எசேக்கியேல்
39 அவர் என்னிடம், “மனிதகுமாரனே, கோகுவுக்கு எதிராக+ நீ இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மேசேக் மற்றும் தூபாலின்+ முக்கியத் தலைவனாகிய கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். 2 நான் உன்னை எதிர்த்திசையில் திருப்பி, வடகோடியிலிருந்து இஸ்ரவேலின் மலைகளுக்கு இழுத்து வருவேன்.+ 3 உன்னுடைய இடது கையில் இருக்கிற வில்லைத் தட்டிவிட்டு, உன்னுடைய வலது கையில் இருக்கிற அம்புகளைக் கீழே விழ வைப்பேன். 4 நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னோடு இருக்கிற ஆட்களும் இஸ்ரவேலின் மலைகள்மேல் விழுவீர்கள்.+ பிணம் தின்னும் எல்லா விதமான பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உன்னை இரையாக்குவேன்.”’+
5 ‘நீ வெட்டவெளியில் விழுவாய்.+ இதை நானே சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
6 ‘மாகோகுவுக்கும் தீவுகளில் பாதுகாப்பாகக் குடியிருக்கிறவர்களுக்கும் எதிராக நான் நெருப்பை அனுப்புவேன்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள். 7 என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் நடுவில் என் பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவேன். என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க இனி யாரையும் விட மாட்டேன். நான் யெகோவா என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்+ என்றும் எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்.’+
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இது நடக்கும், நடந்தே தீரும். இந்த நாளைப் பற்றித்தான் நான் சொன்னேன். 9 இஸ்ரவேலின் நகரங்களில் வாழ்கிறவர்கள் சிறிய கேடயங்கள், பெரிய கேடயங்கள், வில்லுகள், அம்புகள், தடிகள்,* ஈட்டிகள் என எல்லா ஆயுதங்களையும் கொண்டுபோய் நெருப்பில் போடுவார்கள். ஏழு வருஷங்களுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள்.+ 10 அவர்கள் காட்டுக்குப் போய் விறகுகளைப் பொறுக்க வேண்டியிருக்காது. ஏனென்றால், அந்த ஆயுதங்களையே விறகுகளாகப் பயன்படுத்துவார்கள்.’
‘அவர்கள் தங்களைச் சூறையாடியவர்களைச் சூறையாடுவார்கள். தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
11 ‘அந்த நாளிலே, கோகுவைப்+ புதைக்க இஸ்ரவேலில் நான் ஒரு இடத்தைத் தருவேன். அது கடலுக்குக் கிழக்கே பயணம் செய்கிறவர்களின் பள்ளத்தாக்கில் இருக்கும். பயணம் செய்கிறவர்களின் வழியை அது அடைக்கும். அங்கேதான் கோகுவையும் அவனுடைய எல்லா கூட்டத்தையும் புதைப்பார்கள். அதை ஆமோன்-கோகுவின் பள்ளத்தாக்கு*+ என்று அழைப்பார்கள். 12 இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களைப் புதைத்து தேசத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஏழு மாதங்கள் ஆகும்.+ 13 புதைக்கிற வேலையைத் தேசத்திலுள்ள எல்லாருமே செய்வார்கள். அதனால், நான் என்னை மகிமைப்படுத்தும் அந்த நாளில் அவர்களுடைய புகழ் பரவும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
14 ‘தேசத்தில் வேறு எங்கெல்லாம் பிணங்கள் கிடக்கின்றன என்று தேடிப் பார்த்துப் புதைப்பதற்காக ஆட்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் விடாமல் ஏழு மாதங்களுக்குத் தேடிப் பார்த்துத் தேசத்தைச் சுத்தப்படுத்துவார்கள். 15 தேசமெங்கும் போய்த் தேடுகிறவர்கள் ஒரு மனுஷ எலும்பைப் பார்த்தால் அதற்குப் பக்கத்தில் ஒரு அடையாளத்தை வைப்பார்கள். அதன்பின், புதைக்கும் வேலை செய்கிறவர்கள் அதை எடுத்து ஆமோன்-கோகுவின் பள்ளத்தாக்கில் புதைப்பார்கள்.+ 16 அங்கே ஆமோனா* என்ற நகரமும் இருக்கும். இப்படி, அவர்கள் தேசத்தைச் சுத்தமாக்குவார்கள்.’+
