன். அதற்கு அஸ்திவாரம் போடும்போது அவனுடைய முதல் மகன் இறந்துபோவான், அதற்குக் கதவுகள் வைக்கும்போது அவனுடைய கடைசி மகன் இறந்துபோவான்” என்று ஆணையிட்டுச் சொன்னார்.*+
27 யெகோவா எப்போதுமே யோசுவாவுடன் இருந்தார்.+ யோசுவாவின் புகழ் பூமியெங்கும் பரவியது.+