எரேமியா
46 தேசங்களுக்கு+ நடக்கப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்ன செய்தி இது. 2 யோசியாவின் மகனான யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ யூப்ரடிஸ்* ஆற்றங்கரையில் இருந்த கர்கேமிசில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ+ தோற்றுப்போனான். அவனுடைய படையைப் பற்றியும் அவனுடைய தேசமான எகிப்தைப்+ பற்றியும் கடவுள் சொன்னது இதுதான்:
3 “சிறிய கேடயங்களையும் பெரிய கேடயங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
போருக்குக் கிளம்புங்கள்.
4 குதிரை வீரர்களே, குதிரைகளைத் தயார்படுத்தி அதன்மேல் ஏறிக்கொள்ளுங்கள்.
தலைக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்.
ஈட்டிகளைத் தீட்டிப் பளபளப்பாக்குங்கள்.
உடல்கவசத்தைப் போட்டுக்கொள்ளுங்கள்.
5 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த வீரர்கள் ஏன் மிரண்டுபோயிருக்கிறார்கள்?
அவர்கள் தோற்றுவிட்டார்கள், பின்வாங்கிப் போகிறார்கள்.
அவர்கள் திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் ஒரே திகில்.
6 வேகமாக ஓடுகிறவர்களால் ஓட முடிவதில்லை.
போர்வீரர்களால் தப்பிக்க முடிவதில்லை.
வடக்கிலே, யூப்ரடிஸ் ஆற்றங்கரையிலே,
அவர்கள் தடுக்கி விழுந்து கிடக்கிறார்கள்.’+
7 நைல் நதியைப் போலப் பாய்ந்து வருகிறவன் யார்?
கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போல வருகிறவன் யார்?
8 எகிப்துதான் நைல் நதியைப்+ போலவும்
கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போலவும் வருகிறான்.
‘நான் பாய்ந்து போய் இந்தப் பூமியை மூழ்கடித்துவிடுவேன்.
நகரத்தையும் அதிலிருக்கிற ஜனங்களையும் அழித்துவிடுவேன்’ என்று சொல்கிறான்.
9 குதிரைகளே, சீறிப் பாயுங்கள்!
ரதங்களே, கண்மண் தெரியாமல் ஓடுங்கள்!
கேடயம்+ பிடிக்கிற கூஷ் வீரர்களே, பூத் வீரர்களே,
வில்லை+ வளைக்கிற லூதீம்+ வீரர்களே,
எல்லாரும் புறப்பட்டுப் போங்கள்.
10 அந்த நாள் உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுடைய நாள். அவருடைய எதிரிகளை அவர் பழிதீர்க்கும் நாள். யூப்ரடிஸ்+ ஆற்றங்கரையில் இருக்கிற வடக்கு தேசத்தில், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா பலி கொடுக்கப்போகிறார்.* அவருடைய வாள் உயிர்களைப் பறித்து, திருப்தியாகும்வரை இரத்தத்தைக் குடிக்கப்போகிறது.
குணமாவதற்காக நீ என்ன செய்தாலும் அது வீண்தான்.
நீ குணமாகவே மாட்டாய்.+
வீரனும் வீரனும் மோதிக்கொள்கிறார்கள்.
இரண்டு பேருமே கீழே விழுகிறார்கள்.”
13 எகிப்து தேசத்தைத் தாக்குவதற்காக பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் வரப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்:+
14 “எகிப்திலும் மிக்தோலிலும்+ அறிவியுங்கள்.
நோப்பிலும்* தக்பானேசிலும்+ அறிவியுங்கள்.
இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வாள் தாக்கும்.
எதிர்த்துப் போராட தயாராக நில்லுங்கள்.’
15 உங்களுடைய வீரர்கள் ஏன் வீழ்ந்துபோனார்கள்?
யெகோவா அவர்களைக் கீழே தள்ளிவிட்டதால்
அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
16 அவர்களில் ஏராளமானவர்கள் தடுமாறி விழுகிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து,
“எழுந்திருங்கள்! கொடூரமான வாளுக்குத் தப்ப
நம்முடைய தேசத்துக்கே போகலாம்,
நம்முடைய ஜனங்களிடமே போகலாம்” என்று சொல்கிறார்கள்.’
17 அங்கே அந்த வீரர்கள்,
‘எகிப்தின் ராஜா பார்வோன் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு,
வீணாகப் பெருமை பேசுகிறான்’+ என்று சொல்கிறார்கள்.
18 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா இப்படிச் சொல்கிறார்:
‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.*
மலைகளுக்கு நடுவே நிற்கும் தாபோர்+ மலையைப் போலவும்,
கடலோரத்தில் நிற்கும் கர்மேல்+ மலையைப் போலவும் கம்பீரமாக அவர்* வருவார்.
19 எகிப்தில் வாழ்கிறவர்களே,
சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்காக மூட்டை கட்டுங்கள்.
மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+
20 எகிப்து அழகான இளம் பசுவைப் போல இருக்கிறாள்.
ஆனால், பயங்கரமான கொசுக்கள் வடக்கிலிருந்து வந்து அவளைக் கடிக்கும்.
21 அவளுடைய கூலிப் படையினர்கூட கொழுத்த கன்றுக்குட்டிகளைப் போன்றவர்கள்.
அவர்களும் ஓட்டம் பிடித்தார்கள்.
தைரியமாக எதிர்த்து நிற்கவில்லை.+
அவர்களுடைய அழிவு நாள் வந்துவிட்டது.
தண்டனைத் தீர்ப்பின் நேரம் வந்துவிட்டது.’
22 ‘தப்பித்து ஓடுகிற பாம்பைப் போல அவள் சீறுகிறாள்.
ஏனென்றால், மரம் வெட்டுகிறவர்களைப் போல எதிரிகள் வருகிறார்கள்.
கோடாலிகளோடு அவள்மேல் பாய்கிறார்கள்.
23 அவளுடைய காடு என்னதான் அடர்த்தியாகத் தெரிந்தாலும் அதை வெட்டிப்போடுவார்கள்.
ஏனென்றால், அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட அதிகமானவர்கள்,
எண்ணவே முடியாதவர்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.
24 ‘எகிப்து ஜனங்கள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
வடக்கிலுள்ள ஜனங்களின் கையில் கொடுக்கப்படுவார்கள்.’+
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+
26 யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களைக் கொல்லத் துடிக்கிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடமும்+ அவனுடைய ஊழியர்களிடமும் நான் அவர்களைக் கொடுப்பேன். ஆனால், அதற்குப் பிறகு எகிப்திலே பழையபடி ஜனங்கள் குடியிருப்பார்கள்.+
27 என் ஊழியனான யாக்கோபே, நீ பயப்படாதே.
இஸ்ரவேலே, திகிலடையாதே.+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
அடிமைப்பட்டிருக்கிற தேசத்திலிருந்து உன் சந்ததியைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
யாக்கோபு திரும்பி வந்து தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.’+
28 யெகோவா சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+
அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.