17 மனிதகுமாரனே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ எல்லா விதமான பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் இப்படிச் சொல்: “எல்லாரும் ஒன்றுதிரண்டு வாருங்கள். இஸ்ரவேலின் மலைகளில் நிறைய உயிர்களைப் பலி கொடுத்து, உங்களுக்காக ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறேன்.+ அந்த விருந்துக்காகக் கூடிவாருங்கள். சதையைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்.+ 18 நீங்கள் பலம்படைத்தவர்களின் சதையைத் தின்று, உலகத் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவர்கள் எல்லாரும் பாசானில் இருக்கிற கொழுத்த செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் காளைகளையும் போன்றவர்கள். 19 நான் உங்களுக்காகத் தயார் செய்திருக்கும் விருந்தில் நீங்கள் வயிறுமுட்ட கொழுப்பைச் சாப்பிடுவீர்கள், வெறி ஏறுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.”’
20 ‘என்னுடைய மேஜையில் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் பெரிய பலசாலிகளையும் எல்லா போர்வீரர்களையும் தின்று திருப்தியாவீர்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
21 எல்லா ஜனங்களுக்கும் என்னுடைய மகிமையைக் காட்டுவேன். நான் எப்படித் தண்டனை கொடுத்தேன் என்றும், என் வல்லமையை எப்படிக் காட்டினேன் என்றும் எல்லா ஜனங்களும் பார்ப்பார்கள்.+ 22 அந்த நாள்முதல், இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய கடவுளான யெகோவா நான்தான் என்று தெரிந்துகொள்வார்கள். 23 இஸ்ரவேல் ஜனங்கள் குற்றங்கள் செய்து எனக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டதால்தான் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள் என்று மற்ற ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+ இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்ததால்தான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+ அவர்களை எதிரிகளின் கையில் பிடித்துக் கொடுத்து,+ எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினேன். 24 அவர்கள் அசுத்தமான காரியங்களையும் குற்றங்களையும் செய்ததால்தான் தகுந்த தண்டனை கொடுத்தேன். என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்தேன்.’
25 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் பிள்ளைகளை நான் விடுதலை செய்வேன்.+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லார்மேலும் இரக்கம் காட்டுவேன்.+ என்னுடைய பரிசுத்த பெயரை வைராக்கியத்தோடு கட்டிக்காப்பேன்.+ 26 எனக்கு உண்மையில்லாமல் நடந்ததால் அவமானப்பட்டுப்போன அந்த ஜனங்கள்+ மறுபடியும் தங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+ 27 மற்ற ஜனங்களின் நடுவிலிருந்தும் எதிரிகளுடைய தேசங்களிலிருந்தும் நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்போது,+ நான் பரிசுத்தமானவர் என்று எல்லா தேசத்தாருடைய கண்களுக்கு முன்பாகவும் காட்டுவேன்.’+
28 ‘அவர்களை மற்ற தேசத்தார் சிறைபிடித்துக்கொண்டு போகும்படி செய்யும்போதும், ஒருவர் விடாமல் எல்லாரையும் அவர்களுடைய தேசத்துக்கே திரும்பக் கூட்டிக்கொண்டு வரும்போதும்+ நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள். 29 அதன்பின், என்னுடைய முகத்தை அவர்களிடமிருந்து மறைக்க மாட்டேன்.+ இஸ்ரவேல் ஜனங்களின் மேல் என் சக்தியைப் பொழிவேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.