1 சாமுவேல்
7 அதனால், கீரியாத்-யெயாரீமைச் சேர்ந்த ஆட்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போய், குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தார்கள்.+ யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்க அவருடைய மகன் எலெயாசாரை நியமித்தார்கள்.*
2 அந்தப் பெட்டி கீரியாத்-யெயாரீமுக்குக் கொண்டுவரப்பட்டு 20 வருஷங்களான பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் யெகோவாவின் உதவியைத் தேட ஆரம்பித்தார்கள்.+ 3 அப்போது சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் முழு இதயத்தோடு யெகோவாவிடம் திரும்பிவர விரும்பினால்,+ மற்ற தெய்வங்களையும் அஸ்தரோத் சிலைகளையும் தூக்கி வீசுங்கள்.+ உங்கள் இதயத்தில் யெகோவாவுக்கு மட்டுமே இடம்கொடுங்கள், அவரை மட்டுமே வணங்குங்கள்.+ அப்போது, பெலிஸ்தியர்களின் கையிலிருந்து அவர் உங்களைக் காப்பாற்றுவார்”+ என்று சொன்னார். 4 உடனே, இஸ்ரவேலர்கள் பாகால்களின் சிலைகளையும் அஸ்தரோத்தின் சிலைகளையும் ஒழித்துவிட்டு யெகோவாவை மட்டுமே வணங்கினார்கள்.+
5 பின்பு சாமுவேல், “இஸ்ரவேலர்கள் எல்லாரையும் மிஸ்பாவில் ஒன்றுகூடி வரச் சொல்லுங்கள்.+ உங்களுக்காக நான் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன்”+ என்றார். 6 அதனால், அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி வந்தார்கள். அன்று யெகோவாவுக்கு முன்னால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றி,* விரதம் இருந்து,+ “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம்”+ என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். மிஸ்பாவில் சாமுவேல் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+
7 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி வந்திருப்பதை பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவர்களுடைய தலைவர்கள்+ இஸ்ரவேலர்களோடு போர் செய்யப் புறப்பட்டார்கள். இஸ்ரவேலர்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெலிஸ்தியர்களை நினைத்துப் பயந்தார்கள். 8 அதனால் அவர்கள் சாமுவேலிடம், “எங்களை பெலிஸ்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றும்படி நம் கடவுளான யெகோவாவிடம் ஓயாமல் வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார்கள். 9 பின்பு சாமுவேல், பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச்+ செலுத்தினார். இஸ்ரவேலர்களுக்காக சாமுவேல் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார், யெகோவா அவருக்குப் பதில் தந்தார்.+ 10 சாமுவேல் தகன பலி செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை நெருங்கினார்கள். அப்போது, யெகோவா பயங்கரமான இடிமுழக்கங்களை உண்டாக்கி+ பெலிஸ்தியர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+ அவர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போனார்கள்.+ 11 உடனே, இஸ்ரவேல் வீரர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள், பெத்-காரீமின் தெற்குப் பகுதிவரை பின்தொடர்ந்து போய் அவர்களை வெட்டிச் சாய்த்தார்கள். 12 பின்பு, சாமுவேல் ஒரு கல்லை+ எடுத்து அதை மிஸ்பாவுக்கும் எஷானாவுக்கும் இடையில் நாட்டினார். “இதுவரை யெகோவா நமக்கு உதவி செய்திருக்கிறார்”+ என்று சொல்லி, அந்தக் கல்லுக்கு எபெனேசர்* என்று பெயர் வைத்தார். 13 இப்படி, அந்த நாளில் பெலிஸ்தியர்களை இஸ்ரவேலர்கள் அடக்கிவிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் இஸ்ரவேலர்களின் எல்லைக்குள் வரவே இல்லை.+ சாமுவேலின் காலம் முழுவதும் யெகோவா பெலிஸ்தியர்களுக்கு விரோதமாகவே இருந்தார்.+ 14 பெலிஸ்தியர்கள் கைப்பற்றிய நகரங்கள், அதாவது எக்ரோன்முதல் காத்வரையுள்ள நகரங்கள், இஸ்ரவேலர்களுக்குத் திரும்பக் கிடைத்தன. இஸ்ரவேலர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களை பெலிஸ்தியர்களிடமிருந்து மீட்டுக்கொண்டார்கள்.
அதோடு, இஸ்ரவேலர்களும் எமோரியர்களும் சமாதானமாக இருந்தார்கள்.+
15 சாமுவேல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார்.+ 16 அவர் வருஷா வருஷம் பெத்தேலுக்கும்+ கில்காலுக்கும்+ மிஸ்பாவுக்கும்+ சுற்றுமுறையில் பயணம் செய்து, இஸ்ரவேலர்களுக்கு நீதி வழங்கிவந்தார். 17 பின்பு, ஒவ்வொரு முறையும் ராமாவுக்குத்+ திரும்பினார். ஏனென்றால், அவருடைய வீடு அங்கே இருந்தது. அங்கேயும் இஸ்ரவேலர்களுக்கு அவர் நீதி வழங்கிவந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+